மோகனசுந்தரம் மனைவியிடம் மிகவும் அன்பு காட்டுபவர். அந்த அன்பு எப்படி என்றால் மனைவி கற்பகம் ஒரு கன்னத்தில் அறைந்தால் பிரியசகியே இதோ இன்னொரு கன்னம் என்று மற்றொரு கன்னத்தையும் காட்டும் வள்ளல் பெருமான்.
ஒரு நாள் மிகவும் சிரமப்பட்டு மனைவி காலால் இட்ட கட்டளையை தலைமேல் வைத்து செய்து கொண்டிருந்தார். அது அப்படி என்ன தலைபோகிற வேலை என்கிறார்களா? கற்பகம் சொல்வதை கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள்.
“என்னங்க சொல்லி இரண்டு நாளாச்சு அந்த ரவிக்கையில கொக்கியை தைத்து கொடுங்கன்னா ஒன்னுமே கண்டுக்க மாட்டுக்குறீங்க” என்று அங்கலாய்த்தாள் கற்பகம்.
“மணி ஏழு ஆறது. இன்னும் பெட் காபி வந்தபாடில்லை”
“முதல்ல கொக்கியை சரி படுத்துங்க. அப்புறம்தான் காபி”
எங்கே காபி கிடைக்காமல் போய்விடுமோ என்ற நினைப்பில் கருமமே கண்ணாகி ஊசியால் கொக்கியை தைத்துக் கொண்டிருந்தார். கணவன் மேலிருந்த அன்பின் மிகுதியால் காபியை எடுத்து வந்தாள். வேலைவாங்கவே கொக்கியை சரிசெய்தால்தான் காபி என்று சொன்னாள்.
காபி கொண்டு வந்தவள் இந்தாங்க காபி என்று தோள்பட்டையை அழுத்தவே ஊசி விரலில் குத்திய வலியால் துடித்துப்போய் அவர் அவளைத் தள்ளிவிட காபியை மோகனசுந்தரத்தின் தலையில் கொட்டியதோடு பக்கத்தில் இருந்த அலமாரியிலும் இடித்துக் கொண்டாள்.
கீழே விழுந்தவள் ஏங்க ஆசையா காபி கொண்டு வந்தா இப்படியா தள்ளிவிடுவீங்க என்றாள். ஊசிகுத்திய வலியால் தள்ளிவிட்டேன். அதற்குத்தான் எனக்கு காபியாபிசேகம் பண்ணிட்டியே என்றார். நான் மட்டும்தான் தள்ளிவிட்டேன் என்று எண்ணாதே உனக்கும் எனக்கும் கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிருக்கும் படியளக்கும் பரமசிவனே பார்வதியைத் தள்ளி விட்டுருக்கிறார் என்றார். அதைக்கேட்டதும்,
“அட கடவுனே, கடவுளே மனைவியைத் தள்ளிவிட்டாரா? வற்றாத நதிகளெல்லாம் கடலைப் பார்த்து ஆறுதலடையும் அந்த கடலே வற்றிவிட்டால் நதிகள் எங்கு சென்று ஆறுலடையும்” என்று திரைப்பட வசனத்தைச் சொல்லி தன் ஞாபக சக்தியை உறுதி செய்தாள்.
“ஆமாம் கற்பகம். அந்த கதையைக்கேள்” என்று தன் மேதாவித்தனத்தின் மூலம் மனவியிடம் கதையை விளக்கினார்.
ஒரு சமயம் கைலாயத்தில் பார்வதியிடம் ஒன்றைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார் பரமசிவன். கேட்டுக்கொண்டிருந்த மனைலி தூங்கி விட்டாள். இதை அறிந்த அவளைத் தட்டிய சிவபெருமான் ஒன்றைப்பற்றி விளக்கிக் கொண்டிருக்கும் போது இப்படி நித்திரை கொள்ளலாமா என்று கேட்கவே,
“நமக்கு பிடிக்காத வரலாறு பாடத்தை ஆசிரியர் நடத்தும்போது கண்ணை மூடியபடி இருப்பதில்லையா? அதுமாதிரிதான் கண்களை மூடியபடியே கேட்டுக் கொண்டிருந்தேன்” என்று பார்வதி பொய் சொன்னாள்.
பார்வதி திருவள்ளுவருக்கு முன்னே பிறந்து விட்டதால் பொய்யாமை என்ற அதிகாரத்தைப் படித்திருக்க வாய்ப்பில்லை. உடனே சிவன் நீ கண்ணை மூடியபடியே கேட்டிருந்தால் நான் எந்த இடத்தில் நிறுத்தினேன் சொல் பார்க்கலாம் என்று கேட்டார். பார்வதி திருதிருவென விழித்தாள்
சிவனுக்கு கடுங்கோபம் வந்தது. கோபத்திற்கு காரணம் சொன்னதை கேட்பதில் அக்கறை காட்டாமல் நித்திரை கொண்டது. அடுத்ததாக பொய் சொன்னது. இதனால் பார்வதி தன்னை அவமானப்படுத்தி விட்டதாக உணர்ந்தார். உடனே கோபத்துடன் பார்வதியை கீழேதள்ள பார்வதி பூமியில் தொபுக்கடீல என்று வந்து விழுந்தார்.
அப்புறம்தான் தெரிந்தது பார்வதி இல்லாமல் தன்னால் வாழமுடியாது என்று. பார்வதியை கைலாசம் அழைத்துவர பலர் மூலம் பலவகையில் முயன்றும் பலனின்றிப் போக தானே முயற்சிசெய்ய முடிவெடுத்து திரைக்கதை வசனம் மற்றும் இயக்கத்துடன் அரங்கேற்றினார்.
கீழே விழுந்த பார்வதி ஒரு மீனவக் கிராமத்தில் தலைவனுக்கு மகனாகப் பிறந்து வளர்ந்து பருவமங்கையாகி நின்றாள். அந்ந சமயத்தில் கடலில் ஒரு சுறாமீன் மீனவர்களின் வலைகளை கடித்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியதோடு அவர்களின் பிழைப்புக்கே சவாலாக இருந்தது. இதனால் செய்வதறியாது திகைத்த மீனவர்கள் தலைவனிடம் முறையிட்டனர்.
உடனே தலைவனும் அந்த சுறாமீனைக் கொல்பவருக்கு தன் மகளை மணமுடித்து கொடுப்பதாக அறிவிப்பொன்றை செய்தார். சிவனும் மீனவனாக வந்து சுறாமீனைக் கொன்றார். மீனவத்தலைவனும் சொன்னபடி தன் மகளை சுறாமீனைக் கொன்ற மீனவனுக்கு மணமுடித்துக் கொடுத்தார். ஆனால் மீனவனாக வந்து தன்னை மணப்பது சிவபெருமான்தான் என்பதை பார்வதி புரிந்து கொண்டாள் என்று கதையைச் சொல்லி முடித்தார் மோகனசுந்தரம்.
கதையைக் கேட்ட கற்பகம் இந்த கதை மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று கேட்டாள். அதற்கு பதில் சொன்ன அவர், இது கைலாயத்தில் என்றோ நடந்தது இந்த காலகட்டத்தில் கணவன் மனைவியை தள்ளிவிட்டால் மனைவியும் கணவனை கீழே தள்ளி விடலாம் என்றார்.
கணவன் அப்படிச் சொன்னதுதான் தாமதம் கற்பகம் கணவனை அருகில் இருந்த படுக்கையில் தள்ளினாள். பொத்தென்று கணவனும் படுக்கையில் விழுந்தான். மீதியை வெள்ளித்திரையில் காண்க என்று சொல்வதுபோல் மீதியை நீங்களும் உங்கள் மனத்திரையில் காண்க என்று சொல்லி கதையை முடிக்கிறேன்.
- சங்கர சுப்பிரமணியன்.
No comments:
Post a Comment