24 Aug, 2025 | 10:31 AM
ஆர்.ராம்
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாகவிருந்தவர் ரணில் விக்கிரமசிங்க. அரசியல் சாணக்கியங்கள் நிறைந்த அவருக்கு 'மிஸ்டர் கிளீன்' என்ற பெயருமுண்டு. இலஞ்ச, ஊழல், மோசடிகள் உள்ளிட்ட கறைகளை அவரது கரங்கள் கொண்டிருக்காமையால் கிடைத்த பெரும் கௌரவம்.
அத்தகைய ஒருவர் மீது, அண்மைய காலத்தில் அரசாங்க நிதியை தவறாக பயன்படுத்தி தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ரணில் அழைக்கப்பட்டார்.
அவ்வாறு வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்ட நிலையில் 9 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானவர் சுமார் 4 மணி நேரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்யப்பட்டதையடுத்து, பிற்பகல் 1.15 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதி விசாரணை பிரிவின் மூன்றாம் இலக்க பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நளின் ஹேரத்தினால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் பிற்பகல் 3 மணியளவில் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பிணைக் கோரிக்கைக்கான வாதப்பிரதிவாங்கள் முன்வைக்கப்பட்டன.
ஈற்றில் பிணை அனுமதியை வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக 6.15 இலிருந்து 9.50 வரையில் விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டு இறுதியில் ரணில் விக்கிரமசிங்கவை 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவையடுத்து ரணிலுக்கு கைவிலங்கிடப்பட்டு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கே மருத்துவர்களின் ஆலோசனையில் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
ரணிலின் கைதும் தடுத்துவைப்பும், இலங்கையின் அரசியல் வரலாற்றில் அழிக்கமுடியாத தடத்தை ஏற்படுத்தியுள்ளது. 1815இல் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்டார். அவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டார்.
அதன்பின்னர் இலங்கையை பிரித்தானிய தேசாதிபதிகள் ஆட்சி செய்தனர். 1948 இல் நாடு சுதந்திர பின்னர் பிரதமர்கள் ஆட்சி செய்தனர். 1978இல் உருவாக்கப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் அதிகார பீடத்தில் இருந்தனர்.
இத்தகைய ஆட்சியாளர்கள் மீது எத்தனையோ குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டபோதும் எந்தவொரு குற்றச்சாட்டுக்களுக்காகவும் அவர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்படவில்லை.
அவ்வாறிருக்கையில் 210 வருடங்களுக்குப் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவிவகித்த முன்னாள் ஜனாதிபதியொருவர் குற்றவியல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்தடைந்திருந்த சூழலில் 'அரசியல் வியூகத்தால்' ஜனாதிபதி பதவியேற்ற ரணில், விமர்சனங்களுக்கு அப்பால் மிகக் கடினமான நிலைமைகளில் இருந்து நாட்டை மூச்செடுக்கும் நிலைக்கு கொண்டுவந்தார் என்ற அபிமானத்தைப் பெற்றிருந்தார்.
அத்தகையவர், பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகியதோடு அதற்காக சிறைசெல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் 'மிஸ்டர் கிளீன்' என்ற நன்மதிப்புக்கு நாமத்திலும் கறைபடிந்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில் அவருடைய வரலாறும், குடும்பப் பின்னணியும் நாட்டின் மிகவும் செல்வாக்குமிக்கதும், அரசியல் பாரம்பரியங்களைக் கொண்டதுமாகும். அவர் எச்.ஆர். விக்கிரமசிங்க, தியாலினி விக்கிரமசிங்க தம்பதியரின் இரண்டாவது மகனாக மார்ச் 24, 1949 அன்று பிறந்தார்.
அவரது தந்தை ஒரு சட்டத்தரணியாகவும், பின்னர் 'லேக் ஹவுஸ்' பத்திரிகை நிறுவனத்தின் தலைவராகவும் விளங்கினார். ரணிலின் தாய்வழி தாத்தா, டி.ஆர். விஜேவர்தன, இலங்கையின் மிகப்பெரிய பத்திரிகை நிறுவனமான 'அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒஃப் சிலோன் லிமிடெட்' (லேக் ஹவுஸ்) நிறுவனத்தை நிறுவியவர்.
இத்தகைய அரசியல், ஊடகம் மற்றும் செல்வந்த குடும்பப் பின்னணியில் இருந்த ரணில் தனது மாமனாரான ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் தலைமையில் தேசிய அரசியலுக்குள் பிரவேசம் செய்தார்.
1977இல் முதற்தடவையாக பாராளுமன்றத்திற்குத் தெரிவான ரணில், வெறும் 29 வயதிலேயே ஜே.ஆர். அரசாங்கத்தில் மிக இளவயது அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இது, அவரது அரசியல் வாழ்க்கைக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தது. இத்தகைய குடும்பப் பின்னணியும், இளம் வயதிலேயே அவருக்குக் கிடைத்த அதிகாரமும், அவரது அரசியல் வாழ்க்கையின் பயணத்தை இலகுவாக்கின.
அதுமட்டுமன்றி, இயல்பாகவே அரசியல் சாணக்கியம் நிறைந்து காணப்பட்ட அவருக்கு, சர்வதேச தொடர்புகளும், நன்மதிப்புக்களும் ஒருங்கே காணப்பட்டமையால் தெற்காசியாவில் 'மதிப்பு மிக்க தற்துணிவுள்ள தலைவர்' என்ற உயரிய அந்தஸ்தை கிடைக்கச் செய்தது.
அதுமட்டுமன்றி, விஜேவர்தன குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் கைவிலங்கிடப்பட்ட இரண்டாவது நபராக ரணில் விக்கிரமசிங்க பதிவாகியுள்ளார். அக்குடும்பத்தைச் சேர்ந்த விமல விஜேவர்தன, பண்டாரநாயக்க கொலைவழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவராக உள்ளார்.இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக பதவி வகித்தபோது 2023 செப்டம்பர் 13 முதல் 20வரையான காலத்தில் கியூபா மற்றும் அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தைத் தொடர்ந்து, செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்களுக்கு, லண்டனில் உள்ள வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் தனது மனைவி, பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க 'கௌரவப் பட்டம்' பெறும் நிகழ்வில் கலந்துகொண்டார்.
மைத்திரி விக்கிரமசிங்க, களனி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகவும், பாலின ஆய்வுகள் தொடர்பான துறைக்கு நிறுவுனராகவும் இருந்துள்ளார். அவர் கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்தவர் என்பது முக்கியமான விடயம்.
அதேநேரம், லண்டனுக்குச் சென்ற மேற்குறித்த இரண்டு நாட்கள் பயணத்தை ரணில் ஒரு தனிப்பட்ட விஜயமாக வெளிப்படுத்தாது அதற்கான செலவுகளுக்கு அரசாங்க நிதியை பயன்படுத்தியுள்ளார் என்பது தான் அவர் மீதான பிரதான குற்றச்சாட்டாகும்.
குறித்த இரு நாட்களுக்கு மட்டும், ஜனாதிபதி செயலகம் மற்றும் பொலிஸ் பாதுகாப்புச் சேவை உட்பட, சுமார் 166 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ரணில் தம்பதியினரின் தனிப்பட்ட விஜயம், பின்னர் உத்தியோகபூர்வ விஜயமாக ஆவணங்களில் மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணையில், ரணில் ஜனாதிபதியாக இருந்தபோது அவரது தனிப்பட்ட செயலாளராகச் செயற்பட்ட சாண்ட்ரா பெரேரா, முதலில் ஒரு தனிப்பட்ட விஜயமாகத்தான் கருதப்பட்டதாகவும், பின்னர் விக்கிரமசிங்கவே அதை தனிப்பட்ட விஜயம் அல்ல என்று கூறியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் லண்டனில் 206கிலோமீற்றர் தொலைவில் இருந்தபோதிலும், விக்கிரமசிங்க லண்டனில் உள்ள ஆடம்பரமான ஹோட்டலான லாண்ட்மார்க்கில் தங்கியிருந்துள்ளார். இதனால், வாகன வாடகை, உணவு என்று தங்கிய நாட்களில் அதிக செலவுகள் செய்யப்பட்டிருப்பது போன்றவை முறைகேடுகளுக்கு ஆதாரமாக சுட்டிக்காட்டப்படுகின்றன.
நீதிமன்றில் பிணை அனுமதிக்கான வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டபோது அரசதரப்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், 'வறுமையில் வாடும் குடும்பத்தின் உண்டியலில் இருந்து பணத்தை எடுத்துச் சென்று தனிப்பட்ட செலவுகளுக்கு பயன்படுத்தி மகிழ்ச்சியாக இருந்ததைப்போல ரணிலின் செயல் உள்ளது' என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
நாட்டை மீட்டெடுத்த தலைவர் என்பதற்கு அப்பால், நாட்டிற்கு டொலர் பற்றாக்குறை ஏற்பட்டு, சாதாரண மக்கள் நெருக்கடிகயில் காணப்பட்ட காலகட்டத்தில், 'ஜனாதிபதி' என்ற பொறுப்புள்ள முதற்குடிமகன் தனிப்பட்ட காரணங்களுக்காக அரச நிதியை ஆடம்பரமாக செலவிட்டமையானது அவரது நற்பெயரை சிதைத்திருக்கிறது.
மைத்ரி விக்கிரமசிங்க புற்றுநோய் மற்றும் ஆர்த்ரைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் உள்ளன. ரணில், மைத்திரி தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை.
ஆகவே இருவரும் ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ளும் நிலைமைகள் தான் உள்ளன என்று நீதிமன்றத்தில் ரணில் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன சுட்டிக்காட்டி பிணைகோரியிருந்தார்.
இந்த விடயம் மனிதாபிமான அடிப்படையிலான கவனத்தை ஈர்த்தாலும், மறுபுறம், ஒரு அரசியல் தலைவரின் தனிப்பட்ட சோகங்கள், பொதுச்சொத்து துஷ்பிரயோகம் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளுக்கான நியாயமாக இருக்க முடியுமா என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது.
அதேநேரம், ரணிலின் கைது அரசாங்கத்தின் ஊழல், மோசடிகளுக்கு எதிரான பரபட்சமான நடவடிக்கையையும், சட்டத்தின் ஆட்சியை மீள உறுதிப்படுத்துவதற்கான முன்னுதாரணமாகக் கொள்ள முடியும்.
ஆனால், இக்கைது அரசியல் நோக்கங்களின் அடிப்படையிலானது என்ற வாதங்களையும் தாராளமாகக் கொண்டிருகிறது. குறிப்பாக, பிரதமர் ஹரிணியால் அரசாங்கத்துக்குள் ஏற்படும் குடைச்சல்களுக்கு ரணில் காரணம் என்ற சந்தேகம் ஜே.வி.பிக்குள் உள்ளது.
அதுமட்டுமன்றி ரணில், எதிரணிகளை கூட்டி, ஆட்சி மாற்றத்துக்கான காய்களை பல தளங்களில் நகர்த்துகின்றார் என்ற அச்சமும் ஜே.வி.பிக்கு உள்ளது.
சர்வதேச அரங்கில் ரணிலுக்குள்ள கௌரவம் தமது அரசாங்கத்துக்கு தொடர் தலையிடியாக இருப்பதாகவும் ஜே.வி.பி. சிந்திக்கிறது. இவற்றுக்கெல்லாம் மேலாக ரணில் பட்டலந்த விவகாரத்தின் சூத்திரதாரி என்றும் ஜே.வி.பி குற்றம் சாட்டுகிறது.
ஆகவே, ரணிலின் கைது வெறுமனே தனிப்பட்டதொரு நிகழ்வு அல்ல. கைதும் அதன் விளைவுகளும் நாட்டின் எதிர்கால அரசியலை வடிவமைப்பதில் முக்கிய பங்கை வகிக்கப்போகிறது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment