அவள் ஒரு தொடர்கதை - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்


தமிழ் படங்களில் கதாநாயகி பெரும்பாலும் அப்பாவி குடும்பப் பெண்ணாக , கணவனின் காதலனுக்காக எதையும் செய்யக் கூடியவளாக வருவாள், அல்லது திமிர் பிடித்த பெண்ணாக வருவாள் . இந்த நடைமுறை சம்பிரதாயத்தை மாற்றி எடுக்கப் பட்ட படம்தான் அவள் ஒரு தொடர்கதை. இதில் கதாநாயகி நெருப்பாக சுடுகிறாள். திமிர் பிடித்தவளாக எடுத்தெறிந்து பேசுகிறாள், எல்லாரையும் அலட்சிய படுத்துகிறாள் . ஆனால் அவளிடமும் பெண்மையும், மென்மையும் இருக்கிறது. குடும்பத்துக்காக தன்னையே தியாகம் செய்யும் தன்மையும் இருக்கிறது. தமிழ் திரையுலகிற்கு இவள் ஒரு புது படைப்புதான்.


இந்தப் படம் வெளிவருவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கே எஸ்

கோபாலகிருஷ்ணன் குலவிளக்கு என்று ஒரு படத்தை இயக்கியிருந்தார். அதிலும் கதாநாயகி குடும்பத்துக்காக ஓடாய் உழைத்து துரும்பாய் இளைத்து தன்னையே தியாகம் செய்கிறாள். ஆனால் அவள் பலவீனமானவள். சரோஜாதேவி நடிப்பில் வெளிவந்த அந்தப் படம் வெற்றி பெறவில்லை. ஆனால் அவள் ஒரு தொடர்கதை நாயகி தன்னுடைய ஆளுமையை எந்த இடத்திலும் விட்டு கொடுக்காமல் நடந்து அனுதாபத்தை விட, அங்கீகாரத்தை பெற்று விடுகிறாள்.

படத்தின் கதாநாயகி கவிதாவாக நடிப்பவர் புது முகம் சுஜாதா. புதுமுகம் என்று சொல்ல முடியாவண்ணம் கவிதாவாகவே மாறி விட்டார் எனலாம். காட்சிக்கு காட்சி அவர் காட்டும் முகபாவம், வசனம், சிரிப்பு, கடுமை எல்லாமே அவரின் திறமைக்கு அணிகலன்களாக மாறுகின்றன. இவருக்கு அடுத்த படியாக கவருபவர் படாபட் ஜெயலஷ்மி.

கமல்ஹாசன், விஜயகுமார், ஜெய்கணேஷ் மூவரும் தங்களின் பாத்திரங்களை சமமாக பங்கு போட்டுக் கொண்டு டைரக்டர் போட்ட ரோட்டில் சமத்தாய் நடந்திருக்கிறார்கள். இவர்களோடு ஸ்ரீப்ரியா, லீலாவதி, ரீனா, சோமன் ஆகியோரும் நடித்திருந்தனர். இவ்வளவு பேர் இருந்தும் படதில் காமெடிக்கென்று யாரும் பிரத்தியேகமாக இல்லை. அதுவும் வசதியாகி விட்டது. நகைச்சுவைக்கு என்று யாரும் இல்லாத பாலசந்தரின் முதல் படம் என்றும் இப் படத்தை சொல்லலாம்.


படத்தின் கதை புதுமையானது. இதனை எழுதியவர் எம் எஸ் பெருமாள். அவரின் கதையை படமாக்க தெரிவு செய்யும் போது பெருமாளிடம், " எந்த வகையில் உங்கள் கதை 'அரங்கேற்றம் '
' குலவிளக்கு ' படங்களிலிருந்து வேறுபட்டது ... "
என்று அரங்கண்ணல் கேட்டபோது கே. பாலசந்தரும் பெருமாளின் பதிலுக்காக காத்திருந்தார் .

" இதுவரை வந்த படங்களில் நாயகி தன்னை மெழுகுவர்த்தியாக்கி எரிந்து குடும்பத்தினருக்கு சோறுபோடுவாள் ..
என் கதையின் நாயகி
நெருப்பு ...
சோறும் போடுவாள்
சொல்லியும் காட்டுவாள் .."
என்றார் பெருமாள்.
மறுவிநாடியே கே.பி
" நானே இயக்குகிறேன் " என ஒப்புக்கொண்டார்.
அந்தப் பாத்திரப்படைப்பை அப்படி நேசித்து படமாக்கினார் என்று பெருமாள் என்னிடம் குறிப்பிட்டார் .

கலைமகள் மாத இதழில் வெளிவந்த இக் குறு நாவலை திரைப்

படத்துக்கு ஏற்றாற் போல் நேர்த்தியாக நெய்திருந்தார் பாலசந்தர். பல காட்சிகளில் கவிதா பேசும் வசனங்களில் அவரின் கூர்மை வெளிப்பட்டது. வழமையான நடிகைக்கு வாய்ப்பு கொடுக்காமல் புதுமுகம் சுஜாதாவை கவிதாவாக்கி வெற்றியும் கண்டு விட்டார் அவர்.

அரங்கேற்றம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளிவந்த பாலசந்தரின் இந்தப் படம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் உத்தியோகத்துக்கு செல்லும் இளம் பெண்களுக்கு ஓர் அங்கீகரத்தையும், மரியாதையையும் பெற்று கொடுத்தது என்றால் அது மிகையில்லை!


படத்தின் பாடல்கள் கவிஞர் கண்ணதாசன். தெய்வம் தந்த வீடு, கடவுள் அமைத்து வைத்த மேடை, கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும் பாடல்களில் கதாபாத்திரங்களின் உணர்வுகளை அப்போட்டியே கொண்டு வந்து விட்டார் அவர். எம் எஸ் விஸ்வநாதன் இசை நைஸ்! பி எஸ் லோகநாதன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

தமிழ் சினிமாவில் நீண்ட காலம் கதாசிரியராக, வசனகர்த்தாவாக, தயாரிப்பாளராக இருந்தவரும், திராவிட முன்னேற்ற கழக பிரமுகருமான இராம அரங்கண்ணல் , பெருமாளின் கதையை படித்து ரசித்து விட்டு , அதனை பற்றி பாலசந்தருக்கு சொல்ல , அவள் ஒரு தொடர்கதை அரங்கண்ணல் தயாரிப்பில் உருவானது, வெற்றியும் கண்டது!

No comments: