திருடி - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 சிவாஜி கணேசன் நடிப்பில் 1969ம் வருடம் திருடன் என்ற படம்


வெளிவந்து வெற்றி கண்டது. இந்தப் படத்தில் கதாநாயகியாக , சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் கே ஆர் விஜயா . இந்தப் படம் வெளிவந்து ஐந்து ஆண்டுகள் கழித்து இதே கே ஆர் விஜயா நடிப்பில் வெளிவந்த படம்தான் திருடி. இதிலும் கதாநாயகியாக அவரே நடித்தார்.

 
தமிழ்த் திரைப்பட நிறுவனங்களில் தொன்மை வாய்ந்த நிறுவனம்

ஜுபிடர் பிக்சர்ஸ். எம் ஜி ஆர், கருணாநிதி, கண்ணதாசன்,எம் எஸ் விசுவநாதன், என்று ஏராளமான கலைஞர்களின் ஏற்றத்துக்கு காரணமான இந்த நிறுவனத்தின் அதிபர்களான எம் . சோமசுந்தரம், எம் .கே மொஹிதீன் இருவரினதும் மறைவுக்கு பின்னர் இந்த நிறுவனம் மூடு விழா கண்டது. அதன் பின்னர் சோமசுந்தரத்தின் மகன் எம் .எஸ் . காசி வேறுபெயர்களில் பட நிறுவனங்களை நிறுவி படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார். அவ்வாறு அவர் தயாரித்த படங்களில் ஒன்று திருடி.
 
திருடி படத்தின் கதையை எழுதியவர் மகேந்திரன். தனது திரையுலக ஆரம்ப காலத்தில் நாம் மூவர்,சபாஷ் தம்பி, வைராக்கியம் என்று பல மசாலா படங்களுக்கு கதை எழுதிய இவரின் கைவண்ணத்தில் இப்படத்தின் கதையும் உருவானது. ஒரு பக்கத்தில் இவரின் திருடி தயாராகிக் கொண்டிருந்த போதுதான் மறுபுறத்தில் இவர் எழுதிய கடமை தவறாத போலீஸ் எஸ் பி சௌத்ரியின் கதையான தங்கப் பதக்கமும் தயாராகிக் கொண்டிருந்தது.


தாயை இழந்து சித்தியின் கொடுமைக்கு ஆளாகும் ராணியும் அவளின் தம்பியும் வீட்டை விட்டு சிறு வயதிலேயே ஓடுகிறார்கள். அந்த சந்தர்பத்தில் அக்காவும், தம்பியும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து விடுகிறார்கள். சேரிப் பகுதியில் வளரும் ராணி ஓர் கைதேர்த திருடியாக வளருகிறாள். தான் திருடும் பணத்தில் பாதியை கோவில் உண்டியலில் போடுகிறாள். மீதி பணத்தில் ஏழை மக்களுக்கும் உதவுகிறாள். தன் வரையில் தான் செய்வது சரி என்று நியாய படுத்திடுகிறாள். நண்பர்களை ஏய்த்து பிழைக்கும் செல்வத்திடம் இருந்து பணத்தை திருடும் ராணி தன் செய்கைக்கு நியாயம் கற்பிக்கிறாள் . அது மற்றுமின்றி பணத்தை மட்டுமல்ல , உன்னையும் திருட என்னால் முடியும் என்று சவால் விட்டு செல்வத்தையும் கல்யாணம் செய்கிறாள் அவள். ஆனாலும் அவளை சுற்றி பல சதி வலைகள் பின்னப்படுகிறது. அவற்றில் இருந்து அவள் மீண்டாளா என்பதே மீதிக் கதை.

படம் கே ஆர் விஜயாவை நம்பியே எடுக்கப்பட்டது. ஆனால் அவரின்

உருவத்தைப் பார்த்தவர்கள் அவரை கதாநாயகியாக ஏற்கத் தயங்கினார்கள். ஆனாலும் நடிப்பில் அவர் எந்த குறையும் வைக்கவில்லை. சவால் விடுவது, மோதுவது, வில்லன்களை மட்டம் தட்டுவது என்று படம் முழுவது நிரம்பி இருந்தார் விஜயா. படத்தின் ஹீரோ ஜெய்சங்கர். தனது வழமையான நடிப்பினால் ரசிகர்களை கவர்கிறார் ஜெய். நாகேஷுக்கு வயதான வேடம். பத்திரத்துடன் ஒட்ட மறுக்கிறார். ஆனால் வி கே ராமசாமியுடன் தோன்றும் காட்சிகளில் மட்டும் அவரின் காட்சிகள் எடுபடுகிறது. படத்தில் சசிகுமார் இருப்பதால் இளமையும் இருக்கிறது. சி ஐ டி சகுந்தலா இருந்தும் நோ யூஸ்.
 
படத்தில் அசோகன், ராமதாஸ், தேங்காய் சீனிவாசன் , சுருளிராஜன் என்று ஒரே வில்லன் கூட்டம் . இவர்கள் போடும் சதித் திட்டம் ஒரு பக்கம். திருடியை மடக்க என்னென்னவோ செய்கிறார்கள், ஆனாலும் ஒன்றும் எடுபடவில்லை. இவர்கள் போதாதென்று நல்லவரா, கெட்டவரா என்று புரியாத விதத்தில் ஆர் எஸ் மனோகரும் வந்து போகிறார். இவர்களுடன் குமாரி பத்மினி, எம் பானுமதி, வீரராகவன், ஒருவிரல் கிருஷ்ணராவ் ஆகியோரும், குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவியும் நடித்தனர்.
 

படத்துக்கு கண்ணதாசன் பாடல்களை எழுத , எம் எஸ் வி இசை தந்தார். நிலவு வந்து வானத்தையே திருடி சென்றது பாடல் மட்டும் கேட்கும்படி அமைந்தது. என் எஸ் வர்மா ஒளிப்பதிவை கவனித்துக் கொண்டார்.

பல படங்களுக்கு கதை, வசனம் எழுதி ரசிகர்களை கவர்ந்த மதுரை திருமாறன் இந்த படத்தை இயக்கினார். ஏற்கனவே சூதாட்டம், வாயாடி, ஆகிய இரண்டு கே ஆர் விஜயாவின் படங்களை இயக்கி வெற்றி கண்ட இவர் இப்படத்தையும் இயக்கினார். ஆனாலும் மகேந்திரனின் கதை வலுவிழந்து காணப்பட்டதால் மதுரை திருமாறனால் படத்தை சக்ஸஸ் ஆக்க முடியவில்லை. இதனால் ரசிகர்களின் மனதை பெரியளவில் திருடியால் திருட முடியவில்லை!

No comments: