யாழ். பல்கலைக்கழக பட்டப்பின் படிப்புகள் பீடத்தின் வெள்ளி விழாவை ஒட்டிய நடைபவனி
”அமெரிக்காவில் கதிரையிலிருந்து விழுந்த பசில்” : மீண்டும் நவம்பரில் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு !
காணிகள் குறித்த வர்த்தமானியை திரும்பப் பெறுமாறு தமிழ் அரசியல் கட்சிகள் வலியுறுத்துகின்றன; அரசாங்கம் மறுபரிசீலனை செய்வதாக உறுதியளிக்கிறது.
நல்லூர் ஆலய சூழலில் அசைவ உணவகம் ; பெயர் பலகையை அதிரடியாக அகற்றிய மாநகர சபை
நல்லூர் கோயில் அருகிலுள்ள அசைவ உணவகத்தை மூடுமாறு வலியுறுத்தி மகஜர் கையளிப்பு
யாழ். பல்கலைக்கழக பட்டப்பின் படிப்புகள் பீடத்தின் வெள்ளி விழாவை ஒட்டிய நடைபவனி
Published By: Digital Desk 2
25 May, 2025 | 12:27 PM
யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டப்பின் படிப்புகள் பீடத்தின் வெள்ளி விழாவை ஒட்டிய நடைபவனி ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்றது.
இந்த நடைபவணியானது, திருநெல்வேலியில் அமைந்துள்ள பட்டப்பின் படிப்புகள் பீட முன்றிலில் ஆரம்பமாகி யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் பிறவுன் வீதி மருத்துவ பீடம் ஊடாக மீண்டும் பல்கலைக்கழகத்தை அடைந்தது.
நிகழ்வில் முக்கிய இடங்களில் மரம் நடுகையும் மேற்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா பட்டப்பின் படிப்புகள் பீட பீடாதிபதி பேராசிரியர் தி. வேல் நம்பி முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் கண்ணதாசன் மற்றும் பீடாதிபதிகள் துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் அலுவலர்கள் பழைய மாணவர்கள் என பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
24 May, 2025 | 10:37 AM
அமெரிக்காவில் உள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு மாத்தறை நீதவான் அருண புத்ததாச வெள்ளிக்கிழமை (23) உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக சம்பாதித்தாக கூறப்படும் 500 இலட்சம் ரூபா பணத்தை பயன்படுத்தி மாத்தறை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றை வாங்கியமை தொடர்பில் பசில் ராஜபக்ஷ உட்பட நால்வருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜராகியுள்ள நிலையில் பசில் ராஜபக்ஷவும் அவரது மனைவியின் சகோதரியான அயோமா கலப்பத்தி என்பவரும் நீதிமன்றில் ஆஜராகவில்லை.
இதன்போது நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, பசில் ராஜபக்ஷவுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் மே மாதம் 23 ஆம் திகதி வரை மாத்திரமே வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் பசில் ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை (23) நீதிமன்றில் ஆஜராகவில்லை.
இதனால் பசில் ராஜபக்ஷவின் பிணையை இரத்து செய்து அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்க வேண்டும் என சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.
இதன்போது பசில் ராஜபக்ஷ சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, பசில் ராஜபக்ஷ இலங்கைக்கு வருவதற்காக மே மாதம் 18 மற்றும் 19 ஆம் திகதிக்கு விமான பயணச்சீட்டை முன்பதிவு செய்திருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் கதிரையிலிருந்து கீழே விழுந்து காயமடைந்ததால், அவர் 6 மாத காலத்துக்கு விமானத்தில் பயணிக்க கூடாது என வைத்தியர்கள் கூறியுள்ளனர என தெரிவித்தார்.
பசில் ராஜபக்ஷவின் வைத்திய அறிக்கைகளை பரிசீலித்த நீதவான் அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
Published By: Vishnu
24 May, 2025 | 01:14 AM
(நா.தனுஜா)
வடக்கு மாகாணத்திலுள்ள காணிகள் தொடர்பில் கடந்த மார்ச் மாதம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நீக்கப்படவேண்டும் என பிரதமருடனான சந்திப்பில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உறுதியாக வலியுறுத்தியதை அடுத்து, இதுபற்றி காணி அமைச்சின் அதிகாரிகளுடன் ஆராய்ந்து தீர்வு வழங்கப்படும் என அரசாங்க தரப்பு உறுதியளித்துள்ளது.
அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 ஆம் திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள 5940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் வட, கிழக்கு தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து, இவ்விவகாரம் குறித்து கலந்துரையாடும் நோக்கில் வெள்ளிக்கிழமை மு.ப 11 - பி.ப 1 மணிவரை பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும், வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அச்சந்திப்பில் அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் ஹரினி அமரசூரிய, விவசாய, கால்நடை மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்காந்த, பிரதியமைச்சர் சுசில் ரணசிங்க, அவ்வமைச்சின் செயலாளர் டி.பி.விக்ரமசிங்க, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விக்கும் டி ஆக்ரு, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதாந்ரி, காணிப்பதிவு திணைக்களத்தின் அதிகாரிகள், மாவட்ட அரசாங்க அதிபர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
அதேபோன்று வட, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் எஸ்.சிறிதரன், சத்தியலிங்கம், ரவிகரன், கோடீஸ்வரன் மற்றும் குகதாசன் ஆகியோரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ரவூப் ஹக்கீம் மற்றும் நிஸாம் காரியப்பர் ஆகியோரும், ஆளும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அமைச்சர் சந்திரசேகர், பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர, ஸ்ரீ பவானந்தராஜா, ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.
வர்த்தமானி அறிவித்தலை நீக்குங்கள்
அதன்படி இச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார் உள்ளிட்ட தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வடக்கிலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தல் நீக்கப்படவேண்டும் என ஒருமித்து வலியுறுத்தினர்.
'மூன்று தசாப்தகால யுத்தம், அதன் விளைவாக நிகழ்ந்த இடப்பெயர்வுகள், சுனாமி போன்ற பல்வேறு காரணங்களால் வட, கிழக்கில் வாழும் பெரும்பான்மையான மக்களிடம் அவர்களது காணிகள் தொடர்பான ஆவணங்கள் இல்லை. அதன் காரணமாக அவர்கள் தமது காணி தொடர்பான உரித்தை நிரூபிக்கமுடியாத நிலையில் உள்ளனர். அதேபோன்று அம்மாகாணங்களைச்சேர்ந்த பலர் போரின் விளைவாகவும், பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளிட்ட ஒடுக்குமுறைச்சட்டங்களின் பிரயோகத்தினாலும், ஏனைய அச்சுறுத்தல்களாலும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசித்துவருகின்றனர். அவர்களில் சிலரிடம் காணி உரித்து தொடர்பான ஆவணம் இருப்பினும், அவர்கள் மீண்டும் நாட்டுக்கு வருகைதருவதற்கு அஞ்சுகின்றனர். அத்தோடு வட, கிழக்கில் வசிக்கும் பலர் இத்தகையதோர் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது குறித்து அறியாதுள்ளனர்' எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அரசாங்கத்தின் நோக்கத்தில் சந்தேகம்
அதுமாத்திரமன்றி இவ்வாறான வர்த்தமானி அறிவித்தல்கள் மற்றும் சுற்றுநிருபங்கள் ஊடாக அரசாங்கத்தினால் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்ட வரலாறு இலங்கைக்கு இருப்பதனாலும், இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
'வட, கிழக்கு மக்கள் முகங்கொடுத்துவரும் காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பது தான் அரசாங்கத்தின் நோக்கம் எனின், அதற்கு குறித்த காலப்பகுதிக்குள் காணிகள் உரிமை கோரப்படாதவிடத்து, அவை அரசுடைமையாக்கப்படுவதற்கு இடமளிக்கக்கூடிய சட்டத்தைப் பிரயோகிக்கவேண்டிய அவசியமில்லை. மாறாக காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு, அவசியமேற்படும் பட்சத்தில் புதியதொரு சட்டத்தை உருவாக்கலாம்.
கரையோரப்பகுதிகளை இலக்குவைப்பது ஏன்?
அதேபோன்று வட, கிழக்கில் பெரும்பாலும் சகல மாவட்டங்களிலும் காணிப்பிரச்சினை நிலவுகின்றது. அவ்வாறிருக்கையில் ஏனைய மாவட்டங்களை விடுத்து, வடக்கில் கரையோரப்பகுதிகளாக இருக்கக்கூடிய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களை மாத்திரம் இலக்குவைத்து இவ்வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருப்பது அரசாங்கத்தின் நோக்கம் தொடர்பில் சந்தேகங்களைத் தோற்றுவிக்கின்றது' என்றும் தமிழ்ப்பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.
ஆளுங்கட்சி எம்.பி அருணும் ஆமோதித்தார்
அதனை ஆமோதித்த ஆளும் தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருண் ஹேமசந்திர, இவ்வர்த்தமானி அறிவித்தல் மேற்குறிப்பிட்டவாறான காரணங்களால் தமிழ்மக்கள் மத்தியில் பலத்த குழப்பங்களைத் தோற்றுவித்திருப்பதாக ஏற்றுக்கொண்டார்.
காணிகளை அபகரிப்பது அரசின் நோக்கமல்ல
தமிழ்ப்பிரதிநிதிகளின் கருத்துக்களை செவிமடுத்த பிரதமர் ஹரினி அமரசூரிய, அரசாங்கம் இவ்வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டதன் நோக்கம் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை அபகரிப்பது அல்ல எனவும், மாறாக அவர்கள் முகங்கொடுத்துவரும் காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதே நோக்கம் எனவும் விளக்கமளித்தார்.
இருப்பினும் தமிழ்ப்பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியவாறான சிக்கல்கள் காணப்படுவதனையும், அதன்விளைவாக குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதன் நோக்கத்தை உரியவாறு அடைந்துகொள்ளமுடியவில்லை என்பதனையும் பிரதமர் ஏற்றுக்கொண்டார்.
அதிகாரிகளுடன் ஆராய்ந்து விரைவில் தீர்வு
அதனையடுத்து கருத்துரைத்த காணி அமைச்சர் லால்காந்த, இவ்விடயம் தொடர்பில் அமைச்சின் ஏனைய அதிகாரிகளுடன் கலந்துரையாடி, வெகுவிரைவில் தீர்வொன்றை அறிவிப்பதாக உறுதியளித்தார். நன்றி வீரகேசரி
நல்லூர் ஆலய சூழலில் அசைவ உணவகம் ; பெயர் பலகையை அதிரடியாக அகற்றிய மாநகர சபை
Published By: Digital Desk 3
22 May, 2025 | 11:42 AM
யாழ்ப்பாணத்தில், நல்லூர் ஆலய சூழலில் மாநகர சபையின் அனுமதியின்றி திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது.
நல்லூர் ஆலய சூழலில் மாநகர சபையிடம் அனுமதி பெறாது, அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ள நிலையில், உணவகத்திற்கான அனுமதிகளை பெறுமாறு மாநகர சபை உணவகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், அனுமதி இன்றி உணவகத்திற்கு முன்பாக வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த நிறுவனத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் இன்று வியாழக்கிழமை (22) அகற்றப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த உணவகத்தில் சில சுகாதார குறைபாடுகள் காணப்பட்டமை தொடர்பில் மாநகர சபை பொது சுகாதார பரிசோதகரினால், யாழ். நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை நல்லூர் ஆலய சூழலில் புனித தன்மையை பேணும் வகையில் குறித்த உணவகத்தினை அகற்ற கோரி கடந்த செவ்வாய்க்கிழமை கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், நேற்று புதன்கிழமை (21) மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி
நல்லூர் கோயில் அருகிலுள்ள அசைவ உணவகத்தை மூடுமாறு வலியுறுத்தி மகஜர் கையளிப்பு
21 May, 2025 | 03:30 PM
யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகிலுள்ள அசைவ உணவகத்தை மூடுமாறு வலியுறுத்தி, ஆலய பக்தர்களிடம் சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய மகஜர் யாழ். மாநகர சபை ஆணையாளரிடம் இன்றைய தினம் (21) கையளிக்கப்பட்டது.
ஆலய பக்தர் ஒருவரின் தன்னார்வ முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கையில் 450க்கும் மேற்பட்டவர்கள் தமது கையொப்பங்களை பதிவு செய்தனர்.
இந்த கையொப்பங்கள் அடங்கிய மகஜர் யாழ். மாநகர சபை அலுவலகத்தில் வைத்து மாநகர சபை ஆணையாளர் கிருஷ்ணேந்திரனிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது சிவகுரு ஆதீனத்தின் தவத்திரு வேலன் சுவாமிகள் உட்பட சைவ சமய ஆர்வலர்கள் இணைந்துகொண்டனர்.
இந்த மகஜரின் பிரதிகளை வடக்கு மாகாண ஆளுநர், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர், நல்லூர் பிரதேச செயலாளர், இந்து கலாசார திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கும் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment