பாரதி
இளமுருகனார் அவர்கள் இயற்றிய 80 சிறுவர் பாடல்களைக் கொண்ட நூல் செந்தமிழ்ப்
பூக்கள்!
நேற்று
அரங்கு நிறைந்த தமிழன்பர்களுடன்
மிகவும் வெற்றிகரமாக நடைபெற்ற தமிழ் வளர்த்த சான்றோர் விழாவிலே வாழ்நாட்சாதனையாளர் சிவஞானச் சுடர் பாரதி இளமுருகனர் அவர்களால் இயற்றப்பெற்ற செந்தமிழ்ப் பூக்கள் நூலினைச் செஞ்சொற் செல்வர் சிவத்திரு ஆறு திருமுருகன் அவர்கள் வெளியிட்டுவைத்தார். அந்த நூலில் இருந்து தமிழ்ச் சான்றேர்கள் இருவரின் சிறந்த பதிவுகள் இன்று வெளியிடப்படுகிறது.

.
யாழப்பாணப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தகைசார் வாழ்நாட் பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ் அவர்களின் பார்வையில் செந்தமிழ்ப் பூக்கள் ------
மருத்துவர்
பாரதி இளமுருகனார்
அவர்களுடைய செந்தமிழ்ப் பூக்கள் என்னும் கவிதை நூலைப் படித்தபோது எனக்கு
"உரைமுடிவு
காணான் இளமையோன் என்ற
நரைமுது
மக்கள் உவப்ப - நரைமுடித்துச்
சொல்லால்
முறைசெய்தான் சோழன்
குலவிச்சை கல்லாமல் பாகம்படும்"
--
என்னும் பாடல்தான் நினைவுக்கு வந்தது. குலவிச்சை கல்லாமல் பாகம் படும் என்பது
டாக்டர் பாரதிக்குப் பொருந்துவதாக உள்ளது. அவர் படித்தது மருத்துவம். யாப்பு -
அணிகளெல்லாம் விரிவாகப் படிக்கும் வாய்ப்பு இருந்திருக்க முடியாது. ஆனால் அவருடைய
தந்தை ஒரு சிறந்த தமிழ் அறிஞர். மரபுவழிக் கவிஞர். தங்கத் தாத்தா என்ற பெயர்பெற்ற நவாலியூர் சோமசுந்தரப் புலவரின்
பேரனான பாரதி அவரின் நேரடிவாரிசு. கவிதை எழுதுதல் பாரதிக்குக் குலவித்தை
ஆகிவிட்டது. இதனால் அவருடைய கவித்துவ மதிப்பு குறைந்துவிடும் என்று
எண்ணவேண்டியதில்லை. தந்தையும் பேரனாரும் கவிஞர்களாக இருப்பினும் அவர்கள் வழிவந்த
மைந்தன் தனக்கென ஒரு பாக்கோலத்தினைப் பெற்றிருப்பதை அவருடைய கவிதைகள் தெளிவாகப்
புலப்படுத்துகின்றன.
செந்தமிழ்ப்
பூக்கள் நூலைத் திறந்தவுடன் கண்ணில்பட்டுக் கனிவுதந்த பாட்டு கடவுள் வணக்கப்
பாடலாகும்.
"கல்வியென
அருங்கலைகள் செல்வமெனத் தருகின்றாய்
அல்லலெலாம்
களைந்துபே ரின்பமெலாம் அருள்கின்றாய்
வல்லமையும்
தந்தெம்மை நல்லவராய் ஆக்கின்றாய்
இல்லையென்ற இடமில்லை இறையருளுக் கேதுஎல்லை?"
மிகஎளிமையாகவும்
இயல்பான நடையும் உடையதாகவும் அமைகின்றது. இல்லையென்ற இடமில்லை இறையருளுக்
கேதுஎல்லை என்ற அடி நாம் வியக்கும் இறையருளை கவிஞர் வியந்து கூறுகிறார். எல்லாமாக
எண்பது கவிதைகள் (இரு கவிதைத் தொகுப்புகள்) கவிதைகள் சிறுவர்களுக்காகத் தரப்பட்டு
உள்ளன. அவற்றுள் எட்டுக் கவிதைகள் கதைகூறும் கவிதைகளாயுள்ளன. மிகுதி சிறுவர்கள்
விரும்பும் பல்வேறு விடயங்கள் பற்றிப் பாடுகின்றன. அவற்றை உள்ளடக்கம் உருவம் என்ற
அடிப்படையில் நாம் நோக்கலாம்.
கவிதைகளின்
உள்ளடக்கம் சிறுவர்களுக்கு விருப்பமான அம்மா விலங்குகள் பறவைகள் இயற்கைத்
தோற்றங்கள் விளையாட்டுகள் பற்றியும் அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான கங்காரு
விலங்கு குவாலா மக்பை பறவைகள் ஆகியவற்றுடன் பென்குயின் பற்றியுமாக அமைந்துள்ளது.
சிறுவர்கள் அறியவேண்டிய நம் ஈழநாட்டுக் கவிஞர்கள் மூவரைப் பற்றியும் பாடியுள்ளார்.
அவர்கள் நவாலியூர் சோமசுந்தரப் புலவர்
வித்துவான் வேந்தனார் தனித்தமிழ்
வளர்த்த இளமுருகனார் ஆவார். மூன்றாமவர் கவிஞர் பாரதியின் தந்தை ஆவார். அவர்
பாலசுப்பிரமணியம் என்னும் தன் வடமெழிப் பெயரை இளமுருகன் எனத் தமிழ்ப் பெயராக
மாற்றியவர். தந்தையினுடைய தனித்தமிழ் விரும்பும் போக்கும் தனயனின் கவிதைகளிலே காண
முடிகிறது. எப்பொருளை எடுத்துக்கொண்டாலும் அது சிறுவர்களுக்குக் கூறப்படுகின்றது
என்ற மன உணர்வுடன் கவிதையிலே அமைத்துக் கூறுவதைக் காணமுடிகிறது. மாம்பழம் பற்றிப்
பல கவிஞர்கள் பாடியுள்ளனர். பாரதியினுடைய மாம்பழம் யாழ்ப்பாணக் கறுத்தக்
கொழும்பான்மாதிரி நல்ல நறுமணத்துடனும் அழகான நல்ல நிறத்துடனும் கண்ணைக்கவர்
கோலத்துடனும் கவிதையிலே அமைந்துள்ளது.
"மாம்பழம்
நல்ல மாம்பழம் - வீட்டு
மரத்தில்
பழுத்த மாம்பழம்
தீம்பழம்
இதை நினைக்க நினைக்கத்
தேனாய்
இனிக்கும் மாம்பழம்
மஞ்சள்
நிறத்து மாம்பழம் - நல்ல
வாச
மான மாம்பழம்
குஞ்சு
மாமி எனக்குத் தந்த
கொழுத்த
நல்ல மாம்பழம்".
இவ்விரண்டு
பாடல்களையும் எடுத்துக்காட்டாகத் தருகிறேன்.
குஞ்சு
மாமி எனக்குத் தந்த கொழுத்த நல்ல மாம்பழம் எனப் பிள்ளை இந்தப் பாடலைப்
படிக்கும்போது தன் கை நிறைய இந்தக் கொழுத்த மாம்பழத்தை வைத்திருக்கும் உணர்வைப்
பெற்றுக்கொள்வது போன்று பிள்ளைகளுக்கான நல்ல பொருள்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அவை நன்றாகக் கவிதைகளிலே தரப்பட்டுள்ளன.
கதைப்
பாடல்களின் உள்ளடக்கம் ஏற்கனவே நமக்குத் தெரிந்தவையே!. கல்லுப் போட்டுத் தண்ணீர்
குடித்த காகம் காகத்தின் குரல் நல்லாய் இருக்கிறது எனக் கூறி வடையைக் கவர்ந்த நரி
சிங்கமும் முயலும் ஈரலை மரப் பொந்திலே வைத்திருக்கிறேன் என்ற குரங்கும் முதலையும்
பூனையும் எலியும் நன்றியுள்ள நாய் ஆகிய கதைப் பாடல்களுடன் ஒற்றுமையே வெல்லும்
என்னும்தலைப்பில் இன்னொருபுதிய பாடலும்இடம் பெறுகின்றன.ஒற்றுமையே வெல்லும் என்னும்
கதை
"வன்னி
என்ற பெரிய நாட்டை
வளவன்
ஆண்டனன்
கண்ணின்
மணி போற்
சிறிய அரசர்
காத்து
நின்றனர்"
என்ற
பாடலுடன் தொடங்குகின்றது. வளவன் கொடுங்கோலனாக மாற அவனைச் சார்ந்திருந்த சிறிய
அரசர்கள் அவனைவிட்டு நீங்கினார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எதிரியான மன்னன்
போர் தொடுத்து வெற்றி கொண்டனன். குறுநில மன்னர் அறிவுரை சொல்லியும் கேளாத வளவன்
தனியன் ஆகித் தோல்விகண்டனன். பாரதியின் கவிதைகளின் உருவம் பற்றிப் பார்க்கலாம்.
பொதுவாக எல்லாக் கவிதைகளுமே இயல்பு நிலை வாய்ந்தவையாக அமைகின்றன. பிள்ளைகளுக்கு
மனங்கொள்ளத் தக்கவையாக உள்ளன. கவிஞருடைய பேரனார் மொழி என்னும் பாடலில் மாடு ஓடுவதை
வெடிவாலைக் கிழப்பிக்கொண்டோடுது பார் என்று பாடுவது போலப் பேரன் பாரதியும்
"நூலைக்
கட்டி விட்டால்
நூறு
அடிக்குப் பறக்கும்
வாலை
வாலை ஆட்டி
வானில்
உயரப் பறக்கும்"
என்று
பட்டம் என்னும் கவிதையில் பாடுகிறார் . அவர் கையாளும் மொழி மிக எளிமையானதாக
அமைகின்றது. சில புதுமையான
கவிவடிவங்களையும் பயன்படுத்தியுள்ளார்.
"சோலை
மரத்தில் கூடிப்பேசும்
கிளிகள்
பார்
கிளிகள்
பார்
காலை
மாலை கரைந்து கூடும்
காகம்
பார்
காகம்
பார்"
என்று
தொடங்கும் பாடலை இங்கு ஓர் எடுத்துக்காட்டாகத் தருகிறேன். தன்னுடைய நாட்டு
விலங்கினை அறிமுகம் செய்யும்போது ஒரு நண்பன் கேள்வி கேட்க மற்றவர் மறுமொழி
கூறுவதாகப்; பாடலை
அமைக்கிறார்.
"அழகிய
அவுஸ்திரேலியாவின் சின்னம் அகண்ட
கண்ணால்
மிரண்டு பார்க்கம்
பழகிய
காட்டில் வாழும் மிகம்
பாப்பா
அதன்பெயர் சொல்லு வாயோ?"
என்று
ஒரு நண்பன் கேட்க அதற்கு மறுமொழியாய்
"தீனியாய்ப்
பசும்புல் தினமும் மேயும்
செழித்த
தழைகளை விரும்பி உண்ணும்
ஊனினை
உண்ணாச் சாந்த மிருகம்
உணர்வாய்
அதன்பெயர் கங்காரு அன்றோ?"
என்று
கூறுகின்றார்.
ஒரு
பாரம்பரியத்தின் வழித்தோன்றல் என்பதனை அவருடைய கவிதை நூலூடாக நாம் காணமுடிகிறது.
அழகான எளிமையான பிள்ளைக் கவித்திறன் நன்கு வெளிப்படுகிறது. தந்தை போற்றிய தௌ;ளிய தனித்தமிழ் நன்றாகத் தனயன் கவிதைகளிலே பயன்படுகிறது.
தமிழ் உலகுக்கு நல்லதொரு கவிநூலைப் புலம்பெயர் நாட்டிலிருந்து தந்துள்ள பாரதிக்கு
என் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கவிஞர் அம்பிகைபாகர் அவர்களின் பார்வையில் செந்தமிழ்ப் பூக்கள்!
"ஆடிப்பிறப்புக்கு
நாளை விடுதலை
ஆனந்தம்
ஆனந்தம் தோழர்களே!
கூடிப்
பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை
தின்னலாம் தோழர்களே!"
ஆம்.
ஆடிப் பாடிச் சிறுவர் களிப்புறுவதற்கு இந்தப் பாடலை அன்று எழுதினார் ஒரு புலவர்.
இந்தப் பாடலை நினைக்குந்தோறும் நான் மூன்றாம் வகுப்பிலே ஆடிப் பாடிக் களித்த
நினைவு என் மனதிலே இன்றும் தெரிகிறது. எதிரொலிக்கின்றது. இந்தப் பாடலை எழுதிய
புலவர் நவாலியூர் சோமசுந்தரப் புலவர். பிற்காலத்திலே தங்கத் தாத்தா எனப்
பாராட்டப்பட்டவர்.
அன்னாரின்
மூத்த மகன் புலவர்மணி இளமுருகனார் என்னும் தமிழ் அறிஞர். அவரது மூத்த மகன்தான்
செந்தமிழ்ப் பூக்கள் என்னும் கவிதை நூலை இயற்றிய பல்வைத்திய கலாநிதி சோமசுந்தர
பாரதி. தொழில் காரணமாக மருத்துவர் ஆயினும் தமிழ் அறிவிலும் தமிழ் ஆற்றலிலும் தமது
பரம்பரையை அவர் கைவிடவில்லை. சிட்னி மாநகரிலும் செந்தமிழை வளர்ப்பதற்கு மிக
அக்கறையுடன் செயற்பட்டுகிறார். அவரது இந்தக் கவிதை நூல் அதற்குச் சான்று
பகர்கின்றது.
இக்காலத்திலே
தமிழராகிய நாம் பல காரணங்களால் சொந்த நாடுகளை விட்டுப்பிரிந்து புலம் பெயர்ந்து
வாழ்கிறோம். ஆமாம். வீடு நம் சுற்றம் நம் விளைநிலம் நாடு எல்லாம் விட்டு வெளியே
சென்று அன்னிய மொழிகளைப் பேசி அன்றாட வாழ்வை நடத்துகிறோம். எமது அடுத்த
தலைமுறையினர் என்ன செய்வர்?. அவர்தம்
வாயிலே தமிழ் மொழி நிலைக்குமா?. இந்த
வினாக்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்து. இதுபோன்ற நூல்கள் தமிழை அடுத்த
தலைமுறைக்குக் கையளிக்கப் பெரிதும் உதவும் என்பது உண்மை.
இந்த
நூலிலே பாடும் குயிலும் ஆடும் மயிலும் மட்டுமல்ல. வெள்ளைப் பூனையும்
துள்ளித்தாவும் அணிலும் மட்டுமல்ல. கட்டை முன்னங் காலை மடக்கிப் பாயும்
கங்காருவையும் அம்மா முதுகில் ஏறிடும் குவாலாவையும் இவைபோன்}ற இந்த நாட்டுச் சூழல் - மிருகம் - பறவைகளையும் கவிதைப் பொருளாக்கி மண் வாசனையை
ஏற்படுத்துகிறார் பாரதி. கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை - வித்துவான் வேந்தனார் ஆகியோரின் குழந்தைப் பாடல்கள் மரபு பாரதி மூலம்
நல்ல தரத்துடன் தொடர்கின்றது என்பது பாராட்டப்பட வேண்டும். ஆக இத்தகைய நூல்கள்
அன்று நாம் பாடிய தமிழைப் பாதையில் விட்டிடாமற் காப்பதற்கு ஒரு வழியாகும். அதிலும்
பார்க்க முக்கியமானது வீட்டிலே தமிழைப் பேசுதல். இதற்காக வழி செய்வன பலப்பல.
ஆவற்றுள் ஒன்று பாடல்கள். பாடிய தமிழைப்
படிப்படியாக அடுத்த தலைமுறையினர் கையில் பத்திரமாக் கையளித்தல் எமது முக்கிய
பணியாகும். அந்தப் பணியை நிறைவேற்றுவதற்கு இந்நூல் போன்றவை பெரிதும் உதவும். வாழ்க
தமிழ்! வளர்க தமிழார்வம்!
(கவிஞர் அம்பி அவர்கள் அமரத்துவம் எய்துவதற்கு முன்னர்
பாரதிக்கு எழுதிய பாராட்டு)
No comments:
Post a Comment