உலகச் செய்திகள்

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் !   

பரேஷன் சிந்தூர் மூலம் பாக். பயங்கரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து அழிப்பு: இந்தியமத்திய அரசு விவரிப்பு

புதிய பாப்பரசராக அமெரிக்காவைச் சேர்ந்த கர்தினால் ரொபர்ட் பிரான்ஸிஸ் பிரீவோஸ்ட் தெரிவு : பாப்பரசர் 14 ஆம் லியோ என அழைக்கப்படுவார்

ஜம்முவில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் ; சைரன் ஒலிப்பு, மின்சாரம் தடை

போரால் ஏற்பட்டுள்ள கடுமையான நிலை குறித்து பாகிஸ்தான் தேசிய பாதுகாப்புக் குழு கூடி ஆராய்வு !

ஒப்பரேஷன் சிந்தூர் : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதலை ஆரம்பித்தது இந்தியா : 9 முகாம்கள் மீது திடீர் தாக்குதல்!




இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் !   

10 May, 2025 | 07:39 PM

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியன இரு தரப்பு போர் நிறுத்தத்துக்கு இணங்கியிருக்கின்றன.

இந்த அறிவிப்பை இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரியும், பாகிஸ்தான் உதவி பிரதமர் இஷாக் டார்ரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவ நிலைகள் மீது தாக்குதல்கள் மற்றும் பதில் தாக்குதல்களை நடத்திய பின்னர், "முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு" இணங்கயுள்ளமையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார்.

காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்ப காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது.

இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் பதில் தாக்குதல் மேற்கொண்டது.

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், இந்தியா -பாகிஸ்தானுக்கிடையில் போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக பாகிஸ்தான் துணை பிரதமர் இசாக் தார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "பாகிஸ்தானும் இந்தியாவும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டது. பாகிஸ்தான் எப்போதும் தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் செய்யாமல், பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக பாடுபட்டு வருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்தியா போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றம் முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி   







ஒபரேஷன் சிந்தூர் மூலம் பாக். பயங்கரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து அழிப்பு: இந்தியமத்திய அரசு விவரிப்பு 

07 May, 2025 | 02:47 PM

புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ஒபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. நள்ளிரவுக்குப் பின் 1.30 மணியளவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தார். 

ஒபரேஷன்  சிந்தூர்’ மூலம் பயங்கரவாதத்தின் மீது பதிலடி கொடுக்கும் நமது உரிமையை நிலைநாட்டியுள்ளோம் என்று அவர் எடுத்துரைத்தார்.

ஒபரேஷன்  சிந்தூர்: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதன் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்தது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் ஏன்? - நள்ளிரவுக்குப் பின் 1.30 மணியளவில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தார். அப்போது அவர் “கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில்  சுற்றுலாப் பயணிகள் நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் என 26 பேர் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதல் மிகவும் கொடூரமானது. பயங்கரவாதிகள் சுற்றுலா வந்தவர்களின் குடும்பத்தினரின் கண் முன்னாலேயே மிகக் கொடூரமான கொலைச் சம்பவத்தை நடத்தினர். இது சுற்றுலாப் பயணிகளின் குடும்பத்தினருக்கு மிகப் பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தியது.

இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானில் பயிற்சி மேற்கொண்ட பயங்கரவாதிகள் ஈடுபட்டதை இந்தியா உறுதி செய்தது. உளவுத் துறை அவர்களின் துல்லியமான புகைப்படங்களையும் வெளியிட்டது. கடந்த 2008 நவம்பரில் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் உள்நாட்டில் பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் பஹல்காம் தாக்குதல். இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர் தொய்பா ஆதரவு பெற்ற ‘ரெசிஸ்டன்ஸ் ஃபோர்ஸ்’ என்ற அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் திரும்பிவரும் இயல்பு நிலையை சிதைக்கவும் வளர்ந்துவரும் சுற்றுலாத் துறையை முடக்கவும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து அங்கு நிலவும் அமைதியைக் குலைக்கவும் மதக் கலவரங்களைத் தூண்டவும் திட்டமிட்டு இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பல்வேறு பயங்கரவாதக் குழுக்களின் புகலிடமாக இருக்கிறது என்பது உலகம் அறிந்ததே. இந்நிலையில் பல்வேறு தருணங்களில் இந்தியாவும் ஐ.நா. சபையிலேயே பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தனது நாட்டு எல்லைக்குள்ளேயே ஊக்குவிப்பதை எடுத்துக் கூறி கண்டித்துள்ளது.

இந்தச் சூழலில்தான் பஹல்காம் தாக்குதலும் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு அடுத்த நாளே பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பாகிஸ்தான் மீதான நடவடிக்கைகளை அனைவரும் அறிவர். ஆனால்இ அந்த நடவடிக்கைகளுக்கு எதிர்வினை ஆற்றுவதும்குற்றச்சாட்டுகளை மறுப்பதும்  பொறுப்பற்ற அறிக்கைகளை விடுவதுமாகவே பாகிஸ்தான் இருந்தது.

இந்தநிலையில்தான் பஹல்காம் தாக்குதல் நடந்த 15 நாட்களுக்குப் பின்னர் திட்டமிட்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை மட்டுமே வெகு நேர்த்தியாகக் குறிவைத்து பொறுப்புடன் தாக்குதல் நடத்தியுள்ளோம். அங்குள்ள 9 முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் மூலம் பயங்கரவாதத்தின் மீது பதிலடி கொடுக்கும் நமது உரிமையை நாம் நிலை நாட்டியுள்ளோம். இன்று என்னுடன் இந்தத் தாக்குதல் குறித்து விவரிக்க கர்னல் சோஃபியா குரேஷிஇ விங் கமாண்டர் வியாமிகா சிங் ஆகியோரும் இணைந்துள்ளனர்” என்றார்.

6 பேர் உயிரிழப்பு: முன்னதாக இந்தியா - பாகிஸ்தானின் சர்வதேச எல்லைப் பகுதியான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு (எல்ஓசி) அருகே பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்தியக் குடிமக்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   நன்றி வீரகேசரி   








புதிய பாப்பரசராக அமெரிக்காவைச் சேர்ந்த கர்தினால் ரொபர்ட் பிரான்ஸிஸ் பிரீவோஸ்ட் தெரிவு : பாப்பரசர் 14 ஆம் லியோ என அழைக்கப்படுவார்  


Published By: Vishnu

09 May, 2025 | 11:12 AM

புதிய பாப்பரசராக அமெரிக்காவைச் சேர்ந்த கார்தினால் ரொபர்ட் பிரீவோஸ்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டுள்ள முதல் அமெரிக்கர் இவராவர்.

புதிய பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டுள்ள கர்தினால் ரொபர்ட் பிரீவோஸ்ட் பாப்பரசர் 14 ஆம் லியோ (14 ஆம் சிங்கராயர்) என அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 267 ஆவது பாப்பரசராக 69 வயதுடைய பாப்பரசர் 14 ஆம் லியோ தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நன்றி வீரகேசரி 







ஜம்முவில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் ; சைரன் ஒலிப்பு, மின்சாரம் தடை  

Published By: Vishnu

08 May, 2025 | 10:31 PM

ஜம்முவில் உள்ள அக்னூர் உள்ளிட்ட பகுதியில் டிரோன் தாக்குதலுக்கான சைரன் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்திய வான் பாதுகாப்பு வலயங்களை டிரோன்களை இடைமறித்து தாக்குதல் நடத்தி வருகிறது.

பஹல்காம் தாக்குலுக்கு இந்தியா ஒப்பரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து LoC அருகே பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது. வியாழக்கிழமை (8) அதிகாலை டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதை இந்திய இராணுவம் இடைமறித்து வெற்றிகரமாக தாக்கி அழித்தது.

அத்துடன் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களின் மீது சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் லாகூர் பாதுகாப்பு வலயங்கள் அழிக்கப்பட்டன.

இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் ஜம்முவின் அக்னூர், கிஸ்த்வார் மற்றும் பல பகுதிகளை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. டிரோன்களை இந்திய இராணுவம் இடைமறித்து அழித்து வருகிறது.

டிரோன் தாக்குதலுக்கான சைரன் ஒலித்து கொண்டே இருக்கிறது. Blackout என அழைக்கப்படும், மின்சாரம் தடை செய்யப்பட்டு பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 









போரால் ஏற்பட்டுள்ள கடுமையான நிலை குறித்து பாகிஸ்தான் தேசிய பாதுகாப்புக் குழு கூடி ஆராய்வு !  

08 May, 2025 | 10:55 AM

போரால் ஏற்பட்டுள்ள கடுமையான நிலை குறித்து பாகிஸ்தான் பிரதமர் முஹம்மது ஷெஹ்பாஸ் ஷரீஃப் தலைமையில் அந்நாட்டு தேசிய பாதுகாப்புக் குழு (NSC) புதன்கிழமை (7) கூடி ஆராய்ந்துள்ளது.

 இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் அலுவலக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையை கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராகம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்தியாவின் தாக்குதல்களில் உயிரிழந்த அப்பாவி  பொதுமக்களின் ஆத்ம சாந்திக்காக இக்குழு பிரார்த்தனை செய்தது. 

மேலும் இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் விரைவாக குணமடையவும் பிரார்த்தனை செய்தது. 

இந்தியாவின் சட்டவிரோதமான போர் நடவடிக்கையால் ஏற்பட்ட கடுமையான நிலைமைகளைப் பற்றி தேசிய பாதுகாப்புக் குழு கலந்துரையாடியது.

2025 ஆம் ஆண்டு மே மாதம் 6 மற்றும் 7 ஆம் திகதிகளின் இரவில், பாகிஸ்தானின் இறையாண்மை மிக்க பிரதேசங்களான பஞ்சாபின் சியால்கோட், ஷகர்கர், முரித்கே மற்றும் பகவல்பூர், அத்துடன் ஆசாத் ஜம்மு காஷ்மீரின் கோட்லி மற்றும் முசாஃபராபாத் உள்ளிட்ட பல இடங்களில் இந்தியா ஒருங்கிணைந்த ஏவுகணை, விமான மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தின. 

இந்த தாக்குதல்கள், கற்பனைத் தீவிரவாத முகாம்கள் உள்ளன என்ற பொய் காரணத்தை முன்வைத்து, வேண்டுமென்றே பொதுமக்கள் பகுதிகளை இலக்காக்கியதால், அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்தனர். 

மேலும், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட பொது உள்கட்டமைப்புகளுக்கும் சேதம் ஏற்பட்டது. இந்தியாவின் இந்த ஆக்கிரமிப்பு செயல், நட்பு வளைகுடா நாடுகளின் வணிக விமானங்களுக்கும் பெரும் அபாயத்தை ஏற்படுத்தியது, இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் உயிர்கள் ஆபத்துக்குள்ளாயின. மேலும், சர்வதேச ஒப்பந்தங்களை மீறி, நீலம்-ஜெலம் நீர்மின்சார திட்டமும் வேண்டுமென்றே இலக்காக்கப்பட்டது.

இந்த சட்டவிரோத செயல்களை பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டுக்கு எதிரான வெளிப்படையான மீறல்களாகவும், சர்வதேச சட்டத்தின் கீழ் போர் நடவடிக்கைகளாகவும் தேசிய பாதுகாப்புக் குழு (NSC) கடுமையாகக் கண்டித்தது. 

இந்திய இராணுவத்தால் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பொதுமக்களை வேண்டுமென்றே இலக்காக்கியது ஒரு கொடூரமான மற்றும் வெட்கக்கேடான குற்றமாகும், இது மனித நடத்தைக்கான அனைத்து விதிமுறைகள் மற்றும் சர்வதேச சட்டங்களின் விதிமுறைகள் ஆகியவற்றை மீறும் செயலாகும்.

பாகிஸ்தான் தனது பிரதேசத்தில் தீவிரவாத முகாம்கள் உள்ளன என்ற இந்தியக் குற்றச்சாட்டுகளை வலுவாக மறுத்து வருகிறது. 

2025 ஏப்ரல் 22க்கு பின்னர், நம்பகத்தன்மைவாய்ந்த, வெளிப்படையான மற்றும் நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் முன்வைத்த நேர்மையான ஆலோசனையும் துரதிர்ஷ்டவசமாக ஏற்கப்படவில்லை என்பதும் நினைவுகூரத்தக்கது. 

சர்வதேச ஊடகங்களின் பிரதிநிதிகள் ஏற்கனவே 2025 மே 6 ம் திகதி இந்த 'கற்பனை தீவிரவாத முகாம்களை' பார்வையிட்டனர், மேலும் 2025 மே 7ம் திகதி இன்னும் பலர் பார்வையிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், தங்கள் பொய்மைகள் வெளிப்படும் அச்சத்தில், தங்கள் கூற்றுகளுக்கு சிறிதளவு ஆதாரமும் இல்லாமல், எந்த ஒரு நெறிமுறையும் அற்ற இந்திய தலைமை, தன் மாயாஜால எண்ணங்களையும் குறுகிய நோக்க அரசியல் இலக்குகளையும் தீர்க்க அப்பாவி பொதுமக்களைத் தாக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளது. அப்பாவி மக்களைத் தாக்குவது பாகிஸ்தானுக்கு ஏற்க்கத்தக்கதோ, பொறுத்துக்கொள்ளக்கூடியதோ அல்ல. அனைத்து நல்லறிவு மற்றும் பகுத்தறிவுக்கும் எதிராக, இந்தியா மீண்டும் இப்பிராந்தியத்தில் ஒரு நரகத்தைப் பற்றவைத்துள்ளது. இதன் விளைவுகளுக்கான முழுப் பொறுப்பும் இந்தியாவையே சாரும்.

பாகிஸ்தான் ஆயுதப் படைகள், 2025 ஏப்ரல் 22ம் திகதியில் தேசிய பாதுகாப்புக் குழு (NSC) அறிக்கையில் வரையறுக்கப்பட்ட சுய பாதுகாப்பு உரிமை மற்றும் பதிலடி கட்டமைப்புக்கு இணங்க, இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆசாத் ஜம்மு காஷ்மீர் உட்பட பாகிஸ்தானின் பிரதேச ஒருமைப்பாட்டை உறுதியுடன் பாதுகாத்தன. இந்த நடவடிக்கையில் ஐந்து இந்திய யுத்த விமானங்கள் மற்றும் தானியங்கி வானூர்திகள்  (UAV) தாக்கி வீழ்த்தப்பட்டன.

ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 51வது பிரிவுக்கு இணங்க, அப்பாவி பாகிஸ்தானியர்களின் உயிரிழப்புக்கு பழிவாங்கவும், தன் இறையாண்மையின் வெளிப்படையான மீறலுக்கு பதிலடி அளிக்கவும், பாகிஸ்தான் தன் தேர்வுக்கேற்ப நேரம், இடம் மற்றும் முறைமையில் சுயபாதுகாப்பு உரிமையைக் கொண்டுள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள பாகிஸ்தான் ஆயுதப் படைகளுக்கு முறையாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அப்பட்டமான ஆக்கிரமிப்பால் மிகவும் வருத்தமடைந்த, முழு பாகிஸ்தானிய மக்களும் தங்கள் தாய்நாட்டைப் பாதுகாப்பதில் ஆயுதப் படைகளின் வீரத்தையும் துணிச்சலையும், சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கைகளையும் மிகவும் பாராட்டுகிறார்கள் மற்றும் போற்றுகிறார்கள். எந்தவொரு மேலதிக ஆக்கிரமிப்பையும் எதிர்கொள்ள இந்த தேசம் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் நிற்கிறது.

இந்தியாவின் தூண்டுதலற்ற சட்டவிரோத செயல்களின் கடுமையை சர்வதேச சமூகம் தெரிந்து கொள்ளவும், சர்வதேச விதிமுறைகள் மற்றும் சட்டங்களின் வெளிப்படையான மீறல்களுக்கு இந்தியாவை பொறுப்புள்ளதாக்கவும் தேசிய பாதுகாப்புக் குழு (NSC) வலியுறுத்துகிறது.

பாகிஸ்தான் கண்ணியத்தோடும் மரியாதையோடும் அமைதியை பேணுவதில் உறுதியாக உள்ளது. எமது இறையாண்மை, பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றை மீற எந்த நடவடிக்கையையும் அனுமதிக்காது என்றும், எமது பெருமைமிகு மக்களுக்கு எந்தவித தீங்கும் ஏற்பட விடாது என்றும் மீண்டும் வலியுறுத்துகிறது. என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 






ஒப்பரேஷன் சிந்தூர் : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதலை ஆரம்பித்தது இந்தியா : 9 முகாம்கள் மீது திடீர் தாக்குதல்!  


Published By: Vishnu

07 May, 2025 | 04:42 AM

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்களைக் குறிவைத்து, இந்திய இராணுவம் செவ்வாய்க்கிழமை (6) நள்ளிரவு தாக்குதல் நடத்தினர்.

கோட்லி, பஹ்வால்பூர், முஸாஃபர்பாத் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. இருப்பினும், பாகிஸ்தான் இராணுவத் தளவாடங்களைக் குறிவைத்து, எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவித்தனர்.

மேலும், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன்பாக நிறுத்தப்படுவர் என்று குறிப்பிட்டு, ஜெய்ஹிந்த் என்றும் இந்திய ராணுவத்தின் எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 




No comments: