தமிழ்த் திரையுலகின் தவப் புதல்வனாக கருதப் படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இருபத்துமூன்றாவது நினைவு தினம் ஜூலை 21ம் திகதியாகும். நடிப்பில் சிகரம் தொட்ட அவரின் நடிப்பில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படம் என் மகன். தொடர்ந்து சிவாஜியின் நடிப்பில் படங்களை தயாரித்து வெற்றி கண்டு கொண்டிருந்த பாலாஜி தனது சுஜாதா சினி ஆர்ட்ஸ் மூலம் இப் படத்தை உருவாக்கியிருந்தார். வழக்கம் போல் ஹிந்தி படம் ஒன்றை தழுவியே படத்தை தயாரித்திருந்தார்.
பிரானும் செய்த இரண்டு வேடங்களையும் தமிழில் சிவாஜியே ஏற்று நடித்தார். ஆனாலும் தன்னுடைய நடிப்பாற்றலினால் இரண்டு பாத்திரங்களையும் இரு வேறு கோணத்தில் அணுகி நடித்திருந்தார் சிவாஜி. ஒரு சிவாஜி இளைஞனாக காதல், ஆட்டம், பாட்டம் என்று நடிக்க , மற்றைய சிவாஜி போலீஸ் சார்ஜெண்டாக , விறைப்பாகவும், முறைப்பாகவும் நடித்து ரசிகர்களை தன் பக்கம் திருப்பிக் கொண்டார். இந்த நடிப்பின் மறுபக்கம்தான் தங்கப் பதக்கம் எஸ் பி சௌத்ரியாக பரிணமித்தது.
இளம் சிவாஜி காதலிக்கிறார், காதலில் தோல்வி அடைகிறார், காதலியின் கண்களுக்கு புலப்படாமல் மறைந்து பதுங்குகிறார், கொள்ளை கூட்டத்தில் சிக்கி தடுமாறுகிறார், சார்ஜெண்ட் சிவாஜியின் வளர்ப்பு மகனாகி அவர்களுக்காக தியாகம் செய்கிறார். இது ஒரு மகனின் கதை. படத்தில் மற்றுமொரு மகன் இருக்கிறான். போலீஸ் ஐ ஜி யின் மகனான இவன் துஷ்டன் . தந்தையின் செல்வாக்கை பயன் படுத்தி எல்லாவித அட்டூழியத்தையும் செய்கிறான். வழக்கம் போல் இரண்டு மகன்களும் ஒருத்தியையேயே காதலிக்கிறார்கள் .
இப்படி சிவாஜியையே நம்பி உருவான என் மகனில் வில்லன்களுக்கு குறைவில்லை. பாலாஜி, சுந்தரராஜன், ஆர் எஸ் மனோகர், டி கே ராமசந்திரன், எல்லோரும் சேர்ந்து சதி செய்கிறார்கள். ஆனாலும் நடிப்பிலும் குறை வைக்கவில்லை. கதாநாயகியாக வரும் மஞ்சுளா அழகாக வருவதுடன் நடிப்பிலும் தனது திறமையை காட்டுகிறார். ரோஜாரமணி குறை வைக்கவில்லை.
சுந்தர்ராஜனுக்கு வழக்கமான அப்பா வேடத்துடன் வில்லன் வேடமும் சேர்ந்து கிட்டியது. இரண்டிலும் அவர் நடிப்பு ஓகே. மனோரமா, வி கே ராமசாமி புதுமணத் தம்பதிகள். சிவாஜியை பார்த்து மனோரமா ஏக்கப் பெருமூச்சு விடுவதும் , அதை கண்டு வி கே ஆர் பொருமுவதும் நல்ல தமாஷ். வி எஸ் ராகவன் படம் முழுதும் எனோ கத்திக் கொண்டே இருக்கிறார் . நீண்ட நாட்களுக்கு பிறகு டி கே ராமச்சந்திரனை காண கிடைத்தது. படத்தை தயாரித்த பாலாஜி கற்பழிப்பு காட்சி ஒன்றிலும் நடித்து வைத்தார்.
படத்தின் ஒளிப்பதிவை பழம் பெரும் ஒளிப்பதிவாளர் மஸ்தான் கவனித்துக் கொண்டார். ஊட்டியில் எடுக்கப்பட்ட இயற்கை காட்சிகள் கண்ணுக்கு குளிர்ச்சியாக அமைந்தன. சி வி ராஜேந்திரன் படத்தை அப்படியே ஹிந்தியில் இருந்து நகல் எடுத்து தமிழில் டைரக்ட் செய்தார்.
அன்றைய கால கட்டத்தில் பாலாஜி சிவாஜியை மட்டும் வைத்தே படங்களை தயாரித்துக் கொண்டிருந்தார். சிவாஜியைத் தவிர்த்து வேறு நடிகர்களை வைத்து குறைந்த பஜட்டில் கூட அவர் படம் தயாரிக்க முனையவில்லை . இதன் காரணமாக சிவாஜி, பாலாஜி கூட்டணி தொடர் வெற்றியை சந்தித்துக் கொண்டிருந்தது. அந்த வரிசையில் என் மகன் பட வெற்றியும் சேர்ந்து கொண்டது.
No comments:
Post a Comment