சுயவிருப்பு – சுயநல அரசியல்!

 September 9, 2024


ஈழத்தமிழர் அரசியல் ஆயுதப் போராட்டமாக நீட்சிகொண்ட காலத்திலிருந்து உள்முரண்பாடுகளும் – குத்து வெட்டுக்களும் ஒட்டிப்பிறந்த குழந்தையாகவே இருந்தது. இறுதியில் ஒருவரை ஒருவர் அழித்தொழிக்கும் உள்மோதலாக விரிவுகொண்டது. இதில் அந்த இயக்கம் – இந்த இயக்கம் என்னும் பாகுபாடுகள் இன்றி ஒருவரையொருவர் கொன்று கொண்ட வரலாறு ஏடுகளில் பதிவாகியிருக்கின்றது. இன்றும் அதன் எச்சசொச்சங்கள் அரசியலை ஆக்கிரமித்துத்தான் இருக்கின்றன.

ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் வெற்றிக்காக ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய சூழலில்கூட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது. இது எதனைக் காண்பிக்கின்றது? இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஒற்றுமைக்கு எதிராக செயல்படுகின்றதா? ஒற்றுமையை சீர்குலைக்கும் ஒரு கோடரி காம்பாக அந்தக் கட்சி மாறிவிட்டதா? இதுவரையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்னும் பெயரில் இயங்கிவரும் சைக்கிள் அணியினர் மட்டும்தான் ஒற்றுமையை சீர்குலைக்கும் கோடரி காம்பாக இருந்தனர். இப்போது அவர்களுடன் தமிழ் அரசுக் கட்சியும் இணைந்திருக்கின்றது. இன்று நிலைமைகள் மோசமடைந்து செல்கின்றன. இந்த நிலைமை தொடர்ந்தால் தமிழ்த் தேசிய அரசியல் என்று ஓர் அடையாளமே இருக்கப்போவதில்லை.

கிழக்கு மாகாணம் தமிழ் மக்களின் பிடியிலிருந்து பறிபோய்க் கொண்டிருக்கின்றது – பெருமளவு பறிபோய்விட்டது. திருகோணமலை – அம்பாறை மாவட்டங்களில் தமிழ் மக்களின் வசம் எதுவுமில்லை என்னும் நிலைமை தெளிவாகவே தெரிகின்றது. கிழக்குத் தமிழர்களின் அரசியல் இருப்பை பலப்படுத்துவதற்கான பிரத்தியேகத் திட்டங்கள் எதுவும் தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகள் என்போரிடம் இல்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் கிழக்கினதும் வடக்கினதும் கூட்டுச்செயலை ஊக்குவிக்கும் நோக்கில் கிழக்கிலிருந்து ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டிருக்கின்றார்.

உண்மையில் கிழக்கு மாகாணத்தில் அனைவரும் ஓரணியாக இருக்கக்கூடிய அரசியல் கட்டமைப்பு ஒன்றே தேவையானது. ஆனால், அதனை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் தமிழ்த் தேசிய அரசியல் தரப்புகள் ஒன்றிணையவில்லை. முக்கியமாக அனைத்து ஒற்றுமை முயற்சிகளையும் முதலில் எதிர்க்கும் அணியாக முன்னணியே முன்னணியில் இருக்கின்றது. இப்போது முன்னணியை விடவும் மோசமானதோர் அரசியல் பெருச்சாளியாக தமிழ் அரசுக் கட்சி மாறியிருக்கின்றது. இதனை அந்தக் கட்சியின் உறுப்பினர்கள், தொண்டர்கள் எவ்வாறு தொடர்ந்தும் அனுமதித்துக் கொண்டிருக்கப் போகின்றனர்? தமிழ் அரசுக் கட்சி வெறும் சுயநலம் பிடித்தவர்களின் – சுயநல திட்டங்களால் சிறைப்பட்டுவிட்டது. இனி அதனை செல்வநாயகம் கூறிய கடவுளாலும் காப்பாற்ற முடியாது.   நன்றி ஈழநாடு 

No comments: