வெகுமதி என்னை நோக்கி நகைத்தபோதும்!

 


…..சங்கர சுப்பிரமணியன்.



நான் ஒரு பழம் விற்கும் பழவியாபாரி
ஒருவகை பழங்கள் மட்டும் விற்பதில்லை
பலவகை பழங்கள் நான் விற்றுவந்தேன்
கூடையில் சுமந்தே பழங்கள் விற்பேன்

பழங்களை கடைவைத்தும் விற்றிடுவர்
பணம் சம்பாதிக்க தொழில் செய்திடுவர்
வாழ்க்கைக்காக பழங்களை விற்பதால்
நான் கடைவைத்திட விரும்பவில்லை

பலர் கடைவைத்து பழங்கள் விற்றாலும்
ஒரே வகை பழங்களை மட்டுமே விற்பர்
பலவகை பார்த்து வாங்கத் தெரியாதோ
எனக்கொன்றும் அதைப்பற்றி தெரியாது

கடைவைக்க விருப்பமில்லை என்றாலும்
கூடையில் சுமந்து பழங்கள் விற்றிடுவேன்
கூடை சுமந்து பழங்கள் நான் விற்றாலும்
பலவகைப் பழங்களையும் விற்று வந்தேன்

மேலத்தெருவில் பழங்களை விற்றபோது
மேன்மைமிகு ஐயா ஒருவர் கூப்பிட்டார்
என்னிடம் பழங்கள் வாங்குவதாய் சொல்லி
பலவகை பழங்களை வாங்கி மகிழ்ந்தார்

அவர் வீட்டில் விழா ஒன்று நடந்த அன்று
என்னை அழைத்து வயிறார உணவிட்டார்
வெகுமதி எனக்கு விரும்பித் தந்திட்டார்
எண்ணி மகிழ்ந்து இறும்பூது அடைந்தேன்

மேலத்தெருவில்  நிலையும் மாறியதே
மாற்றம் ஒன்றுதான் மாறாதது அன்றோ
ஒன்றிரண்டு பழக்கடைகளும் வந்தன
கூடைசுமந்து விற்போர் பலர் வந்தனர்

மேன்மைமிகு ஐயா முன்போல்  இல்லை
கூவி அவர் என்னை அழைப்பதுமில்லை
பழகிய பழக்கம் அழையாது சென்றேன்
விருப்பமின்றியே வாங்கிடுவார் பழங்கள்

ஏனிந்த மாற்றமென எண்ணி மறுகினேன்
இயல்பாய் பார்க்க குப்பைத்தொட்டியில்
எந்த கடையிலும் கிடைக்காத பழங்கள்
எந்த கூடைக்காரரும் விற்காத பழங்கள்

இலந்தைப் பழங்கள் அங்கு கிடந்தனவே
நான் விற்ற பழங்களவை  என்றறிந்தேன்
தரமற்றதென குப்பையிலே எறிந்தாரோ
அனலில் இட்ட புழுவென துடித்திட்டேன்

பழக்கடையில் பார்த்தவர் வாங்குவதை
பலமுறை அங்கே நான் பார்த்து வந்தேன்
அவர் வீட்டில் இனி என்பழங்கள் இராது
என்றபின் அவரிடம் எனக்கென்ன வேலை

மறைந்திருக்கும் பொருள் நானறிவேன்
மாற்றி வைத்து மறைத்தால் தெரியாதோ
போற்றி ஒருக்கால் புழ்ந்தோர் சிலர் ஏன்
மாற்றுத்திசை பயணித்தார் என்றறிவேன்

மதியாதார் முற்றம் மிதியாமை கோடிபெறும் ஔவையின் பாடல் பொருள் உணர்ந்தேன்
நானும் அதை வழிமொழிந்து வாழ்ந்திடுவேன்
வெகுமதி எனை நோக்கி நகைத்த போதும்!

-சங்கர சுப்பிரமணியன்.

No comments: