August 26, 2024
ஆனால், அது சாணக்கியமான தீர்மானமா அல்லது இல்லையா என்பதை வரலாறு தீர்மானிக்கும். ஆறு தமிழ்க் கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதும் விடயத்தில் – ஆரம்பத்தில் ஹக்கீமும் இணைந்து செல்லும் முடிவில் இருந்தார். ஆனால், பின்னர் அதிலிருந்து நழுவிக்கொண்டார் – காரணம் என்ன? சமஷ்டி அடிப்படையிலான கோரிக்கையை உள்வாங்குவது என்னும் தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர் ஹக்கீம் அதிலிருந்து விலகிக் கொண்டார் ஏன்? அவர் சாணக்கியமாக நடந்து கொண்டாரென நாங்கள் எண்ணிக்கொள்ளலாம்.
இதேபோன்றுதான், கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் விவகாரத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கு முதலமைச்சர் பதவியைத் தங்கள் வசமாக்கினார். பின்னர் ஒரு கூட்டத்தில் பேசுகின்றபோது பார்த்தீர்களா எங்கள் சாணக்கியத்தை என்று கூறி தங்கள் சாணக்கியத்தை மெச்சினார். ஏனெனில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை தன்வசப்படுத்தியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பதினொரு ஆசனங்கள் இருந்தன. ஆனால், முஸ்லிம் காங்கிரஸிடம் ஏழு ஆசனங்கள்தான் இருந்தன.
ஆனாலும் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கி ரஸூக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்தது. ஆனால் அதனையே பின்னர் தங்களின் சாணக்கியம் என்றார் ஹக்கீம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏமாற்றும் சாணக்கியம் தெரிந்த ஹக்கீம் தமிழ் மக்கள் சாணக்கியமாக முடிவெடுப்பார்கள் என்று கூறுகின்றார். இதன்மூலம் தங்களின் அரசியல் நலன்களுக்கு ஏற்றவாறான தென்னிலங்கை ஆட்சியாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கு தமிழ் மக்களின் வாக்குகளை தாரைவார்க்குமாறு கூறுகின்றார்.
தமிழ் மக்கள் தங்களின் தன்மானத்தை ஏலம்விட்டு முஸ்லிம்களின் நலன்களுக்காக வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களித்தால் அதுதான் சாணக்கியமான முடிவு. தமிழ் மக்கள் மத்தியில் சாணக்கியமான தலைவர்கள் என்று கருதப்பட்டவர்கள் அனைவருமே அரசியலில் பிழைத்துப்போனவர்கள்தான். இதனால்தான், இப்போது சாணக்கியம் என்றால் என்ன என்பதே தெரியாமல் போய்விட்டது. ஓர் இனத்துக்கான சாணக்கியம் என்பது என்ன? நெருக்கடிமிக்க காலங்களில் ஒரு மக்கள் கூட்டம் எவ்வாறு தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்கின்றது.
அதற்காக எவ்வாறான உத்திகளை கையாள்கின்றது என்பதில்தான் அந்த இனத்தின் சாணக்கியம் வெளிப்படும். அவ்வாறில்லாது, நெருக்கடிகளின்போது எவ்வாறு முடிவெடுப்பது என்று தெரியாமல் தமக்குள் தடுமாறி – நிலைகுலைந்து – தங்களுக்குள்ளேயே அதிக எதிரிகளை உருவாக்கிக் கொள்ளுமாயின் அவ்வாறானதோர் இனம் – சாணக்கியம் என்னும் சொல்லையே அறியாத இனமாகவே இருக்க முடியும்.
ஒரு காலத்தில் கல்வியில் முன்னேறிய இனமாக பெருமை கொண்டிருந்த தமிழினம் அரசியலில் தொடர்ந்தும் பின்னடைவுகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இந்தப் பின்புலத்தில் நோக்கினால் தமிழினம் சாணக்கியமான ஓர் இனமல்ல. இதனால்தான் ஹக்கீம் தமிழ் மக்கள் சாணக்கியமாக முடிவெடுப்பார்கள் என்கிறார். ஏனெனில் தமிழ் மக்கள் அவ்வாறான முடிவை எடுக்கும் வல்லமையுள்ள ஓர் இனமல்ல என்பது தான் ஹக்கீமின் கணிப்பு போலும். தமிழ்ப் பொது வேட்பாளர் பெரும்பான்மையான வாக்குகளைப் பெறாமல் போனால் தமிழ் மக்கள் ஒரு சாணக்கியமான மக்கள் கூட்டமல்ல என்பது மீண்டுமொரு முறை நிரூபிக்கப்படும். நன்றி ஈழநாடு
No comments:
Post a Comment