கலாநிதி ஜெகான் பெரேரா
நீண்டகாலமாக தாமதிக்கப்பட்ட - பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உள்ளூராட்சி தேர்தல்கள் அண்மைக்காலத்தில் நாம் கண்டிராத அளவுக்கு அரசாங்க அதிகார துஷ்பிரயோகங்கள் இல்லாமல் முடிவடைந்தன. முன்னைய அரசாங்கங்களினால் முன்னைய தேர்தல்களின்போது செய்யப்பட்டதைப் போன்ற பெருமளவிலான துஷ்பிரயோகங்கள் இல்லாமல் இந்த தேர்தல்கள் நடைபெற்றதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கூறியிருக்கின்றன.
ஆளும் தேசிய மக்கள் சக்தி பிரதான எதிர்க்கட்சி பெற்ற வாக்குகளின் இரண்டு மடங்கையும் விட கூடுதலான வாக்குகளைப் பெற்றிருக்கிறது.
ஆனால், கடந்த வருடத்தைய இரு தேசிய தேர்தல்களிலும் வடக்கு, கிழக்கில் அதற்கு கிடைத்ததைப் போன்ற வலிமையான ஆதரவை இந்த தடவை பெறமுடியவில்லை.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருப்பதால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உள்ளூராட்சி தேர்தல்களின் முடிவுகள் விசேட முக்கியத்துவம் வாயந்தவையாக இருக்கும்.
பெருமளவிலான ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பபட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சட்டத்தின் முன்னிறுத்தத் தவறியமை, ஊழல் ஆழமாக வேர்விட்டிருக்கின்ற அரசாங்க திணைக்களங்களில் ஊழலை தடுத்து நிறுத்தத் தவறியமை, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்கத் தவறியமை மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற கொடுமையான சட்டங்களை இரத்துச் செய்யத் தவறியமை உதாரணங்களாகக் கூறப்படுகின்றன.
வடக்கு,கிழக்கில் முன்னாள் போர் வலயங்களில் காணாமல் போனோர் மற்றும் விசாரணை எதுவுமின்றி நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கும் இராணுவத்தினால் அபகரிக்கப்பட்ட காணிகளை அவற்றின் சட்டரீதியான உரிமையாளர்களுக்கு திருப்பிக் கையளிப்பதற்கும் அரசாங்கம் காலத்தைக் கடத்திக்கொண்டு போகின்றது என்ற உணர்வு மக்கள் மத்தியில் இருக்கிறது.
மிகவும் அண்மையில் புதிய ஒரு பிரச்சினை கிளம்பியிருக்கிறது. அதாவது மூன்று மாதகாலத்தில் தனியாரினால் உரிமை கோரப்படாத பட்சத்தில் வடமாகாணத்தில் சுமார் 6000 ஏக்கர் நிலங்கள் அரச நிலம் என்று பிரகடனப்படுத்தப்படும் என்று அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவித்திருக்கிறது.
மூன்று மாதகாலத்தில் அந்த நிலங்கள் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்படும் என்ற அறிவிப்பு நடைமுறைச் சாத்தியமற்ற காலக்கெடுவுடன் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஒரு இரக்கமற்ற செயலாக நோக்கப்படுகிறது.
ஏனென்றால், அந்த நிலங்கள் 30 வருடங்களுக்கும் அதிகமான காலமாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தவை என்பதுடன் மக்களால் அங்கு செல்லக்கூடியதாக இருக்கவுமில்லை. மேலும், உரிமை கோரப்படாத நிலங்கள் அரச நிலங்களாக்கப்படும் என்ற அறிவிப்பு வர்த்தமானியின் நோக்கம் குறித்து கேள்விகளை எழுப்புகிறது.
இது வடக்கு, கிழக்கில் அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரங்களை பெரிதும் பாதித்திருக்கக்கூடியதும் சாத்தியம். முன்னொருபோதும் இல்லாத வகையில் அந்த பிராந்தியங்களில் உள்ளூராட்சி தேர்தல் பிரசாரங்களுக்காக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கபினெட் அமைச்சர்களின் உயர்மட்ட விஜயங்கள் இடம்பெற்றன. ஆனால், மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு அவை போதுமானதாக இருக்கவில்லை.
பொருளாதார ஊக்குவிப்புகள்
தமிழ்க்கட்சிகள் பிளவுபட்டிருந்ததுடன் தலைவர்களுக்கு இடையிலான ஆளுமைப் போட்டிகள் காரணமாக ஐக்கிய முன்னணி ஒன்றை அமைக்க முடியாமல் போனதால் கடந்த வருடம் நவம்பரில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அவற்றினால் தமிழ் மக்களின் போதுமான ஆதரவைப் பெறமுடியவில்லை.
இந்த கட்சிகளிடம் ஐக்கியமும் நேர்மறையான நிகழ்ச்சித்திட்டமும் இல்லாமல் இருந்த சூழ்நிலை ஆளும் கட்சி தன்னை ஒரு நம்பகமான மாற்று அரசியல் சக்தியாக குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு காண்பிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தியது. தலைமுறை இடைவெளியும் ஒரு காரணியாக இருந்திருக்கக்கூடும்.
கடந்தகால அரசியல் கதையாடல்களில் பெருமளவுக்கு அக்கறையில்லாத இளம் வாக்காளர்கள், வேட்பாளர்களை அவர்களின் செயற்திறமை, வெளிப்படைத்தன்மை மற்றும் வாய்ப்புக்களின் அடிப்படையில் மதிப்பிடக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அதனால் ஆளும் கட்சியின் அணுகுமுறையை அவர்கள் விரும்பியிருக்கக்கூடும். அதன் விளைவாக, ஆளும் கட்சி முன்னென்றும் இல்லாத வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சகல மாவட்டங்களிலும் ( மட்டக்களப்பு மாவட்டம் தவிர) பெரும்பான்மையான ஆசனங்களைப் பெற்றது.
ஆனால், பல்வேறு காரணங்களின் நிமித்தம் அந்த மாவட்டங்களில் உள்ளூராட்சி தேர்தல்களில் ஆளும் கட்சியினால் அதே ஆதரவை தக்கவைக்க முடியவில்லை.
முக்கியமான பிரச்சினைகளில் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி இந்த தடவை உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் அரசியல் கட்சிகளினால் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு பிரசாரத்தை செய்யக்கூடியதாக இருந்தது.
காணாமல் போருக்கான நீதி, இராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கும் காணிகளை உரிமையாளர்களுக்கு திருப்பிக் கையளித்தல், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுதலை செய்தல், வரலாற்று ரீதியாக தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சொந்தமாவையாக இருந்துவரும் நிலங்களை பௌத்த ஊடுருவலில் இருந்து பாதுகாத்தல் ஆகியவை முக்கிய பிரச்சினைகளாகும்.
பொருளாதார அபிவிருத்தி முக்கியமானது என்கிற அதேவேளை, மெய்யான அரசியல் சுயாட்சிக்கும் சுயநிர்ணய உரிமைக்கும் அது பதிலீடாக அமையாது என்று தமிழ்க்கட்சிகள் மக்களுக்கு கூறின.
வடக்கில் தனியாருக்கு சொந்தமான காணியில் பௌத்த விகாரை ஒன்று நிர்மாணிக்கப்பட்டது தொடர்பான காணிப்பிரச்சினை ஒன்றை தீர்த்து வைப்பதற்கு தவறியமையை பெரும்பான்மையின உணர்வுகளுக்கு மாத்திரம் அரசாங்கம் மதிப்புக் கொடுக்கிறது என்பதன் பிரதிபலிப்பாக அவை சுட்டிக்காட்டன.
மேலும், வடக்கு,கிழக்கில் இருந்து கடந்த பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியில் இருந்து தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களின் கடந்த நான்கு மாதகால செயற்பாடுகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றன. பாராளுமன்றத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் இருக்கிறது.
தமிழ்ப் பகுதிகளிலும் கூட அவர்கள் பெரிதாக பேசுவதில்லை. தங்களது செயற்பாடுகள் மூலமாக அவர்கள் தங்களை தெரிவுசெய்த மக்களை கவரவில்லை.
அவர்கள் அரசியலில் அனுபவம் இலாலாதவர்களாக இருப்பதுடன் ஆளும்கட்சிக்குள் ' உள்வீட்டுக்காரர்களாகவும்' இல்லை. அதனால் அவர்களினால் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிகரானவர்களாகவும் செயற்பட முடியவில்லை.
சகல குடிமக்களையும் சமத்துவமாக நடத்துவது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மக்களுக்கு விளக்கிக் கூறக்கூடிய அல்லது நியாயப்படுத்தக்கூடிய நிலையிலும் அவர்கள் இல்லை.
இனத்துவ அடிப்படையில் அதிகாரப் பகிர்வுக்கான தேவையைக் குறைக்கக்கூடிய பொருளாதார அபிவிருத்தி மீது அரசாங்கம் கவனத்தைக் குவித்திருக்கிறது என்பதையும் மக்களுக்கு விளக்க அவர்களால் முடியவில்லை.
பரந்த நோக்கு
அரசாங்கத்தின் மார்க்சிய அடிப்படையிலான அரசியல் கோட்பாடு நல்லிணக்கத்தை கட்டமைப்பு ரீதியிலான சமத்துவம் மற்றும் பொருளாதார நீதியின் வழியிலேயே நோக்க முற்படும். இன, மத அடையாளத்தின் மீது அது கவனத்தைச் செலுத்தாது. ஆனால்,இவை வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் நீண்டகாலக் கோரிக்கைகளாக இருந்து வருகின்றன.
பொதுத்தேர்தலில் வடக்கு, கிழக்கில் செய்துகாட்டியதைப் போன்று உள்ளூராட்சி தேர்தல்களிலும் அரசாங்கம் மக்கள் ஆதரவு அதற்கு இருப்பதை வெளிக்காட்டியிருந்தால், இனத்துவ அடிப்படையில் அன்றி சமத்துவத்தின் அடிப்படையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அதன் அணுகுமுறைக்கு ஜனநாயக ரீதியிலான ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்று வலுவான முறையில் நியாயப்படுத்தக் கூடியதாக இருந்திருக்கும்.
ஆனால், அரசாங்கத்துக்கு அத்தகைய ஒரு இரண்டாவது ஆணை அங்கு கிடைக்கவில்லை. பல்லின - பன்முக அடிப்படையில் தீர்மானங்களை மேற்கொள்ளும் செயன்முறையாக அன்றி மத்தியமயப்படுத்தப்பட்ட செயன்முறையை முன்னெடுக்கும் அரசாங்கத்தின் பரீட்சார்த்தம் தமிழ் முஸ்லிம் மக்களினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கும் மாகாணசபை தேர்தல்களை நடத்துமாறு விசேடமாக இந்தியாவிடம் இருந்து மாத்திரமல்ல மேற்குலக நாடுகளிடம் இருந்தும் அரசாங்கம் தற்போது சர்வதேச நெருக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.
மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருக்கிறது. மாகாண சபைகள் ஒரு காலத்தில் பெருமளவு சுயாட்சிக்கான பாதையாக நோக்கப்பட்டன.
தேர்தல்களை நடத்தி மக்களினால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகளின் ஊடாக மாகாணசபைகளை மீண்டும் செயற்பட வைத்து - அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தின் கட்டமைப்பில் மாத்திரம் தங்கியிராமல் அதிகாரப்பகிர்வு தொடர்பான பரந்தளவிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதன் மூலம் தமிழ் மக்களின் கரிசனைகளை தீர்க்கக்கூடியதாக இருக்கும்.
வடக்கு, கிழககு மாகாணங்களில் உள்ளூராட்சி தேர்தல்களின் முடிவுகளை அரசாங்கம், தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளை எதிரிகளாக அல்லது போட்டிக்குரியவையாக நோக்காமல் கூட்டுப் பங்காண்மையுடன் பணியாற்றுவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பாக நோக்கவேண்டியது அவசியமாகும்.
பெரும்பான்மையினத்தவர்கள் மத்தியில் வலிமையான ஒரு ஆதரவுத்தளம் தனக்கு தொடர்ந்தும் இருக்கிறது என்பதை அரசாங்கம் நிரூபித்திருக்கிறது.
நாட்டை மாற்றியமைப்பதற்கும் முறைமை மாற்றத்தைச் செய்வதற்கும் சட்டங்களையும் அரசியலமைப்பையும் மாற்றுவதற்கு அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மைப் பலம் இருக்கிறது.
தேசிய கலந்தாலோசைனைகள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு ஏனைய அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற்று அத்தகைய மாற்றங்களை அரசாங்கம் எந்தளவுக்கு கொண்டுவருகிறதோ அந்தளவுக்கு அந்த மாற்றங்கள் நிலைபேறானவையாக இருக்கும்.
உள்ளூராட்சி தேர்தல்களின் முடிவுகளுக்கு பிறகு அரசாங்கம் வாக்குறுதிகளில் இருந்து பயன்விளைவுகளை காட்டுவதை நோக்கி நகர வேண்டியதும் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் அதை விரைவாகச் செய்யவேண்டியதும் அவசியமாகும். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment