ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பாரிஸிலிருந்து பாரிஸ் ஈழநாடு, தமிழன் ஆகிய இரண்டு வாரப் பத்திரிகைகள் வெளியாகிக்கொண்டிருந்தன.
இவற்றை நடத்தியவர்கள்,
முன்னர் இலங்கை வடபுலத்தில் வெளியான ஈழநாடு பத்திரிகையில்
பணியாற்றியவர்கள். ஈழநாடுவில் தமது எழுத்தூழியத்தை
மேற்கொண்டவர்கள் பலர். அவர்களில் சிலர் தற்போது உயிரோடு இல்லை.
எனது பூர்வீகம் மேற்கிலங்கையில்
நீர்கொழும்பு. 1972 இற்குப்பின்னர், கெழும்பிலிருந்து வெளியாகும் வீரகேசரி பத்திரிகையின் நீர்கொழும்பு
பிரதேச நிருபராகவும், அதேசமயம், படைப்பிலக்கியவாதியாகவும் நான் அறிமுகமானேன்.
அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து
டொமினிக்ஜீவா வெளியிட்ட மல்லிகை மாத இதழில் எனது சிறுகதைகள் உள்ளிட்ட படைப்புகள் வெளிவந்தன.
மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா, ஒவ்வொரு மாதமும் மல்லிகை வெளியானதும், அதன் பிரதிகளுடன் யாழ். ஈழநாடு
பணிமனைக்குச்சென்று அங்கிருக்கும் பத்திரிகையாளர்களுக்கு விநியோகிப்பார்.
ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர், 1970 களில் எனது ஆக்கங்களை
மல்லிகையில் படித்துவிட்டு, சக பத்திரிகையாளர்களிடம் என்னைப்பற்றி சிலாகித்துச்சொன்ன ஈழத்தின் மூத்த பத்திரிகையாளர் – மதிப்பிற்குரிய திரு. எஸ்.கே. காசிலிங்கம் அவர்களுக்கு அமுதவிழா நடைபெறுகிறது என்ற நற்செய்தியை லண்டனிலிருந்து எனக்குத் தந்தார், மற்றும் ஒரு நீண்டகால ஊடகவியலாளர் நண்பர் எஸ். கே. ராஜென்.
1995 – 1996 காலப்பகுதியில் பாரிஸ் ஈழநாடுவில் , மறைந்துவிட்ட
மூத்த படைப்பாளிகள் பற்றிய நினைவுத் தொடரை எழுதிக்கொண்டிருந்தேன்.
தனது தமிழன் பத்திரிகையிலும்
நான் எழுதவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தவர்தான் எஸ்.கே. காசிலிங்கம் என்ற
தகவலை பின்னர்தான் நான் அறிந்தேன்.
திடீரென ஒரு நாள் பாட்டி சொன்ன கதைகள் என்ற உருவகக் கதைத்
தொடரை தமிழன் இதழக்கு அனுப்பினேன். அதனை ஒவ்வொரு வாரமும் தமிழன் இதழில் வெளியிட்ட அதன் ஆசிரியர் காசிலிங்கம், பின்னர் அந்தத் தொடர் நூலுருவானபோது, அதற்கு நீண்டதொரு
கருத்துரையும் எழுதியிருந்தார்.
இந்நூல் டொமினிக்ஜீவாவின்
மல்லிகைப்பந்தல் வெளியீடாக 1997
ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வெளியானது.
காசிலிங்கம் அவர்களின்
கருத்துரையிலிருந்து பின்வரும் சுவாரசியாமான குறிப்புகளைத் தருகின்றேன்.
“ எழுத்தாளர்களா, பத்திரிகையாளர்களா உயர்ந்தவர்கள்?
“
இது தேவையற்ற சர்ச்சைதான்.
ஆனாலும், பத்திரிகையாளரும்
எழுத்தாளருமான முருகபூபதியைப்பற்றி கருத்துரை எழுதும்போது இந்த சர்ச்சைக்கான விளக்கத்தையும்
குறிப்பிடுவதில் தவறில்லை என்று நினைக்கின்றேன்.
பாரிஸில் வாழ்ந்துகொண்டிருந்தபோது
அமரராகிவிட்ட அகஸ்தியர் அவர்களுடன் ஆரம்பமான சர்ச்சை இது.
எழுத்தாளர் எல்லோருமே தொடர்ந்து
எழுதிக்கொண்டிருப்பதில்லை. பத்திரிகையாளர்களைப் பொறுத்தமட்டில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
இதனால், இவர்கள்தான் உயர்ந்தவர்கள் “
இது எமது விவாதம் !
பத்திரிகையாளர்களின் உதவியினால்தான் எழுத்தாளன் பிரபல்யமடைகிறான். பத்திரிகையின் ஒத்தாசையின்றி எழுத்தாளன் மக்கள் மத்தியில் அறிமுகமாக முடியாது.
இதுவும் எமது விவாதம்.
இவ்வாறு இந்த சுவாரசியமான
விவாதம் நீண்டிருந்தது.
பல எழுத்தாளர்களின் படைப்பிலக்கிய
ஆக்கங்களுக்கு களம் கொடுக்கும் பத்திரிகை ஆசிரியர்களும், குறிப்பிட்ட பத்திரிகைகளில் பணியாற்றும் பத்திரிகையாளர்களும்
இல்லையேல், ஒரு எழுத்தாளன் எவ்வளவுதான் எழுதிக்குவித்தாலும்,
அவை பத்திரிகைகளில் வெளிவரவில்லையெனில், அவ்வெழுத்துக்கள் குடத்திலிட்ட விளக்காகவே
இருந்துவிடும்.
இந்நிலை காசிலிங்கம் அவர்கள், 1997 களில் எனது பாட்டி சொன்ன கதைகள் நூலுக்கு கருத்துரை எழுதிய காலப்பகுதியில் இருந்தது.
ஆனால், இன்று நிலைமை முற்றாக மாறிவிட்டது.
எழுத்தாளர்கள், தத்தமக்கென
வலைப்பூக்களையும், காணொளிகளையும் நடத்தியவாறு
தங்கள் படைப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். அத்துடன் முகநூலிலும் பகிர்ந்துகொள்கிறார்கள்.
அன்று கையால் பேனையின்
துணையுடன் காகிதத்தில் எழுதி, தபால் உறையில்
வைத்து அஞ்சல் தலை ஒட்டி பத்திரிகைகளுக்கு
அனுப்பிய காலம் இன்று மாறிவிட்டது.
இன்று நாம் கணினி யுகத்தில்
வாழ்கின்றோம்.
இந்த இரண்டு யுகங்களிலும்
எழுத்தூழியத்தில் ஈடுபட்டவர்தான் எஸ். கே. காசிலிங்கம் அவர்கள்.
தனது பத்திரிகை உலக அனுபவங்களையும்
தனது தொழில்சார் வாழ்வில் சந்தித்த ஆளுமைகள் பற்றியும் 2002 ஆம் ஆண்டு வெளியிட்ட என்னுள்.. என்னாடு … என்ற
நூலில் விரிவாக பதிவுசெய்துள்ளார்.
இந்நூலை வாசகர்கள் தமிழ் நூலகம் ஆவணகத்தில் பார்க்க முடியும். படிக்க
முடியும்.
காசிலிங்கம் அவர்கள் யாழ்ப்பாணத்தில்
ஈழநாடுவில் பணியாற்றிய வேளை, தேசிய இனப்பிரச்சினை
கூர்மையடைந்து, இனவிடுதலைப்போராட்டம் வெடித்த காலப்பகுதி.
அக்காலப்பகுதியில் தான்
அங்கு கற்றதையும் பெற்றதையும் சுவாரசியத்துடனும் வலிகளுடனும் இந்த நூலில் எழுதியிருக்கிறார்.
காசிலிங்கம் யாழ்ப்பாணத்தில்
ஈழநாடுவில் பணியாற்றிய காலப்குதியில் அங்கு அரசாங்க அதிபராகவிருந்த விமல் . அமரசேகராவுடனும்
நெருங்கிய தொடர்பிலிருந்தவர். அவருடனான தனது
ஊடாட்டங்கள் பற்றியும் இந்நூலில் பதிவுசெய்துள்ளார்.
விமல். அமரசேகரா, பின்னாளில்
அவுஸ்திரேலியா மெல்பனில் வாழ்ந்து மறைந்தார். இவர் இங்கு 1980 களில் வாராந்தம் தமிழிலும், சிங்களத்திலும் ஒலிபரப்பான
3 E A வானொலி உருவாக்கத்திற்கு காரணமானவர்களில்
ஒருவர்.
காசிலிங்கம் அவர்களின்
என்னுள்.. என்னாடு … நூலில், விமல் அமரசேகராவைப் பற்றிய குறிப்புகளைப்படித்துவிட்டு, அவரை நேரில் சந்தித்து, அந்த நூலைக்காண்பித்து,
குறிப்பிட்ட பக்கங்களை வாசித்து மொழிபெயர்த்துச்சொன்னேன்.
அவர் காசிலிங்கம் அவர்களுடனான
பசுமையான நினைவுகளை என்னுடன் பகிர்ந்துகொண்டார்.
இந்நூலுக்கு மூத்த பத்திரிகையாளர் சசிபாரதி – சபாரத்தினம் முன்னீடும்,
தமிழக அரசியல் ஆர்வலர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அணிந்துரையும் எழுதியிருக்கிறார்கள்.
சமகாலத்தில் இலங்கையில்
பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஊடகக் கற்கைநெறி இடம்பெற்றுள்ளது. இந்தத்துறையில் பயிலும் தமிழ் மாணவர்களும் இவர்களின்
விரிவுரையாளர்களும் , காசிலிங்கம் அவர்களின்
என்னுள்.. என்னாடு … நூலினை அவசியம்
படிக்கவேண்டும்.
வடபுலத்தின் அனலைதீவில்
பிறந்து, அய்ரோப்பா வரையில் பயணித்து, தான்
நேசித்த பத்திரிகை உலகத்தை கைவிடாமல் அயற்சியின்றி
இயங்கி வந்திருக்கும் மூத்த பத்திரிகை உலக சகோதரர் எஸ். கே. காசிலிங்கம் அவர்கள் தற்போது எண்பது வயதை பூர்த்தி செய்து அமுதவிழாவை
காண்கிறார்.
உள்ளார்ந்த கலை, இலக்கிய,
ஊடக ஆ;ற்றல் மிக்கவர்கள், உலகின் எந்தத் திசைக்குச்சென்றாலும், தாம் ஆழமாக நேசித்த
இந்தத் துறையை கைவிடமாட்டார்கள் என்பதற்கு காசிலிங்கம் அவர்களும் மிகச்சிறந்த உதாரணம்.
எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.
( அமுதவிழா
மலரில் இடம்பெற்ற ஆக்கம். )
---------------
000---------------------
No comments:
Post a Comment