இலங்கைச் செய்திகள்

தையிட்டி விகாரைக்கு எதிரான வழக்கில் சுமந்திரன் முன்னிலையாவர் ; வலி. வடக்கு தவிசாளர் உறுதி

முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி 21ம் திகதி அவுஸ்திரேலியாவில் போராட்டம்- 'உலகம் இனிமேலும் பார்க்காமல் இருக்க முடியாது,இவை நிலத்தில் காணப்படும் எலும்புகள் இல்லை எங்கள் மக்களின் உயிர்கள்"

தையிட்டி விகாரை வளாகத்தினுள் மீண்டுமொரு சட்டவிரோத கட்டடம் நிர்மாணிக்கும் பணி ; விகாரதிபதியிடம் விளக்கம் கோரவுள்ளது வலி. வடக்கு பிரதேச சபை

செம்மணி படுகொலை : வடக்கு மற்றும் கிழக்கில் இனப்படுகொலை நடந்தது என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும் - அருட்தந்தை சக்திவேல்


தையிட்டி விகாரைக்கு எதிரான வழக்கில் சுமந்திரன் முன்னிலையாவர் ; வலி. வடக்கு தவிசாளர் உறுதி

18 Jul, 2025 | 12:17 PM

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோதமான விகாரைக்கு எதிராக வலி. வடக்கு பிரதேச சபையின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் இலவசமாக வழக்காடுவார் என வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சபையில் உறுதி அளித்துள்ளார்.  

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு  வியாழக்கிழமை (18) பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பில் பிரதேச சபையால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வன்னியசிங்கம் பிரபாகரன் தீர்மானம் ஒன்றை முன்வைத்தார்.

குறித்த தீர்மானம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து கருத்து தெரிவித்த வன்னியசிங்கம் பிரபாகரன், 

குறித்த வழக்கில் பிரதேச சபையின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாக வேண்டும் என தவிசாளரிடம் கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதில் வழங்கிய தவிசாளர் குறித்த வழக்கில் பிரதேச சபையின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இலவசமாகவே முன்னிலையாவர் என சபையில் வாக்குறுதியை வழங்கினார்.   நன்றி வீரகேசரி 








முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!


18 Jul, 2025 | 11:38 AM

முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேனவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று வெள்ளிக்கிழமை (18) காலை உத்தரவிட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எம் சந்திரசேன, 2015 ஜனாதிபதி தேர்தலின் போது தனது அன்புக்குரியவர்களுக்கு  25 மில்லியன் ரூபா பெறுமதியான சோளங்களை வழங்கியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஜூன் மாதம் 4 ஆம் திகதி  காலை முன்னிலையாகியிருந்த போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 







ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி 21ம் திகதி அவுஸ்திரேலியாவில் போராட்டம்- 'உலகம் இனிமேலும் பார்க்காமல் இருக்க முடியாது,இவை நிலத்தில் காணப்படும் எலும்புகள் இல்லை எங்கள் மக்களின் உயிர்கள்"

18 Jul, 2025 | 10:23 AM

அவுஸ்திரேலியாவில் உள்ள அனைத்து ஈழதமிழர் அமைப்புககள் தமிழ் ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி 21ம் திகதி பேரணியொன்றை முன்னெடுக்கவுள்ளன. என தமிழ் ஏதிலிகள் பேரவை தெரிவித்துள்ளது

அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

செம்மணி மனித புதைகுழியில் ஆதாரங்கள் மீண்டும் கிடைக்கத்தொடங்கியுள்ளதை தொடர்ந்தே அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழதமிழர் அமைப்புகள் இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை தூதரகத்திற்கு வெளியே ஆரம்பமாகவுள்ள இந்த பேரணி ஐநா அலுவலகத்தை நோக்கியும் பல நாடுகளின் தூதரகத்தை நோக்கியும் செல்லவுள்ளது.

1996 இல் முதலில் தெரியவந்த செம்மணிமனித புதைகுழிகளில் 1990களின் பிற்பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் பொதுமக்களின் மனித எச்சங்கள் காணப்படுகின்றன.

2025 இல் இடம்பெறும் சமீபத்தைய விசாரணைகளும் பொது அறிக்கைகளும் சர்வதேச தடையவியல்  தலையீட்டிற்கானவேண்டுகோள்களை மீண்டும் புதுப்பித்துள்ளன.

புதிய அகழ்வுகளும் கண்ணால் கண்டவர்களின் சாட்சியங்களும் நூற்றுக்கணக்கான உடல்கள்  இன்னமும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் புதைகுழிக்குள் இருக்கலாம்,என்பதை வெளிப்படுத்தியுள்ள நிலையிலேயே சர்வதேச தடையவியல் தலையீட்டிற்கான வேண்டுகோள்கள் மீண்டும் ஒலிக்கத்தொடங்கியுள்ளன.

இந்த புதைகுழிகள் கடந்த காலத்தின் நினைவுச்சின்னங்கள் இல்லை ,இலங்கையில் தொடரும் திட்டமிட்ட முறையில் நிராகரிக்கப்பட்டு வரும் இனப்படுகொலைக்கான நிராகரிக்க முடியாத மறுக்க முடியாத ஆதாரங்கள் .

தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களை சர்வதேச சமூகத்தின் கதவுகளிற்கு கொண்டு செல்வதே அவுஸ்திரேலிய பேரணியின் நோக்கம்.

இந்த பேரணியின் போது தமிழ் இளைஞர்கள்,உயிர்பிழைத்தவர்கள்,மனித உரிமை பரப்புரையாளர்கள் விசேடமாக தயாரிக்கப்பட் அறிக்கைகள் ஆவணங்களை ஐக்கிய நாடுகளிடமும்  வெளிநாட்டு தூதரகங்களிடமும் கையளிப்பார்கள்.நிகழ்த்தப்பட்டுள்ள அட்டுழியங்களின் அளவையும்,உலகளாவிய பொறுப்புக்கூறலிற்கான அவசர தேவையையும் இந்த ஆவணங்கள் கோடிட்டுக்காட்டும்.

இந்த ஆவணங்கள் 

தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்,

செம்மணி மனித புதைகுழி ஏனைய அட்டுழியங்கள் இடம்பெற்ற இடங்களிற்கு சர்வதேச சுயாதீன விசாரணையாளர்கள் செல்வதற்கு இலங்கை அனுமதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கவேண்டும்யுத்தகுற்றவாளிகளை நீதியிலிருந்து பாதுகாத்துள்ள இலங்கையின் உள்ளக பொறிமுறைகளிற்கான  ஆதரவை நிறுத்தவேண்டும்.தமிழர்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் அவர்களின் தாயகத்தை பாதுகாத்தல் ஆகிய வேண்டுகோளிற்கு ஆதரவளிக்க வேண்டும்.ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தவையாக காணப்படும்.

தமிழ் ஏதிலிகள் பேரவையின் உறுப்பினர்கள் இந்த பேரணியில் கலந்துகொள்வார்கள்,அதற்கு ஆதரவளிப்பார்கள்.

தமிழ் அகதிகள் மற்றும் இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு என்ற வகையில் அவுஸ்திரேலியாவின் மௌனம் மற்றும் உடந்தை குறித்த எங்களின் ஆழ்ந்த கரிசனையை வெளியிடுகின்றோம்.

இந்த குற்றங்களிற்கு காரணமான ஆட்சியாளர்களிடம் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் தமிழ் மக்களை நாடு கடத்துகின்றது.ஒடுக்குமுறைகள் தொடர்வதற்கான ஆதாரங்கள் தொடர்ந்து வெளியாகின்ற போதிலும் இது இடம்பெறுகின்றது.

; அதனை சூழவுள்ள மௌனமும்  குற்றத்தின் ஒரு பகுதியே என தமிழ் ஏதிலிகள் பேரவையின் பேச்சாளர் ரேணுகா இன்பகுமார் தெரிவித்துள்ளார்.

நாங்கள் நீதியை கோருகின்றோம் நாங்கள் நினைவுகூறலை கோரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.   நன்றி வீரகேசரி 

 



தையிட்டி விகாரை வளாகத்தினுள் மீண்டுமொரு சட்டவிரோத கட்டடம் நிர்மாணிக்கும் பணி ; விகாரதிபதியிடம் விளக்கம் கோரவுள்ளது வலி. வடக்கு பிரதேச சபை

18 Jul, 2025 | 10:14 AM

சட்டவிரோத தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் மேலுமொரு சட்ட விரோத கட்டடம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அது தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபையினரால் விகாரதிபதியிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாக தவிசாளர் தெரிவித்துள்ளார். 

வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் வியாழக்கிழமை  (17) மாலை இடம்பெற்றது. 

அதன் போது சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது. 

கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் தவிசாளர் தலைமையில் சில உறுப்பினர்கள் தையிட்டி விகாரைக்கு சென்று இருந்தனர். 

அதன் போது விகாரை வளாகத்தினுள் , கட்டட ஒன்று அமைப்பதற்கான அத்திவார கிடங்கு போன்றதொரு கிடங்கு காணப்பட்டுள்ளது. 

விகாரை வளாகத்தினுள் புதிய கட்டடம் அமைப்பதற்கு விகாரதிபதியினால் சபையில் அனுமதி கோரப்படாத நிலையில் , புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா எனும் சந்தேகம் அங்கு சென்ற உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்டு இருந்தது. 

இந்நிலையில், புதிய கட்டடங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா ? என்பது தொடர்பில் விகாரதிபதியிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்தார்.  நன்றி விரகேசரி 







செம்மணி படுகொலை : வடக்கு மற்றும் கிழக்கில் இனப்படுகொலை நடந்தது என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும் - அருட்தந்தை சக்திவேல்


Published By: Vishnu

17 Jul, 2025 | 07:57 PM

(இராஜதுரை ஹஷான்) (படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)

செம்மணியில் 400 இற்கும் அதிகமானோரை கொன்று புதைத்தோம் என்று கிரிசாந்தி குமாரசாமி படுகொலையின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷ வழங்கிய வாக்குமூலத்தை அன்றைய ஜனாதிபதி சந்திரிக்காவும், இன்றைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் மூடிமறைத்தார்கள். தமிழர்கள் என்பதற்காகவே இவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களின் படுகொலைக்க நீதி கோராத இந்த அரசாங்கம் எவ்வாறு தமிழர்களுக்கு நீதி கோரும். வடக்கு மற்றும் கிழக்கில் இனப்படுகொலை நடந்தது என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினர் கொழும்பு கோட்டை


புகையிரத நிலையம் முன்பாக வியாழக்கிழமை (17) 'செம்மணி சமூக படுகொலைக்கு எதிராக எழுச்சிக்கொள்வோம்'என்பதை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை இராணுவம் 90 ஆம் ஆண்டுகாலப்பகுதிகளில் வடக்கு மாகாணத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இக்காலப்பகுதியில் கிரிசாந்தி குமாரசாமி என்ற பாடசாலை மாணவி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு,வன்முறைக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார்.கொலை செய்யப்பட்ட தனது பிள்ளையை தேடி அவரது தாயாரும்,சகோதரரும், பக்கத்து வீட்டு ஒரு சகோதரரும் செல்கிறார்கள்.அவர்களும் படுகொலை செய்யப்பட்டார்கள்.


இந்த சம்பவம் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.இச்சம்பவத்தின் பிரதான சாட்சியாளரான சோமரத்ன ராஜபக்ஷ என்றும் இராணுவ சிப்பாய் 'செம்மணி பகுதியில் 400 இற்கும் அதிகமானோரை கொன்று புதைத்தோம்'என்று வாக்குமூலமளித்துள்ளார்.400 இற்கும் அதிகமானோர் பலவந்தமான முறையில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்கள்.

சோமரத்ன ராஜபக்ஷ என்பவர் தெற்கை சேர்ந்த சிங்களவர். இந்த சாட்சியத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் இந்நாள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் மூடிமறைத்தார்கள்.

செம்மணி பகுதியில் கடந்த மாதம் புனரமைப்பு பணிகள்


மேற்கொள்ளப்பட்ட போது மனித எலும்புகூடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டு, பின்னர் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இதுவரையில் 60 இற்கும் மேற்பட்ட மனித எலும்புகூடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

கண்டுப்பிடிக்கப்படும் மனித எலும்புக்கூடுகளில் பால்குடி குழந்தைகளினதும், சிறுவர்களினதும், எழும்புகூடுகள் காணப்படுகின்றன. எலும்புகூடுகளுடன் பாடசாலை புத்தகப்பை, கைபொம்மை, ஆகியன கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.இவர்களை பயங்கரவாதிகளாக்கியது யார், இவர்களை நாட்டுக்கு எதிரானவர்கள் என்று சித்தரித்தவர்கள் யார், தமிழர்கள் என்பதற்காக கொல்லப்பட்டார்களே தவிர பயங்கரவாதிகள் என்பதற்காகவல்ல, இதற்காகவே நாங்கள் நீதி கோருகிறோம்.


இழைக்கப்பட்ட அநீதிக்கு எந்த அரசாங்கங்களும் நீதியை வழங்காது என்பதை அறிவோம்.முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சமாதான புறாவாக சித்தரிக்கப்பட்டார்.ஆனால் அவர் யுத்தத்தை முன்னின்று நடத்தி கொலை செய்தார். மஹிந்த ராஜபக்ஷ இனப்படுகொலை செய்தார்.ரணில்,கோட்டபய,ஆகியோரும் இனபடுகொலையாளிகளே செம்மணி இனப்படுகொலையின் சாட்சியாக உள்ளது.இனப்படுகொலை 90 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே ஆரம்பிக்கப்பட்டது.அரசாங்கம் நீதியை பெற்றுக்கொடுக்காது ஏனெனில் இவர்கள் இராணுவத்துக்கு பயந்தவர்கள்.அவர்களின் பாதுகாப்பில் வாழ்கிறார்கள்.

மாத்தளை பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களின் மனித புதைகுழி கண்டுப்பிடிக்கப்பட்டது.நாங்கள் இதற்கு நீதி கோரினோம்.ஆனால் மக்கள் விடுதலை முன்னணி இதற்கு நீதி கோரவில்லை. தமது உறுப்பினர்களுக்கு நீதி கோராதவர்கள் தமிழ் மக்களுக்கு நீதி கோருவார்களா, வடக்கு மற்றும் கிழக்கில் இனப்படுகொலை நடந்தது என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.தமிழர்கள் என்பதற்காகவே இந்த கொலைகள் இடம்பெற்றன. நீதி கிடைக்க வேண்டுமாயின் சுயநிர்ணய உரிமை ஏற்கப்பட வேண்டும். அப்போது தான் நீதி கிடைக்கும் என்றார்.   நன்றி வீரகேசரி 



No comments: