உலகச் செய்திகள்

 யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் : ஈரானியத் தூதுவரை நாடுகடத்தியது அவுஸ்திரேலியா

காசா வைத்தியசாலை மீதான தாக்குதலில் 5 ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழப்பு : தவறுதலான விபத்து என நெதன்யாகு கவலை !

ஜம்மு காஷ்மீரில் மண்சரிவு : உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்வு

 “சிறுவர்கள் மயானமாக” மாறிவிட்ட காசா! ; பாலஸ்தீனம் போரை நிறுத்துவதற்காகவும் குரல் கொடுங்கள்! - மெலனியா ட்ரம்புக்கு துருக்கியின் முதல் பெண்மணி கடிதம்

சீன ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய பிரதமர் மோடி  


யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் : ஈரானியத் தூதுவரை நாடுகடத்தியது அவுஸ்திரேலியா

Published By: Digital Desk 3

27 Aug, 2025 | 12:36 PM

அவுஸ்திரேலியாவில் யூத சமூகத்திற்கு எதிராக நடந்த தாக்குதல்களுக்கு ஈரான் அரசுதான் காரணம் என அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

சிட்னி மற்றும் மெல்போர்னில் இடம்பெற்ற இரண்டு யூத விரோதத் தாக்குதல்களை ஈரான் அரசு திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டின் பின்னணியில், அவுஸ்திரேலியா ஈரானியத் தூதுவரை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது. 

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஒரு வெளிநாட்டு தூதரை அவுஸ்திரேலியா நாடு கடத்துவது இதுவே முதல் முறை என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல்களின் பின்னணி

அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு (ASIO) திரட்டிய புலனாய்வுத்துறை தகவல்களின் அடிப்படையில், கடந்த ஆண்டு அக்டோபரில் சிட்னியில் உள்ள யூத உணவு நிறுவனம் ஒன்றின் மீதும், டிசம்பரில் மெல்போர்னில் உள்ள ஒரு யூத தொழுகைக்கூடத்தின் மீதும் நடத்தப்பட்ட தீ வைப்புத் தாக்குதல்களுக்கு ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) பின்னணியில் இருந்தது என அவுஸ்திரேலிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ் இந்த தாக்குதல்களை "ஒரு வெளிநாட்டு நாடால் அவுஸ்திரேலிய மண்ணில் திட்டமிடப்பட்ட அசாதாரண மற்றும் ஆபத்தான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள்" என்று வர்ணித்துள்ளார். சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து, சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதே இந்தத் தாக்குதல்களின் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரான் - அவுஸ்திரேலிய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள்

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, ஆரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள தனது தூதரகத்தின் செயல்பாடுகளை அவுஸ்திரேலியா நிறுத்தி, அங்குள்ள தனது இராஜதந்திரிகளை வேறு நாட்டிற்கு இடமாற்றம் செய்துள்ளது. அத்துடன், ஈரானில் உள்ள அவுஸ்திரேலியர்கள் பாதுகாப்புடன் வெளியேற முடியுமானால் விரைவில் வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது. பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க அவுஸ்திரேலியா அண்மையில் எடுத்த முடிவுக்குப் பழிவாங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வு, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஒரு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவுஸ்திரேலியாவில் யூத சமூகத்திற்கு எதிராக அதிகரித்துள்ள வெறுப்புத் தாக்குதல்களை இது வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.    நன்றி வீரகேசரி 





காசா வைத்தியசாலை மீதான தாக்குதலில் 5 ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழப்பு : தவறுதலான விபத்து என நெதன்யாகு கவலை !

Published By: Digital Desk 3

26 Aug, 2025 | 11:46 AM

காசா வைத்தியசாலை மீதான தாக்குதலுக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்து வரும் நிலையில், குறித்த தாகுதல் தவறுத்தலாக நடந்த ஒரு "துயரமான விபத்து" என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கவலை தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலை மீதான தாக்குதலை உறுதிப்படுத்திய இஸ்ரேல் இராணுவம் இதுகுறித்து உள்ளக விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளது. ஊடகவியலாளர்களை காயப்படுத்துவது தங்கள் நோக்கம் அல்ல என இஸ்ரேல் இராணுவம் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, இந்த தாக்குதல் குறித்த கேள்விக்கு வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், "இது எப்போது நடந்தது? எனக்கு அது தெரியாதே!. அதுகுறித்து நான் மகிழ்ச்சியாக இல்லை. அதை பார்க்க நான் விரும்பவில்லை. அதேநேரம் இந்த மொத்த கெட்ட கனவையும் நிறுத்த வேண்டும்" என்று பதிலளித்துள்ளார்.தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் வைத்தியசாலை மீது திங்கட்கிழமை (25)இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஐந்து ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 20 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 




ஜம்மு காஷ்மீரில் மண்சரிவு : உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்வு

Published By: Digital Desk 3

27 Aug, 2025 | 10:44 AM

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து வைஷ்ணவி தேவி கோவிலுக்கான யாத்திரை பாதையில் இடம்பெற்றுள்ளதாக செய்திகள்  தெரிவிக்கின்றன.

பின்னணி 

ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிஷ்த்வார், தோடா உள்ளிட்ட பல்வேறு


மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பலத்த உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி ஆலயத்துக்கு செல்லும் யாத்திரை பாதையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்த மண்சரிவு காரணமாக, யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகள்

மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இணைந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மண்சரிவுகளில் பல வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

வானிலை எச்சரிக்கை

இந்திய வானிலை ஆய்வு மையம், ஜம்மு காஷ்மீரின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல வீதிகள் மண்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ளன. இது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தடையாக உள்ளது.

பலியானோர் குடும்பங்களுக்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் நிவாரண நிதியை அறிவித்துள்ளன. இந்த இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாகவும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

நன்றி வீரகேசரி



 “சிறுவர்கள் மயானமாக” மாறிவிட்ட காசா! ; பாலஸ்தீனம் போரை நிறுத்துவதற்காகவும் குரல் கொடுங்கள்! - மெலனியா ட்ரம்புக்கு துருக்கியின் முதல் பெண்மணி கடிதம் 

Published By: Nanthini

25 Aug, 2025 | 03:43 PM

பல ஆண்டுகளாக தொடர்ந்துவரும் காசா போரை நிறுத்தப்படுவதற்காக குரல் கொடுக்குமாறு, துருக்கியின் முதல் பெண்மணியான எமின் எர்டோகன் (Emine Erdogan), அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா ட்ரம்புக்கு (Melania Trump) கடிதம் ஒன்றினூடாக வலியுறுத்தியுள்ளார். 

அண்மையில் உக்ரேன் - ரஷ்ய போரை நிறுத்துமாறு கோரி, ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு மெலனியா கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் போரினால் விளைந்த பாதிப்புகள், குறிப்பாக சிறுவர்களுக்கு நேர்ந்த கதியை சுட்டிக்காட்டி, யுத்தத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தார். 

மெலனியாவின் இந்த முயற்சியை பாராட்டும் வகையில், கடந்த சனிக்கிழமை (23) துருக்கி ஜனாதிபதி மாளிகையின் ஊடாக எமின் எர்டோகனின் கடிதமொன்று வெளியிடப்பட்டது.  அதில், உக்ரேன் - ரஷ்ய போரை நிறுத்த மெலனியா எடுத்துக்கொண்ட முயற்சியை எமின் பாராட்டி எழுதியிருந்தார். அதேபோன்று பாலஸ்தீனத்தின் காசாவில் இடம்பெற்று வரும் போரை நிறுத்துமாறு இஸ்ரேல் பிரதமருக்கும் ஒரு கடிதம் அனுப்ப வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில், மெலனியாவுக்கு எமின் கோரிக்கை விடுத்தார். 

மேலும், அந்தக் கடிதத்தில், காசா போர் காரணமாக பாதிக்கப்பட்ட சிறுவர்களின் சார்பில் தாங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றும், தற்போது காசா “சிறுவர் மயானமாக” மாறிவிட்டது... எனவே, இந்த அநீதிக்கு எதிராக நாம் நமது பலத்தை ஒன்றுதிரட்டி குரல் கொடுக்க வேண்டும் என்றும்  மெலனியாவுக்குத் தெரிவித்துள்ளார். 

ஐ.நா. ஒத்துழைப்புடன் இயங்கி வரும் உணவுப் பாதுகாப்பு நிபுணர்கள், காசாவில் ஐந்து இலட்சம் மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 132,000 சிறுவர்கள் போசாக்கின்மையால் உயிராபத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். 

ஆயிரக்கணக்கான காசா சிறுவர்களின் சடலங்களின் மீது “அடையாளம் காணப்படாத குழந்தை” என எழுதப்பட்டிருப்பது, நமது மனதில் ஆறாத காயங்களை ஏற்படுத்துகிறது” என எமின் அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.  “போரில் உயிரிழந்த உக்ரேன் சிறுவர்களுக்காக நீங்கள் வெளிப்படுத்திய உணர்வை காசா சிறுவர்கள் விடயத்திலும் வெளிப்படுத்துங்கள்” என்று மெலனியாவிடம் எமின் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 

 


 

சீன ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய பிரதமர் மோடி  

Published By: Digital Desk 3

31 Aug, 2025 | 11:29 AM

ஜப்பானில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட இந்திய பிரதமர் மோடி,  அங்கிருந்து சீனா புறப்பட்டார். சீனாவில் உள்ள தியான்ஜின் விமான நிலையத்துக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.

தியான்ஜின் நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதில் சீன ஜனாதிபதி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மற்றும் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

இந்த மாநாட்டுக்கு இடையே ஜின்பிங்கையும், ரஷ்ய ஜனாதிபதி புட்டினையும் இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசுவார். அப்போது இந்திய-சீனா-ரஷ்யா இடையேயான ஒத்துழைப்பு குறித்தும், உறவு குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும்.

முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு சீனாவில் நடந்த மாநாட்டில் இந்தியபிரதமர் மோடி கலந்து கொண்டார். இதையடுத்து 2019-ம் ஆண்டு சீன ஜனாதிபதி ஜின்பிங் இந்தியா வந்தார். அதன் பின்னர் இந்திய பிரதமர் மோடி சீனா செல்லவில்லை. இதனிடையே 2020-ம் ஆண்டு கல்வான் பகுதியில் சீனா-இந்தியா இடையே நடந்த தாக்குதலுக்கு பிறகு இருநாடுகளுக்கு இடையேயான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய பிரதமர் மோடி, சீனாவுக்கு சென்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதித்துள்ள நிலையில் ரஷ்ய, சீன, இந்திய தலைவர்கள் ஒரே இடத்தில் கூடி பேசுவதன் மூலம் அமெரிக்காவுக்கு எதிரான புதிய வியூகம் ஒன்றை வகுக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.   நன்றி வீரகேசரி 

 



No comments: