மீண்டும் வெள்ளை மாளிகைக்கு டொனால்ட் ட்ரம்ப்

 November 9, 2024

நான்கு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை தோற்கடித்து பெருவெற்றி பெற்றிருக்கிறார்.

அடுத்த வருடம் ஜனவரி 20ஆம் திகதி அவர் தனது 78ஆவது வயதில் அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக பதவியேற்று மீண்டும் வெள்ளை மாளிகைவாசியாகப் போகிறார். மிகவும் முதிர்ந்த வயதில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது ஆளாக விளங்கும் ட்ரம்ப் 20 வருடங்களுக்கு பிறகு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரை விடவும் கூடுதலான மக்கள் வாக்குகளை பெற்ற குடியரசுக் கட்சியின் வேட்பாளர் என்ற பெருமையையும் தனதாக்கிக் கொண்டுள்ளார். முதல் பதவிக் காலத்துக்கு பிறகு தொடர்ச்சியாக அடுத்த பதவிக் காலத்துக்கு ஜனாதிபதியாக இல்லாமல் நான்கு வருட இடைவெளிக்கு பிறகு ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கிறார்.

அமெரிக்க அரசியல் வரலாற்றில் 132 வருடங்களுக்கு பிறகு இவ்வாறு நடைபெற்றிருக்கிறது. அமெரிக்க காங்கிரஸால் இரு தடவைகள் அரசியல் குற்றச்சாட்டுக்கு ((Impeachment) உள்ளாக்கப்பட்ட பிறகு இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கும் முதல் நபரும் ட்ரம்ப்தான். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரரை தனிப்பட்ட முறையில் ட்ரம்ப் படுமோசமாக அவதூறு செய்தார். பெண்கள் மீதான வெறுப்பை தூண்டிவிடும் பிரசாரங்களை அவர் மேற்கொண்டார். அமெரிக்காவில் வாழும் சிறுபானமை சமூகங்களுக்கும் குடியேற்றவாசிகள் சமூகங்களுக்கும் எதிராக இன, நிறவெறிப் பிரசாரங்களை தீவிரமாக மேற்கொண்டார்.

கடந்த தடவை ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்த அவர், தன்னை தோற்கடித்த ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய ஜனாதிபதி பதவியேற்பதற்கு முன்னதாக வாஷிங்டனில் அமெரிக்க காங்கிரஸ் கட்டடத் தொகுதிக்குள் தனது ஆதரவாளர்களை ஏவிவிட்டு கலகம் விளைவித்தவர் என்ற அவப்பெயரும் ட்ரம்புக்கு உண்டு. படுமோசமான குற்றச்செயல்கள் தொடர்பில் அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்த நிலையிலேயே அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார். ட்ரம்பிடம் காணப்படும் இவ்வளவு எதிர்மறையான குணாதிசயங்களில் – நடத்தைகளில் எந்த ஒன்றுமே அவரை மீண்டும் தங்களின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யக்கூடாது என்று பெரும்பான்மையான அமெரிக்கர்களை தடுக்கவில்லை என்பதே முக்கியமாகக் கவனிக்க வேண்டியதாகும்.

கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றிருந்தால் அமெரிக்க ஜனாதிபதியாகும் முதல் பெண் என்ற பெருமையை மாத்திரமல்ல முதலாவது இந்திய – அமெரிக்க கறுப்பின பெண்மணியாகவும் வரலாற்றில் இடம்பெற்றிருப்பார். அதற்கான வாய்ப்பு அவரிடம் இருந்து நழுவிவிட்டது. பைடன் போட்டியில் இருந்து இடைநடுவில் விலகி கமலாவை ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக்கியமை நிறவெறியை வெள்ளையர்கள் மத்தியில் உச்சபட்சத்துக்கு தூண்டி விடுவதற்கு வாய்ப்பாகப் போய்விட்டது.   நன்றி ஈழநாடு 

No comments: