வடக்கில் தனிக்கட்சியாக முன்னிலையில் தமிழரசு : அ.இ.த.கா, ஜ.த.தே.கூ, தே.ம.ச, ஐ.ம.ச, ஈ.பி.டி.பி ஆகியன சில சபைகளில் ஆதிக்கம்
கிழக்கில் தமிழ் பேசும் பகுதிகளில் ஆசனங்களை கைப்பற்றியுள்ள கட்சிகள் !
கெஹெலிய ரம்புக்வெல்ல கைது
3000 நாட்களை எட்டியது காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டம்!
முல்லைத்தீவையும் கைப்பற்றியது இலங்கை தமிழ் அரசுக் கட்சி
கிளிநொச்சி இலங்கை தமிழரசுக் கட்சி வசம் !
வவுனியா மாவட்டத்தின் இறுதி முடிவுகள் : மாநகர சபை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வசம்
வடக்கில் தனிக்கட்சியாக முன்னிலையில் தமிழரசு : அ.இ.த.கா, ஜ.த.தே.கூ, தே.ம.ச, ஐ.ம.ச, ஈ.பி.டி.பி ஆகியன சில சபைகளில் ஆதிக்கம்
Published By: Vishnu
07 May, 2025 | 08:08 PM
ஆர்.ராம்
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாணத்தில் தனிக்கட்சியாகப் போட்டியிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
இதேநேரம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஈ.பி.டி.பி ஆகியன குறிப்பிடத்தக்க சில சபைகளில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. அதனடிப்படையில் மாவட்ட ரீதியான முடிவுகளைப் பார்க்கையில்,
யாழ்.தேர்தல் மாவட்டம்
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் காணப்படும் 17 உள்ளுராட்சி மன்றங்களில் இலங்கைத் தமிழரசுக்கட்சி யாழ்.மாநகர சபை, நெடுந்தீவு பிரதேச சபை, வேலனை பிரதேச சபை, வலிகாமம் மேற்கு பிரதேச சபை, வலிகாமம் வடக்கு பிரேதச சபை, வலிகாமம் தெற்கு பிரதேச சபை, வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை, வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை, வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை, பருத்தித்துறை பிரதேச சபை, சாவகச்சேரி பிரதேச சபை, நல்லூர் பிரதேச சபை ஆகிய 12சபைகளில் முதன்மை பெற்றுள்ளது.
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் பருத்தித்துறை நகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை ஆகிய இரண்டு சபைகளில் முதன்மை பெற்றுள்ளதோடு ஈ.பி.டி.பி காங்கேசன்துறை பிரேதச சபையில் மாத்திரம் முதன்மை பெற்றுள்ளது.
இதேநேரம், காரைநகர் பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் மக்கள் கூட்டணி, சுயேட்சைக்குழு ஆகியன தலா 2 ஆசனங்களையும் தமிழரசுக்கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.
மேலும் சாவகச்சேரி நகரசபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தமிழரசுக்கட்சி ஆகியன தலா அறு ஆசனங்களைப் பெற்று சமநிலையில் இருப்பதோடு தேசிய மக்கள் சக்தி மூன்று ஆசனங்களையும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி இரண்டு ஆசனங்களையும், ஈ.பி.டி.பி ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.
கிளிநொச்சி தேர்தல் மாவட்டம்
கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் உள்ள கரைச்சி பிரதேச சபை, பூநகரி பிரதேச சபை, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை ஆகிய மூன்று உள்ளுராட்சி மன்றங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆகியவற்றில் இலங்கைத் தமிழரசுக்கட்சி முன்னிலை பெற்றுள்ள அதேவேளை, கரைச்சி, பூநகரி ஆகியவற்றில் அக்கட்சி அறுதிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இதனால் அவ்விரு சபைகளிலும் தமிழரசுக்கட்சி தனித்து ஆட்சி அமைக்கவுள்ளதோடு, பச்சிலைப்பள்ளி பிரேச சபையில் இரண்டாவது அதிக ஆசனங்களைக் கொண்டிருக்கும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மன்னார் தேர்தல் மாவட்டம்
மன்னார் தேர்தல் மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளுராட்சி மன்றங்களில் மன்னார் மாநகர சபை, மன்னார் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகியவற்றில் இலங்கைத் தமிழரசுக்கட்சி முதன்மை பெற்றுள்ளது. எனினும் இம்மூன்று சபைகளிலும் ஆட்சி அமைப்பதற்கு அக்கட்சி அறுதிப்பெரும்பான்மையைப் பெற்றிருக்கவில்லை. இந்நிலையில் ஆட்சியை அமைப்பதற்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் ஒத்துழைப்புக்களை பெறவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, முசலி பிரதேச சபையில், ஐக்கிய மக்கள் சக்தியயும், நானாட்டான் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியும் முதன்மை பெற்றுள்ளபோதும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை அக்கட்சிகள் கொண்டிருக்கவில்;லை. இந்நிலையில் இலங்கைத் தொழிலாளர் கட்சி, இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் ஒத்துழைப்புகள் ஆட்சி அமைப்பதற்கு தேவையாக உள்ளன.
நானாட்டான் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வேறெந்த தரப்புடனும் ஒன்றிணையாத பட்சத்தில் எதிரணிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாக கூறப்படுகின்றது.
முல்லைத்தீவு தேர்தல் மாவட்டம்
முல்லைத்தீவு தேர்தல் மாவட்டத்தில் உள்ள கரைத்துறைப்பற்று பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, மாந்தை கிழக்கு பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளுராட்சி மன்றங்களிலும் இலங்கைத் தமிழரசுக்கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
இதில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் அறுதிப்பெரும்பான்மையை தமிழரசுக்கட்சி பெற்றுக்கொண்டுள்ளதோடு ஏனைய மூன்று சபைகளிலும் ஆட்சி அமைப்பதற்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, அகில இலங்கை தமிழர் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் ஒத்துழைப்புக்களைப் பெற வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா தேர்தல் மாவட்டம்
வவுனியா தேர்தல் மாவட்டத்தில் வவுனியா மாநகர சபையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தேசிய மக்கள் சக்தி, இலங்கைத் தொழிலாளர் கட்சி ஆகியன தலா நான்கு ஆசனங்களைப் பெற்று சமநிலையில் உள்ளதோடு தமிழரசுக் கட்சி மூன்று ஆசனங்களைப் பெற்று இரண்டாம் நிலையில் உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு ஆசனங்களுடன் மூன்றாம் நிலையிலும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜனநாய தேசியக் கூட்டணி, சுயேட்சைக்குழு ஒன்று, இரண்டு ஆகியன தலா ஒவ்வொரு ஆசனங்களையும் கொண்டுள்ளன.
இதேநேரம், வவுனியா வடக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி 6 ஆசனங்களுடன் முன்னிலையில் உள்ளபோதும் இலங்கைத் தமிழரசுக்கட்சி 5 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 4ஆசனங்களையும், ஜனநாயக தமிழ்த் தேசியக்கூட்டணி 3ஆசனங்களையும் இலங்கை தொழிலாளர் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும் கொண்டுள்ளதோடு சர்வஜன சக்தி ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.
வெங்கலசெட்டிக்குளம் பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி 4ஆசனங்களையும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தேசிய மக்கள் சக்தி ஆகிய தலா மூன்று ஆசனங்களையும் ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி ஜனநாயக தேசியக்கூட்டணி இலங்கை தொழிலாளர் கட்சி ஆகியன தலா 2ஆசனங்களையும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், சுயேட்சைக்குழு 2 ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.
வவுனியா தெற்கு (தமிழ்) பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி 6ஆசனங்களையும் இலங்கைத் தமிழரசுக்கட்சி 5 ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும், ஜனநாயக தேசியக்கூட்டணி, இலங்கை தொழிலாளர் கட்சி ஆகியன தலா இரண்டு ஆசனங்னகளையும் தமிழ் மக்கள் கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், சர்வஜன சக்தி, சுயேட்சைக்குழு 2, சுயேட்சைக்குழு 3 ஆகியன தலா ஒவ்வொரு ஆனசங்களையும் பெற்றுக்கொண்டுள்ளன.
வவுனியா தெற்கு (சிங்களம்) பிரதேச சபையில், தேசிய மக்கள் சக்தி 7 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 4ஆசனங்களையும் சுயேட்சைக்குழு 2 இரண்டு ஆசனங்களையும் 2 இலங்கை தொழிலாளர் கட்சி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக்கட்சி, சர்வஜன சக்தி ஆகியன தலா ஒவ்வொரு ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளன.
அந்தவகையில் வவுனியா தேர்தல் மாவட்டத்தில் உள்ள எந்தவொரு உள்ளுராட்சி மன்றத்திலும் ஆட்சியை அமைத்துக்கொள்வதில் ஆகக்குறைந்தது மூன்றுக்கு மேற்பட்ட தரப்பினர் ஒன்றிணைய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
கிழக்கில் தமிழ் பேசும் பகுதிகளில் ஆசனங்களை கைப்பற்றியுள்ள கட்சிகள் !
Published By: Vishnu
08 May, 2025 | 10:29 AM
(ஆர்.ராம்)
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகள் ஆசனங்களை கைப்பற்றியுள்ள நிலையில், திருகோணமலையில் தமிழ் அரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.
அதேபோன்று அம்பாறையில் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழரசுக்கட்சி ஆகியன தமிழ் பேசும் பகுதிகளில் ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.
எனினும், திருகோணமலை, அம்பாறையின் சிங்களப் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியும் சபையொன்றைக் கைப்பற்றியுள்ளது.
கிழக்கு மாகாணத்திலும் பல்வேறு சபைகளிலும் ஆட்சி அமைப்பதில் அறுதிப்பெரும்பான்மை இன்மையால் இழுபறியான நிலைமைகள் அதிகமேற்பட்டுள்ளது.
இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளின் பிரகாரம் கட்சிகளின் நிலைமைகள் வருமாறு,
மட்டக்களப்பு மாவட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 16 ஆசனங்களையும், ஏறாவூர் பற்று பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 13 ஆசனங்களையும் கோரளைப்பற்று பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 10ஆசனங்களையும், மண்முனை தெற்கு மற்றும் எருவில் பற்று பிரதேச சபை இலங்கைத் தமிழரசுக்கட்சி 8ஆசனங்களையும், மண்முனை பற்று பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 6 ஆசனங்களையும் மண்முனை மேற்கு பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 10ஆசனங்களையும் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 6 ஆசனங்களையும் போரதீவு பற்று பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 8ஆசனங்களையும் பெற்றுள்ளது.
தமிழரசுக்கட்சி மண்முனைப் மேற்கு பிரதேச சபையில் மாத்திரம் அறுதிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ளதோடு ஏனைய சபைகளில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் ஒத்துழைப்புடனேயே ஆட்சி அமைக்கும் நிலைமைகள் காணப்படுகின்றன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடி நகரசபையில் அறுதிப்பெரும்பான்மையுடன் 10ஆசனங்களை கைப்பற்றியுள்ளதோடு ஏறாவூர் பற்று பிரதேச சபையில் 7ஆசனங்களைப் பெற்றுள்ளது.
கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 7ஆசனங்களைப் பெற்றுள்ளதோடு அக்கட்சி ஏனைய அனைத்து சபைகளிலும் ஆசனங்களைப் பெற்றுக்கொண்டு தீர்மானிக்கும் சக்தியாக காணப்படுகின்றது.
கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை ஐக்கிய மக்கள் சக்தி 8ஆசனங்களைப் பெற்றுற்றுள்ளபோதும் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை.
இந்நிலையில் முன்னிலை பெற்றுள்ள தரப்பினர்கள் ஏனைய தரப்பினருடன் கூட்டிணைந்து ஆட்சி அமைப்பதற்குரிய பேச்சுக்களை ஆரம்பித்துள்ளனர்.
திகாமடுல்ல மாவட்டம்
திகாமடுல்ல மாவட்டத்தில் அக்கறைப்பற்று மாநகரசபை, அக்கரைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றை தேசிய காங்கிரஸ் கைப்பற்றியுள்ளதோடு சம்மாந்துறை பிரதேச சபையையும், நிந்தவூர் பிரதேச சபையையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அம்பாறை நகரசபையிலும், தெஹியத்தகண்டிய பிரதேச சபையிலும், தமன பிரதேச சபையிலும், உஹன பிரதேச சபையிலும், மஹா ஓயா பிரதேச சபையிலும், நமலோயா பிரதேச சபையிலும், பதியத்தலாவ பிரதேச சபையிலும் லகுகல பிரதேச சபையிலும் ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நாவிதன்வெளி பிரதேச சபையிலும், ஆலையடிவேம்பு பிரதேச சபையிலும், காரைதீவு பிரதேச சபையிலும் ஆசனங்களை பெற்றுள்ளதோடு இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இறக்காமம் பிரதேச சபையிலும், பொத்துவில் பிரதேச சபையிலும், அட்டளைச்சேனை பிரதேச சபையிலும் திருக்கோவில் பிரதேச சபையில் சுயேட்சைக்குழு ஒன்றும் ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.
எனினும் இந்த சபைகளிலும் கூட்டணிகளை அமைப்பதன் மூலமே ஆட்சியை அமைத்துக்கொள்ளக்கூடிய நிலைமைகளே காணப்படுகின்றது.
திருகோணமலை மாவட்டம்
இலங்கைத் தமிழரசுக்கட்சி திருகோணமலை மாநகரசபையில் 9ஆசனங்களையும், வெருகல் பிரதேச சபையில் 8ஆசனங்களையும் திருகோணமலை நகர சபையில் 6ஆசனங்களையும் மூதூர் பிரதேச சபையில் 5ஆசனங்களையும் பெற்றுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிண்ணியா நகரசபையில் மட்டும் 4 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி சேருவில பிரதேச சபையில் 7ஆசனங்களையும் கந்தளாய் பிரதேச சபையில் 10 ஆசனங்களையும் மொரவெவ பிரதேச சபையில் 9ஆசனங்களையும் கோமரன்கடவல பிரதேச சபையில் 9 ஆசனங்களையும் பதவிஸ்ரீபுர பிரதேச சபையில் 9ஆசனங்களையும் தம்பலகமுவ பிரதேச சபையில் 3 ஆசனங்களையும் பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குச்சவெளி பிரதேச சபையில் 5ஆசனங்களையும், கிண்ணியா பிரதேச சபையில் 5ஆசனங்களையும் பெற்றுள்ளது. நன்றி வீரகேசரி
கெஹெலிய ரம்புக்வெல்ல கைது
07 May, 2025 | 03:43 PM
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று புதன்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்றைய தினம் முன்னிலையாகிய போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கெஹெலிய ரம்புக்வெல்லவை கொழும்பு பிரதான நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
3000 நாட்களை எட்டியது காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டம்!
Published By: Digital Desk 2
07 May, 2025 | 02:21 PM
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் (7) மூவாயிரம் நாட்களை எட்டியுள்ள நிலையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இறுதிப்போரின்போதும் அதற்கு முன்னரும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மைநிலையினை அறியத்தருமாறு வலியுறுத்தி, தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா அஞ்சல் அலுவலகத்துக்கு அருகில் சுழற்சி முறை உணவுத்தவிர்ப்பு போராட்டம் கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் மூவாயிரம் நாட்களாகிவிட்ட நிலையில் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வின்றி போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இன்றைய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஐரோப்பிய அமெரிக்க கொடிகளை ஏந்தியிருந்ததுடன், தங்களுக்கு சர்வதேச நீதி வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
நன்றி வீரகேசரி
முல்லைத்தீவையும் கைப்பற்றியது இலங்கை தமிழ் அரசுக் கட்சி
Published By: Digital Desk 3
07 May, 2025 | 10:05 AM
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முல்லைத் தீவில் நான்கு பிரதேச சபைகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.
இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை ஆகிய 4 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
மாந்தை கிழக்கு பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 1,364 வாக்குகளைப் பெற்று 4 உறுப்பினர்களையும் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 6,306 வாக்குகளைப் பெற்று 7 உறுப்பினர்களையும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 10,816 வாக்குகளைப் பெற்று 11 உறுப்பினர்களையும் துணுக்காய் பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 1,594 வாக்குகளைப் பெற்று 4 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.

கிளிநொச்சி இலங்கை தமிழரசுக் கட்சி வசம் !
Published By: Digital Desk 3
07 May, 2025 | 09:57 AM
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தின் 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.
இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை ஆகிய 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
கரைச்சி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 20,962 வாக்குகளைப் பெற்று 20 உறுப்பினர்களையும் பச்சிளைப்பள்ளி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 3,040 வாக்குகளைப் பெற்று 6 உறுப்பினர்களையும் பூநகரி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5,171 வாக்குகளைப் பெற்று 10 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது. நன்றி வீரகேசரி
வவுனியா மாவட்டத்தின் இறுதி முடிவுகள் : மாநகர சபை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வசம்
Published By: Digital Desk 3
07 May, 2025 | 09:50 AM
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபையில் வவுனியா மாநகர சபையை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கைப்பற்றியுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன.
அதன்படி, வவுனியா மாநகர சபையை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், வவுனியா வடக்கு பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும், வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், வவுனியா தெற்கு (சிங்கள) பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும், வவுனியா தெற்கு (தமிழ்) பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும் கைப்பற்றியுள்ளன. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment