ஈழத்தின் கிழக் கெங்கும் எழில் கொஞ்சும்
எங்குமே பண்பாடு சிறந் தோங்கும்
வாளை கெண்டை மீன்கள் துள்ளியோடும்
வய லெங்கும் பயிர் செழித்து நிற்கும்
தாள மொடு பெண்கள் பாட்டிசைப்பார்
தலை யசைத்து ஆண்கள் ரசித்திடுவார்
கால மதை எண்ணாமல் உழைத்திடுவார்
கடவுளுமே நல் அருளை வழங்கிடுவார்
சமத்துவமாய் மக்கள் அங்கே வாழ்ந்திடுவார்
சமயநெறி தனையவரும் கடைப் பிடிப்பார்
மீன்பாடும் அதிசயமும் அங்கே உண்டு
மீன்பாடும் தேனாட்டை வியந்து பார்க்க
மேதையென மயில் வாகனன் பிறந்தாரே
அதிசயமே இல்லாது அவருமே பிறந்தார்
அனைவருமே போற்றிடவே அம்மேதை வாழ்ந்தார்
பெளதிக ஆசானாய் படித்தவரும் வந்தார்
பண்டிதராய் பின்னே பட்டமவர் பெற்றார்
கிழக்கிருந்து அவரும் வடக்குக்கு வந்தார்
கேண்மைமிகு ஆளுமைகள் பலரும் இணைந்தார்
ஆசானாய் அமர்ந்தார் அதிபராய் உயர்ந்தார்
ஈசனை எண்ணியே எல்லாமே செய்தார்
இல்லற இன்பத்தை நாடாமல் அவரும்
நல்லறமாய் துறவறத்தை நயந்தேற்று நின்றார்
இராமகிருஷ்ண இயக்கம் ஈர்த்தது அவரை
பிள்ளைத் திருநாமம் பெயர்ந்துமே போனது
உள்ளம் வெளுத்தது உயர்நாமம் ஆகவே
விபுலானந்த நாமம் வெளிச்சமாய் ஆகியதே
இல்லறத்தைத் துறந்தாலும் இதயத்தில் தமிழை
ஏந்தியே விபுலானந்தார் எங்குமே சென்றார்
பன்மொழிகள் கற்றார் பலநூல்கள் படைத்தார்
பல்கலைக் கழகத்தில் பேராசானாய் அமர்ந்தார்
அண்ண மலை அவரை அணைத்தது
ஆருமே ஆற்றாத பணிகளை ஆற்றினார்
ஈழமும் அவரை ஏந்தியே நின்றது
எங்குமே விபுலானந்தர் அறிவொளி பரந்தது
பாமரர்க்குப் பாரதியை பக்குவமாய் காட்டினார்
பண்டிதர்கள் எதிர்த்தாலும் பாரதியை உயர்த்தினார்
ஈழத்து ஆசானால் எங்கள்கவி பாரதியும்
ஆழமாய் அனைவரதும் அகத்திலே அமர்ந்திட்டான்
அடிகளார் மாணாக்கர் அனைவருமே ஆளுமைகள்
ஆராய்ச்சிப் பாதைக்கு அவரேதான் அடித்தளமே
அறிவியலைத் தமிழோடு இணைத்தாரே அடிகளார்
அன்னைத் தமிழும் அதியுயர்வு பெற்றதே
யாழ்நூலை ஆக்கியதால் யாவருமே வியந்தார்கள்
அறிவியலைத் தமிழோடு இணைத்திட்டார் அடிகளார்
இப்படி ஒருநூலை எவருமே ஆக்கார்கள்
அடிகளார் ஆராய்ச்சி தமிழுக்குப் பொக்கிஷமே
வெள்ளைநிற மல்லிகையை வேறெவரும் தரமாட்டார்
உள்ளக் கமலத்தை உவந்தளித்தார் அடிகளார்
தெள்ளத் தெளிவாக தித்திக்கும் கவிதைகளை
அள்ளிக் கொடுக்க ஆருமே இங்கில்லை
ஏழைகள் கல்வியைக் கற்றிட வழிசமைத்தார்
வாழுகின்ற நெறிகளை வைத்திட்டார் கற்றலிலே
அனைவரையும் அணைத்தார் அறிவுலகைக் காட்டினார்
ஆன்மீக ஞானியாய் திகழுகிறார் அடிகளார்
காரைதீவின் மைந்தன் கற்றதால் உயர்ந்தார்
கரையேறாப் பலரையும் கரையேற்றி விட்டார்
கடவுளை நம்பினார் கண்ணியத்தைக் காத்தார்
காய்தல் உவத்தலின்றி கடமையினை ஆற்றினார்
முத்தமிழ் வித்தகராய் அடிகளார் இருந்தார்
மூத்ததமிழ் அறிஞரெலாம் வியந்துமே பார்த்தார்
வித்தகராய் விளங்கினார் விபுலானந்த அடிகள்
மேதையாய் ஞானியாய் விளங்குகிறார் அடிகள்
No comments:
Post a Comment