அடுத்த ஆண்டு முதல் e – Passport அறிமுகம்
திடீரென கடவுச்சீட்டு பெற திணைக்களத்தில் குவிந்த மக்கள்
ஆந்திராவின் நீர்வேளாண்மை திட்ட பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்
மன்னாரில் ஜூனியர் சுப்பர் சிங்கர் போட்டி
கவிஞர், சிறுகதை எழுத்தாளர் இஸ்மத் பாத்திமா நேற்று காலமானார்
யாழ். போதனா வைத்தியசாலைக்கு அமைச்சர் ரமேஷ் பத்திரன விஜயம்
யாழ்ப்பாணத்து மக்களுக்காக உண்மையாக செயற்பட்டேன்
அடுத்த ஆண்டு முதல் e – Passport அறிமுகம்
- விண்ணப்பிக்கும் செயன்முறை நாளை முதல் ஆரம்பம்
அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இலங்கையர்களுக்கு மிகவும் பாதுகாப்பான , செயற்திறனுடன் கூடிய e – Passport முறையை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டிற்கான விண்ணப்பிக்கும் செயன்முறை புதிய செயன்முறையாக நடைமுறைப்படுத்தப்படும்.
2024.07.16 ஆம் திகதியிலிருந்து கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிப்பதற்கு http://www.immigration.gov.lk என்ற இணையத்தள முகவரி ஊடாக பூரண பதிவினை மேற்கொள்ள வேண்டும். குறித்த தினத்திலிருந்து பதிவுகளை மேற்கொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கென இந்த செயன்முறை நாளைய தினத்திலிருந்தே ஆரம்பிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.இதற்கமைய இன்றைய தினம் வரை ஏற்கனவே பின்பற்றப்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்ப முறையே பின்பற்றப்படுமென்பதை கவனத்திற்கொள்ளுமாறு திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து குடிவரவு குடியகல்வு திணைக்களம் கீழுள்ள இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
நன்றி தினகரன்
திடீரென கடவுச்சீட்டு பெற திணைக்களத்தில் குவிந்த மக்கள்
- இணையவழியில் முன் பதிவு செய்வது அவசியமானது
இன்று (19) காலை பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் வந்திருந்தனர்.
இந்நிலையில் குறிப்பிட்ட திகதி மற்றும் நேரத்தை பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே இன்று வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக இன்று (19) முதல் புதிய முறைமையின் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பம் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கடந்த 17 ஆம் திகதி அறிவித்திருந்தது.
அதன்படி, ஒரு விண்ணப்பதாரர் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற அல்லது புதுப்பிக்க http://www.immigration.gov.lk இணையத்தளத்தின் மூலம் திகதி மற்றும் நேரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இணையவழியில் பதிவு செய்ததன் பின்னர் முன்னுரிமை முறையின் படி கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்திருந்தது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இது ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவை ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.
இவ்வாறானதொரு பின்னணியில் இன்று குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக நீண்ட வரிசைகளும், நெரிசலும் காணப்பட்டதுடன் பொலிஸாருக்கும், கலகத் தடுப்புப் பிரிவினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு, பின்பற்றப்பட்ட பழைய கடவுச்சீட்டு விண்ணப்ப முறையே பின்பற்றப்படுமென்பதை கவனத்திற்கொள்ளுமாறு திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
நன்றி தினகரன்
ஆந்திராவின் நீர்வேளாண்மை திட்ட பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்
ஆந்திரா மாநிலத்தின் இராமகுண்டம் பகுதிக்கு விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தொட்டிகளில் மீன் வளர்க்கும் முறைமையையும் தொட்டிகளின் மேல் சூரியப் படல் (Solar panel) தொழில்நுட்பத்தினூடாக மின் உற்பத்தி செய்யப்படும்
திட்டத்தையும் பார்வையிட்டார். இதுபோன்று இரண்டு வகையான திட்டங்களை இலங்கையில் மேற்கொள்வது குறித்தும் அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.
இதனால், நீர்வேளாண்மையில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள் கூடுதல் நன்மையை அடைவரென்றும் அதிகாரிகளிடம் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார். நன்றி தினகரன்
மன்னாரில் ஜூனியர் சுப்பர் சிங்கர் போட்டி
வடமாகாண செல்லக் குரலுக்கான தேடல் 2024 ஜூனியர் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சி போட்டிக்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் சனிக்கிழமை மன்னார் குளிரூட்டப்பட்ட நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் முதலாவது சுற்றுப் போட்டி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 21ஆம் திகதி மன்னர் குளிரூட்டப்பட்ட நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வின் போது இசை இல்லாது சொந்தக் குரலில் மட்டுமே தேர்வு நடைபெறவுள்ளது. முதலாம் சுற்றில் தெரிவு செய்யப்படும் போட்டியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (21) இரண்டாம் சுற்று நடைபெறும். இரண்டாம் சுற்றின் போது ஒரு பக்தி பாடல், ஒரு பாரம்பரிய இசை பாடல் (கிராமிய), ஒரு துள்ளல் இசை பாடல் (Classical Music) ஆகியவற்றை பயிற்சி செய்து அதற்குரிய கரோக்கிகளை +94 78 888 8585 என்ற whatsapp க்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்நிலையில் உங்களது இலக்கத்தை குறிப்பிட்டு அனுப்பி வைக்க வேண்டுமென ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். நன்றி தினகரன்
கவிஞர், சிறுகதை எழுத்தாளர் இஸ்மத் பாத்திமா நேற்று காலமானார்
கவிஞரும் எழுத்தாளரும் பேருவளை, சீனன்கோட்டை ஆரம்ப பாடசாலையின் முன்னாள் அதிபருமான ஜனாபா இஸ்மத் பாத்திமா ரிப்தி நேற்று முன்தினம் (16) காலமானார். சிறந்த அறிவும் ஆற்றலும் ஆளுமையும் கொண்ட இவர், கல் எளிய அலிகார் ம.வி, திஹாரி தாருஸ்ஸலாம், கஹடோவிட பாலிகா, அல்லலமுல்ல ஸாஹிரா என்பவற்றில் அதிபராக, பிரதி அதிபராக கடமையாற்றினார்.
ஆங்கில ஆசிரியர், எழுத்தாளர் என பன்முக ஆளுமை கொண்ட இவர், தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் நீண்டகால வாசகராகவும் செயற்பட்டார். சிறிதுகாலம் நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் காலமானார். அன்னாரின் ஜனாஸா நேற்று (17) அஸர் தொழுகையைத் தொடர்ந்து நாம்புளுவ முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் ஜனாஸாவில் உலமாக்கள், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பாடசாலை அதிபர்கள், கல்வியியலாளர்கள், மாணவர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். அன்னாரின் மறைவு குறித்து சீனன்கோட்டை ஆரம்ப பாடசாலை அனுதாப செய்தியொன்றையும் விடுத்துள்ளது. நன்றி தினகரன்
யாழ். போதனா வைத்தியசாலைக்கு அமைச்சர் ரமேஷ் பத்திரன விஜயம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உள்ளிட்ட சுகாதார அமைச்சு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று புதன்கிழமை விஜயம் செய்துள்ளனர்.
இந்த விஜயத்தின் போது வைத்தியசாலை வளாகத்தில் சுகாதார அமைச்சர் மரக் கன்றையும் நாட்டி வைத்துள்ளார்.
அத்தோடு விடுதிகள், சத்திரசிகிச்சை பிரிவு, வைத்தியசாலையின் அரும்பொருட் காட்சியகம் ஆகியவற்றையும் அமைச்சர் பார்வையிட்டுள்ளதுடன், குருதி மாற்று சிகிச்சைக்கான உபகரணம் ஒன்றையும் வழங்கி வைத்துள்ளார். சுகாதார அமைச்சரின் இந்த விஜயத்தின் போது சுகாதார அமைச்சின் செயலாளர் பி.ஜி.மகிபால, பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கயன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
யாழ். விசேட நிருபர் - நன்றி தினகரன்
யாழ்ப்பாணத்து மக்களுக்காக உண்மையாக செயற்பட்டேன்
மருத்துவத்துறை மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை -அர்ச்சுனா
யாழ்ப்பாணத்து மக்களுக்காக உண்மையாக நான் செயற்பட்டேன். வைத்தியத்துறை மாபியாக்களுக்கு அது பிடிக்கவில்லை. அதனால் என்னை இங்கிருந்து விரட்டுகின்றனர். ஆனால், இந்த மக்களின் அன்பு என்பது எனது இதயத்துடிப்பு. இந்த மண்ணிலிருந்து விடைபெறுகின்றேன் என சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய
அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை என்ற வைத்தியசாலை இல்லாதது போல அரசியல்வாதிகள் அமைச்சரிடம் பேசும்போது நாம் பேசி பயனில்லை எனவும் கவலை வெளியிட்டார். சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரத்தில் நீடித்து வந்த சர்ச்சைகளுக்கு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (19) நடைபெற்றது.
இதன் போது இராமநாதன் அர்ச்சுனா மேலும் தெரிவிக்கையில்,
ஒரு வைத்தியருக்காக பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுப்பட்டது உலக வரலாற்றில் இதுவே முதல் முறை.
தென்மராட்சி மக்களுக்கு நான் எப்போதும் விசுவாசமாக இருப்பேன். இந்த மக்களின் அன்பு என்பது எனது இதயத்துடிப்பு. இந்த மண்ணில் இருந்து விடைபெறுகின்றேன். சுகாதார அமைச்சிற்கு வருமாறு நேற்று முன்தின திகதியிட்டு நேற்று எனக்கு கடிதம் கிடைத்துவிட்டது.
கொழும்பு சென்று இன்று அங்கு புதிய நியமனத்தைப் பெற்றுக் கொண்டு நான் முன்னர் கடமையாற்றிய பேராதனை வைத்தியசாலைக்குச் சென்று கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளேன் என்றார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment