உலகச் செய்திகள்

காசாவில் மற்றொரு பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல்: 18 பேர் பலி

காசா, மேற்குக் கரையில் இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களில் மேலும் பலர் பலி

ரஷ்யா – உக்ரைன் மோதலை தீர்க்க இந்தியா பங்களிக்க முடியும்

பங்களாதேஷில் மீண்டும் ஆர்ப்பாட்டம்

2029 இல் இந்தியாவில் டிஜிட்டல் கொடுப்பனவுகள்481 பில்லியனாக 3 மடங்கு அதிகரிக்கும்

இஸ்ரேலிய விசேட படையினர் சிரியாவில் தரையிறங்கி தாக்குதல்

இந்தியாவுடன் பகைமை மறந்து நட்புக்கரம் நீட்டும் மாலைதீவு!



காசாவில் மற்றொரு பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல்: 18 பேர் பலி

ஐ.நா. பணியாளர்களும் உயிரிழப்பு: ஹமாஸ் புதிய நிபந்தனை

September 13, 2024 6:00 am 

மத்திய காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் மற்றுமொரு பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐ.நா. பணியாளர்கள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் அது ஹமாஸ் கட்டுப்பட்டு மையம் என்று இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 11 மாதங்களுக்கு மேலாக இடம்பெற்று வரும் காசா போரில் ஏற்கனவே பல முறை தாக்குதலுக்கு இலக்கான நுஸைரத்தில் இருக்கும் அல் ஜவுனி பாடசாலை மீதே இஸ்ரேல் நேற்றும் குண்டு வீசியுள்ளது. ஐ.நாவினால் நடத்தப்படும் அந்தப் பாடசாலையில் ஒரு பகுதி இந்தத் தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

‘ஐந்தாவது தடவையாகவும் ஐ.நாவினால் நடத்தப்படும் அல் ஜவுனி பாடசாலை மீது இஸ்ரேலியப் படை குண்டு வீசியதில் பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்தின் பணியாளர்கள், சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர்’ என்று காசா சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் பேச்சாளர் மஹ்மூத் பசால், டெலிகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதில் தமது ஆறு பணியாளர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் பின்னர் தெரிவித்தது. ஒற்றைச் சம்பவம் ஒன்றில் அதிகமான பணியாளர்கள் கொல்லப்பட்ட நிகழ்வாக இது உள்ளது என்று அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

‘கொல்லப்பட்டவர்களில் அந்த முகாமில் ஐ.நா. முகாமையாளர், இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிகளை வழங்கி வந்த உறுப்பினர்கள் அடங்குவர்’ என்று ஐ.நா. நிறுவனம் எக்ஸ் சமூகதளத்தில் தெரிவித்துள்ளது.

‘பாடசாலைகள் மற்றும் மற்ற சிவில் உட்பட்டமைப்புகள் எந்த நேரத்திலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதோடு அவை இலக்கு வைக்கப்படக் கூடாது’ என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

காசா போரினால் அங்குள்ள 2.4 மில்லியன் மக்களில் அதிகப்படியானோர் தொடர்ச்சியாக வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் அங்குள்ள பாடசாலைகள் மக்களுக்கு அடைக்கலம் அளிக்கும் இடங்களாக மாறியுள்ளன.

இஸ்ரேலியப் படை இவ்வாறான பாடசாலைகள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. அங்கு பலஸ்தீன போராளிகள் இயங்கி வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியபோதும் அற்கான எந்த ஆதாரத்தையும் வெளியிடத் தவறியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை ஹமாஸ் மறுத்து வருகிறது.

தாக்குதலில் உயிர் தப்பியவர்கள், கொல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்பது மற்றும் இடிபாடுகளில் புதையுண்ட தமது உடைமைகளை சேகரிப்பதில் ஈடுபட்டனர். ‘இந்த நரகத்தில் நாம் 340 நாட்களைக் கடந்திருக்கிறோம். ஹொலிவுட் திரைப்படங்களில் கூட நாம் இப்படிக் கண்டதில்லை, காசாவில் இப்போது காண்கிறோம்’ என்று உயிர் தப்பிய ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

உணர்வற்ற கொலைகள்

உலகில் மனிதாபிமான பணியாளர்களுக்கான அபாயகரமான இடமாக காசா உள்ளது என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. பாடசாலை மீதான புதிய தாக்குதலை அடுத்து காசா போரில் குறைந்தது 220 ஐ.நா. பணியாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்தின் தலைவர் பிலிப்பே லசரினி குறிப்பிட்டுள்ளார்.

‘நாளுக்கு நாள் முடிவில்லாத மற்றும் உணர்வற்ற கொலைகள் இடம்பெறுகின்றன’ என்று அவர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘போர் ஆரம்பித்தது தொடக்கம் மனிதாபிமான பணியாளர்கள், வளாகங்கள் மற்றும் செயற்பாடுகள் அப்பட்டமாக மற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி புறக்கணிக்கப்படுகின்றனர்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

காசாவில் நடந்ததை ‘முற்றாக ஏற்க முடியாது’ என்று ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டரஸ் கூறினார்.

காசாவில் 342ஆவது நாளாகவும் இஸ்ரேலின் சராமாரி தாக்குதல்கள் நேற்று (12) இடம்பெற்றன. வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாம் மீது நேற்று அதிகாலை நடத்திய தாக்குதலில் ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இதில் அல் பக்குரா பகுதியில் சியாம் குடும்ப வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் மூவர் கொல்லப்பட்டிருப்பதோடு அல் செய்தூனில் இடம்பெற்ற தாக்குதலில் மேலும் இருவர் பலியானதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது.

தெற்கு காசாவின் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகரின் கிர்பத் அல் அதாஸ் பகுதியில் நேற்று நடந்த தாக்குதல் ஒன்றில் மூவர் கொல்லப்பட்டதாக வபா கூறியது. மத்திய காசாவின் புரைஜ் மற்றும் நுஸைரத் அகதி முகாம்களின் குடியிருப்பு கட்டடங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதாக அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்து 34 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 96 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 41,118 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 95,125 பேர் காயமடைந்துள்ளனர்.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதாற்கு கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் பல மாதங்களாக இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தைகளில் இதுவரை எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த மே மாதத்தில் முன்வைத்த போர் நிறுத்தத் திட்டத்தின் அடிப்படையிலேயே அண்மைக்கால பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. எனினும் இந்தப் பேச்சுவார்த்தையில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே பெரும் பிளவு நீடித்து வருகிறது.

எனினும் புதிய நிபந்தனைகள் இன்றி முந்தைய அமெரிக்காவின் நிபந்தனையின் அடிப்படையில் இஸ்ரேலுடன் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றில் உடன் கைச்சாத்திடுவதற்கு தயார் என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

தமது பேச்சுவார்த்தைக் குழுவினர் கடந்த புதனன்று கட்டார் பிரதமர் ஷெய்க் முஹமது பின் அல்துல்ரஹ்மான் அல்தானிய மற்றும் எகிப்து உளவுப் பிரிவுத் தலைவர் அப்பாஸ் கமேலை டோஹாவில் சந்தித்து பேசியதாக ஹமாஸ் அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குக் கரையில் நால்வர் பலி

இதேவேளை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் சுற்றிவளைப்பு தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் மேலும் நான்கு பலஸ்தீனர்கள் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2000ஆம் ஆண்டுகளின் பின்னர் மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்தும் பாரிய இராணுவ நடவடிக்கை தற்போது மூன்றாவது வாரத்தைத் தொட்டுள்ளது.

துல்கர்ம் நகரில் கடந்த புதன்கிழமை இரவு இஸ்ரேலின் ஆளில்லா விமானத் தாக்குதல்களில் மூவர் கொல்லப்பட்டதாக வபா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. துபாஸ் நகருக்கு அருகில் இருக்கும் பாரா அகதி முகாமில் இஸ்ரேலின் ஸ்னைப்பர் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

துல்கர்மில் இஸ்ரேல் நடத்திய ஆளில்ல விமானத் தாக்குதலில் வாகனம் ஒன்றும் அருகில் இருக்கும் வீடு ஒன்றும் தீப்பற்றியதாக வபா குறிப்பிட்டது.

இந்தக் கொலைகளுடன் கடந்த ஓகஸ்ட் 28 ஆம் திகதி மேற்குக் கரையில் இஸ்ரேல் ஆரம்பித்த படை நடவடிக்கையில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. இதில் கடந்த புதன்கிழமை காலை துபாஸ் நகரில் இடம்பெற்ற வான் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐவரும் அடங்குவர்.

மேற்குக் கரையின் வடக்கே துல்கர்ம், துபாஸ் மற்றும் ஜெனின் நகரங்களிலேயே இஸ்ரேலின் படை நடவடிக்கை முன்னேடுக்கப்பட்டு வருகிறது. இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டிருப்பதோடு வீதிகள் மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன.   நன்றி தினகரன் 





காசா, மேற்குக் கரையில் இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களில் மேலும் பலர் பலி

- பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகில் நடத்திய வான் தாக்குதலில் 5 பலஸ்தீனர்கள் பலி

September 12, 2024 7:38 am 

இஸ்ரேலியப் படை காசாவில் 341 ஆவது நாளாக நேற்று (11) தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியதோடு ஆக்கிரமிப்பு மேற்குக் கரையிலும் நடத்திய சுற்றுவளைப்பு மற்றும் தாக்குதல்களில் மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவின் தெற்கு நகரான கான் யூனிஸில் அல் கரா குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டின் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.

கான் யூனிஸின் மவாசி பகுதிக்கு அப்பால் உள்ள கடலில் இஸ்ரேலிய கடற்படை நடத்திய தாக்குலில் மீனவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

வடக்கு காசாவின் ஜபலியா நகரில் அல் நஜ்ஜார் குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டின் மீது வீசிய குண்டில் மூன்று சிறுவர்கள் மற்றும் இரு பெண்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோன்று மத்திய காசாவின் நுசைரத் அகதி முகாமில் அபூ அத்வி குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டு மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

காசாவில் ஒரு வருடத்தை நெருங்கும் இஸ்ரேல் இடைவிடாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 41,000ஐ தாண்டி இருப்பதோடு காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 95,000ஐ நெருங்கியுள்ளது.

காசா போரை ஒட்டி ஆக்கிமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் பதற்றம் நீடிக்கும் சூழலில் டுபாஸ் நகரில் பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகில் நேற்று அதிகாலை இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதில் 18 தொடக்கம் 24 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களே பலியாகியுள்ளனர்.

இந்தத் தாக்குதலை உறுதி செய்திருக்கும் இஸ்ரேலியப் படை போராட்டக் குழு ஒன்றை இலக்கு வைத்து தாக்கியதாக குறிப்பிட்டபோதும் அது பற்றி மேலதிக விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை.

டுபாஸ் நகரில் இஸ்ரேலியப் படையின் சுற்றிவளைப்புக்கு மத்தியிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நகரில் ஊரடங்கை பிறப்பித்த இஸ்ரேலியப்படை நகரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

டுபாஸ் நகருக்கான நுழைவு மற்றும் வெளிச்செல்லும் பாதைகளை இஸ்ரேலியப் படை மூடிய இருப்பதோடு நகரை நோக்கி வீதியைத் தோண்டும் இயந்திங்கள் மற்றும் கவச வாகனங்கள் செல்வதை காண முடிவதாக பார்த்தவர்களை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேற்குக் கரையின் வடக்கு முனையில் இருக்கும் டுபாஸ் நகர் ஜோர்தான் நாட்டு எல்லைக்கு நெருக்கமான நகராகும்.

மறுபுறம் துல்கர்ம் அகதி முகாமில் இஸ்ரேலியப் படை நேற்றும் படை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதனால் பொதுமக்களின் உடைமைகளுக்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. துல்கர்ம் முகாமை

இஸ்ேரலியப் படை தொடர்ந்து முற்றுகையிட்டிருப்பதாகவும், அங்கு மேலதிகப் படைகள், கனரக இயந்திரங்கள் மற்றும் புல்டோசர்களை குவித்திருப்பதாகவும் அங்கிருக்கும் வபா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளது. இதன்போது முகாமுக்குள் இருக்கும் வீதிகள் மற்றும் உடைமைகள் புல்டோசர் கொண்டு அழிக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

துல்கர்மில் கடந்த செவ்வாயன்று இஸ்ரேலிய சுற்றிவளைப்பின்போது பெண் ஒருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேநேரம் மேற்குக் கரையின் ரமல்லாவில் நேற்று காரை மோதவிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் இஸ்ரேலிய ஆடவர் ஒருவர் காயமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் அதிகரித்துவரும் பதற்றத்திற்கு மத்தியில் 680க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதே காலப்பகுதியில் பலஸ்தீனர்கள் அல்லது போராளிகளின் தாக்குதல்களில் சுமார் 40 இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய உள்ளூர் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 






ரஷ்யா – உக்ரைன் மோதலை தீர்க்க இந்தியா பங்களிக்க முடியும்

September 11, 2024 5:17 pm 

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதலை அமைதி வழியில் தீர்த்து வைப்பதற்கு இந்தியா பாரிய பங்களிப்பை நல்க முடியும் என்று இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்துக் கலந்துரையாடிய போது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இச்சந்திப்பின் போது அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான யுத்தத்தைத் தீர்த்து வைப்பதற்கு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பங்கு உண்டு. இப்பிரச்சினைக்கு தனித்து நின்று உக்ரைனால் அமைதி வழி தீர்வினை எட்ட முடியாது.
சர்வதேச சட்ட விதிகள் நிராகரிக்கப்பட்டால், நெருக்கடிகளும் குழப்பங்களும் அதிகரிக்கும். இதனை எனது சீன சகாக்களிடமும் நான் எடுத்துக் கூறியுள்ளேன்’ என்றுள்ளார்.

இச்சந்திப்பின் போது தரைவழி முன்னேற்றங்கள், குளிர்காலத்திற்கு முன்னர் உக்ரைனின் அவசரத் தேவைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

இதேவேளை, ஜி 7 நாடுகள் அமைப்பின் தலைமை வகிக்கும் இத்தாலியின் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், ஜி 7 நாடுகள் அமைப்பின் தலைமைத்துவ நிகழ்ச்சி நிரலில் உக்ரைனுக்கான ஆதரவுக்கு முதன்மையான முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதையும் உக்ரைனின் சட்டபூர்வப் பாதுகாப்பு மற்றும் நியாயமானதும் நீடித்ததுமான அமைதிக்கான தற்போதைய உறுதிப்பாட்டையும் இத்தாலி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.   நன்றி தினகரன் 






பங்களாதேஷில் மீண்டும் ஆர்ப்பாட்டம்

September 11, 2024 8:00 am 

பங்களாதேஷில் தேசிய கீதத்தை மாற்றுவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு எதிராக புதிய ஆர்ப்பாட்டம் வெடித்துள்ளது.

பங்களாதேஷில் ஆட்சி கவிழ்ப்புக்குக் காரணமான ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து தேசிய கீதம் தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் உடிச்சி ஷிபா கொஸ்தி என்ற முன்னணி கலாசார அமைப்பு நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது.

ரவீந்திரனாத் தாகூரினால் எழுதப்பட்ட தேசிய கீதத்தைப் பாடியே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் தேசிய கீதத்துக்கு எதிராக இடம்பெறும் எந்த ஒரு சதி தொடர்பிலும் நாம் பொறுமைகாக்க மாட்டோம் என்று ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறான முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டால் அதற்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பங்களாதேஷின் தேசிய கீதம் மற்றும் தேசியக் கொடியை இந்துக்கள் இருவர் உருவாக்கிய நிலையில் அவை மாற்றப்பட வேண்டும் என்று பங்களாதேஷ் ஜமாத்தே இஸ்லாமிய அமைப்பு பரிந்துரைத்திருந்தது.   நன்றி தினகரன் 





2029 இல் இந்தியாவில் டிஜிட்டல் கொடுப்பனவுகள்481 பில்லியனாக 3 மடங்கு அதிகரிக்கும்

September 12, 2024 12:42 pm 

2023-24 நிதியாண்டில் பரிவர்த்தனை அளவுகள் வருடாந்தம் 42 சதவீதம் வளர்ச்சியடைந்து, இந்தியாவின் டிஜிட்டல் பணம் செலுத்தும் தொழில் மிகப்பெரிய எழுச்சியைக் கண்டுள்ளதாக PwC இன் புதிய அறிக்கை குறிப்பிடுகிறது.

2023-24 நிதியாண்டில் பரிவர்த்தனை அளவு 159 பில்லியனில் இருந்து 2028-29 நிதியாண்டில் 481 பில்லியனாக உயரும்.தொழில்துறை மூன்று மடங்கு வளர்ச்சியை அடையும் என்று அந்த அறிக்கை கணித்துள்ளது.

பரிவர்த்தனை மதிப்பின் அடிப்படையில், இந்த காலகட்டத்தில் சந்தை சுமார் இருமடங்காக இருக்கும், 2028-29 நிதியாண்டில் 265 டிரில்லியனில் இருந்து 593 டிரில்லியன் இந்திய ரூபாவாக விரிவடையும்.

இந்தியாவின் டிஜிட்டல் கொடுப்பனவுப் புரட்சியை யுபிஐ தொடர்ந்து வழிநடத்தி வருகிறது. 2023-24 நிதியாண்டில், UPI பரிவர்த்தனை அளவு 57 சதவீத வளர்ச்சியைக் கண்டது, இது 131 பில்லியன் பரிவர்த்தனைகளைத் தாண்டியது.

2028-29 நிதியாண்டில், UPI பரிவர்த்தனைகள் 439 பில்லியனை எட்டும் என்று அறிக்கை மதிப்பிடுகிறது.இது இந்தியாவின் சில்லறை டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனைகளில் 91 சதவீதத்தை உருவாக்குகிறது.

தற்போதைய வளர்ச்சிப் போக்குகள், UPIயின் சந்தை ஊடுருவல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு ,2027-28 நிதியாண்டில் தினசரி UPI பரிவர்த்தனைகள் 1 பில்லியனை எட்டும் என்றும், 2028-29 நிதியாண்டின் இறுதியில் 1.4 பில்லியனாக உயரக்கூடும் என்றும் அந்த அமைப்பு கணித்துள்ளது.

UPI இன் வளர்ச்சி துரிதப்படுத்தப்படுவதால், டெபிட் கார்டுகளின் பயன்பாடு பரிவர்த்தனை அளவு மற்றும் மதிப்பு இரண்டிலும் சரிவைக் கண்டுள்ளது. பாரம்பரிய அட்டைக் கொடுப்பனவுகளில் இருந்து விலக நுகர்வோர் அதிகளவில் UPIக்கு தங்கள் விருப்பத்தை மாற்றி வருகின்றனர்.

கூடுதலாக, சவுண்ட்பாக்ஸ்கள், வணிக குறுக்கு விற்பனை மற்றும் புதிய செயல்படுத்தும் உத்திகள் போன்ற புதுமைகளை ஏற்றுக்கொள்வது வணிகர்களால், குறிப்பாக சிறிய நகரங்களில் டிஜிட்டல் பணம் செலுத்துவதை மேலும் தூண்டியது.   நன்றி தினகரன் 






இஸ்ரேலிய விசேட படையினர் சிரியாவில் தரையிறங்கி தாக்குதல்

September 14, 2024 9:28 am 

சிரியாவில் உள்ள ஹிஸ்புல்ல ஏவுகணை உற்பத்தித் தளம் ஒன்றுக்குள் புகுந்து இஸ்ரேலிய விசேட படை தாக்குதல் நடத்தியுள்ள விபரம் வெளியாகியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலிய அரசு எந்தத் தகவலையும் வெளியிடாதபோதும் அண்மையில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்த விபரத்தை அமெரிக்க ஊடகம் வெளியிட்டுள்ளது.

லெபனானின் எல்லையில் இருந்து வடக்காக சுமார் 40 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் மஸ்யாப் நகருக்கு அருகில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதாக சிரிய அரச ஊடகம் தெரிவித்தது.

இது தொடர்பில் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டிருக்கும் செய்தியில், ஹெலிகொப்டர்களில் வந்து இறங்கிய சிரிய விசேட படையினர் ஈரானினால் கட்டப்பட்ட தளத்தை குண்டு வைத்து தகர்த்ததாகவும் அங்கிருந்த முக்கிய தகவல்களை எடுத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் மற்ற அதிகாரிகளின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இந்த செய்தி வெளியாகியுள்ளது. சிரிய பாதுகாப்புப் படைகளை கட்டுப்படுத்துவதற்கு குறித்த தளத்திற்கு படையினர் குவிக்கப்படுவதை தடுக்கவே இஸ்ரேல் அங்கு வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

சிரியாவில் இஸ்ரேல் அடிக்கடி வான் தாக்குதல்களை நடத்துகின்றபோதும் அங்கு துருப்புகள் தரையிறங்கி தாக்குதல் நடத்துவது வழக்கத்திற்கு மாறானதாகும்.   நன்றி தினகரன் 






இந்தியாவுடன் பகைமை மறந்து நட்புக்கரம் நீட்டும் மாலைதீவு!

விரிசல் நீங்குகிறது; விரைவில் இந்தியா புறப்படுகிறார் ஜனாதிபதி முய்சு

September 15, 2024 12:34 pm

இந்தியாவுடன் சமீப காலமாக எதிர்ப்புப் போக்ைகக் கடைப்பிடித்துக் கொண்டிருந்த மாலைதீவு அரசாங்கத்தின் நடவடிக்கையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாலைதீவில் கருத்துத் தெரிவித்த இரண்டு பேர் பதவி விலகினர். இந்நிலையில் மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு அரசுமுறைப் பயணமாக விரைவில் இந்தியா வரவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவுடன் முன்னர் நட்புப் பாராட்டிய நாடுகளில் மாலைதீவும் ஒன்று. இதனிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், சீனாவுக்கு நெருக்கமான முகமது மூயிஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். அப்போது தொடக்கம் அவர் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினார். பதவியேற்ற குறுகிய காலத்திலேயே, அவர் மாலைதீவில் இருந்த இந்திய இராணுவப் படையை வெளியேற்றினார்.

அதேநேரம் அந்த நாட்டின் இரண்டு அமைச்சர்களான மரியம் ஷிவுனா, மல்ஷா ஷெரிப் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் சமூகவலைதளங்களில் கருத்துகளை முன்வைத்தனர்.

கடல்சார் கண்காணிப்புக்காக இந்திய இராணுவம் அதிநவீன ஹெலிெகாப்டர்கள், நவீன விமானம் உள்ளிட்டவற்றை மாலைதீவுக்கு வழங்கியிருந்தது. இந்தக் கருவிகளை இயக்குவதற்காக சுமார் 100 இந்திய இராணுவ வீரர்கள் மாலைதீவில் இருந்தனர். அவர்களை வெளியேற்றியதால், இந்தியா– மாலைதீவு இடையேயான உறவில் விரிசல் விழுந்தது. இந்திய இராணுவத்தை வெளியேற்றிவிட்டு, மாலைதீவு அரசாங்கம் சீனாவிடம் இராணுவ உதவி கேட்டு ஒப்பந்தமும் செய்யப்பட்டது.

இந்தியா-மாலைதீவு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு மாலைதீவு அதிபர் முகமது முய்சுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் பதவியேற்பு விழாவில் முகமது மூயிஸ் கலந்து கொண்டார். இதையடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த மாதம் மாலைதீவு சென்றிருந்தார். அப்போது முதலே மாற்றங்கள் ஏற்படத் தொடங்கி விட்டன.

அதன் தொடர்ச்சியாக மோடி குறித்து விமர்சித்த, இரண்டு அமைச்சர்கள் தங்களின் பதவியை இராஜினாமா செய்துள்ளனர். இதுவும் இருநாட்டு உறவை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று தகவல் வெளியானது. இந்நிலையில் மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு, முதல்முறையாக அரசுமுறைப் பயணமாக விரைவில் இந்தியா வரவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

முகமது முய்சு, அடுத்த வாரமே டெல்லி வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலைதீவில் பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சனம் செய்த அமைச்சர்கள் இருவரும் இராஜினாமா செய்த அதே நாளில், அந்த நாட்டு ஜனாதிபதி முகமது முய்சுவின் இந்தியப் பயணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியா– மாலைதீவு நாடுகள் இடையே மீண்டும் இணக்கமான சூழல் உருவாகியுள்ளது.

இது ஒருபுறமிருக்க, மாலைதீவுடன் இலகுவாக வர்த்தகம் செய்ய FTA எனப்படும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கும் முயற்சிகளை இந்தியா தொடங்கியுள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான விரிசல் இப்போது படிப்படியாக நீங்கி வருவதாகத் தெரிகிறது. அதாவது மாலைதீவுடன் எளிமையாக வர்த்தகம் செய்வதற்கு ஏதுவாக FTA எனப்படும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கும் முயற்சிகளை இந்தியா தொடங்கியுள்ளதாக மாலைதீவு அமைச்சர் முகமது சயீத் தெரிவித்துள்ளார்.

இதற்கான பேச்சுவார்த்தை இப்போது நடந்து வருகிறது.

இந்தியாவுடனான உறவு பாதிக்கப்பட்டதால் மாலைதீவின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்தமை குறிப்பிடத்தக்கது. மாலைதீவுக்குச் சுற்றுலா செல்வதைப் பல இந்தியர்கள் புறக்கணிக்க ஆரம்பித்தனர். இதனால் மாலைதீவு பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதன் பின்னரே மாலைதீவு தனது போக்ைக மாற்றியது. சமீபத்தில் கூட அந்நாட்டின் அமைச்சர், “இந்தியர்கள் மாலைதீவுக்குச் சுற்றுலா வர வேண்டும்” என வெளிப்படையாகவே கேட்டுக் கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. இரு நாட்டு உறவு இப்படி இருக்கும் இந்த நேரத்தில்தான் மாலைதீவுடன் இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள முயற்சி மேற்கொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதேசமயம் சமீபத்தில் நடந்த மாலைதீவு சுதந்திரதின விழாவில் கலந்து கொண்டு பேசிய அந்நாட்டின் அதிபர் முய்சு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் அவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

மாலைதீவு இந்தியாவுக்கு அளிக்க வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சில தளர்வுகளை இந்தியா அறிவித்துள்ள நிலையில், அதற்கு மாலைதீவு அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியா மாலைதீவு இடையே உறவுகள் வலுவாக இருக்கும் என்றும், இரு நாடுகளும் விரைவில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்றும் நம்பிக்கை இருப்பதாக முய்சு தெரிவித்துள்ளார்.

எஸ்.சாரங்கன்…?      நன்றி தினகரன் 



No comments: