இந்தியன் – 2 : திரைப்படம் - விமர்சனம் ! சமூகத்தை திருத்த முயன்ற சாகச இந்தியன், திரைக்கதையில் சறுக்கிய பரிதாபம் ! ! முருகபூபதி


வட  இந்தியாவில் உத்தர பிரதேசத்தில்  ஹாத்ரஸில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் ஒரு சாமியாரின் கால் பதிந்த மண்ணை எடுக்க முனைந்து,  அந்த ஜன நெரிசலில் 122 பேரளவில்  பரிதாபமாக இறந்திருக்கும் காலப்பகுதியில்,

 தமிழ்நாடு கள்ளக்குறிச்சியில்  சாராயம் அருந்தி ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் அநியாயமாக சாகடிக்கப்பட்டிருக்கும் துயரம் கப்பிய காலப் பகுதியில், 

தமிழ் நாட்டில் நிலமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஒருவர் கைதாகியிருக்கும் வேளையில்,  சில அரசியல் தலைவர்கள் கூலிப்படைகளினால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில்,

ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு ஐநூறு கோடி ரூபாவுக்கு மேல்  செலவுசெய்து அதில் கலந்துகொண்ட  விருந்தினர்களுக்கு இரண்டு கோடி ரூபா மதிப்புள்ள கைக் கடிகாரங்கள் பரிசாக வழங்கப்பட்டிருக்கும் வேளையில்,

 இந்திய தேசத்தில் நீடித்திருக்கும்  ஊழலை,  சொத்து சேகரிப்பை ,


கருப்புப்  பணத்தை ஒழிக்கவேண்டும் என்ற குரலோடு லைக்கா சுபாஸ்கரனின் தயாரிப்பில் சங்கரின் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடித்த இந்தியன் – 2 திரைப்படம் வெளியாகியிருக்கிறது.

இந்தியன் 1996 ஆம் ஆண்டில் இதே சங்கரின் இயக்கத்தில் சுஜாதாவின் திரைக்கதை வசனத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையில் வெளிவந்து,  கமலுக்கு அவ்வாண்டில் சிறந்த நடிகருக்கான   தேசிய விருதும் கிடைத்தது.

28 வருடங்களுக்குப் பின்னர் அதாவது கால் நூற்றாண்டுக்குப் பின்பு,  இந்த 21 ஆம் நூற்றாண்டில் இந்தியன் 2 வெளிவந்துள்ளது.

இம்மாதம் 12 ஆம் திகதி உலகெங்கும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் காட்சிக்கு வந்திருக்கும் இந்தியன் 2 முதல் நான்கு நாட்களிலேயே நூறு கோடி ரூபாவை  வசூல் செய்திருக்கிறது என்ற செய்தியும் வெளியானது. 

இந்த விமர்சனத்தை நான் எழுதும்போது, அது இன்னும் எத்தனை கோடியை தாண்டியிருக்கும் என்பது இங்கு அவசியமில்லை.

ஐநூறு கோடி ரூபா செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் நடித்திருக்கும்  உலகநாயகன்  கமலின் சம்பளம் நூற்றி ஐம்பது கோடி ரூபா  எனவும் சொல்லப்படுகிறது.

இயக்குனர் சங்கர் முன்னர் இயக்கிய ஜென்டில்மென் , முதல்வன் ( அக்‌ஷன் கிங் அர்ஜுன் நாயகனாக நடித்தவை ) இந்தியன் ( கமல் நடித்து 1996 இல் வெளியானது ) அந்நியன்             ( விக்ரம் நடித்தது )  ஆகிய நான்கும் சமூகத்தில் அன்றாடம் நடக்கும் மோசடிகள், ஊழல்களுக்கு எதிராக பேசிய திரைப்படங்கள்.

அந்த வரிசையில்  1996 இல் வெளியான  இந்தியனின் இரண்டாம் பாகம் எனச்சொல்லிக்கொண்டு  28 வருடங்களின் பின்னர் இந்தியன் 2 வெளிவந்துள்ளது.


நான் வதியும் மெல்பனில் புறநகரமான மோர்வல் நகரத்தில் கடந்த 15 ஆம் திகதி இரவுக் காட்சிக்கு எனது மனைவியுடன் சென்றிருந்தேன்.

எனக்கு கடந்த 13 ஆம் திகதி பிறந்த தினம். அதனை முன்னிட்டு எனது இரண்டாவது மகள் பிரியாதேவி ஏற்பாடு செய்து தந்த பரிசுதான் இந்தியன் 2 இற்கான அனுமதிச்சீட்டு.

அன்று மோர்வல் திரையரங்கில் அந்தக்காட்சியை பார்த்தவர்கள் எங்களுடன் சேர்த்து மொத்தம் ஏழு பேர்தான்!

28 வருடங்களுக்கு முன்னர் பார்த்த இந்தியன் திரைப்படம் தந்த திருப்தியை, இரண்டாவது இந்தியன் தரவில்லை, பலத்த ஏமாற்றத்தையே தந்தது  என்பதை முதலிலேயே சொல்லிவிடுகின்றேன்.

 சங்கரின் திரைப்படம் என்றாலே பிரமாண்டம் என்பதுதான்


அடையாளம்.  ஆனால்,  அதனை அவர் கதையில் காண்பிக்காமல் காட்சிகளில் சித்திரிக்க முயன்றிருக்கிறார்.

இந்தியன் முதல் திரைப்படம்  ஒரே குடும்பத்திற்குள் தந்தைக்கும் மகனுக்கும் இடையிலிருந்த முரண்பாட்டை சித்திரித்தது .  கமல்  இரண்டு வேடங்களிலும் சிறப்பாக நடித்திருந்தார்.

தந்தை  சேனாதிபதியாக இந்தியன் தாத்தா வேடம் ஏற்று நடித்த அவருக்கு  அப்போது தேசிய விருதும் கிடைத்தது.

இந்தியன் 2 , நான்கு குடும்பங்களுக்குள் நடக்கும் கதையை சொல்லியிருக்கிறது.

புதிய  இந்தியன் 2 இல் தோன்றும் இந்தியன் தாத்தா ( கமல் ) - முதல் காட்சியிலேயே தான் 40 வயதிற்குட்பட்டவர்களுக்காகத்தான் மீண்டும் வந்திருப்பதாக சொல்கிறார்.

அடுத்துவரும் 2025 ஆம் ஆண்டில் இந்தியன் 3 வெளியாகவிருப்பதாகவும் செய்தி வெளிவந்துள்ளது.  இதில் வரப்போகும் இந்தியன் தாத்தா, இருபது வயதிற்குட்பட்டவர்களுக்காகத்தான் மீண்டும் வந்திருக்கின்றேன் எனச்சொல்லப் போகின்றாரோ தெரியவில்லை ? !


தேசத்தை சுத்தப்படுத்துவதற்கு முன்னர் வீட்டை சுத்தப்படுத்தவேண்டும் என்ற தொனியில் பேசத்தொடங்கும் திரைக் கதைதான் இந்தியன்
2.

அதற்காக இந்தத்திரைப்படத்தில் நான்கு குடும்பங்களும் அங்கிருந்து போராடத் தொடங்கும் நான்கு இளம் தலைமுறையினரும் வருகிறார்கள்.

இந்நால்வரில் ஒரு இளம் யுவதியும்,  மூன்று இளைஞர்களும் இடம்பெறுகிறார்கள்.

இவர்களின் கதை தனியாகவும் தாய்வானில் தைப்பேயிலிருந்து வரும் இந்தியன் தாத்தா சேனாபதியின் கதை தனியாகவும் வந்து இணைகின்றது.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பயணித்த விமானம் தாய்வானில்தான் விபத்துக்குள்ளாகி அவரது உடல் காணாமல் போனது.

1996 இல் வெளியான இந்தியன் திரைப்படம்,   நாயகன் சேனாபதி  ( தந்தை கமல் ) தனது மகன் சந்துருவை ( மகன் கமல் ) விமான நிலைய ஓடுபாதையில் தனது வர்மக்கலையினால் கொலைசெய்துவிட்டு தப்பிச் செல்வதாக முடிகிறது.

இந்தியன் 2 இல் தோன்றும்  இந்தியன் தாத்தா சேனாபதி எங்கே இருக்கிறார்?  என்பது தெரியாமல், இந்தியாவில் நிலவும் ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்காக அந்த நான்கு இளம் தலைமுறையினரும் தங்கள் சமூக வலைத்தள ஊடகம் ஊடாக (You tube Chenal ) தேடுகிறார்கள்.

இந்தியன் தாத்தா முற்றிலும் வித்தியாசமான தோற்றத்துடன் தாய்வான் தைப்பேயிலிருந்து இந்தியாவுக்கு வருகிறார். 

இதன் மூலம்  அவரை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மறு அவதாரம் என காட்ட முனைகிறார்களா..? என்பது தெரியவில்லை!?  

அவரை மீண்டும் கைதுசெய்வதற்காக 96 இல் அவரை கைதுசெய்ய முயன்று அவரின் வர்மக்கலை தாக்குதலினால் பாதிக்கப்பட்ட   ஒரு பொலிஸ் அதிகாரியின் மகனாக  ( பாபி சிம்கா ) பாதுகாப்புத்துறை அதிகாரியாக காத்திருக்கிறார்.

விமான நிலையத்தில் காத்திருக்கும்  இவரது பார்வையில் மண்ணைத் தூவி விட்டு தப்பிவிடும் இந்தியன் தாத்தா, தனது வர்மக்கலை தாக்குதலின் மூலம் மேலும் சில ஊழல்வாதிகளையும் நிதிமோசடிகள் மூலம் முறைகேடாக சொத்து சேர்த்தவர்களையும் அதே வர்மக்கலை தாக்குதல் மூலம்  சித்தப்பிரமை பிடிக்க வைத்து வாயில் நுரை கக்க பாட வைக்கிறார். தெருவிலே ஓட வைக்கிறார். 

அதில் ஒருவர் தங்க மாளிகையில் வாழ்ந்து தங்கத்தால் அமைக்கப்பட்ட மலகூடத்தை தனது பாவனைக்கு வைத்திருப்பவர்.

இந்திய மாநிலங்கள் அனைத்திலும் நடக்கும் ஊழல் மோசடிகளை, சொத்து சேகரிப்பை  அம்பலப்படுத்தி சம்பந்தப்பட்டவர்களை ஒழித்துக்கட்ட துப்பாக்கியோ, ஏ. கே. 47 இயந்திரத் துப்பாக்கியோ இந்தியன் தாத்தாவுக்கு தேவைப்படவில்லை.

கைவிரல்களே அவருக்குப்போதும்.

அவரிடம் இருக்கும் ஆயுதம் அது மாத்திரம்தான்.

அதற்காக இத்தனை பொருட் செலவில் பிரமாண்டமான ஒரு திரைப்படமா..?

நாட்டில் ஊழல் மோசடிகளை கண்டுபிடித்து ஒழிக்க முன்வரும்,  நான்கு இளம் தலைமுறையினரும்  தங்கள் குடும்பத்தில் இருக்கும் தாய், தந்தை, மற்றும் உறவினர்கள் அந்த விடயங்களில் சம்பந்தப்பட்டிருப்பது கண்டு,  அரசுக்கு காட்டிக்கொடுத்து தண்டனை பெற்றுக்கொடுக்கும்போது அதில் ஒரு தாய் அவமானம் தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொள்கிறாள்.

அத்தோடு திரைக்கதையும்,  சென்ற திசையிலிருந்து முற்றாக மாறிவிடுகிறது.

அந்த ஒரு மரணமே அந்த இளம் தலைமுறையினரையும் அவர்களின் பின்னால் திரண்டு வந்த மக்களையும் நேர்மையை விரும்பிய இந்தியன் தாத்தாவுக்கு எதிராக மாறித் திருப்பிவிடுகிறது.

தற்கொலை செய்துகொண்ட தாயின் பூதவுடலுக்கும் கொள்ளி வைக்கும் உரிமை அந்த நேர்மையான மகனுக்கு இல்லாமல் செய்யப்படுகிறது.

அதற்கெல்லாம் இந்தியன் தாத்தாதான் காரணம் என்று ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு அவரை தாக்குகின்றனர்.

 “ சமூகம்  இப்படித்தான் எதிர்மறையாகச் சிந்திக்கும். ஆனால், அது எவ்வாறு நேர்மறையாகச் சிந்திக்கவேண்டும்   என்று சொல்ல வேண்டியவர்தான்  திரைக்கதை எழுத்தாளர்.

இந்தியன் தாத்தா இறுதியில்  கைதாகிறார்.  கைதுசெய்த அதிகாரியையும் அவர் தனது வர்மக்கலை தாக்குதலினால் உடல் ஊனமடையச் செய்துவிடுகிறார்.

அவரை குணப்படுத்தவேண்டுமானால், இந்தியன் தாத்தாவின் கைகளில் மாட்டப்பட்ட விலங்குகள் கழற்றப்பட வேண்டுமாம். அவரால் மட்டும்தான் அந்த இளம் அதிகாரியை குணப்படுத்த முடியுமாம்.

இந்தியன் தாத்தா, அந்த இளம் அதிகாரியை ஒரு அம்பூலன்ஸில் எடுத்துக்கொண்டு தப்பிச்செல்கிறார்.

இந்தியன் முதல் படத்தில் வந்த மூத்த அதிகாரி  இந்தப்படத்திலும் வந்து ( நெடுமுடி வேணு ) சொல்கிறார்:

 “ மீண்டும் திமிங்கிலம் கடலுக்குச் சென்றுவிட்டது 

திமிங்கிலம் கரைக்கு வந்தால், என்னவாகும் ?  என்பதை குழந்தையும் சொல்லிவிடும்.

இந்த இலட்சணத்தில், இந்தியன் என்ற திமிங்கிலம் 28 ஆண்டுகளுக்குப்பின்னர் மீண்டும் கரைக்கு வந்துவிட்டு,  திரும்பவும் கடலுக்குள் தப்பிச்சென்றுவிட்டிருக்கிறது.

மீண்டும் 2025 இல் திரும்பி வரும்போது பார்த்துக்கொள்வோம்.

அதற்கிடையில் இந்த பதிவின் தொடக்கத்தில் சொல்லப்பட்ட செய்திகள் மீண்டும் இந்தியாவில் நடந்துகொண்டுதானிருக்கும்.

ஒரு தேசத்தில் கல்வி, உணவு, உறைவிடம் ( நிலம் – வீடு ) மருத்துவம் பிரதானமானவை. இவற்றில்  நடக்கும் ஊழல் மோசடிகளை  இரண்டு விரல்களின் உதவிகொண்டு வர்மக்கலை தாக்குதல் மூலம் முடிவுக்கு கொண்டுவந்துவிடலாம் என்று இதுபோன்ற திரைக்கதை எழுதுபவர்களும் இயக்குநரும் நினைக்கிறார்கள்.

இதன் மூலம் கோடி கோடியாக சம்பாதிக்க முடியும் என்று தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்களும் நம்புகிறார்கள்.

இந்தியன் 2 திரைப்படம் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளையில்,  சென்னையில்  அதன் படப்பிடிப்பு தளத்தில்  இராட்சத கிரேன் விழுந்து மூன்று தொழில் நுட்ப உதவியாளர்கள் கொல்லப்பட்டதையும்  சிலர் படுகாயமடைந்ததையும் நாம் மறந்துவிட முடியாது.

அவர்களை மறக்காமல் இந்தியன் 2 தொடக்கத்தில் வரும் எழுத்தோட்டத்தில் நினைவுபடுத்தியுள்ளனர்.  அத்துடன் இத்திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் விவேக், மற்றும் மனோபாலாவும் கேரள நடிகர் நெடுமுடி வேணுவும் தற்போது உயிரோடு இல்லை.

ஊழலும் மோசடியும் நிறைந்த தேசத்தை - சமூகத்தை வர்மக்கலை தாக்குதல் மூலம்  திருத்த முயன்ற சாகச இந்தியன்,  திரைக்கதையில் சறுக்கிய பரிதாபத்தைத்தான் காணமுடிந்திருக்கிறது.

இதுபோன்ற திரைப்படங்களில்  தோன்றும் உலகநாயகன் நாட்டைத் திருத்துவதற்காக  தானும்  ஒரு அரசியல் கட்சி நடத்துகிறார். அதன் கொள்கைப் பிரகடனத்தில்  வர்மக்கலை தாக்குதல்  பற்றிய  விளக்கமும் இருக்கிறதா..? 

---0---

letchumananm@gmail.com  -  முருகபூபதி

 

 

 

 

 

 

No comments: