நாகப்பட்டினம்-இலங்கைக்கிடையிலான கப்பல் சேவை சனிக்கிழமையும் இடம்பெறும்
இஸ்ரேலில் விவசாயத்துறை வேலைவாய்ப்பு 69 இளைஞர்களுக்கு விமான பயணசீட்டுக்கள் கையளிப்பு
தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ திருமஞ்ச திருவிழா
யாழில் பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு “பன்முக நோக்கில் பாரதி” நிகழ்வு
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பாரதியார் நினைவு தினம் அனுஷ்டிப்பு
செல்வராசா கஜேந்திரன் எம்.பி கைதுசெய்யப்பட்டு விடுதலை
7 மாதங்களின் பின் கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை
நாகப்பட்டினம்-இலங்கைக்கிடையிலான கப்பல் சேவை சனிக்கிழமையும் இடம்பெறும்
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்துக்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல், சனிக்கிழமைகளிலும் இடம்பெறவுள்ளதாக “த இந்து” பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
குறைவான முன்பதிவுகள் காரணமாக வாரத்தில் மூன்று நாட்களாக குறைக்கப்பட்டிருந்த இந்த பயணிகள் கப்பல் சேவை, மீண்டும் சனிக்கிழமைகளிலும் இடம்பெறவுள்ளது.
நாகப்பட்டினம்-இலங்கைக்கிடையிலான கப்பல் சேவையானது செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை, செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரம் இயங்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எதிர்வரும் 21 ஆம் திகதி முதல், சனிக்கிழமைகளிலும் பயணிகளுக்கான இந்த கப்பல் சேவை இயங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பயணங்களை மேற்கொள்வோர் படகு சேவை நிறுவனத்தின் www.sailindsri.com, என்ற இணையதளம் அல்லது ‘Sail IndSri’ app on Google Play Store மூலம் பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
இஸ்ரேலில் விவசாயத்துறை வேலைவாய்ப்பு 69 இளைஞர்களுக்கு விமான பயணசீட்டுக்கள் கையளிப்பு
இஸ்ரேலில் விவசாயத்துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுச்செல்லும் 69 பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (09) விமானப் பயணச்சீட்டுகளை வழங்கியது. இவ்வாறு பயணச்சீட்டுகளை பெற்றுக்கொண்டவர்களில் முதற்கட்ட தொகுதி இன்று 12 ஆம் திகதி இஸ்ரேலுக்கு பயணிக்கின்றனர்.
இஸ்ரேலுக்கும், இலங்கை அரசுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இதுவரை 2,252 இளைஞர்கள், இஸ்ரேலில் விவசாயத்துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இவ் ஒப்பந்தத்தின் கீழ், 05 வருடங்கள் 05 மாத காலத்துக்கு அவர்கள் இஸ்ரேலில் பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள். இலங்கை அரசு சார்பாக, இஸ்ரேலிய தொழில்வாய்ப்புகளுக்கு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினூடாக அனுப்பப்படும் பணியாட்கள், இஸ்ரேலிய பீபா நிறுவனத்தின் லொட்டரி முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர். விமான பயணச்சீட்டுக்களைப்பெற்ற இளைஞர்களின் முதற்கட்ட தொகுதி இன்று 12 ஆம் திகதி புறப்படுகிறது. இரண்டாவது தொகுதி எதிர்வரும்18 ஆம் திகதி இஸ்ரேலுக்கு பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ திருமஞ்ச திருவிழா
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ திருமஞ்ச திருவிழா நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றது.
மாலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, வசந்தமண்டப பூஜை இடம்பெற்று உள்வீதியுலா வந்த துர்க்கை அம்மன் மஞ்சத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
மகோற்சவ திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் மறுநாள் தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது. (யாழ். விசேட நிருபர்) - நன்றி தினகரன்
யாழில் பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு “பன்முக நோக்கில் பாரதி” நிகழ்வு
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு லிங்காஸ்வர கீதம் வழங்கிய “பன்முக நோக்கில் பாரதி” எனும் விசேட நிகழ்வு நேற்று (11) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
வடமராட்சி வல்லையில் உள்ள விக்னேஸ்வரா திருமண மண்டபத்தில் லிங்காஸ்வர கீத இயக்குநர் ஷாஜிதா அட்ஜெயலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜாவும், சிறப்பு அதிதிகளாக வர்த்தகர் சண்முகசுந்தரம் பிறேம்குமாரும், பாடலாசிரியர் வெற்றி துஷ்யந்தனும் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகளை இசை, நடனம் ,இலக்கியம் என்னும் பல்கோண பார்வையில் வெளிப்படுத்தும் வகையிலான பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
யாழ் . விசேட நிருபர்
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பாரதியார் நினைவு தினம் அனுஷ்டிப்பு
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் புதன் ஒன்றுகூடலின் போது பாரதியார் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
ஆசிரிய மாணவி க.விஜிதா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மானிப்பாய் ஆசிரிய வாண்மை விருத்தி நிறுவக விரிவுரையாளர் உதயலதா நவதீசன், பாரதியாரின் பல்பரிமாணம் என்ற பொருளில் சிறப்புரையாற்றினார்.
கலாசாலையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கவிஞர் வேல் நந்தகுமார் அதிதி அறிமுகவுரையை ஆற்றினார்.
விசேட கல்வி நெறி ஆசிரிய மாணவி சப்னா, பாரதியாரின் கவிதைத்திறன் என்ற பொருளில் உரைஆற்றினார்.
கலாசாலை பிரதி அதிபர் க.செந்தில்குமரன் நிறைவுரையாற்றினார்.
சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட திருமதி உதயலதா நவதீசன் கலாசாலை சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டார். நன்றி தினகரன்
செல்வராசா கஜேந்திரன் எம்.பி கைதுசெய்யப்பட்டு விடுதலை
தேர்தல் புறக்கணிப்பு பிரசாரம்
ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேர்தலைப் புறக்கணிக்குமாறு வடக்கு – கிழக்கு மாகாண மக்களுக்கு அறிவிக்கும் வகையில், தமிழ்த் தேசிய மக்கள் கூட்டமைப்பு அண்மையில் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது. இவ்வாறு நேற்று (13-) கிளிநொச்சியில் பிரசாரத்தில்
ஈடுபட்டிருந்த செல்வராஜா கஜேந்திரனை பொலிஸார் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நன்றி தினகரன்
7 மாதங்களின் பின் கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை
- CID இனால் பெப்ரவரி 02 கைதானார்
சர்ச்சைக்குரிய தரமற்ற மருந்து தடுப்பூசி (Immune Globulin) கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மாளிகாகந்த நீதிமன்றத்தினால் அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தாம் சுகாதார அமைச்சராக இருந்த காலப் பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட தரமற்ற மருந்து தொடர்பான வழக்கில் கடந்த பெப்ரவரி 02ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல 7 மாதங்களுக்கும் அதிகமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது கடந்த 2023 செப்டெம்பர் மாதம் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்ட போதிலும் அது பாராளுமன்றத்தில தோற்கடிக்கப்பட்டது.
ஆயினும் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அவர் குறித்த அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.
அவர் கைதானதைத் தொடர்ந்து சுற்றாடல் அமைச்சுப் பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி தினகரன்
No comments:
Post a Comment