படைப்பிலக்கியவாதி முருகபூபதி எழுதி விரைவில் வெளியாகவுள்ள புதிய நூல் காலமும் கணங்களும் - முதல் பாகத்தின் முன்னுரையும், இத்தொகுப்பில் இடம்பெற்றிருப்பவர்களும்.
முன்னுரை
இலங்கையிலிருந்த காலப்பகுதியிலும், அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த பின்பும், நான் மிகவும் நேசித்த பல கலை இலக்கியவாதிகளையும் ஊடகவியலாளர்களையும் சமூகப்பணியாளர்களையும் அடுத்தடுத்து இழந்துவிட்டேன். எனினும் அவர்கள் நினைவுகளாக என்னுள்ளே வாழ்கின்றார்கள்.
நினைவுகளுக்கு இழப்பில்லை.
அவை சாசுவதமானவை. எனது நேசர்களின் மறைவு துயரம்கப்பிய வெறுமையை என்னுள்
ஏற்படுத்தியபோதிலும் - அவர்களை சந்தித்த காலமும் - உரையாடிய கணங்களும் என்றென்றும்
ஊற்றாகச் சுரந்து பரவசப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அவர்கள் என்னுடன் தொடர்ந்து
பயணித்துக்கொண்டிருக்கும் குருட்டுணர்வுடன் காலத்தையும் கணங்களையும்
கடந்துகொண்டிருக்கின்றேன்.
அவுஸ்திரேலியாவுக்கு 1987
இல் வந்த பின்னரும் எனது எழுத்துப்பணிகளை
தொடர்ந்தபோது – பிரான்ஸிலிருந்து வெளியாகும் “பாரிஸ்
ஈழநாடு” இதழில் “நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள்” என்ற
தலைப்பில் தொடர் ஒன்றை எழுதத் தொடங்கினேன்.
இந்த இதழின் ஆசிரியர் நண்பர் திரு.எஸ்.எஸ்.குகநாதன், கலை,
இலக்கியவாதிகளைப்பற்றிய நினைவுகளைப் அந்தத் தொடரில் பதிவு செய்வதற்கு களம் அமைத்துத் தந்தார்.
இரகசியமணி கனகசெந்திநாதன், கே.டானியல், மு.தளையசிங்கம்,
க.கைலாசபதி, எச்.எம்.பி.மொஹிதீன், கே.ஜி.அமரதாஸ,
நவசோதி, காவலூர் ஜெகநாதன், என்.எஸ்.எம். இராமையா,
ருஷ்ய இலக்கியவாதி விதாலி ஃபூர்ணிக்கா, ஈழவாணன், நெல்லை.க.பேரன் ஆகியோர் என்னிடத்தில் விட்டுச்சென்ற நினைவுகளை பதிவு செய்து
வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
இவற்றில் சில வெவ்வேறு
இதழ்களில் மறுபிரசுரம் செய்யப்பட்டதாகவும் அறிந்தேன். இத்தொடர் சிட்னியிலிருந்த நண்பர்,
எழுத்தாளர் மாத்தளைசோமுவை வெகுவாகக்
கவர்ந்தமையால் தனது “தமிழ்க்குரல்”
பதிப்பகம் ஊடாக நூல் வடிவில் வெளியிட விரும்பினார்.
விரும்பியவாறே பதிப்பித்தார்.
இந்த நூலுக்கு மெல்பனிலும் சிட்னியிலும் அறிமுகம் கிடைத்த சமயம், ஆரோக்கியமான வரவேற்பும் விமர்சனங்களினூடாக வந்தன.
ஒருவரது மறைவு –
எமக்கு சோகத்தை தரும் பொழுது, எம்மை நாம் சுயவிமர்சனம் செய்து கொள்வதற்கும் அந்த இழப்பு வழிவகுக்கும் என
நம்புபவன் நான்.
“நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள்” பதிவுகள் என்னை மட்டுமல்ல- அதனைப்படித்த வாசகர்களையும் சுயவிமர்சனம் செய்து கொள்வதற்கு தூண்டிவிட்டிருப்பது புலனாகியது.
அன்னப்பறவை பாலையும்,
தண்ணீரையும் பாகுபடுத்தும்
ஆற்றல் மிக்க ஜீவராசியாம். அதுபோன்று நானும் கலை,
இலக்கியவாதிகளின் மேன்மைகளை இனம்
கண்டு – அதுபற்றி அறிந்திராதவர்களுக்கு சொல்லியிருப்பதாக – மெல்பனில் நடந்த அறிமுகக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய திருமதி. பாலம்
லக்ஷ்மணன் அவர்கள் உரையாற்றும்போது சொன்னார்.
அந்தச் சபையில் இந்த உரையை செவிமடுத்த ஓவியர்
ஐயா கே.ரி.செல்வத்துரை அவர்கள் தமது கை வண்ணத்தில் ஒரு அன்னப்பறவையின் ஓவியத்தையே
வரைந்து எனக்கு அன்பளிப்புச் செய்தார்.
எனது வீட்டுக்கு வரும்
விருந்தினர்களை அந்த அன்னப்பறவை வரவேற்றுக் கொண்டிருக்கிறது.
சில கட்டுரைகள் - கதை சொல்லும்
பாணியிலமைத்திருப்பதாகவும் - பேனாவால் எழுதப்படாமல் இதயத்தால் எழுதப்பட்ட எழுத்து
என்றும் கருத்துக்கள் வந்து குவிந்தன.
எழுத்தில் ஆண்களின்
எழுத்து – பெண்களின் எழுத்து என பாகுபடுத்திப்பார்க்கும் ஒரு
சகோதரி “ஆண்களைப்பற்றியே எழுதியிருக்கிறீர்கள்” ஏன் பெண்களைப் பற்றி எழுதவில்லை” எனக் கேட்டார்.
அதற்கு நான் சொன்ன பதில் “ பெண்களுக்கு ஆயுள் அதிகம்”.
இந்தத் தொடரே மறைந்து போனவர்களைப்பற்றியது
தானே.
எல்லோரும் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள் இது சொல்லித் தெரிய
வேண்டியதில்லை. ஆனால், அந்த பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வாழ்க்கை இருக்கிறதே. அது குறுகியதாகவும் - சிலருக்கு நீண்டதாகவும் அமைந்து விடும்.
பிறக்கும் போதே மரணம்
நிச்சயமானதுதான்.
அவர்கள் எவ்வளவு காலம் வாழ்ந்தார்கள் என்பது
முக்கியமல்ல. வாழ்ந்த காலத்தில் எப்படிச் செயற்பட்டார்கள், அவர்களது வாழ்வும் பணியும் எத்தகையது என்பதையே என்போன்ற எழுத்தாளர்கள் பதிவு
செய்வதற்கு முற்படுகிறார்கள்.
ஒரு படைப்பாளியின் இலக்கியத்தை மாத்திரம்
படித்து விட்டுப் போகும் நிதானம் எனக்கு என்றைக்குமே இல்லை. குறிப்பிட்ட இலக்கிய
சிருஷ்டி என்னை மிகவும் பாதித்துவிட்டால், அதனை படைத்தவரைத்தேடி எனது யாத்திரை தொடரும், படைப்பாளியை நேரடியாக அறியவேண்டுமென்ற பதட்டம் எனக்குள் பொறியாக கனன்று
கொண்டிருக்கும்.
எழுதத் தொடங்கிய காலம்முதல் யாத்ரீகனாக அலைந்த நான்,
தேடிச் சென்றவர்களும், என்னைத் தேடி வந்தவர்களும், எனக்குள் மனக்குகை ஓவியங்களாகிவிடுவர்.
கவிஞர் கண்ணதாசன் சொன்னார் :- மரத்தைப்பார், மரத்தில் பூத்துக் குலுங்கும் மலர்களை, காய், கனிகளை ரசித்துப் பார், முகர்ந்து பார், சுவைத்துப்பார். ஆனால், அந்த மரத்தின் வேரை மாத்திரம் பார்க்கத் துணியாதே. வேரைப்பார்க்க முனைந்தால் மரமே பட்டுப்போகும்.
“உணவு விடுதிக்குச் சென்றால் அங்கே பசியாற உண்டுவிட்டு திரும்பிவிடவேண்டும்.
அந்த உணவை சமைத்தவரையோ அல்லது அந்த உணவு தயாரிக்கப்பட்ட சமையலறையையோ பார்ப்பதற்கு
முயற்சிக்க வேண்டாம் எனவும் சொல்வார்கள்.
அது போன்று வாசகனுக்கும் படைப்பாளிக்குமிடையிலான உறவு
எட்டத்திலேயே இருந்து விட்டால், இரண்டு
தரப்பாருக்கும் நல்லது எனக் கருதுகிறவர்களும் இருக்கிறார்கள்.
ஆசிரியராகவிருந்து எழுத்தாளராக உயர்ந்த
எழுத்தாளர் “பிராங்க் மக்கோட்”
ஐ சந்தித்தது பற்றி எழுதுகிறார்
கனடாவிலிருக்கும் நண்பர் - எழுத்தாளர் அ. முத்துலிங்கம்.
அந்தச் சந்திப்பு கட்டுரையின் முடிவை இப்படிப்பதிவு செய்கிறார் :- “அவரிடம் புத்தகத்தில் கையெழுத்து வாங்கினேன். சேர்ந்து
படம் பிடித்துக் கொண்டேன். முற்றிலும் வேற்று ஆளாக இருந்தார். அவர் புத்தகங்களில்
காணப்பட்ட கனிவும் நேசமும் அவரிடம் இல்லை.
முகத்தில் வெறுப்பும் சலிப்பும் மட்டுமே எஞ்சி இருந்தன. நான் சந்தித்த மனிதர், அவருடைய புத்தகத்தைப் படிக்கும் போது என் மனதிலே நான் எழுப்பிய உருவம் அல்ல.
ஓர் எழுத்தைப் படைத்தவரை சந்திக்காமல் இருப்பதே உத்தமம்
என்று பல சமயங்களில் எனக்குத் தோன்றும். இனிமேல் மக்கோட்டை எங்கே கண்டாலும் அவர் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் போவேன். அவர் புத்தகத்தை எங்கே கண்டாலும் உடனே வாங்குவேன்.
இவ்வாறு ‘வியத்தலும் இலமே’
என்ற தனது நூலில் , அ. முத்துலிங்கம் எழுதியிருக்கிறார்.
‘என் எழுத்தைப்பார், என்னைப் பார்க்க முனையாதே’
என ஒதுங்கியிருக்கும் ‘தனியன்’ குணமுள்ள படைப்பாளிகளும் இருப்பதாக அறிகிறேன்.
எனக்கோ,
ஒரு படைப்பைப் படிப்பதற்கோ, அதனைப் படைத்தவரை சந்தித்து தொடர்பை ஏற்படுத்தி இலக்கிய நட்பை உருவாக்கிக்
கொள்வதற்கோ எத்தகைய சங்கடமும் நேர்ந்ததில்லை.
நான் படித்த படைப்புகளும் அப்படி, சந்தித்தவர்களும் அப்படி.
இலங்கையில் சிங்களப்பிரதேசக் கிராமம் ஒன்றில் தமிழ் இலக்கிய அபிமானியாக திகழ்ந்த வண.ரத்னவன்ஸ தேரோ அவர்களைத் தேடிக் கொண்டு சென்று அன்பு பாராட்டிய போது இருந்த மனநிலையுடன்தான் - தமிழ் நாட்டில் கோவில்பட்டிக்கு அருகாமையில் இடைசெவல் என்ற கரிசல்காட்டில் கி.ராஜநாராயணனையும் - குரும்பசிட்டியில் அந்த செம்பாட்டு ஒழுங்கையூடாக நடந்துசென்று கனகசெந்திநாதனையும் ருஷ்யாவில் மாஸ்கோவில் கட்டிடக்காடுகளுக்கிடையே
விதாலிஃபூர்ணிக்காவையும் - மரச்சோலைக்கு நடுவே அளவெட்டியில் ஓலை வேய்ந்த குடிலில் அ.செ.முருகானந்தனையும் - வடமராட்சி வதிரியில் பனந்தோப்புகளுக்கிடையில் ராஜஸ்ரீகாந்தனையும் தேடிச் சென்று சந்தித்தேன்.
நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் - நூலின் இரண்டாம்
பாகத்தை எழுத முற்பட்ட பொழுது, முதல்பாகம் மேலும் பலரது பார்வைக்கு கிட்டவில்லை
என்பதை அறிந்தேன்.
எனவே முதலாம் பாகத்தையும், இரண்டாம் பாகத்தையும் இணைத்து காலமும் கணங்களும் என்ற பெயரில் தனி நூலாக்குகின்றேன்.
நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் நூலில் பன்னிரண்டு பேர் பதிவாகினார்கள். இந்தப் புதிய
நூலில் அவர்களுடன் மேலும் பலர் இணைந்துள்ளனர். மொத்தமாக ஐம்பது பேர் இந்நூலில்
இடம்பெறுகின்றனர். இதன் இரண்டாவது
பாகத்தையும் தற்போது தொகுத்துவருகின்றேன்.
இந்த நூலுக்கு “காலமும் கணங்களும்” என்ற
தலைப்பு பொருத்தமானதாக எனது மனதுக்குப்பட்டது.
இந்தத் தலைப்பு - எந்த இதழிலும் பிரசுரமாகாமல் எனது ‘வெளிச்சம்’
கதைத் தொகுப்பில் இடம்பெற்ற நீண்ட சிறுகதைக்கும் இடப்பட்டது.
காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. கணங்கள், காலத்தில் பதிவாகிக் கொண்டே பரவசப்படுத்தும்.
இந்நூலில் இடம்பெற்றிருப்பவர்கள் - இப்பொழுது
எம்மிடையே இல்லை. எம்மிடையே எம்மை ஸ்பரிசிக்கும் காற்றைப் போன்று. அவர்களின்
நினைவுகளும் உணர்வுகளும் தீண்டிக் கொண்டே இருக்கும்.
இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் பிரான்ஸில்
பாரிஸ் ஈழநாடு, அவுஸ்திரேலியாவில் உதயம், இலங்கையில் வீரகேசரி வாரவெளியீடு,
தினகரன் வாரமஞ்சரி, தினக்குரல் ஞாயிறு இதழ், மல்லிகை, ஞானம் ஆகியனவற்றிலும் அவுஸ்திரேலியா தமிழ் முரசு , அக்கினிக்குஞ்சு, கனடா பதிவுகள் இணையம் மற்றும் ஜெர்மனி தேனீ இணையம் தமிழ்நாடு திண்ணை இணையம்,
வணக்கம் லண்டன் இணையம் உட்பட பல
நண்பர்களின் முகநூல்களிலும் வெளியாகியுள்ளன. இதழ்களின் ஆசிரியர்களுக்கும் இணைய இதழ்களுக்கும் முகநூலில் பதிவேற்றிய நண்பர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது மனமார்ந்த நன்றியை
தெரிவிக்கின்றேன்.
ஒரு சில பதிவுகள்
மெல்பனில், இலக்கிய நண்பர் எஸ்.
கிருஷ்ணமூர்த்தியின், விக் தமிழ் காணொளியிலும் இடம்பெற்றிருக்கின்றன. அவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.
அத்துடன் இக்கட்டுரைகள்
வெளியானபோது படித்துவிட்டு தமது மனப்பதிவுகளை தெரிவித்திருந்த எனது அன்புக்குரிய
இலக்கியவாதிகள் மற்றும் வாசகர்களுக்கும் எனது அன்பார்ந்த நன்றி. இதில்
இடம்பெற்றிருப்பவர்களின் பிறந்த ஆண்டு - மறைந்த ஆண்டு பற்றிய விபரமும்
பதிவாகியிருக்கிறது. சிலரது
பிறந்த ஆண்டு – மறைந் ஆண்டை அறியமுடியவில்லை.
சரியான தகவல்களைப் பெறுவதற்கு உலகெங்குமிருந்து பலரும் எனக்கு
பெரிதும் உதவினார்கள். அவர்களின்
பெயர்ப்பட்டியலே நீளமானது. அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த
நன்றியைத்தெரிவிக்கின்றேன்.
காலமும் கணங்களும்
நூலுக்கு முகப்போவியம் வரைந்து வழங்கிய படைப்பாளியும், மொழிபெயர்ப்பாளரும், ஒளிப்படக்கலைஞருமான சிட்னியில் வதியும் சகோதரி
கீதா மதிவாணன் அவர்களுக்கும், இந்நூலையும் அமேசன் கிண்டிலில் பதிவேற்றும் எனது அருமை
நண்பர் – எழுத்தாளர்- ஓவியர் கிறிஸ்டி நல்லரெத்தினம் அவர்களுக்கும் மனமார்ந்த
நன்றி.
letchumananm@gmail.com அன்புடன்
லெ. முருகபூபதி
---------------------------------------------------------------------------------
காலமும்
கணங்களும் – முதல் பாகத்தில் இடம்பெற்றிருப்பவர்கள் :
1. 1. இரசிகமணி கனகசெந்திநாதன் (1917 - 1977 )
2. கே.டானியல் (1929- 1986)
3. மு.தளையசிங்கம் (1935 - 1973)
4. என்.எஸ்.எம். இராமையா (1931 - 1990)
5. பேராசிரியர் க.கைலாசபதி
( 1933 - 1982 )
6. கே.ஜி. அமரதாஸ
7. எச்.எம்.பி. மொஹிதீன் ( 1932 -
1988 )
8. க.நவசோதி (1941 -1990)
9. ஈழவாணன் (1935 - 1984)
10. நெல்லை.க.பேரன் (1946 - 1991)
11. காவலூர் ஜெகநாதன் ( 1955- 1985)
12. விதாலிஃ புர்னீக்கா ( 1940 - )
13. சி.வி.வேலுப்பிள்ளை (1914 -1984)
14. அ.செ.முருகானந்தன்
15. மு.கனகராசன் (1942
-
16. ராஜ ஸ்ரீகாந்தன் (1948 - 2004)
17. வண்ணை சிவராஜா
19. எம்.எச்.எம். ஷம்ஸ் ( 1940 - 2002)
20. நீர்கொழும்பூர் முத்துலிங்கம் (1947 - 2000)
21. நா. சோமகாந்தன் ( 1933 - 2006 )
22. இளங்கீரன் ( 1927-1997)
23. ஏ.ஜே.கனகரட்னா (1934 - 2006)
24. இ.முருகையன் (1935 - 2009)
25. வ.ராசையா (
1921 - 2007)
26. எஸ். அகஸ்தியர் ( 1926 -1995)
27. கே. கணேஷ் ( 1920 - 2004)
28. சில்லையூர் செல்வராசன் ( 1933 - 1995)
29. கி. லக்ஷ்மண ஐயர் ( 1918 - 1990)
30. தெ. நித்தியகீர்த்தி (1947 - 2009)
31. எஸ்.வி. தம்பையா (1932 -
2002)
32. பேராசிரியர் கா. சிவத்தம்பி ( 1932
- 2011)
33. மருதூர்க்கொத்தன் (1935 -2004)
34. மருதூர்க்கனி (1942 -2004)
35. புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை (1899 - 1978)
36. பிரேம்ஜி ஞானசுந்தரன் (1930 -
2014)
37. தனிநாயகம் அடிகளார் (1913 - 1980)
38. முகம்மது சமீம் ( 1933 -
39. சு.வில்வரத்தினம் (1950 - 2006)
40. காவலூர் ராஜதுரை (1931 - 2014 )
41. கலா.பரமேஸ்வரன் (
1944 - 1983)
42. வ.அ. இராசரத்தினம் (1925 -
43. 'எஸ்.பொ" பொன்னுத்துரை (1932 -2014)
44. அன்புமணி ( 1935
- 2014)
45. சண்முகம் சிவலிங்கம் (1936 - 2012)
46. பொ. கனகசபாபதி (1935 - 2014)
47. நாவேந்தன் (1932 -2000)
48. தி.ச.வரதராசன்
(1924 - 2006)
49. செங்கைஆழியான் ( 1941 -2016)
50. சிவா சுப்பிரமணியம் (1942 - 2016)
No comments:
Post a Comment