தகுதியறிந்து…!


-சங்கர சுப்பிரமணியன்.


தன் வீட்டிலிருந்து சில கல் தொலைவில் இருந்த நெடுஞ்சாலையில் உதவலாமா வேண்டாமா என்று நினைப்பவர் போல நிழல் கொடுக்கலாமா வேண்டாமா என்ற நிலையிலுள்ள ஒரு மரத்தடியில் அந்த மூதாட்டி அமர்ந்திருந்தாள். அவள் அங்கு அமர்ந்து நெடுஞ்சாலையில் பயணிப்போரை எதிர்பார்த்து முட்டை வியாபாரம் செய்து கொண்டிருந்தாள்.

அவளுக்கு அந்த முட்டைகளை விற்றுக் கிடைக்கும் சொற்ப வருமானம்தான் வயிற்றுக்கு உணவளித்துக் கொண்டிருந்தது.
எதிர்பார்த்தபடியே ஒரு விலையுயர்ந்த ஆடம்பரமான கார் ஒன்று வந்த நின்றது. காரைப்பார்த்த மூதாட்டி இன்று நல்ல வியாபாரம்தான் என்று எண்ணியபடி மனதுக்குள் மகிழ்ந்திருந்தாள்.

காரிலிருந்து இறங்கிய இளம்வயதுப் பெண் மூதாட்டியைப் பார்த்து,

“பாட்டி, முட்டை என்ன விலை?” என்றாள்.

“ஐந்து டாலருக்கு ஆறு முட்டை”

“என்ன பாட்டி, அநியாயமா விலை சொல்றீங்க. எட்டு முட்டை ஐந்து டாலருக்கு கொடுங்க”

“இல்லம்மா, கட்டுபடியாகாது. இதில் கிடைக்கும் குறைந்ந வருமானத்தை வைத்தே நான் சாப்பிடுகிறேன்” என்றாள் மூதாட்டி.

ஆனால் இளம் பெண் விடாமல் பேரம்பேசினாள். பாட்டிக்கு காலையிலிருந்து நன்பகல்வரை எதுவுமே வியாபாரம் ஆகவில்லை. வேறு வழியின்று வந்த வியாபாரத்தை விடமுடியாமல் அந்த பெண் கடைசியாக கேட்டபடி ஐந்து டாலருக்கு ஏழு முட்டையைக் கொடுத்தாள்.

இதையெல்லாம் காரில் அவளுடன் பயணித்த அவளுடைய தோழி காரில் இருந்தபடியே கவனித்தாள். காரில் ஏறிய பெண் போரில் எதிராளியை வென்றது போன்று பெருமிதத்துடன் தன் உடன் பயணித்த தோழியைப் பார்த்தாள். கார் நெடுஞ்சாலையில் வழுக்கிக் கொண்டு சென்றது. சுமார் பத்து கிலோ மீட்டரில் ஒரு பிரபலமான ஆடம்பர உணவுவிடுதி வரவும் சாப்பிடுவதற்காக காரை அங்கே நிறுத்திவிட்டு தோழியுடன் உணவகத்திற்குள் நுழைந்தாள்.

குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்தபடியே அவர்கள் உணவருந்தினர். உண்டுமுடித்த பின்
வெயிட்டர் சாப்பிட்டதற்குண்டான பில்லைக் கொண்டுவந்து கொடுத்தார். பில்லில் இருநூற்று அறுபது டாலர் என்றிருந்தது. உடனே கைப்பையில் இருந்து முந்நூறு டாலரை எடுத்துக் கொடுத்த அந்த இளம்பெண் வெயிட்டரைப் பார்த்து மீதியை டிப்ஸாக வைத்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு தோழியுடன்
எழுந்து சென்றாள்.

காரில் பயணிக்கும் போது அவளுடன் பயணித்த தோழிக்கு தான் சில ஆண்டுகளுக்குமுன் இந்தியா சென்றதும் அப்போது தேனியிலிருந்து கோவில்பட்டியிலுள் தாய்மாமா வீட்டுக்கு அப்பாவுடனும் சித்தப்பாவுடனும் சென்றது ஞாபகம் வந்தது.

மாமா வீட்டுக்கு செல்லும்போது வழியில் ஓரிடத்தில் நுங்கும் பதனீரும் விற்றுக் கொண்டிருந்தனர். அவளுக்கு பதனீர் குடிக்க ஆசையாக இருந்ததால் அப்பாவிடம் சொன்னதும் காரிலிருந்து இறங்கினார்கள்.
பதனீரும் நுங்கும் சாப்பிட்டபின் எவ்வளவு என்று கேட்டதற்கு நூற்றுஇருபது ரூபாய் என்றார் பதனீர் விற்பவர். ஆனால் அவளின் அப்பா இருநூறு ரூபாய் கொடுத்தார். மீதிப்பணத்தை கொடுக்க வந்வரிடம்,

“வேண்டாங்க, மீதத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்றார் அப்பா.

“நன்றிங்க. பொதுவா கேட்ட பணத்தை கொடுக்காமல் பேரம் பேசுவாங்க. நீங்க கேட்டதற்கும் மேல கொடுக்கீங்க. நீங்க நல்லா இருக்கணும்” என்று கையைத்தூக்கி கும்பிட்டார்.

பரவாயில்லை. வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார் அப்பா. பின் எல்லோரும் காரில் ஏறிக்கொண்டோம். காரில் போகும்போது
சித்தப்பா அப்பாவிடம்,

“அண்ணா, பதனிக்கும் நுங்குக்கும் மிஞ்சிப்போனா நூறு ரூபாய்க்கும் குறைவாகத்தான் இருக்கும். அவர் கேட்டதே அதிகம்தான். நீங்கள் மிகவும் அதிகமாக கொடுத்திருக்கீங்க” என்றார்.

இன்று அப்பா உயிரோடு இல்லாவிட்டாலும் அப்போது அப்பா அன்று சொன்னது நினைவுக்கு வந்தது.

அப்பா சித்தப்பாவிடம் சொன்னார்,

“நான் கொடுத்தபணம் ஒன்றும் அவ்வளவு பெரிய தொகையில்லை. ஆனால் அவர்களுக்கு அது அதிகம்தான். அதிகம் கொடுத்ததால் எங்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு இல்லை” என்றார்.

இன்னும் சொல்லப்போனால் நாங்கள் கொடுத்த பணம் வெளிநாட்டு கணக்குப்படி எங்களுக்கு மிக மிக குறைவுதான். மேலும் நாங்கள் நன்றாகவே சம்பாதித்து நலமாகவே இருக்கிறோம் என்றார். ஆனால் நாம் இன்று கொடுத்திருக்கும் அந்த பணம் அவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்றார். நாம் உதவுவது பெரிதல்ல, ஆனால் யாருக்கு உதவுகிறோம் என்பதுதான் முக்கியம் என்றார்.

அவர் அன்று சொன்னதை இன்று அவள் தோழி நடந்து கொண்ட முறையுடன் ஒப்பிட்டுப் பார்த்தாள். அந்த ஆடம்பர உணவகத்தில் பணிபுரியும் வெயிட்டருக்கு நல்ல சம்பளம் இருக்கும். நாற்பது டாலர் டிப்ஸ் கொடுக்கத் தேவையில்லை. அதேசமயம் வெயிலில் வயிற்றுப் பிழைப்புக்காக முட்டை விற்கும் மூதாட்டியுடம் பேரம்பேசியதும் சரியல்ல என்பதையும் உணர்ந்தாள்.

அவளது தந்தை சொன்ன இன்னொன்றும் இப்போது அவள் நினைவுக்கு வந்தது. ஒருவர் செழிப்புடன் இருக்கும்போது மற்றவர்களுக்கு உதவுவது அப்படி ஓன்றும் பெரிய செயல் அல்ல. அவருக்கே பற்றாக்குறை உள்ளபோது உதவுவதுதான் பெரிது. அப்படிப் பார்த்தால் நான் செய்தது பெரிய செயலே அல்ல என்று சொன்னார். அவரது மனதையும் செயலையும் எண்ணும்போது அவர் எவ்வளவு உயர்ந்து நிற்கிறார் என்பது நன்றாகவே புரிந்தது.


No comments: