மயங்குகிறாள் ஒரு மாது - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 


1970 ம் ஆண்டுகளின் நடுப் பகுதிகளில் வித்தியாசமான கதைகளை கொண்ட படங்கள் தமிழில் வெளிவரத் தொடங்கின. இப்படியான படங்களுக்கு நியூ வேவ் படங்கள் என்று முத்திரை குத்தப்பட்டது. இவற்றுள் பெரும்பாலானவை வாழ்க்கையில் வழுக்கி விழுந்த இளம் பெண்களின் கண்ணீர் கதைகளாகவே எழுதப்பட்டிருந்தன. குடும்பத்துக்காக விலைமாதாக மாறுவது, கணவனிடம் திருப்பதி அடையாமால் மற்றொருவனை நாடுவது, கணவனின் வற்புறுத்தலால் அவனின் நண்பனிடம் சோரம் போவது, திருமணத்துக்கு முன்பு கலவியில் ஈடுபட்டு கர்ப்பம் தரிப்பது என்ற வரிசையில் 1975ம் வருடம் வெளியான படம் மயங்குகிறாள் ஒரு மாது.



இப் படத்தின் நாயகி கல்லூரி மாணவி . காதலனுடன் தனிமையில்

பொழுதை கழித்து அதன் காரணமாக கற்பமாகிறாள். அவளின் கல்லூரித் தோழியும், பெண் மருத்துவரும் சேர்ந்து காதுக்கு காது வைத்தாற் போல் அவளின் கர்ப்பத்தை ஆரம்பத்திலேயே கலைத்து விடுகிறார்கள். சில காலம் கழித்து பெண் மருத்துவரின் தம்பியை அவள் திருமணம் செய்கிறாள். மருத்துவரும் அத் திருமணத்துக்கு முழு சம்மதத்தையும் தருகிறாள். திருமண வாழ்வு இனிதாக நடக்கும் போது நாகம் போல் ஒருவன் அவள் வாழ்வில் குறுக்கிடுகிறான். காதலனுடன் அவள் நெருக்கமாக இருப்பதை புகைப் படம் எடுத்திருக்கும் அவன் அப்படத்தை காட்டி பணம் கேட்டு அவளை மிரட்டுகிறான். அவளோ அவனைக் கண்டு அஞ்சி நடுங்குகிறாள்.



இப்படி அமைந்த கதையை பஞ்சு அருணாசலம் எழுதியிருந்தார். படத்துக்கான வசனமும் அவரேதான். படத்தின் கதையை நகர்த்த கதாசிரியர் கலைஞானம் அவருக்கு உதவியிருந்தார். அது வரை தமிழில் வராத ஒரு கதைதான். ஆனால் விரசம் இல்லாமல், ஆபாச காட்சிகள் இல்லாமல் படத்தை இயக்கியிருந்தார் எஸ் .பி .முத்துராமன். அப்போதுதான் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி படிப் படியாக முன்னேறிக் கொண்டிருந்த அவருக்கு இந்தப் படம் அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது, .

படத்தின் நாயகி கல்பனாவாக வருபவர் சுஜாதா. அவள் ஒரு தொடர்கதைக்கு பின் அவர் திரை வாழ்வு தொடர இந்தப் படம் வழி வகுத்தது. ஆரம்பத்தில் காதல், மோகம், பின்னர் கணவன் மீது அன்பு, குடும்ப பாசம், அதன் பின் பிளாக் மெயில் செய்பவனிடம் அச்சம் , என்று பலவித குணச்சித்திரங்களை காட்டும் வாய்ப்பு இப் படத்தில் அவருக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன் படுத்தி நடிப்பில் சித்தியடைந்தார் சுஜாதா. அவள் ஒரு தொடர்கதையில் திமிர் பிடித்த கதாபாத்திரத்தில் நடித்தவர் இந்த படத்தில் பாதிக்கப்பட்டவராக நடித்து ரசிகர்களின் அனுதாபத்தை பெற்றுக் கொள்கிறார். குடும்பப் பாங்கான வேடத்தில் வரும் படாபட் ஜெயலஷ்மி எல்லோரையும் கவருகிறார். இறுதிக் காட்சியில் மிரள

வைக்கிறார். இளம் விஜயகுமார் பாத்திரத்துடன் ஒன்றுகிறார். 


படத்தின் ஹீரோ முத்துராமன். அவரின் கதா பாத்திரம் கச்சிதம் என்றால் நடிப்பும் அப்படித் தான். வில்லனாக வரும் தேங்காய் சீனிவாசன் தன்னுடைய வசன உச்சரிப்பு, ஸ்டைல் என்று கலக்குகிறார். இவர்களுடன் எஸ் ஏ அசோகன், செந்தாமரை, எம் என் ராஜம், ஆகியோரும் நடித்திருந்தனர்.


படத்தை பாபு ஒளிப்பதிவு செய்ய, படத் தொகுப்பை ஆர். விட்டல் கையாண்டார். கண்ணதாசனின் சம்சாரம் என்பது வீணை, வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம், ஒரு புறம் வேடன் ஆகிய பாடல்கள் விஜயபாஸ்கர் இசையில் இனிதாய் ஒலித்தன. 


மயங்குகிறாள் ஒரு மாது படத்தைப் பர்த்த வினியோகஸ்த்தர்கள் படத்தின் முடிவில் கதாநாயகி இறப்பதாக அமைந்தால் தான் படத்தை வாங்குவோம் என்று கண்டிஷன் போட்ட போதும் இயக்குனர் முத்துராமன் அதற்கு உடன்படவில்லை. படத்தின் முடிவு சுபமாகவே அமைத்தது, படமும் வெற்றி கண்டது. இந்தப் படத்தில் இருந்து எஸ். பி. முத்துராமன், பஞ்சு அருணாசலம் கூட்டணி வெற்றி பெறத் தொடங்கியது. இவர்களுடைய காம்பினேஷனில் அடுத்தடுத்து வெளி வந்த பல படங்கள் வெற்றி பெற்றன. அதற்கு அச்சாரமாக அமைந்தது மயங்குகிறாள் ஒரு மாது .

No comments: