மித்ர சக்தி போர் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய படையினர் நாடு திரும்பினர்
அஜித் தோவல் பிரதமருடன் சந்திப்பு இருதரப்பு உறவை வலுப்படுத்த உறுதி
நோயாளர்களை பராமரிப்போருக்கு யாழில் இலவச தங்குமிடம்
முன்னாள் MP டயனா பிணையில் விடுதலை
உள்நாட்டு சந்தையில் இஞ்சியின் விலை ரூ.3200 ஆக உயர்வு
மித்ர சக்தி போர் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய படையினர் நாடு திரும்பினர்
பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்திய-இலங்கை இராணுவத்தினரிடையே நடத்தப்பட்ட இராணுவப் கூட்டு பயிற்சியான மித்ர சக்தி’ பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்தியப் படையினர் நேற்று (25) நாடு திரும்பினர்.
இம்மாதம் 12 ம் திகதி இலங்கை வந்தடைந்த இந்தியப் படையினர் மாதுரு ஓயா பிரதேசத்தில் 12 நாட்கள் இலங்கை படையினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டனர். இங்கு இரு நாட்டுப் படையினருக்கும் கோட்பாட்டு விரிவுரைகள் மற்றும் நடைமுறை இராணுவப் பயிற்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைத்தது. இரு நாட்டு இராணுவ வீரர்களும் நவீன போர் தந்திரங்கள், தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடு தொடர்பான அனுபவங்களை பரிமாறிக் கொண்டனர், மேலும் இரு நாட்டு இராணுவத்தினருக்கு இடையே அறிவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஊடாக அவர்கள் தாய்நாடு திரும்பியதுடன் 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் மித்ரசக்தி’ பயிற்சியின் பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் தினேஷ் உடுகம உள்ளிட்ட இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் அவர்களை வழியனுப்பினர்.
நன்றி தினகரன்
அஜித் தோவல் பிரதமருடன் சந்திப்பு இருதரப்பு உறவை வலுப்படுத்த உறுதி
இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதால், பரஸ்பர நன்மைக்காக இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த வேண்டுமென, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்,நேற்று (29) கொழும்பில் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையுடனான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த இந்தியா விரும்புவதாகவும், முன்னுரிமை நலன்கள் குறித்து பிரதமரின் கருத்துக்களைக் கேட்டறிந்ததாகவும் அஜித் தோவல் தெரிவித்தார்.
பாரிய அளவிலான மற்றும் சிறிய அளவிலான மாற்று எரிசக்தி திட்டங்களுக்கு இந்தியா ஆதரவு அளித்ததற்கு பிரதமர் நன்றியும் தெரிவித்தார். நன்றி தினகரன்
நோயாளர்களை பராமரிப்போருக்கு யாழில் இலவச தங்குமிடம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ளக நோயாளர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கென, தங்குமிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வெளி மாவட்டங்களிலிருந்தும் யாழ். மாவட்டத்தின் தீவுப்பகுதியிலிருந்தும் வருவோர்.இந்த விடுதியில் இலவசமாகத் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களை பராமரிக்க வருவோருக்கே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த தங்குமிட வசதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலிருந்து 600 மீற்றர் தூரத்தில் இல. 76, வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ளது.
இந்த வசதியை பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ள நோயாளர் பராமரிப்பு சேவை நிலையத்துடன அல்லது 076 1000046 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.
இந்த சேவையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நலன்புரிச் சங்கமும், சைவத்தமிழ் நிறுவகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. நன்றி தினகரன்
முன்னாள் MP டயனா பிணையில் விடுதலை
இரட்டைக் குடியுரிமை பெற்றமை, உள்ளிட்ட மூன்று வழக்குகள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்ட நிலையில், டயனா கமகேவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் நேற்று (27) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
இதன் பின்னர், குற்றம் சுமத்தப்பட்டுள்ள டயானா கமகேவின் கைரேகைகளை பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நன்றி தினகரன்
உள்நாட்டு சந்தையில் இஞ்சியின் விலை ரூ.3200 ஆக உயர்வு
- கனமழையினால் இஞ்சிக்கு தட்டுப்பாடு
உள்நாட்டு சந்தையில் இஞ்சியின் விலை 3200 ரூபாவாக உயர்ந்துள்ளதால் இஞ்சியின் கேள்வி குறைந்துள்ளது.
விவசாயிகள் விதை இஞ்சியை விற்பனை செய்வதன் மூலம் விரைவான இலாபம் ஈட்டுவதாகவும், ஆனால் மருத்துவ குணம் கொண்ட இஞ்சி அல்லது உள்ளூர் இஞ்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் அண்மைக்காலமாக பெய்த கனமழையினால் பயிர்கள் நாசமடைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர். நன்றி தினகரன்
No comments:
Post a Comment