இலங்கைச் செய்திகள்

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரணிலை பார்வையிட சென்றார் மஹிந்த ராஜபக்ஷ!

 மன்னாரில் 20வது நாளாக தொடரும் போராட்டம் - ஜும்ஆ தொழுகையின் பின்னர் போராட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம் வர்த்தகர்கள்

சத்துருக்கொண்டான் படுகொலை : மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் மௌன அஞ்சலி ; புதைகுழி தோண்டக் கோரி பிரேரணை நிறைவேற்றம்

யாழ். பலாவி விமான நிலைய 2 ஆவது கட்ட அபிவிருத்திக்கான நிதியை இந்தியாவிடமிருந்து பெறுவதில் அரசாங்கத்திற்கு என்ன தடை உள்ளது - ஸ்ரீதரன் 


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

Published By: Digital Desk 3

22 Aug, 2025 | 02:19 PM

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கைது செய்யப்பட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 


சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரணிலை பார்வையிட சென்றார் மஹிந்த ராஜபக்ஷ!

23 Aug, 2025 | 11:19 AM

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட்டு நலம் விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை (23) காலை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். 

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை (22) பிற்பகல் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான்  நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதனையடுத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட்டு நலம் விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறைச்சாலை வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

அத்துடன், சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவை பார்வையிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 



மன்னாரில் 20வது நாளாக தொடரும் போராட்டம் - ஜும்ஆ தொழுகையின் பின்னர் போராட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம் வர்த்தகர்கள்

22 Aug, 2025 | 04:53 PM

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிம மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக தொடர்ந்து வரும் கவனயீர்ப்பு போராட்டம் 20ஆவது நாளாக இன்றும் (22) சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் பஜார் பகுதியில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் ஜும்ஆ தொழுகையின் பின்னர் ஒன்றுதிரண்டு ஆதரவு வழங்கியுள்ளனர்.

அவர்கள் இன்று பகல் நடைபெற்ற ஜும்ஆ தொழுகையின் பின்னர்,


மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம்பெற்று வருகின்ற போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் வருகை தந்து கலந்துகொண்டு தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.

மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற இந்தப் போராட்டம் இன்று 20ஆவது நாளாகவும் தொடர்கிறது. 


இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டம் காலத்தின் தேவை கருதி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதன் உண்மை நிலையை அறிந்துகொண்டு தாம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும், தொடர்ந்தும் தமது ஆதரவு இப்போராட்டக் குழுவுக்கு கிடைக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.

மன்னார் மக்கள் இன, மத வேற்றுமையின்றி ஒற்றுமையாக


போராடும் பட்சத்தில் எமது இலக்கை அடைய முடியும் என போராட்டத்தில் கலந்துகொண்ட மன்னார் பஜார் பகுதியில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.   














நன்றி வீரகேசரி 




சத்துருக்கொண்டான் படுகொலை : மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் மௌன அஞ்சலி ; புதைகுழி தோண்டக் கோரி பிரேரணை நிறைவேற்றம் 

22 Aug, 2025 | 03:37 PM

மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் சத்துருக்கொண்டான் தமிழினப் படுகொலை புதைகுழி தோண்டப்பட வேண்டும் என பிரேரணை கொண்டுவரப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் இந்த படுகொலையின் 35வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மசாந்தி வேண்டி சபையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையின் 3வது மாதாந்த அமர்வு நேற்று


வியாழக்கிழமை (21) மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர் தயாளன் கௌரி, சத்துருக்கொண்டான் படுகொலைக்கு நீதி கோரி, புதைகுழி தோண்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரேரணை ஒன்றை கொண்டுவந்து முன்வைத்தார்.

அந்த பிரேரணையின்படி, 


1990.9.9 அன்று இடம்பெற்ற சத்துருக்கொண்டான் படுகொலை என்பது இந்த மாவட்டத்தில் பாரிய தமிழினப் படுகொலை நடந்தேறியது. குறிப்பாக யுத்த காலப்பகுதிகளிலே எங்களுடைய மாவட்டத்தில் அப்போது இராணுவ முகாம் அமைக்கப்பட்டது. அந்த பகுதியில் பனிச்சையடி, திராய்மடு, பிள்ளையாரடி, கொக்குவில் சத்துருக்கொண்டான் கிராமங்களின் மக்கள் இடம்பெயர்ந்து நகரில் தஞ்சமடைந்து முகாம்களில் தங்கியிருந்தனர்.

இவர்கள் பகலில் தமது கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று வந்த நிலையில், 1990-9-9 அன்று மாலை 5.30 மணியளவில் இராணுவத்தினர் சுற்றிவளைத்து அங்கிருந்த சிறியோர் தொடக்கம் முதியோர் வரை 186 பேரை ஒன்றுகூடல் என தெரிவித்து சத்துருக்கொண்டான் இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்று, அங்கே, இராணுவத்தினருடன் ஊர்காவல் படையினர் இணைந்து இராணுவ முகாமின் தளபதி வர்ணகுலசூரிய என்பவரின் தலைமையில் துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்தனர்.

இந்த படுகொலையின் பின்னர் ஆட்சிக்கு வந்த சந்திரிகா அரசால்


நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் பாலகிட்ணன் தலைமையில் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணை குழுவிற்கு தப்பி வந்தவர் உட்பட உயிரிழந்தவர்களின் உறவுகள் பலர் சாட்சியங்கள் அளித்து, இந்த படுகொலை நிரூபிக்கப்பட்ட படுகொலையாக காணப்பட்டது.

இந்த படுகொலை இடம்பெற்று, எதிர்வரும் மாதம் 9ஆம் திகதி 35 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், இந்த படுகொலைக்கான நீதி இதுவரை மறுக்கப்பட்டது. இருந்தபோதும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் ஒவ்வொரு வருடமும் நினைவேந்தலை அனுஷ்டிக்க அமைக்கப்பட்ட நினைவேந்தல் தூபிக்கு வரும்போது பொலிஸார், இராணுவத்தினர் சுற்றிவளைத்து அச்சுறுத்தல் விடுக்கின்றனர். அந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. 

இருந்தபோதும் இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி தற்போது செம்மணி புதைகுழி மற்றும்  ஊழல் மோசடிகளை அழிப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம் அதேபோல் ஜ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு வந்து செம்மணிக்குச் சென்று இந்த படுகொலைகளுக்கு உள்நாட்டுப் பொறிமுறைக்குள் தீர்மானிக்கப்பட வேண்டும் என அறிக்கை விடுத்தார்.

ஆட்சிக்கு வந்துள்ள ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பல விடயங்களை செய்வதாக தெரிவித்தார். இருந்தபோதும் இந்த படுகொலையில் நானும் இறந்திருக்க வேண்டியவள். அப்போது எனக்கு 4 வயது. அன்றைய தினம் எனது பெற்றோர்  சுற்றிவளைப்பில் முதல் ஒருசில மணித்தியாலத்துக்கு முன்னர் நாங்கள் அங்கிருந்து வெளியேறி நகரிலுள்ள நலன்புரி முகாமிற்கு சென்றுவிட்டதால் தப்பிக்கொண்டேன்.

எனவே, உண்மை ஒருநாளும் உறங்காது. செம்மணி புதைகுழி இன்று தோண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுபோல் சத்துருக்கொண்டான் படுகொலை செய்யப்பட்ட அப்போதைய இராணுவ முகாம் இருந்த இடம் தோண்டப்பட வேண்டும் என்ற இந்த தீர்மானம் எமது உறுப்பினர்களின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்டு இந்த தீர்மானத்தை ஜனாதிபதி, பிரதமர், ஜ.நா மனித உரிமை ஆணையம், அனுப்பப்பட்டு நீதி கிடைக்க வேண்டும் என பிரேரணையை முன்வைத்தார்.

இந்த பிரேரணைக்கு சபையில் இருந்த முழு உறுப்பினரது ஆதரவு வழங்கப்பட்டு, சத்துருக்கொண்டான் படுகொலை 35ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அனைவரும் எழுந்து நின்று, இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர்.   நன்றி வீரகேசரி 





யாழ். பலாவி விமான நிலைய 2 ஆவது கட்ட அபிவிருத்திக்கான நிதியை இந்தியாவிடமிருந்து பெறுவதில் அரசாங்கத்திற்கு என்ன தடை உள்ளது - ஸ்ரீதரன் 

20 Aug, 2025 | 04:03 PM

(எம்.ஆர்.எம் வசீம்,இராஜதுரை ஹஷான்)

யாழ். பாலாவி விமான நிலையத்தின் புனரமைப்புப்பணிகள் 6 மாத காலத்திற்குள் முழுமைப்படுத்தப்படும் என அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ளன இருப்பினும்  எந்தவொரு முன்னேற்றகரமான செயற்பாடுகளும் ஏன் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கின்றது. விமான நிலையத்தின் இரண்டாம்கட்ட அபிவிருத்திக்கு தேவைப்படும் நிதிப்பெறுமதி எவ்வளவு என்பதையும், இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கான நிதியை இந்தியாவிடம் பெற்றுக்கொள்வதில் அரசாங்கத்திற்கு என்ன தடை உள்ளது என்றும் இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20)  நடைபெற்ற  அமர்வின் போது  நிலையியல் கட்டளை 27/ 2இன் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரிடம்  மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, 

இரண்டாம் உலகப்போரின் போது பிரித்தானிய வான்படையின் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட இலங்கையின் இரண்டாவது பன்னாட்டு விமான நிலையமான யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க வடக்கு - கிழக்கின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. 

இவ்விமான நிலையம் ஊடாகவே எயார்சிலோன் நிறுவனத்தின் முதலாவது விமானப் பயணம் இரத்மலானையிலிருந்து சென்னைக்கு நடத்தப்பட்டது. 

அதன்பின்னர் பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னை, திருச்சி, மதுரை ஆகிய தென்னிந்திய நகரங்களுக்கும் கொழும்புக்கும் விமானசேவை ஆரம்பிக்கப்பட்டு பின்னரான போர்க்காலச் சூழலில் பயணிகள் சேவை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

போருக்குப் பின்னரான  காலப்பகுதியில் இந்திய அரசின் நிதியுதவியில் முதற்கட்ட அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு தற்போது இவ்விமான நிலையம் மீளியக்கப்பட்டு வருகின்றபோதும், தற்போது பயன்பாட்டிலுள்ள விமான ஓடுபாதையை மேலும் ஒரு கிலோ மீற்றர் நீளத்திற்கு விரிவாக்கும் பட்சத்தில், ஏ-320 ரக விமானம் உள்ளிட்ட ஆகக்குறைந்தது 180 பயணிகளை ஏற்றக் கூடிய விமானங்கள் பலாலி விமான நிலையத்துக்கு நேரடியாக வந்து தரையிறங்கும் நிலையை உருவாக்கி, அதன்மூலம், புலம்பெயர்ந்தோரும், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் இந்த விமானநிலையம் ஊடாக வருகை தருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க முடியும்.

குறிப்பாக, பெரிய ரக விமானங்கள் செயற்படத் தொடங்கினால் பயணிகள்  கொண்டுவரக் கூடிய பொதிகளின் அளவு 15 கிலோவில் இருந்து 30 கிலோவாக அதிகரிக்கப்படும். இதனால் வடக்கு - கிழக்கிற்கு வருகைதரும் வெளிநாட்டவர்களின் தெரிவாக பலாலி விமானநிலையமே முன்னுரிமை பெறும். 

இதன்மூலம் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் வளர்ச்சியடைவதுடன் நாட்டின் வருமானமும் அதிகரிக்கப்படும். அதேவேளை, வடக்கு கிழக்கிலுள்ள வரலாற்றுத் தொன்மை மிகு ஆலயங்களை தரிசிக்க பெருமளவு இந்திய சுற்றுலா பயணிகள் வருகை தருவதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்தப்படும்.

இவ்வாறான பின்னணியில் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம்கட்ட அபிவிருத்தி காலம் தாழ்த்தப்படுவதற்கான காரணம் என்ன? மேற்குறித்த அடிப்படையில் விமான நிலையத்தின் சேவைப்பரப்பை விரிவாக்குவதன் மூலம் புலம்பெயர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கான திட்டங்கள் எவையேனும் அரசிடம் உள்ளதா? அமைச்சர் கடந்த 2025.03.30ஆம் திகதி தாங்கள் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமானநிலையத்திற்கு வருகைதந்த போது, ஆறுமாத காலத்திற்குள் இவ்விமானநிலையத்தின் புனரமைப்புப் பணிகள் முழுமைப்படுத்தப்படும் என உறுதியளித்து ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ள போதும், அதுசார்ந்த எந்தவொரு முன்னேற்றகரமான செயற்பாடுகளும் இதுவரை ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை அறித்தர முடியுமா?

வடக்கு-கிழக்கு அபிவிருத்தியில் பெரும் பங்கு வகிக்கும் இந்திய நாட்டின் உதவியுடனேயே இந்த விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்காக இந்திய அரசால் வழங்கப்பட்ட நிதியுதவி எவ்வளவு என்பதையும்,இரண்டாம்கட்ட அபிவிருத்திக்கு தேவைப்படும் நிதிப்பெறுமதி எவ்வளவு என்பதையும், இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கான நிதியை இந்தியாவிடம் பெற்றுக்கொள்வதில் அரசாங்கத்திற்கு என்ன தடை உள்ளது என்பதையும் அமைச்சர் தெரிவிப்பாரா?, அவ்வாறு எந்தத் தடைகளும் இல்லையெனில்இ பலாலி விமானநிலையத்தின் இரண்டாம் கட்ட  அபிவிருத்திப் பணிகள் எப்போது ஆரம்பிக்கப்பட்டு எப்போது முடிவுறுத்தப்படும் என்பதை அமைச்சர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

பலாலி விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதா என்பதை தெரிவிக்கலாமா? ஆமெனில், இதுவரை எத்தனை பேருக்கு எவ்வளவு தொகை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் இன்றுவரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாதவர்கள் எத்தனை பேர், அவர்களுக்கான இழப்பீடு வழங்கப்படாமைக்கான காரணம் என்ன என்பதை அமைச்சர் அறிவிப்பாரா? என்றார்.   நன்றி வீரகேசரி 




No comments: