மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண். …அவுஸ்திரேலியா
வேதமொடு திருமுறை மேலான வாத்தியங்கள்
காலையிலே ஒலிக்கக் கந்தனுமே புறப்பட்டு
ஆதவனும் அங்கே அழகாக ஒளிகொடுக்க
சோதியெனக் கந்தனுமே தேரேற வந்திடுவான்
முருகா எனும்நாமம் மூவுலகும் கேட்டுவிடும்
அடியார்கள் தமைமறந்து முருகனையே நோக்கிடுவார்
தமிழான முருகனுமே தவழ்ந்துவரும் வெண்ணிலவாய்
அழகாக அசைந்தபடி அடியார்கள் தோழ்வருவான்
வாசுகிப் பாம்பாக தேர்வடமோ நீண்டிருக்கும்
வடம்பிடிக்க அடியார்கள் வாஞ்சையுடன் வந்திடுவார்
வடந்தொட்டால் வழிபிறக்கும் எனவடியார் நம்பிடுவார்
ஊரெல்லாம் நல்லூரான் உவந்துவரும் தேர்காண
வெண்மணலில் விதைத்துவிட்ட நன்மணியாய் நிறைந்திருப்பார்தேர்வடத்தைத் தொட்டுவிட்டால் செய்தவினை அகலுமென
தொட்டுவிட அடியார்கள் கிட்டக்கிட்டச் சென்றிடுவார்தேரடியில் மலையாக தேங்காய்கள் குவிந்திருக்க
கூடிநிற்கும் அடியார்கள் குறையகற்ற உடைத்திடுவார்
சிதறிவிடும் தேங்காய்போல சிக்கலெலாம் ஆகவென
சிந்தையிலே அடியார்கள் செறிவாக நிறைத்திடுவார்
ஆடம்பரம் இல்லாத ஆலயமாம் நல்லூர்
அமைதியொடு ஆன்மீகம் ஆலயத்தின் சொத்து
வேண்டாத சிக்கல்களை உள்வாங்காக் கோவில்
வேலவனின் அருளொழுகும் நல்லூரின் கோவில்
ஏழை பணக்காரெலாம் இணைந்தங்கே நிற்பார்
எல்லோரும் நல்லூரான் அடியாராய் வருவார்
தேரோடும் வீதியெலாம் திரளாக நிற்பார்
தேரேறி வருமழகன் திருமுகத்தைக் காண
மங்கையர்கள் மடவார்கள் வாலிபர்கள் வயோதிபர்கள்
வண்ண மலராக சின்னவர்கள் நிறைந்திடுவார்
எங்குமே பார்த்தாலும் அடியார்கள் பெருவெள்ளம்
அவ்வெள்ள நடுவினிலே அழகுத்தேர் மெள்ளவரும்
எந்நாட்டில் இருந்தாலும் எல்லோரும் வந்திடுவார்
நல்லூரான் தேர்பார்த்து தொல்லையெலாம் போக்குதற்கு
ஊரிருப்பார் சேர்ந்திடுவார் உமைமைந்தன் தேர்காண
தேரமர்ந்து வேலவனும் யாவையுமே அருளிடுவான்
நல்லூரான் தேர்பார்த்தால் நம்துன்பம் அகன்றுவிடும்
நல்லூரான் வடந்தொட்டால் நன்மைபல பெருகிவிடும்
நல்லூரான் தேர்பார்த்தால் நமையெதுவும் அணுகாது
நல்லூரான் தேர்பார்ப்போம் எல்லோரும் வாருங்கள்
No comments:
Post a Comment