இலங்கைக்கான ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும்
தேர்தல் செப்டம்பர் 21ம் திகதி இடம் பெற நாள் குறிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் 38 பேர் போட்டியிடுவதாக பதிவு செய்யப் பட்ட போதும் மூன்று வேட்பாளர்களே வாக்காளர்களின் கவனத்தை ஈர்ந்துள்ளார்கள். ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க இவர்கள் மூவருமே பிரதான வேட்ர்பாளர்களாகவே அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் வெவேறு அணியை சார்ந்து, மாறுபட்ட கொள்கைகளை முன் வைத்து போட்டியிடுகின்ற போதும் இவர்கள் மூவரிடமும் ஓர் ஒற்றுமை காணப்படுகிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி கண்டவர்கள்
என்பதே இவர்களுக்கு இடையேயான ஒற்றுமை ஆகும். ஏற்கனவே பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்த நாட்டினை மீள கட்டியெழுப்பும் பதவிக்கான தேர்தலிலேயே இந்த மூன்று தோல்வியாளர்களும் மீண்டும் போட்டியிடுகிறார்கள்!
அதே போல் இவர்கள் போட்டியிடுவதற்கு அமைத்திருக்கும் அணியும் மிக விசித்திரமாகவே உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ரணிலும், சஜித்தும் இன்று இரண்டு அணிகளாக பிரிந்து களத்தில் குதித்துள்ளார்கள். ஆக ஐ தே க வின் வாக்குகள் இரு பாதியாக இவர்கள் மத்தியில் பிரிய வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் ஐ தே க வுக்கு போட்டியாக கடந்த தேர்தலில் குதித்த மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன இரண்டு அணிகளாக பிரிந்து ஓர் அணி ரணிலுக்கும், மற்றைய அணி நாமலுக்கும் ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலையில் உள்ளன. பெரமுனாவின் கணிசமான வாக்குகள் அனுரகுமாராவுக்கு போகலாம் என்று அனுமானிக்கவும் இடம் உண்டு. அதே வேளை குறிப்பிட தக்க வாக்குகள் சஜித்துக்கும் விழலாம் என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மூன்றாம் இடத்துக்கு மூன்று சதா வீத வாக்குகளை பெற்ற அனுரகுமார இந்தத் தேர்தலில் பாரியளவில் வாக்குகளை பெறுவார் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் இந்த வாக்குகள் அவருக்கான பாரம்பரிய ஜே வி பி யின் வாக்குகளாக மட்டுமன்றி , பொது ஜன பெமுன கட்சிக்கு சென்ற முறை வாக்களித்து ஏமாந்த பலருடைய வாக்குகளாகவும் அமையும் என்றே கருதப்படுகிறது.
ஆக இந்த தேர்தலில் வேட்பாளர்கள் தங்களுக்குரிய பாரம்பரிய , கட்சி சார்ந்த வாக்குகளை மட்டும் நம்பி இராமல் மாற்று கட்சிகளின் வாக்குகளையும் சுவீகரிக்க அல்லது அபகரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு முன் எந்தத் தேர்தலிலும் இல்லாத நிலையே இந்தத் தேர்தலில் காணப்படுகிறது.
எது எப்படியோ கடந்த ஜனாதிபதி தேர்தலில் நம்பி அறுபத்தொம்பது இலட்சம் வாக்குகளையும் கோத்தபாய ராஜபக்சவுக்கு வாரி வழங்கிய சிங்கள வாக்காளர்கள் இம் முறை அணி மாறி, நிலை மாறி, கட்சி மாறி தங்களால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட ஒரு வேட்பாளருக்கு வாக்களித்து அவரை தங்களின் காப்பாளராக தெரிவு செய்யப் போகிறார்கள்!
ஆனால் இந்தத் தடவை இனவாதத்தை கக்கி பெரும்பான்மை சிங்கள மக்களிடம் வாக்குகளை பெற முயற்சிக்கும் போக்கை மூன்று பிரதான வேட்பாளர்களின் அணியும் கை விட்டுள்ளது போலவே தெரிகிறது. மூன்று அணியினரும் சிறுபான்மை இனத்தவரின் வாக்குகளை நம்பியிருப்பதும் இதற்கொரு காரணமாகலாம். அதற்கு பதில் சஜித்தின் அணியினரும், அனுராவின் அணியினரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பௌத்த மதத்தை அடிப் படையாக கொண்டு தாக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர். ஜே வி பி அணியினரின் தேசிய மக்கள் சக்தி கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாட்டில் பௌத்த மதத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமையை அகற்றப் போவதாக குறிப்பிட்டு பௌத்த துறவிகளின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. இதனை பயன் படுத்தி குளிர் காய நினைக்கும் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி , பௌத்த துறவிகளை ஆயிரக்கணக்கில் திரட்டி , ஜே வி பியினரை பயங்கரவாத , மிலேச்சத்தனமான இயக்கம் என்று திட்டி தீர்த்துள்ளது. யார் பதவிக்கு வந்தாலும் ஐ எம் எப் பிடம் செல்வது தவிர்க்க முடியாதது என்பதால் , பௌத்த மதத்துக்கான முன்னுரிமையை முன் நிறுத்தி மக்கள் கவனத்தை ஈர்க்க சஜித் அணியினர் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment