இலங்கைச் செய்திகள்

 சுற்றுலா பயணிகள் விரும்பும் தீவு நாடுகளில் இலங்கைக்கு முதலாமிடம்

வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் நிரபராதி என விடுதலை

கடவுச்சீட்டு பெறுவதற்கான Online ஊடான முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்

பொருளாதார ஒத்துழைப்பை விருத்தி செய்யும் புதிய வழிகள் அறிமுகம்



சுற்றுலா பயணிகள் விரும்பும் தீவு நாடுகளில் இலங்கைக்கு முதலாமிடம்

- 3 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளின் வாக்குகளால் தங்க விருது

November 8, 2024 10:34 am 

லண்டனில் நடைபெற்ற Wanderlust Reader Travel Awards 2024 இல் உலக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் விரும்பத்தக்க தீவு நாடாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Wanderlust Reader Travel விருதுகளில் இலங்கையானது மிகவும் விரும்பத்தக்க தீவுக்கான தங்க விருதை வென்றுள்ளது.

இந்தப் பட்டியலில் இலங்கையானது கடந்த வருடம் எட்டாவது இடத்திலிருந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

3 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளால் வாக்களிக்கப்பட்ட இந்த விருது, இலங்கையின் வசீகரிக்கும் நிலப்பரப்புகளையும், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை தொடர்ந்து வசீகரிக்கும் வளமான வரலாற்றையும் கொண்டுள்ளது.

மேலும், அவுஸ்திரேலியா மிகவும் விரும்பத்தக்க நாடாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் டோக்கியோ மிகவும் விரும்பத்தக்க நகரம் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 




வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் நிரபராதி என விடுதலை

- போதிய ஆதாரங்கள் இல்லை என சட்டமாஅதிபர் அறிவிப்பு

November 6, 2024 12:14 pm 

– முறைப்பாடு செய்த சுமார் 130 தாய்மார்களுக்கு மீண்டும் குழந்தை
சிசேரியன் பிரசவத்தின் போது தாய்மார்களை மீண்டும் பிரசவிக்க முடியாத வகையில் மலட்டுத் தன்மை ஆக்கியதாக, ஒரு சில தரப்பினரால் குற்றஞ்சாட்டப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபி நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுளளார்.

குருணாகல் நீதவான் நீதிமன்றம் இன்று (06) இவ்வுத்தரவை வழங்கியுள்ளது.

அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லையென சட்ட மாஅதிபர் திணைக்களம் அறிவித்ததை அடுத்து 5 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்று வந்த வழக்கின் தீர்ப்பில் அவரை நிரபராதி என விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   நன்றி தினகரன் 






கடவுச்சீட்டு பெறுவதற்கான Online ஊடான முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்

- குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வழங்கிய அறிவுறுத்தல்கள்

November 6, 2024 12:08 pm 

கடவுச்சீட்டு வரிசைக்கு தீர்வாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ள Online இல் திகதி மற்றும் நேரத்தை பதிவு செய்யும் முறைமையை இன்று (06) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வழங்கிய அறிவுறுத்தல்கள் பின்வருமாறு;

1. அதற்கமைய, இன்று (06) முதல் இலங்கை கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு Online இணைப்பினூடாக முன்கூட்டிய பதிவொன்றை மேற்கொள்ளல் வேண்டும்.

2. எனவே, 2024.12.03ஆம் திகதி செய்வாய்கிழமை வரை இதுவரையில் காணப்பட்ட முறைக்கு அமைய நாட்களைப் பெற்றுக்கொண்டுள்ள ஒழுங்குமுறைக்கு அமைய கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

3. புதிய கடவுச்சீட்டு விண்ணப்பதாரிகள்/ தற்போது கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்கள்/ காணாமல்போன கடவுச்சீட்டுக்கள் என்பவற்றுக்கு இந்தப் புதிய முறையின் ஊடாக பதிவுசெய்ய முடியும்.

4. முன்கூட்டிய பதிவுமுறை ஒருநாள் மற்றும் சாதாரண சேவை என்ற இரண்டு வகைக்கும் செல்லுபடியாகும்.

5. பதிவுசெய்வதற்காக விண்ணப்பதாரியின் செல்லுபடியான தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் செல்லுபடியான தொலைபேசி இலக்கம் என்பன அவசியமாகும். கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது அந்த தேசிய அடையாள அட்டை இலக்கம் விண்ணப்பதாரியின் வசம் இருத்தல் வேண்டும்.

6. 16 வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கு கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்கு பதிவுசெய்யும் போது தாயின் அல்லது தந்தையின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிடுதல் வேண்டும்.

7. மேலுள்ள தகவல்கபை பூரணப்படுத்தும் தாங்கள் ஏற்புடை அங்கீகரிக்கப்பட்ட புகைப்படசாலை ஒன்றிலிருந்து பெற்றுக்கொண்ட புகைப்பட ரசீதுடன் www.immigration.gov.lk இணையத்தளத்தில் பிரவேசித்து “கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு பதிவுசெய்தல்” எனும் ஐகன் ஊடாக உள்நுழைந்து ஒருநாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் பதிவுசெய்ய முடியும்.

8. தங்களது பதிவு வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்படுமிடத்து விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்காக தங்களுக்கு நாளொன்று SMS குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்படும். ஏற்புடைய SMS குறுஞ்செய்திக்கு அமைய தாங்கள் தெரிவுசெய்த இடத்திற்கு (பிரதான அலுவலகம், மாத்தறை, கண்டி, குருணாகல் மற்றும் வவுனியா) ஒதுக்கப்பட்டுள்ள நாளில் விண்ணப்பம் மற்றும் ஏற்புடைய அனைத்து ஆவணங்களின் மூலப் பிரதிகள் சகிதம் மு.ப. 12.00 மணிக்கு முன்னர் கட்டாயம் சமூகமளித்தல் வேண்டும். அன்றைய தினம் சமூகமளிக்கத் தவறும் பட்சத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சந்தர்ப்பம் இழக்கப்படுவதோடு, வேறு நாளொன்றுக்கு மீண்டும் பதிவுசெய்தல் வேண்டும்.

9. நாளொன்றையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொள்ளாமல் திணைக்களத்திற்கு வருகைத்தருவதன் மூலம் தங்களுக்கு கடவுச்சீட்டு ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியாது

நன்றி தினகரன் 





பொருளாதார ஒத்துழைப்பை விருத்தி செய்யும் புதிய வழிகள் அறிமுகம்

November 8, 2024 4:36 pm 

பிரதமரின் செயலாளர் பிரதீப் ஹபுதன்த்ரி மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்ட்ரு பட்றிக் (Andrew Patrick) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (07) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைத்தல், ஊழல் எதிர்ப்பு மசோதாவை நடைமுறைப்படுத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல் ஆகிய செயற்பாடுகளினூடாக பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு இலங்கை அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பாராட்டு தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துமுகமாக விவசாயத் துறையை மேம்படுத்துதல் மற்றும் கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளின் அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்துவதுடன் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவாதற்கு புதிய அரசாங்கம் தம்மை அர்ப்பணித்துள்ளதாக பிரதமரின் செயலாளர் பிரதீப் ஹபுதன்த்ரி இங்கு குறிப்பிட்டார்.

பொருளாதார ஒத்துழைப்பை விருத்தி செய்யுமுகமாக புதிய வழிகளை அறிமுகம் செய்தல் மற்றும் சுற்றுலா வர்த்தகத்தை மேம்படுத்துவதன் மூலம் இருநாடுகளுக்கிடையிலான இருதரப்பு தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இச்சந்திப்பில் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் முதலாம் செயலாளர் (அரசியல்) டொம் சோப்பர் (Tom Soper), FCDO சிரேஷ்ட ஆட்சி ஆலோசகர் பென் பவிஸ் (Ben Powis ) ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.   நன்றி தினகரன் 




No comments: