கடவுள் மாமா - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 தென்னிந்தியத் திரையுலகில் தயாரிப்பாளராகவும், டைரக்டராகவும்


புகழ் பெற்று விளங்கிய பி. ஆர் . பந்துலு 1974ம் ஆண்டு தன்னுடைய பத்மினி பிக்சர்ஸ் சார்பில் கடவுள் மாமா என்ற படத்தை தயாரித்தார். ஆனால் படத்தை அவர் டைரக்ட் பண்ணவில்லை. அதற்கு பதில் தன்னுடைய உதவி டைரக்டராக நீண்ட காலம் பணியாற்றிய கே. சிங்கமுத்துவுக்கு படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தார். இந்த சிங்கமுத்து ஏற்கனவே தாமஸ் என்பவருடன் இணைந்து எம் ஜி ஆர் நடிப்பில் தலைவன் என்ற படத்தை இயக்கி அப் படம் சுமாராகப் போனது. இப்போது பந்துலுவின் ஆதரவில் மீண்டும் படம் இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது.


கடவுளை எல்லாரும் அப்பா, அம்மா, அண்ணன், நண்பன் என்று

பலவிதங்களில் அழைத்து வணங்கி தங்கள் பக்தியை செலுத்துவது வாடிக்கை. ஆனால் இந்த சிங்கமுத்து ஒரு படி மேலே போய் கடவுளை மாமா ஆக்கிவிட்டார். ஆனால் இவ்வாறு அழைப்பது ஒரு சிறுமிதான் என்ற வகையில் ஆறுதல் அடையலாம்!

அனாதையான கற்பகத்தை மாணிக்கம் என்ற காமுகனிடம் இருந்து சண்டை போட்டு காப்பாற்றுகிறான் கந்தன். ஆனால் இந்த சண்டையில் மாணிக்கம் கொலை செய்யப்பட்டான் என்று குற்றம் சாட்டி போலீசார் கந்தனை கைது செய்ய ,சட்டம் அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறது. தான் சிறையில் இருக்கும் போது தன்னுடைய தங்கை நிர்மலாவும் , கற்பகமும் நிராதராவாகி பிறரால் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறியும் கந்தன் சிறையில் இருந்து தப்பி அவர்களைக் காண ஓடுகிறான். போலீசார் பிடியில் இருந்து தப்ப ஒரு கிறிஸ்துவ தேவாலயத்துக்குள் நுழையும் அவனை காணும் சிறுமி உமா அவனை கடவுள் மாமா என்று கருதி அழைக்கத் தொடங்குகிறாள். தன் வீட்டுக்கும் அழைத்துப் போகிறாள். அங்கே கந்தனுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. எந்த கற்பகத்தை காக்க சிறையில் இருந்து தப்பினானோ அவள் சித்தப் பிரமை பிடித்து இருப்பதையும், அவளின் குழந்தைதான் உமா என்பதையும், அவளின் கணவன் ராஜ்மோகன் அவளை கை விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணை மணந்து வாழ்வதையும் அறிந்து கொள்கிறான். ராஜ்மோகனை அழைத்து வர அவனைத் தேடிச் செல்லும் கந்தனுக்கு அங்கே மற்றுமோர் அதிர்ச்சி காத்திருக்கிறது. ராஜ்மோகன் மணந்திருப்பது தன்னுடைய சொந்த தங்கை நிர்மலாவைத்தான் என்றறிந்து அதிர்கிறான் கந்தன்.


இப்படி அமைந்த படத்தின் கதை வசனத்தை எஸ். ஜெகதீசன் எழுதியிருந்தார். கதைக் கோர்வையும், காட்சிகளுக்கான வசனங்களும் சீராக இருந்தன. இதன் காரணமாக படத்தை விறுவிறுப்பாக இயக்கி இருந்தார் சிங்கமுத்து.

கந்தனாக வரும் முத்துராமனுக்கு சுறுசுறுப்பான வேடம். அதனை நேர்த்தியாக செய்திருந்தார் அவர். அவருக்கு ஜோடி ஜெயசித்ரா. குறை சொல்ல முடியாத படி தன் ரோலை அவரும் செய்திருந்தார். இவர்களுடன் படம் முழுவதும் வரும் பேபி இந்திரா எல்லாரையும் கவருகிறார். இவர்களுக்கு அடுத்த படியாக நிற்பவர் எஸ் ஏ அசோகன். காட்சிக்கு காட்சி அவர் காட்டும் ஸ்டைல் படு அசத்தல். அவரோடு ஸ்ரீகாந்தும் வில்லனாக வந்து பின்னர் அடக்கி வாசிக்கிறார். தேங்காய் சீனிவாசனின் காமெடி சுமார்.

படத்தில் இவர்களோடு எம் கே முஸ்தபா, மனோரமா, செந்தாமரை,

ஜஸ்டின், பிரேம் ஆனந்த், டி . கே சம்பங்கி, ஆலம் ஆகியோரும் நடித்திருந்தனர்.

படத்தை இயக்கும் பொறுப்பை தன்னுடைய உதவி இயக்குனருக்கு கொடுத்த பந்துலு , படத்துக்கு இசையமைக்கும் பொறுப்பை தன்னுடைய நீண்ட கால நண்பரான இசையமைப்பாளர் டி . ஜி. லிங்கப்பாவிடம் விட்டிருந்தார். பந்துலுவின் ஆரம்ப கால படங்களான கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, சபாஷ் மீனா, தங்கமலை ரகசியம், படங்களுக்கு இசையமைத்த லிங்கப்பா இந்தப் படத்துக்கும் இசையமைத்திருந்தார். அவர் இசையில் கடவுள் மாமா வந்தாரு அவர் கருணை நமக்கு தந்தாரரு பாடல் இனிமையாக ஒலித்தது.


இப்படி தன்னுடைய உதவியாளருக்கு, நண்பருக்கும் உதவும் படி படம் எடுத்த பந்துலு , கடவுள் மாமா படம் வெளிவந்த சில மாதங்களுக்குள்ளேயே கடவுளிடம் போய் சேர்ந்து விட்டார். அத்துடன் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன், ஆயிரத்தில் ஒருவன் போன்ற பிரபலமான படங்களை தயாரித்த பத்மினி பிக்சர்ஸ் நிறுவனமும் படத் தயாரிப்பில் இருந்து நிரந்தரமாக ஒதுங்கிக் கொண்டது.

No comments: