தேசிய மக்கள் சக்தியும் பாராளுமன்றத் தேர்தலும்

 November 8, 2024

னாதிபதி அநுர குமார திஸநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அடுத்த வாரத்தைய பாராளுமன்றத் தேர்தலில் கைப்பற்றக்கூடிய ஆசனங்களின் எண்ணக்கை தொடர்பில் பல்வேறு கணிப்பீடுகளை அரசியல்வாதிகளும் அவதானிகளும் வெளியிடுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வாக்களித்த பாங்கை அடிப்படையாகக் கொண்டு கணிப்பீட்டைச் செய்பவர்கள் தேசிய மக்கள் சக்திக்கு பாராளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை (113 ஆசனங்கள்) கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள்.

அந்தத் தேர்தலில் திஸநாயக்கவுக்குக் கிடைத்த 56 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மை சமூகங்கள் அளித்த வாக்குகளும் அடங்குகின்றன. அதே வாக்குகள் பாராளுமன்றத் தேர்தலில் இரு மாகாணங்களிலும் உள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களுக்குக் கிடைக்குமா அல்லது ஜனாதிபதியாக திஸ நாயக்க பதவிக்கு வந்த பின்னர் சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படும் மனமாற்றம் காரணமாக மேலும் கூடுதல் வாக்குகள் கிடைக்குமா என்பது ஒரு முக்கியமான கேள்வி. திஸநாயக்கவின் ஒன்றரை மாதகால ஆட்சியில் குறைபாடுகளை கண்டுபிடித்து விமர்சனங்களைச் செய்யும் எதிரணிக் கட்சிகள் நாடு எதிர்நோக்குகின்ற சவால்களை செயல்திறனுடன் கையாண்டு நீண்ட நாட்களுக்கு ஆட்சிசெய்யக்கூடிய ஆற்றலும் அனுபவமும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களுக்குக் கிடையாது என்ற எதிர்மறையான செய்தியையே பாராளுமன்றத் தேர்தல் பிரசாரங்களில் மக்கள் முன்கொண்டு செல்கின்றன.

அது விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும் வௌ;வேறு முகாம்களில் இருந்தாலும் ஒற்றுமையாகவே நடந்து கொள்கிறார்கள். ஜனாதிபதித் தேர்தலின்போது தேசிய மக்கள் சக்திக்கு மக்களிடம் இருந்த ஆதரவில் ஒரு குறைவுக்கான அறிகுறி தெரிவது போன்ற ஓர் எண்ணத்தையும் உருவாக்க அந்த இரு தலைவர்களும் முயற்சிக்கிறார்கள். ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியையே அடுத்துவரும் பாராளுமன்றத் தேர்தலிலும் ஆதரித்து ஆட்சிக்குக் கொண்டுவரும் வழக்கத்தில் இருந்து இந்தத் தடவை மக்கள் விலகுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஜனாதிபதி திஸநாயக்க தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு வசதியாக அவரின் கட்சி அரசாங்கத்தை அமைக்கக்கூடியதாக பெரும்பான்மையான மக்கள் ஆதரவளிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

ஆனால், புதிய அரசமைப்பை கொண்டுவரப்போவதாக ஜனாதிபதித் தேர்தலில் வாக்குறுதி அளித்த தேசிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் தங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை தருமாறு தற்போதைய தேர்தல் பிரசாரங்களில் மக்களிடம் ஆணை கேட்பதை பெரும்பாலும் தவிர்க்கிறது. தங்களுக்கு ஆறில் ஐந்து பெரும்பான்மையோ மூன்றில் இரண்டு பெரும்பான்மையோ தேவையில்லை. சட்டங்களையும் பட்ஜெட்களையும் நிறைவேற்றுவதற்கு உறுதியான ஒரு பெரும்பான்மை பலம் கிடைத்தால் போதும் என்று அதன் தலைவர்கள் கூறுகிறார்கள். அதேவேளை, ஜனதாவி முக்தி பெரமுன (ஜே. வி. பி.)வின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தேசிய மக்கள் சக்தி தேசிய அரசாங்கத்தையோ அல்லது கூட்டரசாங்கத்தையோ அமைக்கப்போவதில்லை என்று கூறுகிறார்.

பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்திக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைக்காமல் போகும் பட்சத்தில் இந்த நிலைப்பாட்டில் எவ்வாறு அவர்களால் உறுதியாக நிற்க முடியும்? மறுபுறத்தில் ஜனாதிபதியும் அமைச்சர் விஜித ஹேரத்தும் பாராளுமன்றத்தை தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களால் நிரப்புமாறும் எதிர்க் கட்சியே தேவையில்லை என்றும் கூறினார்கள். அவர்கள் மத்தியில் ஏதோ ஒரு குழப்பநிலை தெரிகிறது.   நன்றி ஈழநாடு 

No comments: