November 7, 2024
சட்டப்படி எவ்வாறாயினும், நடப்பின்படி இன்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் ‘தலைவராக’ இருக்கின்ற மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் செவ்வாயன்று வடமராட்சியில் செய்தியாளர்கள் மகாநாடொன்றில் வைத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஒரு சவாலை விடுத்தார். தனது பெயரைத் தவிர்த்து முடியுமானால் தேர்தல் பிரசாரத்தை செய்து காட்டுங்கள் பார்க்கலாம் என்பதே அந்த சவால். அவர் அந்த சவாலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை நோக்கி மாத்திரம் ஏன் விடுத்தார் என்று தெரியவில்லை.
தேர்தலில் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி போட்டியிடும் சகல கட்சிகளுமே அவருக்கு எதிராக தீவிரமாக பிரசாரம் செய்கின்றன. சுமந்திரன் அவ்வாறு ஒரு சவாலை விடுக்கிறார் என்றால் அந்த அளவுக்கு அவரையும் தமிழ் அரசு கட்சியையும் தேர்தலில் தங்களுக்கு பெரிய சவால் என்று பொன்னம்பலம் தரப்பினர் கருதுகிறார்களா? சுமந்திரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக பாராளுமன்ற பிரவேசம் செய்த நாட்களில் இருந்தே இனப்பிரச்னை தொடர்பிலான அவரின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்து வந்தவர் பொன்னம்பலம். ஒரு கட்டத்தில் அவர் கூட்டமைப்பில் இருந்து விலகி தனிவழியில் அரசியல் பயணத்தை தொடருகிறார். கூட்டமைப்பில் இருந்த கட்சிகளுடன் அரசமைப்புக்கான 13ஆவது திருத்தம் மற்றும் ஒற்றையாட்சி தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகவே தாங்கள் வெளியேறினரென அமெரிக்க தூதுவரிடம் பொன்னம்பலம் கடந்த வாரம் கூறியிருந்த அதேவேளை, பாராளுமன்ற தேர்தலில் ஆசன ஒதுக்கீட்டில் தோன்றிய முரண்பாடே அவரின் வெளியேற்றத்துக்குக் காரணம் என்று சுமந்திரன் வடமராட்சி செய்தியாளர்கள் மகாநாட்டில் கூறியிருக்கிறார்.
அது பழைய கதை என்பதால் இன்றைய சூழ்நிலையில் மக்களுக்கு அதில் பெரிதாக அக்கறை இருக்கும் என்று நம்புவதற்கில்லை. வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் சார்பில் பலம் பொருந்திய அணியாக தங்களை பாராளுமன்றம் அனுப்புமாறு முக்கியமான சகல தமிழ்க் கட்சிகள் அல்லது கூட்டணிகள் மக்களிடம் வேண்டுகின்றன. ஆனால், தமிழ்க் கட்சிகளிடையில் காணப்படும் படுமோசமான பிளவுகள் காரணமாக பெரும் அதிருப்திக்கு உள்ளாகியிருக்கும் தமிழ் மக்கள் இந்தத் தடவை எவ்வாறு வாக்களிப்பார்கள் என்பது குறித்துத் திட்டவட்டமாக எதையும் கூறமுடியாமல் இருக்கிறது. வடக்கில் குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதான போட்டி ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் தமிழ் அரசு கட்சிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலானதாக இருக்கும் என்பதே பொதுவான அபிப்பிராயமாக இருக்கிறது. மற்றைய தமிழ் கட்சிகள் எல்லாம் சிதறுப்பட்டிருக்கும் நிலையில் ஒருவிதமான கோட்பாட்டு பிடிவாதத்துடன் நிற்பது தங்களுக்கு கணிசமானளவுக்கு அனுகூலமாக அமையலாம் என்று பொன்னம்பலம் தரப்பு நம்புகிறதுபோன்று தெரிகிறது.
இது இவ்வாறிருக்க, அண்மைக்கால பாராளுமன்ற தேர்தல்களில் முன்னென்றும் இல்லாத அளவுக்கு வடக்கில் பல கட்சிகளாலும் சுற்றிவளைத்து கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகும் தனியோர் அரசியல்வாதியாக சுமந்திரன் விளங்குகிறார். இது அவருக்கு பலமா பலவீனமா என்பதை தேர்தல் முடிவுகளின் மூலம் மாத்திரமே தெரிந்து கொள்ளமுடியும். சுமந்திரன் தமிழர் அரசியலில் செல்வாக்குமிக்கவராக தலையெடுத்தால் தமிழ்த் தேசியத்துக்கு பெரும் பாதிப்பு என்றும் அந்தத் தேசியத்தை காப்பாற்ற வேண்டுமானால் அவரை தோற்கடிக்க வேண்டும் எனவும் உள்நாட்டில் பெரும்பாலான தமிழ் கட்சிகள் மாத்திரமல்ல, புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தில் உள்ள பல்வேறு குழுக்களும் கூறுகின்றன. தமிழ் அரசு கட்சியில் ஒரு பிரிவினரின் நிலைப்பாடும் அதுவே என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம். ஒரு கோணத்தில் நோக்கும்போது சுமந்திரனை சுற்றியதாகவே தமிழ்த் தேசிய அரசியல்களத்தில் வாதப் பிரதிவாதங்கள் அண்மைக்காலமாக அமைந்திருக்கின்றன. அதற்கு தமிழ்த் தேசியம் என்று தாங்கள் வியாக்கியானம் செய்யும் கோட்பாட்டுக்கு எதிராக சுமந்திரன் செயல்பட்டு வருகிறார் என்று அவருக்கு எதிரானவர்கள் கருதுவதுதான் காரணமா அல்லது வேறு ஆளுமை மோதல்தான் காரணமா என்பது முக்கியமான கேள்வி. அதற்கான பதிலை அறிய வடக்கு மக்கள் நிச்சயம் விரும்புவார்கள். அதனால், தமிழ்த் தேசியத்துக்கு சுமந்திரன் செய்த பாதகங்களையும் தமிழ்த் தேசியத்தை தூய்மை கெடாமல் தொன்மை நலத்துடன் பாதுகாப்பதற்கு கடந்த பதினைந்து வருடங்களாக தாங்கள் செய்த காரியங்களையும் அவரை எதிர்த்து நிற்கும் தமிழ் அரசியல்வாதிகள் தெளிவாக விளக்கினால் பயனுடையதாக இருக்கும். தேர்தலுக்கு முதல் தமிழ் மக்களுக்கு தெளிவு வேண்டும். நன்றி ஈழநாடு
No comments:
Post a Comment