வினை தன் கடமையைச் செய்யும்!



-சங்கர சுப்பிரமணியன்.




சிலசமயங்களில் நாம் ஒரு வார்த்தைகூட சொல்ல வேண்டிய அவசியமில்லை. வினை நமக்காக தன் கடமையைச் செய்யும். சில மதங்களில் கர்மா என்று இந்த வினையைச் சொல்கிறார்கள். சிலர் கர்மாவைத்தான் கடவுள் என்கிறார்கள். நான் சமீபத்தில் படித்த ஒரு செய்திதான் எனது கற்பனையுடன் கலந்து கதையாக உங்கள் முன் உலாவவருகிறது.

கோடைகாலம் தொடங்கி வெப்பம் தன் கைவரிசைய மும்முரமாக காட்டிக் கொண்டிருந்தது. வெப்பத்தின் அதிகரிப்பால் மளமளவென்று மெர்குரி நாற்பதை தாண்டிச் சென்றுகொண்டிருந்தது. மெல்பனில் ஒரு சாதாரணப் பல்பொருள் அங்காடி. பெயருக்கு குளிரூட்டம் என்ற பெயரில் ஏதோ ஓடிக்கொண்டிருந்தது.

பொருட்களை வாங்கிவிட்டு வெளியில்
வருமிடத்தில் பணம் கொடுப்பதற்காக நான்கு சேவை முகப்புகள் இருந்தன. நான்கிலும் பணிப்பெண்கள் பொருட்களின் விலையைச் சரிபார்த்து பணம் பெற்றுக் கொண்டிருந்தனர். கிறிஸ்துஸ் காலமாக இருந்ததால் நல்ல கூட்டம். காலை ஏழு மணிக்கு வந்தவர்கள் மூன்று மணிக்கு பணிமுடிய இன்னும் முக்கால் மணிநேரமே இருந்தது.

எல்லா சேவைமுகப்புகளிலும் வரிசை நீண்டுகொண்டிருந்தது. இரண்டாம் எண் சேவைமுகப்பில் எலிசபத் என்ற ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி பணியில் இருந்தாள். காலை ஏழுமணி முதற்கொண்டு கூட்டம் குறைந்தபாடில்லை. எல்லா சேவைமுகப்புகளிலும் பணியாளர்கள் வேலை முடியக் கூடிய அந்த கடைசி மணி நேரத்தில் மிகவும் களைத்துப் போயிருந்தார்கள்.

இருந்தாலும் அவர்கள் பணியில் தாமதம் இன்றி இயந்திரம்போல் இயங்கிக்
கொண்டிருந்தார்கள். அப்போது இரண்டாம் எண் சேவை முகப்பை மிகவும் நாகரிகமா உடையணிந்த காத்தரின் என்ற ஒரு பெண் வந்தடைந்தாள் அவளுடன் வந்த அவளது இருபெண்களுமே நவநாகரிக உடையில்
பார்ப்பதற்கு மிகவும் வசதிபடைத்வர்கள் போன்ற தோற்றத்துடன் காணப்பட்டார்கள்.

பொதுவாக எல்லா பல்பொருள் அங்காடிகளிலும் சேவைமுகப்பில் பணிபுரிபவர்கள் முதலில் சிரித்த முகத்துடன் வரவேற்பார்கள். இன்னும் சிலர் அதற்கும் மேலாக இன்று நாள் நன்றாக உள்ளது இன்று வெப்பம் அதிகம் என்று கூடுதலாகவும் கதைப்பார்கள்.

அன்று வேலை எப்போதும் இருப்பதை விட அதிக மிருந்ததாலோ அல்லது அதிகப் படியான வெப்பம் இருந்ததாலோ எலிசபத் மிகவும் களைப்பாய் இருந்தாள். போதாக்குறைக்கு அவள் நின்றிருந்த இடத்தில் சரியாக குளிர்ந்த காற்று வீசவுமில்லை. இப்படியான புற அழுத்தங்களால் தாக்குண்ட எலிசபத் தன்னை நெருங்கிய அந்த நாகரிக நங்கையைப் பார்த்து புன்னகைக்க தவறிவிட்டாள்.

இதைக்கண்ட காத்தரின் எலிசபத்தைப் பர்த்து,

“உங்க முகத்துக்கு என்ன ஆச்சு? ஏன் வாடிக்கையாளரிடம் புன்சிரிப்பைக்கூட காட்டவில்லை” என்றாள்.

நாள் முழுதும் உழைத்த களைப்பில் எதிர்பாரா விதமாக வாடிக்கையாளரிடம் புன்சிரிப்பைக் காட்ட மறந்ததை உணர்ந்த எலிசபத்  மிகவும் சங்கடப்பட்டாள். உடனே விழிப்புணர்வு அடைந்தவள்,

“மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று புன்னகைத்தவள் பொருளின் விலையைச் சரிபார்த்து கணக்கிடத் தொடங்கினாள்.

ஆனால் பதிலுக்கு வாடிக்கையாளரான காத்தரின் புன்னகைக்காமல் வரிசையில் நின்றவர்கள் முன் சத்தமாக சிரித்து ஏளனம் செய்தாள். சிரித்து ஏளனம் செய்ததோடு அல்லாமல் பணிப்பெண்ணைப் பார்த்து,

“உங்களைப் போன்று சேவைமுகப்பில் நின்று பணி புரிந்துகொண்டிருந்தால் என் முகமும் அப்படித்தான் இருந்திருக்கும். நீங்கள் இப்படி இருக்க காரணம் நீங்கள் வாங்கக்கூடிய குறைந்த சம்பளம்தான்.” என்றாள்.

இதைக்கேட்ட வரிசையில் நின்றிருந்தவர்கள் திகைத்துப்போய் அமைதியாக நின்றிருந்தார்கள். எலிசபத்தின் முகம் அவமானம் தாங்கமுடியாமல் சிவந்து போயிற்று. இருப்பினும் பதிலொன்றும் பேசாமல் பொருட்களுக்குண்டான பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டாள்.

காத்தரின் வாங்கிய பொருட்கள் நிறைந்த பையை எடுத்துக்கொண்டு கிளம்பும்போது வினை தன் கடமையைச் செய்தது. உயரமான காலணியை அணிந்திருந்ததால் எதிர்பாரா விதமாக காலணியின் அடிபாகம் தரையிலுள்ள விரிப்பில் சருக்கியதால் நிலைதடுமாறினாள். எப்படியோ கீழே விழாமல் சமாளித்து நின்றாள்.

அவ்வாறு சமாளித்து நின்றாலும் அவளது கையிலிருந்த பையிலுள்ள பொருட்கள் நாலாபுறமும் விழுந்து சிதறியது. அப்படி விழுந்ததில் முட்டைகள் அடங்கிய பெட்டி திறந்து முட்டைகள் கீழே விழுந்ததில் சிதறி உடைந்தன. உடைந்த முட்டையிலுள்ள மஞ்சள் கரு தெறித்ததில் அவளது விலையுயர்ந்ந காலணி நாசமாயிற்று. கண்மூடி கண்திறக்கும் நேரத்தில் இவை யாவும் நடந்து முடிந்தன.

அப்போது அங்கு நிகழ்ந்த அந்த அலங்கோலமான காட்சியைக் கண்ட வரிசையில் நின்றவர்கள அமைதியாகவே நின்றனர். ஆனால் காத்தரினை நோக்கிய எலிசபத்தினால் மட்டும் தனது ஏளனமான
பார்வையை  தடுக்க முடியவில்லை. இதனால் அவமானமடைந்த காத்தரின் தரையில் கொட்டிக் கிடக்கும் பொருட்களைக்கூட
எடுக்காமல் அவற்றை அங்கேயே விட்டு வேகமாக அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

எலிசபத் தன் மனதைப் புண்படுத்திய காத்தரினைப் பார்த்து பதிலுக்கு ஏதாவது சொல்லியிருக்கலாம். ஆனால் அதுவே ஒரு பிரச்சனையாகி தன் வேலைக்கு ஏதாவது இடையூறு உண்டாக்கி விடுமோ என்ற எண்ணத்தில் பேசாமல் அமைதியாகவே இருந்தாள்.

சிலசமயங்களில் ஒரு வார்த்தை கூட நீங்கள் பேசவேண்டாம். உங்களுக்காக வினை தன் கடமையைச் செய்யும். இதை கர்மா என்றாலும் கடவுள் என்றாலும் சரி அல்லது வினை என்றாலும் சரி. ஆனால் இதை வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று தமிழ்மொழி நமக்கு கற்றுத் தருகிறது.


No comments: