எங்க வீட்டுப் பெண் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 எம் ஜி ஆர் நடிப்பில் எங்க வீட்டுப் பிள்ளை வெற்றி படத்தை


தயாரித்து விட்டு விஜயா புரொடக்க்ஷன் நாகிரெட்டி, சக்கரபாணி இருவரும் அடுத்து தயாரித்த படம் எங்க வீட்டுப் பெண். ஆனால் நட்சத்திர நடிகர்களை போட்டு எடுத்த எங்க வீட்டுப் பிள்ளை படத்தின் போது ஏற்படாத பிரச்னைகள் எல்லாம் இந்த சிறிய பஜெட் படத்தை எடுக்குக்கும் போது நாகிரெட்டி, சக்ரபாணி இருவருக்கும் ஏற்பட்டது.


தாங்கள் முதன் முதலாக தயாரித்த சௌகார் படத்தில் ஜானகி என்ற புது முகத்தை நடிக்க வைத்து அதில் நடித்ததனால் சௌகார் ஜானகியான அவரின் வெற்றியை மனதில் கொண்டு அதே படத்தை தமிழில் தயாரித்த நாகிரெட்டி, சக்கரபாணி இருவரும் தமிழ் படத்துக்கும் புதுமுகத்தையே அறிமுகம் செய்ய தீர்மானித்தார்கள்.

இந்தப் படத்தில் எங்க வீட்டுப் பெண்ணாக நடிக்க அவர்கள் புது நடிகையான நிர்மலாவை தெரிவு செய்தனர். தங்கள் விஜயா நிறுவனத்தால் அறிமுகமாவதால் அவருக்கு விஜயநிர்மலா என்று பேர் சூட்டப்பட்டது.

ஆனால் முதல் நாள் படப்பிடிப்பின் போதே பிரச்சினை ஆரம்பமாகி

விட்டது. படத்தில் நடிக்க வந்த எஸ் .வி . ரங்காராவ் , தன்னுடன் நடிக்கவிருந்த விஜயநிர்மலாவை பார்த்து தன் அதிருப்தியை வெளியிட்டார். ஒல்லி குச்சி போல் இருக்கும் இவரின் நடிப்பு சரிவராது ஆளை மாற்றுங்கள் என்று கூறி விட்டு போய் விட்டார் அவர். பங்காளிகள் இருவரும் உடனே மாற்றினார்கள் ,விஜயநிர்மலாவை அல்ல , ரங்கராவை! தங்கள் எல்லாப் படங்களிலும் தொடர்ந்து நடித்து வரும் ரங்கராவை படத்திலிருந்து கழற்றி விட்டு அவருக்கு பதில் எஸ் .வி .சுப்பையாவை நடிக்க வைத்தார்கள்.

படத்தின் முக்கிய பண்ணையார் வேடத்துக்கு எம் .ஆர் . ராதா தேர்வானார். எல்லா படங்களிலும் ஆர்ப்பாட்டம் பண்ணி நடிக்கும் எம் ஆர் ராதா இந்தப் படத்தில் நிதானமாக நடித்திருந்தார். படப்பிடிப்பு நடக்கும் தருவாயில் ராதா தன்னுடைய கருத்தை முன் வைத்தார்.

இப்போதெல்லாம் இந்தமாதிரியான கிராமத்துகதை, குடும்பகதைகள் எல்லாம் ரசிகர்களால் வரவேற்கப்படுவதில்லை, படம் ஓடுவது சந்தேகம்தான் என்று சொன்ன ராதா படத்தில் ஒருவித அதிருப்தியுடனேயே நடித்தார்.

ஒரே கிராமத்தில் நெருங்கி வாழும் இரு குடும்பங்கள். திருமண சம்பந்தத்துக்கு காலம் நெருங்கும் போது இரு குடும்பங்களுக்குள்ளும் விரிசல் ஏற்படுகிறது. அதனை எங்க வீட்டுப் பெண்ணாக வரவிருக்கும் லஷ்மி எவ்வாறு சீர் செய்தாள் என்பதுதான் படத்தின் கதை .


முதல் படத்திலேயே பாங்காகவும், நளினமாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் விஜய நிர்மலா . படத்தில் இரண்டு ஹீரோக்கள் . ஒருவர் ஏவி எம் ராஜன் , மற்றையவர் புதிதாக படங்களில் நடிக்கத் தொடங்கிய ஜெய்சங்கர் . இவர்களுடன் எம் ஆர் ராதா, எஸ் வி சுப்பையா, நாகேஷ், மனோரமா, வி நாகையா, வசந்தா, கே ஏ தங்கவேலு, சீதாலஷ்மி, கொட்டப்புளி ஜெயராமன், மாதவி ஓ ஏ கே தேவர், ஆகியோரும் நடித்தார்கள்.

படத்துக்கான கதையை சக்ரபாணி எழுத, வசனங்களை ச . அய்யாபிள்ளை எழுதினார். மார்க்கஸ் பாட்லே ஒளிப்பதிவு செய்தார். இருவர் பணியிலும் குறையில்லை. பாடல்களை கண்ணதாசன், ஆலங்குடி சோமு இருவரும் இயற்றினார்கள்.

படத்தில் பெரும் பாராட்டை பெறுபவர் இசையமைத்த கே வி மகாதேவன்தான். சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி , கால்களே நில்லுங்கள், தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம், இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா ஆகிய பாடல்கள் பழுதில்லாமல் ரசிகர்களின் காதுகளில் இன்றும் ரீங்காரமிடுகின்றன. கார்த்திகை விளக்கு திரு கார்த்திகை விளக்கு பாடல் இன்றும் கார்த்திகை தீபத் திருநாளில் ஆங்காங்கே ஒலிக்கின்றன.

மற்றுமோர் கொசுறு செய்தி. இந்த படத்தில் மென்மையான மெட்டில்

இடம் பெற்ற கால்களே நில்லுங்கள் பாட்டுக்காக மகாதேவன் போட்ட மெட்டு , ஐந்து ஆண்டுகள் கழித்து மாட்டுக்கார வேலன் படத்தில் வேகமான மெட்டாக உருமாறி , பட்டிக்காடா பட்டணமா ரெண்டும் கெட்டால் லட்சணமா என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனது!

அது வரை காலமும் விஜயா வாஹினி ஸ்டூடியோ உரிமையாளராகவும், படத் தயாரிப்பாளராகவும் , திருப்பதி கோவில் தர்மகத்தாவாகவும் ,16 மொழிகளில் அம்புலிமாமா மாத இதழையும், பொம்மை சினிமா மாத இதழையும் வெளியிட்டவருமான நாகிரெட்டி முதல் தடவையாக பட டைரக்டராக மாறி இப்படத்தை இயக்கினார்.

ஆனால் அதிலும் எதிர்பாராத தடை வந்து விழுந்தது. திடீர் என்று அவருக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக படத்தை இயக்கும் பொறுப்பில் இருந்து அவர் விலக வேண்டி வந்தது. அதன் பின் மீதி காட்சிகளை எங்க வீட்டுப் பிள்ளை படத்தை டைரக்ட் செய்த சாணக்கியா டைரக்ட் செய்து படத்தை பூர்த்தி செய்தார். படத்தின் இயக்குனர் என்று சாணக்யா பெயரே காண்பிக்கப்பட்டது. நாகிரெட்டியின் இயக்குனராகும் ஆசைக்கும் அத்தோடு முடிவு ஏற்பட்டது.

ஆனாலும் ரங்கராவால் ஏளனமாக பார்க்கப்பட்ட விஜயநிர்மலா அதன் பின் தெலுங்கு திரையுலகில் எங்க வீட்டுப் பெண்ணாகி , பிரபல நடிகையாகி, கதாசிரியையாகி, பட டைரக்டராகி , தெலுங்கு பட உலகில் பல படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்ற பெருமையும் பெற்று அவர் பேர் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றது காலத்தின் தீர்ப்பு!

No comments: