தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சிவானந்தராஜா
‘தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற இன பேதங்களுக்கு இடமில்லை. சகலருக்கும் சமமான உரிமைகளும், வாய்ப்புகளும் வழங்குவதே எமது அரசின் நோக்கம்’ என்று கொழும்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் என். சிவானந்தராஜா தெரிவித்தார்.
“நேர்மையான அரசியல் மூலம் பொதுமக்களுக்குச் சேவையாற்றக் கூடிய சந்தர்ப்பம் தற்பொழுது உருவாகியுள்ளது. இதனைப் பயன்படுத்தி மக்களுக்குச் சேவையாற்றுவதற்கு விசேடமாக தமிழ் பேசும் மக்களுக்கு முடிந்த சேவைகளை முன்னெடுப்பதற்கு நான் முன்வந்துள்ளேன்” என்றும் வேட்பாளர் சிவானந்தராஜா தெரிவித்தார்.
“வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் தமிழ் பேசும் மக்களுக்கு கடந்த காலங்களில் அளித்த வாக்குறுதிகளை அம்மக்கள் மறந்துவிடவில்லை. தொடர்ந்தும் அம்மக்கள் ஏமாற்றப்பட்டே வந்துள்ளனர்” என அவர் மேலும் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவானந்தராஜா, கொழும்பில் தொழில் ரீதியான கல்வி நிறுவனத்தை நடத்தி வருகின்றார்.
15 வருடங்களுக்கு மேலாக இந்த தொழிற்துறையில் ஈடுபட்டுவரும் இவர், கொழும்பு மாவட்டத்தில் தமிழ் பேசும் மாணவர்கள் கல்வி நடவடிக்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நன்கறிந்தவர்.
இவர் தினகரனுக்கு பேட்டியளித்தார்.
கேள்வி: கொழும்பில் வாழும் தமிழ் பேசும் மக்கள், குறிப்பாக வடக்கு, கிழக்கு உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் உள்ளவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் குறிப்பிட முடியுமா?
பதில்: கொழும்பில் வாழும் வறிய தமிழ் பேசும் மக்களின் பிள்ளைகளுக்கு கல்வியின் தேவை உள்ளதை நானறிவேன். நான் நடத்தும் கல்வி நிறுவனத்தின் ஊடாக இவர்களின் இன்றைய நிலையை கண்டறிந்துள்ளேன். இதற்குத் தீர்வாக மட்டுமின்றி முழுநாட்டிற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் முன்வந்துள்ளது. குறிப்பாக அனைவருக்கும் சிறந்த கல்வி, சிறந்த வாழ்க்கை, வளமான வாழ்வுக்கு வழி செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இதில் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற இன பேதங்களுக்கு இடமில்லை. சகலருக்கும் சமமான கல்வியும் சமமான வாய்ப்புகளும் வழங்குவதே அரசின் நோக்கம்.
கேள்வி: தேசிய மக்கள் சக்தி உங்களை எவ்வாறு தேர்தல் பட்டியலில் உள்வாங்கியது?
பதில்: கொழும்பு மாநகரசபையிலும் எனக்கு ஈடுபாடு இருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி யாரை அரசியலில் உள்வாங்குவது என்பதில் திட்டவட்டமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. அவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளுக்கு அமைவாக நான் கொழும்பு மாவட்ட தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டேன். அதுமாத்திரமன்றி, நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் இலக்கை நோக்கிய பயணத்திற்கு நாம் மேற்கொண்ட வேலைத்திட்டம் பயனளித்தது என்பதை தேர்தல் பெறுபேறு வெளிப்படுத்தியுள்ளது.
கேள்வி: வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றன என்ற குற்றச்சாட்டு உண்டு. இதற்கு பல்வேறு பின்னணி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ்க் கட்சிகள் மாத்திரமின்றி தென்னிலங்கைக் கட்சிகளும் வாக்குறுதிகளை வழங்குவது பொதுவான விடயமாக அமைந்துள்ளது. ஆனால் அவை எவையும் முழுமையாக நிறைவேற்றப்படுவதில்லை. வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் அங்குள்ள மக்கள் அரசியல் கட்சிகளால் ஏமாற்றப்பட்ட வரலாறுதான் அதிகம். அவை எவையென தனிப்பட்ட ரீதியில் விபரிப்பதைப் பார்க்கிலும் இப்பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அவற்றை நன்கறிவார்கள்.
கேள்வி: சிறையில் நீண்ட காலமாக இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீண்டகாலமாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் எதுவுமே பயனுள்ளதாக அமையவில்லை. இந்த அரசாங்கத்திலாவது அவர்களுக்கு விடுதலை கிட்டுமா?
பதில்: தமிழ் அரசியல் கைதிகள் மாத்திரமல்ல, மக்கள் விடுதலை முன்னணியின் அங்கத்தவர்கள் சிலரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை பெறுவார்கள். அதற்கான ஆலோசனைகளை எமது கட்சி முன்வைத்துள்ளது. இதன் அடிப்படையில் இன பேதமின்றி அனைவரும் விரைவில் விடுதலையாவார்கள் என்பது உறுதி.
கேள்வி: மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட ஜனநாயக ஆட்சிக்கு பதிலாக மன்னர் ஆட்சியே நாட்டில் நடைபெற்றதாகக் குறிப்பிட்டீர்கள். இதனை தெளிவுபடுத்த முடியுமா?
பதில்: ஜனநாயக ரீதியில் மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட போதிலும், நாட்டில் மன்னராட்சியே நடைபெற்றது. மக்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். நாட்டு வளங்கள் விற்கப்பட்டன. இவை சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை. வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களின் காணிகள் பல இராணுவத்திடமே இருக்கின்றன. இவை சாதாரண அப்பாவி மக்களுக்குச் சொந்தமானவை. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விரைவில் உரிய மக்களுக்கு இவற்றை வழங்குவார்.
கேள்வி: வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதி ஒருவருக்கு அமையப்போகும் அரசாங்கத்தில் வெளிநாட்டு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது அல்லவா?
பதில்: எவரும் எதனையும் கூறலாம். ஜனாதிபதி அவ்வாறு செயற்படப் போவதில்லை. என்னைக் கூட இந்தக் கட்சியில் உள்வாங்குவதற்கு முன்பு, தனிப்பட்ட ரீதியான ஆய்வுகளை கட்சி மேற்கொண்டது. இதேபோன்றே அமைச்சர் பதவிகளுக்கும் பொறுப்பான, நேர்மையான அரசியல்வாதிகளே உள்வாங்கப்படுவார்கள். ஜனாதிபதியுடன் ஒன்றிணைய பலர் முற்படுகின்றனர். இவர்கள் யாரென்பதை கட்சியும், அறியும் ஜனாதிபதியும் அறிவார்.
கேள்வி: கொழும்பு போன்ற நகரங்களில் தமிழ் பேசும் மக்கள் பொலிஸ் நிலையங்கள், அரசாங்க அலுவலகங்களில் தமிழில் தமது அலுவல்களை மேற்கொள்ள முடியாத நிலையுண்டு. இதற்கு இனியாவது வழி பிறக்குமா?
பதில்: இது பொதுவான விடயம். கொழும்பு மாத்திரமில்ல, நாடு முழுவதிலும் தமிழ் பேசும் மக்கள் அரசாங்க திணைக்களங்களில் சேவைகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை நிலவுகிறது. கொழும்பில் மாத்திரமல்ல, நாடுமுழுவதும் தமிழ் மொழி அமுலாக்கத்திற்கு திட்டவட்டமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் எமது அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கான திட்டமும் உண்டு. தேர்தலுக்குப் பின்னர் அவை வலுவுள்ளதாக செயற்படுத்தப்படும். இதனை கடந்தகால அரசியல்வாதிகள் பேச்சளவிலேயே தெரிவித்திருந்தனர். நாம் நடைமுறையில் முன்னெடுப்போம்.
கேள்வி: கொழும்பில் பல ஆண்டுகாலமாக சேரிகள் இருந்து வருகின்றன. இப்பிரச்சினை முற்றாகத் தீர்க்கப்படவில்லை. ஒவ்வொரு தேர்தலின்போதும் இவற்றுக்கு தீர்வு காணப்படும் என்று அரசியல்வாதிகள் உறுதியளித்து வந்தனர். இந்த நிலை மேலும் தொடருமா?
பதில்: சேரிப்பகுதி மாத்திரமின்றி, பொதுமக்கள் எதிர்கொள்ளும் நாளாந்த பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வை வழங்குவதே எமது நோக்கம். இதற்காக நா முழுவதிலும், தொகுதிகள் தோறும் தொகுதி சபை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதி சபை ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள மக்களின் பிரச்சினைகளை ஆராயும், தீர்வுக்கும் வழிவகை செய்யும். இந்தச் சபையினால் தீர்க்கப்பட முடியாத பிரச்சினைக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுக்கு விரைவாக வழிவகை செய்வதே சபையின் நோக்கம். குறிப்பாக தேசிய அடையாள அட்டைப் பிரச்சினை, கடவுச்சீட்டுப் பிரச்சினை போன்றவற்றுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை நாடிச் செல்லும் நிலைமை இனி ஏற்படாது.
கேள்வி: வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் மாகாணசபைக்கான அதிகாரங்களை வழங்க வேண்டுமென்று 30 வருடங்களுக்குப் பின்னர் தற்போது தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் கோருகின்றன. மாகாணசபைத் தேர்தல் நடைபெறுமா?
பதில்: பொதுத்தேர்தல் முடிந்த பின்னர் சுமார் 6 மாத காலப்பகுதிக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டுமென்று ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.
கேள்வி: தமிழ் மக்களுக்கு இது தீர்வாக அமையுமா?
பதில்: சகல இன மக்களுக்கும் சிறந்த கல்வி, வளமான வாழ்க்கைக்கு வழிவகை செய்வதே எமது கட்சியின் இலக்கு. இதனால் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.
கேள்வி: மாகாணசபையிலிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்கள் மீண்டும் அவற்றக்கு வழங்கப்படுமா?
பதில்: ஆம். மாகாண சபை முழுமையாக செயற்படுவதற்கு அரசாங்கம் வழிவகை செய்யும்.
கேள்வி: பொலிஸ் அதிகாரம், காணியுரிமை தொடர்பிலான அதிகாரங்கள் மாகாணசபைக்கு வழங்கப்படவேண்டுமென சிலர் வலியுறுத்துகின்றனர். இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
பதில்: இந்த விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றம் கூடித் தீர்மானிக்கும்.
ஏ.கே.எம். பிள்ளை… நன்றி தினகரன்
No comments:
Post a Comment