உலகச் செய்திகள்

அமெரிக்காவுடன் பேச தயார்: – ரஷ்யா அறிவிப்பு

அமெரிக்க தேர்தலில் ஆறு இந்திய வம்சாவளியினர் வெற்றி

ட்ரம்புடன் பேசிய பின் லெபனானில்; இஸ்ரேலின் தாக்குதல்கள் உக்கிரம்

தேர்தல் முடிவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்

அவுஸ்திரேலியா தலைமையிலான 15 நாடுகள் சீனாவின் ‘சர்வதேச குற்றங்கள்’ தொடர்பில் கண்டனம்


அமெரிக்காவுடன் பேச தயார்: – ரஷ்யா அறிவிப்பு 

November 8, 2024 9:00 am 

ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவைப் பலப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைக் கதவுகள் திறந்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளதையடுத்து ரஷ்ய அரசின் பேச்சாளர் திமித்ரி பெஸ்கோவ் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வரை அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு வரலாறு காணாத அளவுக்கு மோசமானதாகவே உள்ளது. இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து மேற்கண்டவாறு ​தெரிவித்துள்ள ரஷ்ய அரச பேச்சாளர், ‘அமெரிக்காவுடனான உறவு மிகுந்த தொய்வு நிலையில் இருந்தாலும் அதனுடன் சுமுக உறவை மேற்கொள்வதற்கான பேச்சுவார்தையை நடத்த ரஷ்யா தயாராகவே உள்ளது.

ஆனால், அதற்கு முன்பாக அனைத்தையும் கவனமாக கண்காணித்து ஆராய்வோம். ஜனவரியில் ட்ரம்ப் ஜனாதிபதியாக வெள்ளை மாளிகைக்கு திரும்பும்போது என்ன நிகழ்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’ என்றுள்ளார்.   நன்றி தினகரன் 





அமெரிக்க தேர்தலில் ஆறு இந்திய வம்சாவளியினர் வெற்றி 

November 8, 2024 8:30 am

அமெரிக்காவின் மக்கள் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் ஆறு இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டவர்களாவர்.

இந்திய வம்சாவளி வழக்கறிஞர் சுஹாஸ் சுப்ரமணியம் வர்ஜீனியா, கிழக்குக் கடற்கரையில் இருந்து மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிட்ட இவர், குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக் கிளான்சியை தோற்கடித்துள்ளார். அப்பகுதியிலிருந்து பிரதிநிதிகள் சபைக்கு தேர்தெடுக்கப்படும் முதல் இந்திய வம்சாவளி இவராவார். இவரது பெற்றோர் பெங்களூருவைப் பூர்விகமாகக் கொண்டவர்களாவர்.

மேலும் மக்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களாக பதவி வகித்து வரும் இந்திய வம்சாவளியினர்களான ஸ்ரீ தானேதர், ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா, பிரமிளா ஜெயபால், அமி பேரா ஆகியோர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். ஸ்ரீ தானேதர் கர்நாடக மாநிலம் பெலகத்தைப் பூர்விகமாகக் கொண்டவர். இவர் மிக்சிகன் மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு, 39,385 வாக்கு வித்தியாசத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் மார்டெல் பிவிங்க்ஸை தோற்கடித்துள்ளார். புதுடில்லியில் பிறந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி, இல்லினாய்ஸ் மாகாணத்தில் போட்டியிட்டு, 1.27 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் மார்க் ரைஸை தோற்கடித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாகக் கொண்ட ரோ கண்ணா கலிபோர்னியா-17 தொகுதியிலும், சென்னையில் மலையாளி குடும்பத்தில் பிறந்தவரான பிரமிளா ஜெயபால், வாஷிங்டன் -17 தொகுதியிலும், குஜராத்தைப் பூர்விகமாகக் கொண்ட அமி பெரா, கலிபோர்னியா 6- தொகுதியிலும் குடியரசுக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து வெற்றி பெற்றுள்ளனர்.   நன்றி தினகரன் 




ட்ரம்புடன் பேசிய பின் லெபனானில்; இஸ்ரேலின் தாக்குதல்கள் உக்கிரம் 

வடக்கு காசாவில் படை நடவடிக்கை அதிகரிப்பு

November 8, 2024 8:00 am 

‘ஈரானின் அச்சுறுத்தல்’ தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகி இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறகர் மீது நேற்று (07) கடும் தாக்குதல்களை நடத்தியது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய டொனால்ட் ட்ரம்புக்கு முதல் உலகத் தலைவர்களில் ஒருவராக வாழ்த்துத் தெரிவித்த நெதன்யாகு, அவர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாகி இருப்பது ‘வரலாற்றில் மிகப் பெரிய மீள் வருகை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த புதனன்று (06) இருவரும் தொலைபேசியில் உரையாடியபோது, ‘இஸ்ரேலின் பாதுகாப்புக்காக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இணக்கம் எட்டப்பட்டது’ என்றும் ஈரானின் அச்சுறுத்தல் பற்றி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உரையாடல் இடம்பெற்ற குறுகிய காலத்தில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் கோட்டையாக கருதப்படும் தெற்கு பெய்ரூட் மீது இஸ்ரேல் இராணுவம் சரமாரி தாக்குதலை ஆரம்பித்தது. மக்கள் செறிந்து வாழும் புறநகர் பகுதிக்கு மேலால் தீப்பிழம்புகள் மற்றும் கரும்புகை எழுவது ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் வெளியிட்ட படங்கள் காண்பிக்கின்றன.

இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக வெளியேற்ற உத்தரவை பிறப்பித்திருந்த இஸ்ரேல் இராணுவம் பெய்ரூட் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகாமை உட்பட நான்கு பகுதிகளில் இருந்து மக்களை வெளியேறும்படி கூறியது.

லெபனானின் கிழக்கே கடந்த புதன்கிழமை இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் 40 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது. இடிபாடுகளில் உயிர்தப்பியவர்களை மீட்பாளர்கள் தேடி வருவதாகவும் அது கூறியது.

‘பெகா பள்ளத்தாக்கு மற்றும் பால்பெக்கில் இஸ்ரேலிய எதிரிகளின் தீவிர தாக்குதல்களைத் தொடர்ந்து 40 பேர் கொல்லப்பட்டு மேலும் 35 பேர் காயமடைந்துள்ளனர்’ என்று அந்த அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் முடிவு போரில் எந்தத் தாக்குத்தையும் ஏற்படுத்தாது என்று ஹிஸ்புல்ல உறுதி அளித்துள்ளது. கடந்த செப்டெம்பர் தொடக்கம் காசாவில் இருந்து தனது லெபனானுடனான வடக்கு எல்லையிலும் இஸ்ரேல் தனது போர் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டிரம்பின் வெற்றிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டு அவரின் வெற்றியின் பின்னர் ஒளிபரப்பப்பட்ட உரையில் ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவர் நயீம் காசிம் கூறியதாவது, ‘போருக்குத் தயாராக எம்மிடம் ஆயிரக்கணக்காக பயிற்சி பெற்ற எதிர்ப்புப் போராளிகள் உள்ளனர். எது இதனை தடுக்க முடியும்… போர் என்பது போர்க்களத்திலேயே உள்ளது’ என்றார்.

இப்போதில் இருந்து இஸ்ரேல் மீதான நடவடிக்கைள் ‘வரம்பற்றதாக’ இருக்கும் என்று கடந்த வாரம் ஹிஸ்புல்லா தலைவராக நியமிக்கப்பட்ட காசிம் எச்சரித்தார்.

தம்மிடம் ஈரான் தயாரிப்பு பத்தாஹ் 110 ரக ஏவுகணைகள் இருப்பதாக ஹிஸ்புல்லா கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தது. 300 கிலோமீற்றர் வரை தாக்கும் இந்த ஏவுகணைகள் ‘அந்த அமைப்பிடம் இருக்கும் அதிக துல்லியமான ஆயுதம்’ என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேலின் ஹைபா நகர் மற்றும் டெல் அவிவுக்கு அருகில் உள்ள இரு இடங்கள் என கடற்படைத் தளங்கள் உட்பட இஸ்ரேல் மீது கணிசமான தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு கடந்த புதனன்று கூறியது.

இதனிடையே மேம்பட்ட 15 அமெரிக்க தயாரிப்பு எப்-15 விமானங்களை வாங்குவதற்கு இஸ்ரேல் 5.2 பில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துடனேயே அது ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான நிதி அமெரிக்க உதவி நிதிகள் மூலமே வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வடக்கு காசாவில் கடந்த ஒரு மாதமாக படை நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் இஸ்ரேல் அதனை விரிவுபடுத்தும் அறிவிப்பை நேற்று வெளியிட்டது. காசா போரின் ஆரம்ப நாட்களில் கடுமையான தாக்குதல்களை நடத்திய பெயித் லஹியா பகுதிக்கே படை நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

வடக்கு காசாவில் இஸ்ரேல் தனது முற்றுகையை தொடர்வதோடு அங்குள்ள குடியிருப்பாளர்கள் மீண்டும் தமது வீடுகளுக்கு திரும்புவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று இஸ்ரேலிய இராணுவத்தை மேற்கோள்காட்டி இஸ்ரேலிய ஒலிபரப்பு அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

பெயித் லஹியா, ஜபலியா உட்பட வடக்கு காசா நகரங்கள் மீது இஸ்ரேல்; இராணுவம் வான், தரை வழியாக தாக்குதல்களை நடத்தி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக முற்றுகையில் ஈடுபட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பு மீண்டும் ஒருங்கிணைவதை தடுப்பதற்கு இந்த நடவடிக்கை எடுப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.

எனினும் வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஒரு மாதத்திற்குள் 1,300 பேர் வரை கொல்லப்பட்டு 100,000 பேர் வரை வெளியேறி இருப்பதாக காசா சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வடக்கு காசாவில் தொடர்ந்தும் 95,000 பேர் வரையே எஞ்சி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றுக் காலை தொடக்கம் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 22 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் வடக்கு காசாவில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கே ரபா நகர் மீது இடம்பெற்ற தாக்குதல்களில் மேலும் பலர் பலியாகியுள்ளனர்.

ரபா நகரின் கிழக்காக அல் ஜெனின் பகுதியில் இஸ்ரேலின் ஆளில்லா விமானத் தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா கூறியது.

காசாவில் ஓர் ஆண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 43,400ஐ தாண்டி இருப்பதோடு ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





தேர்தல் முடிவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்

- ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி

November 7, 2024 10:50 am 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை நாம் ஏற்க வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X பதிவில், “இந்த தேர்தல் முடிவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்புடன் பேசினேன். அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன். அமைதியான முறையில் அதிகார மாற்றம் நிகழ்வதற்கு அவருக்கும் அவரது அணிக்கும் உதவுவோம் என்று கூறினேன்.

நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை, நம் நாட்டின் மீது வைத்துள்ள அன்பு, உறுதி ஆகியவற்றை எண்ணி இன்று என் இதயம் நிரம்பியுள்ளது. இந்தத் தேர்தலின் முடிவு நாம் விரும்பியதோ அல்லது நாம் போராடியதோ அல்ல. ஆனால் நான் சொல்வதைக் கேளுங்கள்: அமெரிக்காவின் வாக்குறுதியின் ஒளி எப்போதும் பிரகாசமாக எரியும்.

ஒரு பழமொழி உண்டு: இருட்டாக இருந்தால் மட்டுமே நட்சத்திரங்களைப் பார்க்க முடியும். நாம் ஒரு இருண்ட காலத்திற்குள் நுழைவது போல் பலர் உணர்கிறார்கள் என்பதை நான் அறிவேன். ஆனால், நம் அனைவரின் நலனுக்காக, அப்படி இல்லை என்று நம்புகிறேன். ஆனால், அப்படித்தான் என்றால், கோடிக்கணக்கான புத்திசாலித்தனமான நட்சத்திரங்களின் ஒளியால் வானத்தை நிரப்புவோம்.

நேர்மறை எண்ணம், நம்பிக்கை, உண்மை மற்றும் சேவையின் ஒளி பின்னடைவுகளைச் சந்தித்தாலும், அமெரிக்காவின் அசாதாரண வாக்குறுதி நம்மை வழிநடத்தட்டும். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும், மேலும் கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிக்கட்டும். உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

நன்றி தினகரன் 






அவுஸ்திரேலியா தலைமையிலான 15 நாடுகள் சீனாவின் ‘சர்வதேச குற்றங்கள்’ தொடர்பில் கண்டனம்

November 8, 2024 3:48 pm 

சிறுபான்மையினருக்கு எதிரான “சர்வதேச குற்றங்கள்” தொடர்பில் அவுஸ்திரேலியா தலைமையிலான 15 நாடுகளின் கூட்டணி, சீனாவைக் கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளன. குறிப்பாக உய்குர் மற்றும் திபெத்தியர்களை நடத்துவதை இலக்காகக் கொண்டதாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையானது பீஜிங்கால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசியல் அடக்குமுறைகளுக்கு தீர்வு காண வளர்ந்து வரும் சர்வதேச உந்துதலைப் பிரதிபலிக்கிறது.

மனித உரிமைகள் தொடர்பான ஐநா பொதுச் சபைக் கூட்டத்தின் போது இந்த அறிக்கை வாசிக்கப்பட்டதோடு இது அவுஸ்திரேலியா மற்றும் கூட்டணியில் உள்ள பிற நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சியாகும்.

மேற்கத்திய மற்றும் ஜனநாயக நாடுகளின் இந்த கூட்டணி, உய்குர்கள், கசாக், திபெத்தியர்கள் மற்றும் பிற இன சிறுபான்மையினர் மீது சீன அரசாங்கம் திட்டமிட்ட அடக்குமுறையை வெகுஜன தடுப்புகள், கட்டாய உழைப்பு, கண்காணிப்பு மற்றும் கட்டாய கலாச்சார ஒருங்கிணைப்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது.

இந்தக் கூட்டணியின் தலைவராகச் செயல்படும் அவுஸ்திரேலியா, இந்தக் கண்டனத்திற்கு உலகளாவிய ஆதரவைத் திரட்டுவதில் குறிப்பாக உறுதியான நிலைப்பாட்டை எடுத்தது.

அந்த அறிக்கை சீன அரசாங்கத்தின் நடவடிக்கைகளை “சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களின் கடுமையான மீறல்கள்” என்று வெளிப்படையாகக் கூறியுள்ளதோடு பீஜிங்கிலிருந்து அதிக பொறுப்புக்கூறலுக்கு அழுத்தம் கொடுத்தது.

ஐக்கிய நாடுகள் சபைக்கான ஆஸ்திரேலியாவின் தூதர் ஜேம்ஸ் லார்சன், சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு (CCP) உறுதியான வேண்டுகோள் விடுத்துள்ளார்.சின்ஜியாங் மற்றும் திபெத் பகுதிகளில் மனித உரிமைகளை மதிக்க வலியுறுத்தினார்.

கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, ஜப்பான், லிதுவேனியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, ஸ்வீடன், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 15 நாடுகளின் கூட்டணியின் சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கை , உய்குர் மற்றும் பிற பெரும்பான்மையான முஸ்லிம் சிறுபான்மையினரை காவலில் வைப்பது “சர்வதேச குற்றங்கள், குறிப்பாக மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்” என்று குறிப்பிடுகிறது.

தன்னிச்சையான தடுப்புக்காவல் தொடர்பான ஐ.நா செயற்குழுவின் கண்டுபிடிப்புகளை அந்த அறிக்கை குறிப்பிட்டது. இது சின்ஜியாங்கில் சட்டவிரோதமாக தடுப்புக்காவல் மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் போனோர் தொடர்பான பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இது தவிர விசேட அறிக்கையாளர்கள் என அழைக்கப்படும் 20 க்கும் மேற்பட்ட சுயாதீன நிபுணர்கள், பிராந்தியத்தில் முறையான மனித உரிமை மீறல்கள் என்று இதனை விவரித்துள்ளதோடு தீவிர கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

இனத்தின் அடிப்படையில் விரிவான கண்காணிப்பு, கலாச்சார மற்றும் மத நடைமுறைகள் மீதான கடுமையான கட்டுப்பாடுகள், சித்திரவதை நிகழ்வுகள், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் கட்டாய கருக்கலைப்பு மற்றும் கருத்தடை செய்தல் ஆகியவற்றையும் இந்த அறிக்கை கோடிட்டுக் காட்டுகின்றது.

பிராந்தியத்தில் மொழியியல், கலாச்சாரம், கல்வி மற்றும் மத உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் அழிக்கப்பட்டதையும் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.இந்த சிக்கல்களைத் தீர்க்க பல வாய்ப்புகள் இருந்தபோதிலும், பீஜிங் இந்த அறிக்கை வெளியிட்டுள்ள விடயங்களை நிராகரித்தது.

குற்றச்சாட்டுகளை சீனா கடுமையாக நிராகரித்திருக்கும் அதேவேளை அறிக்கை “தன் உள் விவகாரங்களில் தலையீடு” என்று கூறியது.ஐ.நா.வில் பீஜிங்கின் பிரதிநிதி ஜாங் ஜுன், இந்த கூற்றுக்களை “விரோத மேற்கத்திய சக்திகளால் இட்டுக்கட்டப்பட்ட அப்பட்டமான பொய்கள்” என்று முத்திரை குத்தினார்.

சீன அரசாங்கம் சின்ஜியாங்கில் உள்ள அதன் கொள்கைகள் தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என்றும் மறு கல்வி முகாம்கள் சிறுபான்மையினருக்கான பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கிலான தொழிற்பயிற்சி மையங்கள் என்றும் கூறுகிறது.

கட்டாய உழைப்பு மற்றும் கலாச்சார அழிப்பு பற்றிய குற்றச்சாட்டுகளை சீனா பலமுறை மறுத்துள்ளது.கூட்டணி தவறான தகவல்களை பரப்புவதாகவும், புவிசார் அரசியல் ஆதாயத்திற்காக மனித உரிமைகள் பிரச்சினைகளை ஆயுதமாக்குவதாகவும் குற்றம் சாட்டி வருகிறது.

“சீனா தானாக முன்வந்து ஒப்புக்கொண்ட சர்வதேச மனித உரிமைக் கடமைகளை நிலைநிறுத்தவும், அனைத்து ஐ.நா பரிந்துரைகளையும் முழுமையாக செயல்படுத்தவும் சீனாவை வலியுறுத்துகிறோம்” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த கவலைகளை நிவர்த்தி செய்வதற்கு வெளிப்படைத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை இன்றியமையாதது என்று கூட்டமைப்பு வலியுறுத்தியது . ஐ.நா பிரதிநிதி உட்பட சுதந்திரமான பார்வையாளர்களை வழங்க சீனாவை இது வலியுறுத்தியது    நன்றி தினகரன் 















No comments: