பொருளுணர்ந்த நண்பர்!


-சங்கர சுப்பிரமணியன். 


வசனக் கவிதை!

இந்நாளில் அதிகமாக எழுதப்படா கவிதை என்றாலும் இன்றும் சிலர் எழுதியே வருகிறார்கள். இக்கவிதை அருகி வரும் இந்நாளில் குறுகிடாமல் இருக்க கவிஞர்கள் கவிதை எழுதுவதை கைவிடவில்லை.

இரு நெருங்கிய நண்பர்கள்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசா
உண்மையான உயிர்நண்பர்கள்

முரண்பட்ட கருத்துக்களை கொண்டாலும்
முட்டிக் கொள்ளா நண்பர்கள்
சந்தர்ப்பத்துக்கு ஏற்ப பழகா நண்பர்கள்

ஒருநாள் ஒருவரிடம் ஒருவர்
ஒரு சட்டத்தைக் காட்டி என்னவென்றார்
சட்டத்தினுள் உள்ளதாளிலோ
சில நேர்கோடுகள் சில வளைந்தகோடுகள்

ஓழுங்கற்று கிறுக்கப் பட்டிருந்தன
ஒன்றும் புரியாததால் கிறுக்கலென்றார்
நண்பர்

நக்கீரா நன்றாக உற்றுப்பாரென
சிவன் நக்கீரனிடம் சொன்னதைப்போல
நண்பா நன்றாக உற்றுப்பாரென்றார்

நன்றாக உற்றுப் பார்த்த நண்பரோ
யார் கீறியது என்றாலும் கிறுக்கல் கிறுக்கலே என்று தயங்காது சொன்னார்

ஆருயிர் நண்பன் நான் கீறியிருந்தாலும்
அது கிறுக்கலா என்றார்
அந்த எமனே எருமைமீது வந்து மிரட்டினாலும்
கிறுக்கல் கிறுக்கலே என்றார்

தாளை நன்றாக உற்றுப்பார் என்றவர்
வளைந்த கோட்டைக்காட்டி
கழுகு தெருகிறதா என்று கேட்டார்

நண்பரோ அப்படியொன்றும் தெரியவில்லையே என்றார்

அதன் அலகில் பலவளைவுகளுடன்
பாம்பு தெரிகின்றதா என்றார்
இல்லையென்றார் நண்பரும்

அந்த பாம்பு வலிதாங்க முடியாமல்
தப்பிக்க முயற்சிக்கும் முயற்சி தெரிகிறதா
அந்த உயிரோட்டமான காட்சி தெரிகிறதா
என்றெல்லாம் கேட்டார்

நண்பரோ முற்றாக அப்படி ஒன்றுமே தெரியவில்லை என்றார்

கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை
இது மாடர்ன் ஆர்ட்ஸ் என்றார் நண்பர்
விலை இருபத்தியையிரம் என்றார்

ஆருயிர் நண்பா இல்லாததை இருப்பதாய்
மற்றவர் சொல்வதை எண்ணி மறுகாதீர்

பணம் அதிகம் கொடுத்து வாங்கியதால்
பார்ப்பதெல்லாம் தெரிவதாக சொல்லாதீர்

நான் சொல்வதை மட்டும் நம்பாதீர்
பலரிடம் கேட்டு பகுத்தறிந்து பாருங்களென்றார் பாங்கொடு நண்பரும்

பலரிடம் காட்டினார் நண்பரும்
எவரும் பாம்பையும் காணவில்லை கழுகையும் காணவில்லை என்றனர்

எவரோ ஒருவர் மாடர்ன் ஆர்ட்ஸ் என்று
என்னை நம்ப வைத்துவிட்டார்

யார் என்ன சொன்னால் என்ன
என் அறிவுக்கு என்ன ஆயிற்று
என்கண்களுக்கும் என்னதான் ஆயிற்று என்று தனக்குள்ளே குழம்பினார் நண்பர்

குழம்பியவரைப் பார்த்து நண்பரோ கண்ணைக் கவரும் மனதை தொடும் உயிரோட்டமான ஓவியமே ஓவியம் என்றார்

வானைப்பார் கடலைப்பார் மலையைப்பார்
மரங்களையும் பார் உயிரினங்களைப்பார்
அதில் தெரியாத உயிரோட்டமா இக்கிறுக்கலில் தெரிகிறதென்றார்

இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கே அலைகிறார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே என்ற
வரிகளின் பொருளுணர்ந்தார் குழம்பியவர்!


No comments: