மேற்குக் கரையில் வான், குடியேறிகளின் தாக்குதல்களில் ஆறு பலஸ்தீனர்கள் பலி
காசாவின் குடியிருப்பு பகுதிகளுக்குள் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேற்றம்: மக்கள் தப்பியோட்டம்
மேற்குக் கரையில் தொடரும் இஸ்ரேலின் பாரிய படை நடவடிக்கையில் 17 பேர் பலி
ஹூத்தி தாக்குதல்: தொடர்ந்து எரியும் கப்பலில் எண்ணெய் கசியும் அபாயம்
காசா தாக்குதலுக்கு மத்தியில் மேற்குக் கரையில் இஸ்ரேல் பாரிய படை நடவடிக்கை: 11 பேர் பலி
உக்ரைன் தலைநகரில் ரஷ்யா கடும் தாக்குதல்: மூவர் பலி
விண்வெளியில் சிக்கியோர் பெப்ரவரியில் திரும்புவர்
மேற்குக் கரையில் வான், குடியேறிகளின் தாக்குதல்களில் ஆறு பலஸ்தீனர்கள் பலி
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள நகர்புற அகதி முகாம் ஒன்றில் இஸ்ரேல் நேற்று முன்தினம் (26) நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் இரு குழந்தைகள் உட்பட குறைந்தது ஐவர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
துல்கர்ம் நகருக்கு அருகில் இருக்கும் நூர் ஷாம் முகாம் மீது தாக்குதல் நடத்தியதை இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதி செய்திருப்பதோடு ‘பயங்கரவாத குழு’ ஒன்றின் கட்டளை அறையையே இலக்கு வைத்ததாக குறிப்பிட்டது.
எனினும் நூர் ஷம்ஸ் முகாமில் இருக்கும் வீடு ஒன்றின் மீது திங்கட்கிழமை இரவு அளில்லா விமானத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் அப்போது மூன்று வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும் பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.
மறுபுறம் பத்லஹாம் நகருக்கு அருகில் இஸ்ரேலிய குடியேறிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு மேலும் மூவர் காயமடைந்ததாக பலஸ்தீன சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. வாதி ரஹ்ஹால் என்ற கிராமத்தில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் பல வீடுகளும் தாக்கப்பட்டிருப்பதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் வன்முறை அதிகரித்துள்ளது. அது தொடக்கம் இஸ்ரேல் மேற்குக் கரையில் நடத்திய வான் தாக்குதல்களில் 26 சிறுவர்கள் உட்பட 128 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. அமைப்பு கடந்த புதனன்று குறிப்பிட்டிருந்தது.
எனினும் இந்தக் காலப்பகுதியில் கிழக்கு ஜெரூசலம் உட்பட மேற்குக் கரையில் மொத்தம் 607 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு இஸ்ரேலிய குடியேறிகளால் கொல்லப்பட்ட 11 பேரும் இதில் அடங்குவர். மேற்குக் கரையில் பலஸ்தீனர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஒன்பது இஸ்ரேலிய படையினர் மற்றும் ஐந்து குடியேறிகள் உட்பட பதினைந்து இஸ்ரேலியர்கள் இந்தப் காலப்பகுதியில் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. குறிப்பிட்டுள்ளது. நன்றி தினகரன்
காசாவின் குடியிருப்பு பகுதிகளுக்குள் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேற்றம்: மக்கள் தப்பியோட்டம்
போர் நிறுத்தத்திற்கு நெதன்யாகுவிடம் பைடன் வலியுறுத்து
ஹமாஸ் போராளிகளுடன் சண்டையிட்டு வரும் இஸ்ரேலியப் படை மத்திய மற்றும் தெற்கு காசாவில் ஆழ ஊடுருவி வரும் அதே நேரம் அங்கு நடத்தும் சரமாரி தாக்குதல்களில் நேற்றும் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்வதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை அறிவித்திருக்கும் நிலையிலேயே புதிய தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
பல மாதங்கள் நீடிக்கும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தமது நிபந்தனைகளில் உறுதியாக இருக்கும் நிலையில் எந்த முன்னேற்றமும் காண முடியாதுள்ளது.
வடக்கு காசாவின் பெயித் லஹியா நகரில் வீடு ஒன்றை இலக்கு வைத்து நேற்று (22) நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதோடு மத்திய காசாவின் அல் மகாசி அகதி முகாமில் இடம்பெற்ற தாக்குதலில் உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவர் உட்பட மேலும் அறுவர் கொல்லப்பட்டதாக காசா மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது. தெற்கு காசாவில் இடம்பெற்ற வெவ்வேறு தாக்குதல்களில் மேலும் ஐவர் பலியாகியுள்ளனர்.
மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ் மற்றும் தெற்கின் கான் யூனிஸ் நகரில் படை நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருப்பதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இதன்போது இராணுவ கட்டுமானங்கள், ரொக்கெட் குண்டுகள் அமைந்திருக்கும் இடங்கள் தகர்க்கப்பட்டு போராளிகள் பலரும் கொல்லப்பட்டதாகவும் அந்த இராணுவம் கூறியது.
பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் போர் நிறுத்த முயற்சியில் எந்த முன்னேற்றமும் இன்றி கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா திரும்பினார். இதனையடுத்தே ஜோ பைடன் மற்றும் நெதன்யாகு இடையெ நேற்று முன்தினம் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவந்து காசாவில் உள்ள இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டு பணயக்கைதிகளை விடுவித்து இஸ்ரேலிய சிறையில் இருக்கும் பல பலஸ்தீன கைதிகளை விடுவிக்கும் உடன்படிக்கை ஒன்றை விரும்புவதாக ஹமாஸ் அமைப்பு குறிப்பிடுகிறது. எனினும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போர் நிறுத்தம் ஒன்றை எட்டத் தவறி இருப்பதாக அது குற்றம்சாட்டியுள்ளது.
ஹமாஸ் தோற்கடிக்கப்பட்டாலேயே போர் முடிவுக்கு வரும் என்று கூறும் நெதன்யாகு பணயக்கைதிகளை விடுவிக்கும் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை ஒரு தற்காலிக போர் நிறுத்தமாகவே அமையும் என்று கூறி வருகிறார்.
இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் என சுமார் 1 மில்லியன் மக்கள் தங்கி இருப்பதாக குறிப்பிடப்படும் மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வின் கிழக்கில் இருந்து டாங்கிகள் முன்னேறி வருவதாகவும் அருகாமையில் உள்ள தெற்கு நகரான கான் யூனிஸுடனான நகரின் சில வீதிகள் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலிய டாங்கிகள் கான் யூனிஸின் அல் கராரா மற்றும் ஹமாத் பகுதிகளில் மேற்கை நோக்கி முன்னேறி வரும் நிலையில் மேலும் பல குடும்பங்கள் தமது தற்காலிக முகாம்கள் மற்றும் கூடாரங்களில் இருந்து வெளியேறி வருகின்றனர். சில நேரங்களில் டாங்கிகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் கடுமையான தாக்குதல்களை நடத்துவதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்குவதற்கு இடம் அல்லது முகாம்களை கண்டுபிடிக்க தவறிய சிலர் வீதிகளிலும் கடற்கரைகளிலும் உறங்கி வருகின்றனர்.
‘கடந்த இரவு ஆளில்லா விமானங்கள் கூடாரங்களை சுட ஆரம்பித்தன, நாம் கீழே படுத்துக்கொண்டோம். சில மணி நேரம் சென்றிருக்கும், டாங்கிகள் நெருங்கி வருவதுபோல் சத்தம் உரக்கக் கேட்டது. எனவே அங்கிருந்து தப்பிச் செல்ல முடிவெடுத்தோம்’ என்று கான் யூனிஸில் இருந்து 48 வயதான அல் கலயீனி தொலைபேசி மூலம் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
‘நாம் 48 பேர் கொண்ட ஐந்து குடும்பங்கள் இருக்கிறோம். கடற்கரையை நோக்கி நாம் ஓட்டம் பிடித்தோம். சிலர் வீதிகளிலும் மற்றும் சிலர் கடற்கரை மணலிரும் கூடாரங்கள், போர்வைகள் மற்றும் மெத்தைகள் எதுவும் இன்றி உறங்கிறோம். சிறுவர்கள் மற்றும் பெண்கள் எவ்வளவு பயந்திருப்பார்கள் என்று நினைத்துப்பாருங்கள்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காசாவில் பலஸ்தீனர்கள் இடையே போர் நிறுத்தம் பற்றி ஏமாற்றம் அதிகரித்து வருவதாக கலயீனி குறிப்பிட்டார்.
‘இந்தப் பேச்சுவார்த்தை காலவிரயமானது. நெதன்யாகு தான் செய்வதை தொடர்வதற்கு அவகாசம் வழங்குவதே அவர்களின் நோக்கம். டாங்கிகள் நுழையாத அல்லது குண்டுகள் வெடிக்காத எந்த இடமும் இங்கு இல்லை. எங்கும் இனியும் பாதுகாப்பு இல்லை’ என்றார்.
2.3 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட காசாவில் பெரும்பாலான மக்கள் 10 மாதங்களுக்கு முன் போர் ஆரம்பித்தது தொடக்கம் பல தடவைகள் இடம்பெயர்ந்துள்ளனர். பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட இடங்களிலும் கூட இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
நேற்றுடன் 321 நாட்களை தொட்ட காசாவில் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் 40,200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேற்குக் கரையில் மூவர் பலி
இதேவேளை, காசா போரை ஒட்டி ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் பதற்றம் நீடிக்கும் நிலையில் துல்கராமில் உள்ள வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று (22) நடத்திய வான் தாக்குதலில் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
துல்கராமில் உள்ள தமது படைப் பிரிவு இஸ்ரேலிய படையுடன் சண்டையிட்டு வருவதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவான இசதீன் அல் கஸ்ஸாம் படை அறிவித்த நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இங்கு கூரைகளில் ஸ்னைப்பர் துப்பாக்கிதாரிகளை நிறுத்தி இருக்கும் இஸ்ரேலிய இராணுவம் அங்குள்ள கட்டடங்களை தகர்க்க புல்டோசர்களையும் அனுப்பியுள்ளது. மேற்குக் கரையின் பல நகரங்கள் மற்றும் சிறு நகரங்களிலும் இஸ்ரேல் சுற்றிவளைப்புகளை நடத்தியதாகவும் பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.
காசா போரினால் இஸ்ரேலின் லெபனான் எல்லையிலும் பதற்றம் நீடிக்கிறது. இஸ்ரேலிய போர் விமானங்கள் லெபனானுக்குள் ஊடுருவி தாக்குதல்களை நடத்தியதை அடுத்து லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்று பகுதியில் ரொக்கெட் குண்டுகளை வீசியது.
கடந்த புதன் இரவு தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல்களில் பக்கா பள்ளத்தாக்கில் உள்ள ஹிஸ்புல்லாவின் ஆயுதக் களஞ்சிய வசதிகள் இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது. இந்தத் தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் 30 பேர் காயமடைந்ததாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இதற்கு பதிலடியாக கோலன் குன்றில் இஸ்ரேலிய இராணுவ நிலைகளை இலக்கு வைத்து ரொக்கெட் தாக்குதலை நடத்தியதாக ஹிஸ்புல்லா தெரிவித்தது. இதில் இரு வீடுகள் தாக்கப்பட்டு ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக இஸ்ரேல் நிர்வாகம் தெரிவித்தது. நன்றி தினகரன்
மேற்குக் கரையில் தொடரும் இஸ்ரேலின் பாரிய படை நடவடிக்கையில் 17 பேர் பலி
காசாவில் சரமாரி தாக்குதல்களில் மேலும் 64 பேர் உயிரிழப்பு
காசாவில் தொடரும் போருக்கு மத்தியில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் படை நடவடிக்கையை விரிவுபடுத்தி இருக்கும் இஸ்ரேல் நேற்று (29) இரண்டாவது நாளாக அங்கு சுற்றிவளைப்புகள் மற்றும் தாக்குதல்களை நடத்தியதோடு இந்தத் தாக்குதல்களில் இதுவரை 17 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மறுபுறம் காசாவில் பலஸ்தீன போராளிகளுடன் சண்டையிட்டு வரும் இஸ்ரேல் அங்கு நடத்திய தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 64 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக இடம்பெற்று வரும் தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 40,602 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 93.855 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த 2002 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மேற்குக் கரையில் இடம்பெறும் இஸ்ரேலின் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றாகவே மேற்குக் கரையின் வடக்கே உள்ள மூன்று நகரங்களை இலக்கு வைத்து இந்த சுற்றிவளைப்புகள் கடந்த புதனன்று ஆரம்பமானது.
இந்நிலையில் துல்கர்ம் நகரில் பள்ளிவாசல் ஒன்றுக்குள் மறைந்திருந்த ஐந்து ஆயுதமேந்திய பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று குறிப்பிட்டுள்ளது. ‘துப்பாக்கிச் சண்டையை தொடர்ந்து பள்ளிவாசல் ஒன்றுக்குள் மறைந்திருந்த ஐந்து பயங்கரவாதிகளை படையினர் சுட்டுக்கொன்றனர்’ என்று இஸ்ரேல் இராணுவம் நேற்று (29) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்லாமிய ஜிஹாத் ஆயுதப் பிரிவின் துல்கர்ம் படைப்பிரிவு வெளியிட்ட அறிவிப்பில், ‘எமது தலைவரின் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் ஓர் அங்கமாக, எமது போராளிகளால் அபூ உபைதா பள்ளிவாசலுக்குப் பின்னால் தரைப் படைப்பிரிவு ஒன்றின் மீது மறைந்திருந்து தாக்குதல் நடத்த முடிந்தது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது இஸ்ரேலிய துருப்புகள் மீது நேரடியாக தாக்க முடிந்ததாகவும் அது தெரிவித்தது.
துல்கர்மில் இஸ்ரேல் தனது சுற்றிவளைப்பை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அங்குள்ள நூர் ஷம்ஸ் முகாமை முற்றுகையிட்டு பலவீடுகளை சோதனையிட்டு வருவதாகவும் பலஸ்தீன உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.
அதேபோன்று ஜெனின் நகரையும் இஸ்ரேலியப் படை முற்றுகையில் வைத்திருப்பதோடு அங்கு மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் அடிக்கடி வெடிப்புச் சத்தங்கள் கேட்பதாகவும் அங்கிருப்போர் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது ஜெனின் நகரில் இஸ்ரேலியப் படை புல்டோசர்கள் கொண்டு வீதிகள், வாகனங்கள், சொத்துகள் மற்றும் உட்கட்டமைப்புகளை சேதப்படுத்தி வருவதாக அந்த நகர ஆளுநர் கமால் அபூ அல் ரூப், ‘வபா’ செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஜோர்தான் பள்ளத்தாக்கில் உள்ள டுபாஸ் நகரின் அல் பரார் முகாமில் கடந்த புதன்கிழமை சுற்றிவளைப்பை மேற்கொண்டு பலஸ்தீனர்களை கொன்ற இஸ்ரேலியப் படை அங்கிருந்து வாபஸ் பெற்றதாக பார்த்தவர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
எனினும் ஜெனின் மற்றும் ஏனைய பகுதிகளில் இஸ்ரேலிய ஆளில்லா விமானங்கள் வட்டமிட்டபடி இருப்பதாகவும் மோதல்கள் நீடிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளனர்.
இந்நிலையில் மேற்குக் கரையில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்று வரும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளில் ஜெனினில் 8 பேர், துல்கர்மில் ஐவர் மற்றும் டுபாஸில் நால்வர் என இதுவரை மொத்தம் 17 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி வபா செய்தி வெளியிட்டுள்ளது.
காசா போரை ஒட்டி மேற்குக் கரையில் பதற்றம் அதிகரித்திருந்த நிலையிலேயே இஸ்ரேல் இந்த படை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படை நடவடிக்கையை உடன் நிறுத்தும்படி ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
‘மேற்குக் கரையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் பெரும் கவலை அளிப்பதாக உள்ளது’ என்று எக்ஸ் சமூகதளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் உட்பட உயிரிழப்புகளை நான் கடுமையாக கண்டிப்பதோடு இந்த நடவடிக்கையை உடன் நிறுத்தும்படி அழைப்பு விடுக்கிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.
மேற்குக் கரையில் இஸ்ரேல் மேற்கொண்டிருக்கும் பாரிய இராணுவ நடவடிக்கை காசா போரை விரிவுபடுத்துவதாக அமையக் கூடாது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கைகளுக்கான தலைவர் ஜோசெப் பொரெல் எச்சரித்துள்ளார்.
எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து தெளிவை கோரி இருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. ‘இந்த நடவடிக்கை குறித்து தெரிந்து கொள்வதற்கு இஸ்ரேல் அதிகாரிகளுடன் நாம் தொடர்பில் இருக்கிறோம்’ என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கௌன்சில் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.
‘தனது பாதுகாப்புக்கு இருக்கும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக தம்மை பாதுகாத்துக்கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை அமெரிக்கா ஆதரிக்கிறது. அதேநேரம், பொதுமக்களின் உயிரிழப்பு மற்றும் பொதுமக்களின் உட்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படுவதை அவர்கள் மட்டுப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
மறுபுறம் காசாவிலும் இஸ்ரேலின் சரமாரி தாக்குதல்கள் நீடித்து வருகின்றன. 328 ஆவது நாளாக இஸ்ரேல் நேற்று காசாவில் தாக்குதல்களை தொடர்ந்தது. மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் எட்டுப் பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேபோன்று காசா நகரின் மேற்கே உள்ள அல் அமல் ஹோட்டலுக்கு அருகில் இருக்கும் குடியிருப்பு கட்டடம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஒரு சிறுமி உட்பட எட்டுப் பேர் கொல்லப்பட்டதாக வபா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
இதேவேளை இஸ்ரேல் கட்டுப்பாட்டு சோதனைச்சாவடி ஒன்றுக்கு சில மீற்றர்கள் அருகில் உலக உணவுத் திட்ட வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூட நடத்தப்பட்ட சம்பவத்தை அடுத்து காசாவில் அந்த அமைப்பின் பணியாளர்களின் நடமாட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றிருக்கும் இந்த சம்பவத்தில் வாதி காசா பாலத்தில் உள்ள சோதனைச்சாவடியை அணுகியபோது இந்த வாகனங்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உள்ளன. ஊழியர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று உலக உணவுத் திட்டம் கூறியது.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது குற்றம் சுமத்திய ஐ.நா. பேச்சாளர் ஸ்டபனே டுஜரிக், வாகனத்தின் முன்பக்க ஜன்னல் உட்பட இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டினால் அந்த வாகனம் 10 முறை சுடப்பட்டுள்ளது என்றும் அந்த மனிதாபிமான வாகனம் தெளிவாக அடையாளம் இடப்பட்டிருந்ததாகவும் நியூயோர்க்கில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தபோதும் இதுவரை எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹூத்தி தாக்குதல்: தொடர்ந்து எரியும் கப்பலில் எண்ணெய் கசியும் அபாயம்
செங்கடலில் கடந்த வாரம் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு இலக்கான எண்ணெய் கப்பல் ஒன்று தொடர்ந்து எரிந்தவண்ணம் இருப்பதாகவும் அதில் இருந்து எண்ணெய் கசியக்கூடும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் குறிப்பிட்டுள்ளது.
கிரேக்கத்திற்கு சொந்தமான அந்த நாட்டு கொடியுடனான எம்.வி. சவுனியோன் என்ற கப்பலை மீட்கும் முயற்சியை ஹூத்திக்கள் முறியடித்ததாக பெண்டகன் மேலும் தெரிவித்துள்ளது. இந்தக் கப்பல் 150,000 தொன்கள் அல்லது ஒரு மில்லியன் பீப்பாய் மசகு எண்ணெயை சுமந்திருக்கும் நிலையில் பெரும் அளவு எண்ணெய் கசிவு ஒன்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
காசா போரில் பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக யெமனின் பெரும்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூத்திக்கள் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக செங்கடலில் செல்லும் கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்தத் தாக்குதல்களில் இதுவரை இரு கப்பல்கள் மூழ்கி இருப்பதோடு குறைந்தது இரு கப்பல் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சவுனியோன் கப்பல் மீது கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி இரு சிறு படகுகளில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அடையாளம் காணப்படாத மூன்று எறிகணைகள் விழுந்ததை அடுத்தே தீபற்றியுள்ளது.
அதே தினத்தில் ஐரோப்பிய போர் கப்பல் மூலம் கப்பலில் இருந்த 25 பேரும் மீட்கப்பட்டு டிஜிபூட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நன்றி தினகரன்
காசா தாக்குதலுக்கு மத்தியில் மேற்குக் கரையில் இஸ்ரேல் பாரிய படை நடவடிக்கை: 11 பேர் பலி
காசாவில் போர் தொடரும் நிலையில் இஸ்ரேலியப் படை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் மிகப்பெரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்து குறைந்தது மூன்று நகரங்களில் நடத்திவரும் வான் மற்றும் தரைவழி தாக்குதல்களில் குறைந்தது 11 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் புல்டோசர்களின் உதவியோடு நேற்றுக் காலை நூற்றுக்கணக்கான தரைப்படையினர் மேற்குக் கரைக்குள்ள ஊடுருவியுள்ளனர். இதன்போது இஸ்ரேலியப் படை ஜெனின், துல்கரம் மற்றும் ஜோர்தான் பள்ளத்தாக்கில் சமகாலத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேலியப் படையினர் டூபாஸ் அகதி முகாமில் நால்வரை கொன்றதாக பலஸ்தீன செம்பிறை சங்கத்தின் அம்புலன்ஸ் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது மேலும் பலர் காயமடைந்திருந்தபோதும் அந்தப் பகுதிக்கு அம்புலன்ஸ் வண்டிகள் நுழைவதை இஸ்ரேல் இராணுவம் தடுத்து வருவதால் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
ஜெனினில் இருவர் கொல்லப்பட்டிருப்பதோடு அருகாமையில் உள்ள செயிர் கிராமத்தில் வாகனம் ஒன்றை இலக்கு வைத்து நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் அதில் சென்றுகொண்டிருந்த மூவர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்தது.
ஜெனின் அகதி முகாம் மற்றும் துர்கரமிலுள்ள நூர் ஷம்ஸ் அகதி முகாமுக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இஸ்ரேலிய துருப்புகள் ஊடுருவியதை அடுத்தே இந்தத் தாக்குதல் ஆரம்பமானது. ஜோர்தான் பள்ளத்தாக்கில் உள்ள டூபாஸ் நகருக்கு இஸ்ரேலியப் படை இராணுவ ஹெலிகொப்டர் வழியே நுழைந்துள்ளது. குறிப்பாக அங்குள்ள பாரா அகதி முகாம் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக பலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையிலான இஸ்ரேலியப் படைகள் முகாம்களை சுற்றிவளைத்திருப்பதோடு மருத்துவமனைகளை முற்றுகையிட்டு அங்கு மருத்துவ உதவியாளர்கள் செல்வதை தடுத்ததாக பார்த்தவர்கள் விபரித்துள்ளனர்.
இந்த முற்றுகை மேற்குக் கரையின் வடக்கே உள்ள குறித்த மூன்று நகரங்களிலும் இடம்பெற்றிருப்பதோடு அந்த நகரங்கள் ஏனைய பலஸ்தீன பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.
கடந்த பல ஆண்டுகளில் தாம் கண்ட மிகப்பெரிய படை நடவடிக்கை இதுவென்று ஜெனின் முகாமைச் சேர்ந்த ஷத்தா சபோக் என்பவர் ‘மிடில் ஈஸ்ட் ஐ’ செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார். ‘அதிக அளவான இராணுவ வாகனங்கள் பாரிய அளவில் ஜெனினுக்குள் ஊடுருவியுள்ளது’ என்று குறிப்பிட்டார்.
‘மூன்று பிரதான மருத்துவமனைகளும் முற்றுகை இடப்பட்டிருப்பதோடு நகரை நோக்கிச் செல்லும் அனைத்து வீதிகளும் மூடப்பட்டுள்ளன. இவ்வாறான ஊடுருவலை நான் நீண்ட காலமாக பார்த்ததில்லை. இது பல நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிகிறது’ என்று அந்தப் பெண் குறிப்பிட்டார்.
நகரில் உள்ள பல கட்டடங்களில் இஸ்ரேலியப் படை நிலைகொண்டிருப்பதோடு கூரை மேல் ஸ்னைப்பர் துப்பாக்கிதாரிகளை வைத்துள்ளனர். அவர்களுக்கு முன்னால் நகரும் அனைவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வருகின்றனர் என்று அவர் கூறினார்.
அல் பாரா முகாமிலும் இது போன்ற நிலைமை காணப்படுவதாக அங்கிருப்போர் விபரித்துள்ளனர். ‘முகாமில் பேரழிவு நிலைமை காணப்படுவதோடு இதுவரை காணாத பாரிய அளவிலான ஊடுருவல் ஒன்று இடம்பெற்றுள்ளது’ என்று அங்கிருக்கும் காலித் சோப் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
துல்கர்மில் நூர் ஷம்ஸ் முகாமில், இஸ்ரேலியப் படை அங்குள்ள மக்களை பயமுறுத்த ஆரம்பித்ததாகவும் நள்ளிரவில் அங்கு நுழைந்த விரைவில் அங்குள்ள இரு பிரதான மருத்துவமனைகளை முற்றுகையிட்டதாகவும் சம்பவத்தை பார்த்த பயான் மன்சூர் என்பவர் உள்ளூர் ஊடகத்திற்கு விபரித்துள்ளார்.
‘சுற்றிவளைப்பு மற்றும் படையினர் மற்றும் வாகனங்களின் நடமாட்டங்களை பார்க்கும்போது நீண்ட காலம் ஒன்றுக்கு நிலைகொண்டிருக்க அவர்கள் தயாராகி வருகிறார்கள் என்பது போல் தெரிகிறது’ என்று அவர் கூறினார்.
பெரும் எண்ணிக்கையான புல்டோசர்களும் அந்த மூன்று நகரில் இருப்பதாகவும் அவை வீதிகள் மற்றும் முக்கிய மின்சார மற்றும் நீர் விநியோகங்களை தகர்த்து வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நூர் ஷம்ஸ் மற்றும் ஜெனின் அகதி முகாம்களில் இஸ்ரேலியப் படையுடன் சண்டையிட்டு வருவதாக பலஸ்தீன போராளிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெனின் மற்றும் துல்கரமில் பாரிய ‘பயங்கரவாத எதிர்ப்பு’ நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் கூறியபோதும் அது பற்றி விரிவாக எதனையும் கூறவில்லை. இந்தத் தாக்குதல் பல நாட்களுக்கும் நீடிக்கும் என்று எதிர்பார்ப்பதாக இஸ்ரேலிய இராணுவ வட்டாரத்தை மேற்கோள்காட்டி ‘டைம்ஸ் ஒப் இஸ்ரேல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் தரைப்படை மற்றும் விமானப்படை உட்பட நான்கு படைப் பிரிவுகள் இணைந்திருப்பதாக இஸ்ரேலின் ‘சென்னல் 12’ தொலைக்காட்சி கூறியது.
இதேவேளை ‘இரண்டாவது இந்திபாழா போராட்டம் உச்சம் பெற்றிருந்த 2002 இல் இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலுக்குப் பின் மேற்குக் கரையில் இடம்பெறும் மிகப்பெரிய படை நடவடிக்கையாக இது உள்ளது என்று இஸ்ரேல் ஊடகங்கள் விபரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் கடந்த ஒக்டோபரில் காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்தும் சுற்றி வளைப்புகள் மும்மடங்கிற்கு மேல் அதிகரித்து காணப்படுகிறது. அண்மைய வாரங்களில் அங்கு வான் தாக்குதல்களும் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் மேற்குக் கரையில் இருந்து பலஸ்தீனர்களை இராணுவம் வெளியேற்ற வேண்டும் என்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இஸ்ராயேல் காட்ஸ், எக்ஸ் சமூகதளத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.
‘பலஸ்தீன குடியிருப்பாளர்களை தற்காலிகமாக வெளியேற்றுவது மற்றும் மற்ற தேவையான நடவடிக்கைகள் உட்பட காசாவில் நாம் செய்வது போன்று மேற்குக் கரையிலும் நாம் அச்சுறுத்தல்களை கையாள வேண்டும். இது அனைத்து இடங்களுக்குமான போர் என்பதோடு அதில் நாம் வெற்றி பெறுவோம்’ என்று அவர் நேற்று பதிவிட்டிருந்தார்.
மறுபுறம் சர்வதேசம் அமைதி காப்பதன் காரணமாகவே இஸ்ரேல் தனது கொடிய போரை மேற்குக் கரைக்கு விரிவுபடுத்தி இருப்பதாக காசாவில் ஆட்சி புரியும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
காசா போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் இடம்பெறும் இஸ்ரேல் இராணுவத்தின் சுற்றிவளைப்புகள் மற்றும் இஸ்ரேலிய குடியேறிகளின் தாக்குதல்களில் 148 சிறுவர்கள் உட்பட குறைந்தது 646 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 58 பேர் கொல்லப்பட்டு மேலும் 131 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காசாவில் ஒர் ஆண்டை நெருங்கும் போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 40,534 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 93,778 பேர் காயமடைந்துள்ளனர்.
கெய்ரோவில் இடம்பெற்று வரும் புதிய சுற்று போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல், அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டார் அதிகாரிகள் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்தப் பேச்சுவார்த்தை உடன்பாடு ஒன்றை எட்டத் தவறி வருகிறது. காசாவில் உள்ள பல பகுதிகளில் பாதுகாப்பை கட்டுப்படுத்துவதற்கு இஸ்ரேல் நிபந்தனை விதித்துவரும் அதேநேரம் காசாவில் இருந்து இஸ்ரேல் முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்தி வருகிறது. நன்றி தினகரன்
உக்ரைன் தலைநகரில் ரஷ்யா கடும் தாக்குதல்: மூவர் பலி
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய சரமாரியான தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேற்கு லுட்ஸ்க், கிழக்கு டினிப்ரோ மற்றும் தெற்கு சபோரிஜியா பகுதிகளில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், அண்மையில் உக்ரைன் படைகள் ரஷ்ய பகுதிகளுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், நேற்று (26) அதிகாலை உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியது.
தலைநகர் கீவில் குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், இந்த தாக்குதலால் நகரில் மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் தடைபட்டுள்ளதாகவும் கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
உக்ரைன் சுதந்திர தினத்தையொட்டி (ஓக. 24), ரஷ்யா தாக்குதல் நடத்த அதிக வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க தூதரகம் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்தது கவனிக்கத்தக்கது. நன்றி தினகரன்
விண்வெளியில் சிக்கியோர் பெப்ரவரியில் திரும்புவர்
இரண்டு மாதங்களுக்கு மேலாக விண்வெளியில் சிக்கியுள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவைச் சேர்ந்த இரு விண்வெளி வீரர்களும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் 2025 பெப்ரவரியில் பூமிக்கு திரும்பவுள்ளனர்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பர்ரி வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளிக்கு பயணித்த கோளாறுக்கு உள்ளான போயிங் ஸ்டார்லைனர் விண்களம் ஆளில்லாமல் பூமிக்கு திரும்பவிருப்பதாக நாசா தெரிவித்தது.
இந்த இரு விண்வெளி வீரர்களும் கடந்த ஜூன் 5 ஆம் திகதி எட்டு நாள் பயணமாகவே விண்வெளிக்கு சென்ற நிலையில் தற்போது பூமிக்கு திரும்ப சுமார் எட்டு மாதங்கள் விண்வெளியில் காத்திருக்க வேண்டி உள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் விண்வெளி செல்லவுள்ள ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்திலேயே பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நால்வர் செல்லும் அந்த விண்கலத்தில் இருவரை மாத்திரம் அனுப்பி எஞ்சிய இரு இருக்கைகளும் சுனிதா மற்றும் வில்மோர் இருவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment