பூஜைக்கு வந்த மலர் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 


சிறிய பஜெட்டில், குறைந்த செலவில் படம் எடுத்து இலாபம் பார்க்கும் வித்தை அறிந்தவர்கள் முக்தா பிலிம்ஸ் சகோதரர்கள். அண்ணன் ராமசாமி சிக்கனமாக படத்தை தயாரிக்க , தம்பி சீனிவாசன் கூடுமான வரை அதை பிரம்மாண்டமாக திரையில் காட்டி வெற்றி பெற்று விடுவார்கள். ஆரம்பத்தில் இவர்களுடைய ஆஸ்த்தான ஹீரோவாக திகழ்ந்தவர் ஜெமினி கணேசன். அவர் நடிப்பில் இவர்கள் தயாரித்த பனித் திரை, இதயத்தில் நீ இரண்டும் ரசிகர்களின் ஆதரவை பெற்றதால் தங்களின் மூன்றாவது தயாரிப்பான பூஜைக்கு வந்த மலர் படத்துக்கும் ஜெமினியை கதாநாயகனாக நடிக்க வைத்தார்கள். அவருக்கு ஜோடி சாவித்திரி. ஜெமினி, சாவித்திரி ஜோடிக்கு மவுசு குறையத் தொடங்கிய கால கட்டத்தில் துணிந்து அவர்களை படத்துக்கு ஒப்பந்தம் செய்தார்கள் இந்த சகோதரர்கள்.

 

படத்துக்கு கதை வசனம் எழுத அவர்கள் தேர்ந்தெடுத்தது புதிதாய்

வளர்ந்து வரும் ஓர் இளைஞரை. அவர் தான் கே. பாலசந்தர். தெய்வத்தாய், சர்வர் சுந்தரம், படத்தை தொடர்ந்து இந்த படத்துக்கு கதை வசனம் எழுதினார் பாலசந்தர். உலகத்தில் உள்ள பெண்கள் எல்லாம் மலர்களை போன்றவர்கள்தான் , ஆனால் இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு பெண்னும் பூஜைக்கு வந்த மலர் என்ற கருத்தை வியுறுத்தும் விதத்தில் படத்தின் கதையை அமைத்திருந்தார் பாலசந்தர். வசனங்களிலும் அவர் தனது திறனை வெளிப்படுத்தியிருந்தார்.
 

ரவியும், சுரேஷும் இணை பிரியா கல்லூரி நண்பர்கள். கல்லூரியில் ரவி செய்யும் ஒரு தவறை சுரேஷ் தன் தலையில் சுமந்து அதனால் கல்லூரியில் இருந்து நீக்கப் படுகிறான். பின்னர் இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்கள். அங்கே சுரேஷ் மீது ஒரு பழி விழ , அவனின் உயர் அதிகாரியான ரவி தனது காதலி மாலாவின் சாட்சியத்தை ஏற்று சுரேஷை வேலையில் இருந்து நீக்கி விடுகிறான். இதனால் சுரேஷ் ரவியை தனது பரம வைரியாக வரித்துக் கொள்கிறான். இதனிடையே சித்ராவை சந்திக்கும் சுரேஷுக்கு அவள் மீது காதல் ஏற்றப்படுகிறது. சித்ராவும் அவனை விரும்புகிறாள். ஆனால் சித்ரா ரவியின் தங்கை என்ற விபரம் சுரேஷுக்கு தெரியாது. இரு வீட்டாரின் சம்மதத்துடன் சித்ரா சுரேஷ் திருமணம் நடக்கவிருக்கும் சமயம் சித்ரா ரவியின் தங்கை என்ற விபரம் சுரேஷுக்கு தெரிய வருகிறது. திருமணமும் தடைப் படுகிறது. ஆனாலும் சுரேஷ்தான் தன் கணவன் அவன் மறுத்தாலும் அவனுடனேயே வாழ்வேன் என்று அவன் வீட்டுக்குளேயே புகுந்து விடுகிறாள் சித்ரா. அதன் பின் நடப்பதென்ன என்பதே மீதி படம்.


படத்தில் காலேஜ் மாணவனாக ஜெமினியை காட்டுகிறார்கள். சாவித்திரியின் உருவ அமைப்பு அவரை ஹீரோயினாக ஏற்க மறுக்கிறது. தாயாக வரும் சந்தியாவின் உருவமும் சாவித்திரியுடன் போட்டி போடுகிறது. நல்ல காலம் முத்துராமன், மணிமாலா ஜோடிதான் பார்க்க இதமாக இருக்கிறது. முத்துராமன் இரண்டு டூயட் பாடுவதுடன் உணர்ச்சிகரமாகவும் நடிக்கிறார். சாவித்திரியும் நடிப்பில் குறை வைக்கவில்லை. ஞாபக மறதிக்காரராக வந்து நாகேஷ் செய்யும் கூத்துகள் கொஞ்சம் டு மச் ! மனோரமா, எஸ் . ராமராவ் இருவரும் காமெடிக்கு துணை போகிறார்கள். இவர்களுடன் பண்டரிபாய், ஓ ஏ கே தேவர் ஆகியோரும் நடித்திருந்தனர்.

படத்தில் முத்துராமன், சாவித்திரி இருவரின் தந்தையாக எஸ் வி

சகஸ்ரநாமமும், தாயக சந்தியாவும் நடித்தனர். இப் படம் தயாராக இரு வருடங்களுக்கு முன் சகஸ்ரநாமம் நாலு வேலி நிலம் என்ற படத்தை தயாரித்து அதனை இயக்கும் பொறுப்பை வி . சீனிவாசனிடம் ஒப்படைத்தார். ஆனால் அப் படம் வெற்றி பெறவில்லை. இப்போது சீனிவாசன் இந்தப் படத்தை தயாரித்த போது அதில் நடிக்கும் வாய்ப்பை சகஸ்ரநாமத்துக்கு வழங்கினார். நாலு வேலி நிலத்தில் இயக்குனராக பணியாற்ற சகஸ்ரநாமம் என்ன ஊதியத்தை சீனிவாசனுக்கு கொடுத்தாரோ அதே ஊதியத்தை இந்தப் படத்தில் நடிக்க சீனிவாசன் அவருக்கு வழங்கினார். படத்தில் எஸ் வி சகஸ்ரநாமத்தின் பாத்திரம், நடிப்பு இரண்டும் அருமை.
 

வாலி, ஆலங்குடி சோமு இயற்றிய பாடல்களுக்கு விஸ்வநாதன் , ராமமூர்த்தி இசை. மைய் ஏந்தும் விழியாட, கால்கள் நின்றன நின்றதுதான் பாடல்கள் கவரும்படி அமைந்தன. நிமாய் கோஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.


படத்தை வி . சீனிவாசன் தன் பாணியில் டைரக்ட் செய்திருந்தார்.

கதா பாத்திரங்கள் எல்லோரும் உணர்ச்சிவசப்பட்டு ஒவ்வொரு காரியத்தை செய்கிறார்கள். அவசர முடிவுக்கு வருகிறார்கள். இதனால் இதயத்தில் நீ படத்தில் இருந்த டைரக்டரின் நகாசு இதில் இல்லை. ஆனாலும் இந்த கதையை பாலசந்தர் இயக்கியிருந்தாலும் சிரமப்பட்டிருப்பார் என்பது புரிகிறது. அந்த விதத்தில் சீனிவாசனுக்கு வெற்றிதான்!

No comments: