July 20, 2024 6:00 am
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பிரபலமாக உள்ளார். அவருடைய யூடியூப்பில் சுமார் 2.5 கோடிக்கும் மேற்பட்டோர் நரேந்திர மோடியைப் பின்தொடர்கின்றனர். இதன் மூலம் யூடியூப் சமூக வலைத்தளத்தில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார்.
பேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டகிராம் போன்றவற்றிலும் அவர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
இந்தச் சூழலில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பிரதமர் நரேந்திர மோடியை பின்தொடர்வோர் எண்ணிக்கை 10 கோடியை தாண்டி உள்ளது. இதன் மூலம் எக்ஸ் தளத்தில் செல்வாக்கு மிக்க உலக தலைவர்களில் முதலிடம் பிடித்துள்ளார் மோடி.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை, எக்ஸ் தளத்தில் 3.81 கோடி பேர் பின்தொடர்கின்றனர். துபாய் மன்னர் ஷேக் முகமதுவை 1.12 கோடி பேரும், கத்தோலிக்க மதத்தலைவர் பரிசுத்த பாப்பரசரை 1.85 கோடி பேரும் பின்தொடர்கின்றனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை எக்ஸ் தளத்தில் 2.64 கோடி பேரும், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை 2.75 கோடி பேரும், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவை 1.99 கோடி பேரும், மேற்குவங்க முதல்வர் மம்தாவை 74 இலட்சம் பேரும் பின்தொடர்கின்றனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை 6.41 கோடி பேரும், பிரேசில் கால்பந்து வீரர் நெய்மரை 6.36 கோடி பேரும், அமெரிக்க கூடைப்பந்து வீரர் லீபிரோன் ஜேம்ஸை 5.29 கோடி பேரும், அமெரிக்க ெபாப் பாடகி டெய்லர் ஸ்விப்டை 9.53 கோடி பேரும் பின்தொடர்கின்றனர்.
இது குறித்து இந்தியப் பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட பதிவில், “எக்ஸ் தளத்தில் 10 கோடி பேர் பின்தொடர்கின்றனர். இந்த தளத்தில் விவாதம், கருத்துகள், மக்களின் ஆசீர்வாதங்கள், ஆக்கபூர்வமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவை வருங்காலத்திலும் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடியை 3 கோடி பேர் புதிதாக பின்தொடர்ந்துள்ளனர்.
உலக நாடுகளின் அரசியல் தலைவர்களில் அதிகம் செல்வாக்கு மிக்க தலைவராக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திகழ்கின்றார் என்பது இதன் மூலம் உறுதியாகின்றது.
நரேந்திர தாமோதரதாஸ் மோடி செப்டம்பர் 17 1950 ஆம் ஆண்டு குஜராத்தில் உள்ள மேஹ்சானா மாவட்டத்தில் அமைந்துள்ள வத்நகரில் பிறந்தார். எந்த அரசியல் பின்னணியும் இல்லாத நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த தாமோதர் தாஸ் முல்சந் மோடி_ – ஹீராபேன் தம்பதியருக்கு 3 ஆவது மகனாகப் பிறந்தார் நரேந்திர மோடி. இத்தம்பதிக்கு 6 மகன்கள் உள்ளனர்.
பாடசாலைப் பருவத்திலேயே ஆர்.எஸ்.எஸ் மீது கொண்ட பற்று காரணமாக தனது 8 ஆவது வயதில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் மோடி.
குடும்பச் சூழல் காரணமாக தனது 20 வயதில் குஜராத்தின் மிகப்பெரிய நகரமான அகமதாபாத்துக்கு குடிபெயர்ந்தார். அதன் பின்னர் 1987 ஆம் ஆண்டு பா.ஜ.கவில் தன்னை இணைத்துக்கொண்டு அதில் உறுப்பினராகச் சேர்ந்து கட்சிப் பணியாற்றியுள்ளார். உறுப்பினாராகச் சேர்ந்த 1 வருட காலத்தில், குஜராத் மாநில பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து சோம்நாத் முதல் அயோத்தி வரையிலான அத்வானியின் ரத யாத்திரை மற்றும் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையிலான யாத்திரைக்கான ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பு மோடிக்கு வழங்கப்பட்டது.
இதில் அவர் சிறப்பாக செயல்பட்டதை கவனித்த அன்றைய பா.ஜ.க தலைவரான அத்வானி, 1998ஆம் ஆண்டு இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் நடந்த தேர்தல் பொறுப்பாளராக மோடியை நியமித்தார். அதன் பிறகு 1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக பதவியேற்ற பொழுது, நரேந்திர மோடிக்கு ‘தேசிய செயலாளர்’ பதவியும் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து 2001ஆம் ஆண்டு குஜராத் முதல்வர் கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற மோடி, 2001, ஒக்டோபர் 7 ஆம் திகதி குஜராத் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால், அடுத்த ஆண்டே ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கிய ‘கோத்ரா ரயில் எரிப்பு’ சம்பவத்திற்குப் பொறுப்பேற்று 2002 ஆம் ஆண்டு தனது பதவியை இராஜினாமா செய்தார். ஆனால், அதற்கு அடுத்த இடைத்தேர்தல் மற்றும் 2007, 2012 ஆகிய தேர்தல்களிலும் வெற்றி பெற்று 4 முறை குஜராத் மாநில முதல்வராக ஆட்சி செய்துள்ளார். ஒக்டோபர் 2001 முதல் மே 2014 வரையில் அவர் குஜராத் முதல்வராக இருந்ததால், குஜராத் மாநிலத்தில் மிக நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையும் நரேந்திர மோடிக்கு உண்டு.
மோடியின் பா.ஜ. கட்சி – 2014 இல் 282 இடங்களையும், 2019 தேர்தலில் 303 இடங்களையும் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஆனால் இந்த முறை 240 இடங்களை வென்று – 272 பெரும்பான்மைக்கு 32 குறைவாக உள்ளது.
இந்தியாவின் வரலாற்றைப் பொறுத்த அளவில், 1947 தொடங்கி 1952 வரை சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு இருந்தார்.
1952 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் 1957 வரை இரண்டாவது முறையும் நேரு பிரதமராக பதவி வகித்தார்.
அடுத்து 1957 இல் நடந்த லோக்சபா தேர்தல்களிலும் நேரு வெற்றி பெற்றார். இறுதியாக 1964 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி நேரு உயிரிழந்தார். அவர் மறையும் வரை பிரதமராகவே தொடர்ந்தார்.
இந்திரா காந்தியும் கூட 3 முறை பிரதமராக இருந்துள்ளார். ஆனால் நேருவைப் போல தொடர்ந்து இருந்ததில்லை.
1966 ஆம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரியின் மறைவைத் தொடர்ந்து 1967 இல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று இந்திரா காந்தி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன் பின்னர் 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். 1971இல் இந்தியா-_பாகிஸ்தான் போர் நடைபெற்றது. பின்னர் வங்கதேசம் உருவாக்கப்பட்டது. பின்னர் 1975 இல் அவசரகாலத்தை கொண்டு வந்தார். அப்போது நடந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.
இருப்பினும் அடுத்து வந்த பிரதமர்களின் ஆட்சிகள் கவிழ்ந்தன. இதனால் கடைசியாக 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment