'காசாவில் அனைத்து போர் விதிகளும் மீறல்' மத்திய பகுதியில் தாக்குதல் தீவிரம் ரபா நகரில் டாங்கிகள் முன்னேற்றம்
கொவிட் தொற்றுக்கு மத்தியில்: தேர்தலில் இருந்து விலக பைடனுக்கு புது அழுத்தம்
டீஸ்டா நதி நீரைப் பகிர்ந்து கொள்ள இந்தியாவும் பங்களாதேசமும் இணக்கம்
இந்திய விமானப்படை பங்குபற்றலுடன் அவுஸ்திரேலியாவில் கூட்டுப்பயிற்சி
பயணிகளுடன் கடலில் மூழ்கிய எண்ணெய்க் கப்பல்
காசாவில் குண்டு மழைக்கு மத்தியில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஆளில்லா விமானத் தாக்குதல்
உலகெங்கும் இணைய சேவைகளில் பாதிப்பு
'காசாவில் அனைத்து போர் விதிகளும் மீறல்' மத்திய பகுதியில் தாக்குதல் தீவிரம் ரபா நகரில் டாங்கிகள் முன்னேற்றம்
காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் தொடரும் நிலையில், அங்கு அனைத்து போர் விதிகளும் மீறப்பட்டிருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்தின் ஆணையாளர் நாயகம் பிலிப்பே லசரினி சாடியுள்ளார்.
கடந்த ஒக்டோர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான பலஸ்தீன போராளிகளின் தாக்குதலைத் தொடர்ந்து ஆரம்பமான இந்தப் போரில் அண்மைய தினங்களாக இஸ்ரேலியப் படை பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ஐ.நாவினால் நடத்தப்படும் பாடசாலைகள் மற்றும் நிலையங்கள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
இவ்வாறான தாக்குதல்கள் கிட்டத்தட்ட தினசரி இடம்பெறுவதாக குறிப்பிட்டிருக்கும் லசரினி, ‘பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்தின் ஆறு பாடசாலைகள் உட்பட, கடந்த 10 நாட்களில் குறைந்தது எட்டு பாடசாலைகள் தாக்கப்பட்டுள்ளன’ என்று எக்ஸ் சமூகதளத்தில் பதிவிட்டுள்ளார்.
‘இந்தப் போர் காசாவில் உள்ள சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் குழந்தைப் பருவம் மற்றும் கல்வியை பறித்துள்ளது. பாடசாலைகள் இலக்காகக் கூடாது’ என்று வலியுறுத்திய அவர், ‘காசாவில் அனைத்து போர் விதிகளும் மீறப்பட்டுள்ளது’ என்றார்.
எனினும் காசாவில் இஸ்ரேல் 286 ஆவது நாளாக நேற்றைய தினத்திலும் தனது கடுமையான தாக்குதல்களை தொடர்ந்தது. மத்திய காசாவில் இஸ்ரேலியப் படை நடத்திய செல் குண்டு தாக்குதல்களில் ஏழு பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் அல் சாவியா சிறு நகரில் உள்ள வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. அல் நுசைர் அகதி முகாமில் இருக்கும் அப்துல் அசாம் பள்ளிவாசல் மீது இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அல் புரைஜ் அகதி முகாமில் வீடு ஒன்றின் மீது நேற்றுக் காலை இடம்பெற்ற தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு மேலும் 7 பேர் காயமடைந்திருப்பதோடு 4 சிறுவர்கள் காணாமல்போயிருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.
தவிர இஸ்ரேலியப் படை தெற்கு நகரான கான் யூனிஸின் கிழக்கு பகுதியிலும் ரபா நகரின் கிழக்கு பகுதியிலும் வீடுகள் மீது குண்டுகளை வீசியதாக செய்தி வெளியாகியுள்ளது.
ரபா நகரில் மேற்கு பக்கத்தில் ஆழ ஊடுருவும் இஸ்ரேலிய டாங்கிகள் மேட்டு நிலம் ஒன்றில் நிலைகொண்டிருப்பதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு பல சுரங்கப்பாதைகளை கண்டுபிடித்ததாகவும் பல துப்பாக்கிதாரிகளை கொன்றதாகவும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
தென்மேற்கு ரபாவில் இஸ்ரேலிய படைகள் மீது நேற்று மோட்டார் குண்டுகளை வீசியதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஒன்பது மாதங்களுக்கு மேலாக போர் நீடிக்கும் நிலையிலும் ஹமாஸ் தலைமையிலான பலஸ்தீன போராளிகளினால் இஸ்ரேலிய படைகள் மீது டாங்கி எதிர்ப்பு ரொக்கெட்டுகள் மற்றும் மோட்டார் குண்டுகள் அதேபோன்று அவ்வப்போது இஸ்ரேல் மீது ரொக்கெட் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்த முடிந்துள்ளது.
வடக்கு காசாவில் போர் உக்கிரம் அடைந்ததை அடுத்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் ரபாவில் அடைக்கலம் பெற்றிருந்தனர். எனினும் இங்கு கடந்த மே மாத ஆரம்பத்தில் இஸ்ரேல் படை நடவடிக்கையை ஆரம்பித்ததை அடுத்து பெரும்பாலான பலஸ்தீனர்கள் மீண்டும் ஒருமுறை வெளியேற்றப்பட்டனர்.
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 54 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 38,848 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 89,459 பேர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளும் ஸ்தம்பித்துள்ளன. ஐ.நா பாதுகாப்புச் சபையில் நேற்று முன்தினம் உரையாற்றிய பலஸ்தீன தூதுவர் ரியாத் மன்சூர், ‘வரலாற்றில் அதிகம் ஆவணப்படுத்தப்பட்ட இனப்படுகொலை ஒன்றே காசாவில் நிகழ்ந்து வருகிறது’ என்றார்.
இதில் உரையாற்றிய ஐ.நாவுக்கான சீன தூதுவர் பு கொங், காசாவில் உடன் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தவும், இரு நாட்டுத் தீர்வை செயற்படுத்தவும் வலியுறுத்தியதோடு, காசா மக்கள் மீது நடத்தப்படும் கூட்டுத் தண்டனையை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
எனினும் பலஸ்தீன நாடு ஒன்றை நிராகரிக்கும் தீர்மானம் இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் நேற்று அதிக பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. வலதுசாரி கட்சிகள் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி அரசைச் சேர்ந்தவர்களால் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு பாராளுமன்றத்தில் 68 ஆதரவு வாக்குகள் கிடைத்திருப்பதோடு எதிராக ஒன்பது வாக்குகள் மாத்திரமே பதிவாகியுள்ளன.
இஸ்ரேலிய பாராளுமன்றத்தின் இந்தத் தீர்மானம் இரு நாட்டுத் தீர்வை எதிர்ப்பதாக உள்ளது என்று பலஸ்தீன தேசிய முன்முயற்சியின் செயலாளர் நாயகம் முஸ்தபா பார்கூத்தி தெரிவித்துள்ளார்.
‘இந்தத் தீர்மானம் பலஸ்தீனர்களுடனான அமைதியை நிராகரிப்பதாகவும் ஒஸ்லோ உடன்படிக்கையின் மரணத்தை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதாகவும் உள்ளது’ என்று அவர் எக்ஸ் சமூகதளத்தில் தெரிவித்துள்ளார்.
1993 இல் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன தலைவர்கள் இடையே கைச்சாத்தான ஒஸ்லோ உடன்படிக்கை, இஸ்ரேலிய நாட்டுடன் பக்கத்து பக்கத்தில் வாழும் சாத்தியமான மற்றும் இறைமை உடைய பலஸ்தீன நாடு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கிறது.
காசாவில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக இடம்பெற்று வரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 39 ஆயிரத்தை நெருங்கி இருப்பதோடு இஸ்ரேலிய முற்றுகையால் அங்கு உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
காசா மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு காசா கரையில் இஸ்ரேல் 230 மில்லியன் டொலர் செலவில் அமைத்த தற்காலிக துறை முகத்தை அது அகற்றியுள்ளது. இந்தத் தற்காலிக துறைமுகத்தை இயக்குவதில் கடல் கொந்தளிப்பு மற்றும் ஏற்பாட்டியல் பிரச்சினைகள் என்று பல சவால்களை சந்தித்த நிலையிலேயே அது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
கொவிட் தொற்றுக்கு மத்தியில்: தேர்தலில் இருந்து விலக பைடனுக்கு புது அழுத்தம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொவிட்–19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரிடம் இலேசான அறிகுறிகள் காணப்படுவதாக வெள்ளை மாளிகை கூறியது.
இரண்டு தடுப்பூசிகளுடன் கூடுதல் தடுப்பூசியும் போட்டுக் கொண்ட பைடனுக்கு இதற்கு முன் இரு முறை கொவிட்–19 தொற்று ஏற்பட்டுள்ளது. லாஸ் வேகஸில் பிரசாரம் செய்து வரும் பைடன் நேற்று இரவு (18) நடக்கவிருந்த கூட்டத்தை ரத்துச் செய்தார்.
பைடனுக்கு சளி, இருமல் ஆகியவை ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் கெரின் ஜீன் பியேரி தெரிவித்தார். டெல்வாரில் உள்ள தனது வீட்டில் அவர் தனிமையில் இருந்து தனது பணிகள் அனைத்தையும் மேற்கொள்வதாக பியரி கூறினார்.
கடந்த மாத இறுதியில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் நேரடி விவாதத்தில் பங்கேற்ற 81 வயது பைடன் மோசமாகத் தடுமாறினார்.
அதனால், ஜனாதிபதி போட்டியிலிருந்து விலக வேண்டும் என்ற குரல் வலுத்து வரும் வேளையில் அவருக்கு கொவிட்–19 தொற்று ஏற்பட்டுள்ளது.
ஜனநாயக கட்சியின் இரு முன்னணி உறுப்பினர்களான அமெரிக்க கொங்கிரத் மற்றும் செனட் சபை உறுப்பினர் சக் ஸ்கூமர் மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ஹகீம் ஜெப்ரி ஆகிய இருவரும் பைடனை தனிப்பட்ட முறையில் சந்தித்து ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் பங்கேற்பது குறித்து அக்கறை தெரிவித்துள்ளனர்.
நவம்பர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்பை, அவரால் வீழ்த்த முடியாது என்று பிரதிநிதிகள் சபையின் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலொசி குறிப்பிட்டுள்ளார்.
பைடனின் வயது மூப்புக் காரணமாகவே அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜனநாயகக் கட்சிக்குள் எதிர்ப்பு வலுத்த வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் மீண்டும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவதிலிருந்து ஒதுங்கப்போவதில்லை என்பதில் பைடன் உறுதியாக உள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக பைடனை முன்மொழியும் நிகழ்ச்சி அடுத்த மாத ஆரம்பத்தில் இடம்பெறவுள்ளது. நன்றி தினகரன்
டீஸ்டா நதி நீரைப் பகிர்ந்து கொள்ள இந்தியாவும் பங்களாதேசமும் இணக்கம்
டீஸ்டா நதி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பான விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காண இந்தியாவும் பங்களாதேசமும் இணக்கம் கண்டுள்ளன.
அதனடிப்படையில் இந்நதியை விரிவான அடிப்படையில் முகாமைத்துவம் செய்யவும் அதன் மறுசீரமைப்பு திட்டத்துக்குமென ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட இந்தியா முன்வந்துள்ளது.
‘டீஸ்டா நதி மேம்பாட்டுத் திட்டத்தை முன்னெடுப்பதன் ஊடாக பங்களாதேசத்துடனான நீர்ப்பகிர்வுப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கப்பெறும் என்று இரு நாடுகளது அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த பங்களாதேச பிரதமர் ஷேக் ஹஸீனா, பிரதமர் நரேந்திர மோடி உட்பட இந்தியாவின் உயர் மட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தினார். இப்பேச்சுவார்த்தைகளின் போது இரு தரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்தும் ஒத்துழைப்புக்கான புதிய பாதைகளை கண்டறிவது தொடர்பிலும் குறிப்பாக டீஸ்டா நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் விவகாரம் குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
இவ்விஜயத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பிய பிரதமர் ஹஸீனா, இந்தியாவுக்கான விஜயம் மிகவும் பயனுள்ளதாகவும் சிறப்பாகவும் அமைந்திருந்தாக அந்நாட்டு ஊடகங்களிடம் குறிப்பிட்டிருந்தார்.
இந்திய நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் இரு நாடுகளதும் வெளிவிவகார அமைச்சர்களால் கண்காணிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படுகின்றன. அதனால் இத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள தாமதங்களை மிக உயர்ந்த மட்டத்தில் தீர்க்க முடியும் என்றும் அவ்வதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
டீஸ்டா நதி, டீஸ்டா காங்சே பனிப்பாறையில் உருவாகி சிக்கிம் மற்றும் மேற்கு வங்கம் ஊடாக பங்களாதேஷுக்குள் பாய்வது குறிப்பிடத்தக்கது.
இந்நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும். அது இரு நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது. நன்றி தினகரன்
இந்திய விமானப்படை பங்குபற்றலுடன் அவுஸ்திரேலியாவில் கூட்டுப்பயிற்சி
இருபது நாடுகளின் பங்குபற்றுதலுடன் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் விமானப்படைகளின் கூட்டுப்பயிற்சியில் இந்திய விமானப் படையும் கலந்து கொண்டுள்ளது.
இந்திய விமானப்படையினரின் விமானிகள், பொறியியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கட்டுப்பாட்டாளர்கள் உட்பட 150 க்கும் மேற்பட்ட திறமைமிகு படைவீரர்கள் இப்பயிற்சியில் பங்குபற்றியுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
140 க்கும் மேற்பட்ட யுத்த விமானங்களும் 4,400 விமானப்படை வீரர்களும் பங்குபற்றும் இப்பயிற்சி, கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமானதோடு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
இது தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தல், யுத்த விமானங்களுடன் செயற்படும் அனுபவங்களை மேலும் மேம்படுத்துதல் என்பவற்றை நோக்காகக் கொண்டு இடம்பெறும் இக்கூட்டுப்பயிற்சியில் பங்குபற்றியுள்ளதன் ஊடாக படைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் சிறந்த நடைமுறைகளின் பரஸ்பர பரிமாற்றங்களுக்கு சிறந்த வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.
‘பிட்ச் பிளக் – 2024’ என்ற தொனிப்பொருளில் இடம்பெறும் இப்பயிற்சியின் மூலம் திறன்கள் மேம்பாடு அடைவதோடு இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்கவும் வலுவான விமான போக்குவரத்து கூட்டாண்மைகளை கட்டியெழுப்பவும் வாய்ப்பு கிடைக்கப்பெறுகின்றது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
பயணிகளுடன் கடலில் மூழ்கிய எண்ணெய்க் கப்பல்
- கப்பலில் பணியாற்றிய 16 பேர் கடலில் மாயம்
ஓமன் (Oman) அருகே எண்ணெய் கப்பல் ஒன்று பயணிகளுடன் கடலில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன் படி, அந்த கப்பலில் பணியாற்றிய 16 பேர் கடலில் மாயமாகியுள்ளனர்.
ஏமன் நாட்டில் உள்ள ஏடன் துறைமுகத்தை நோக்கி கப்பல் சென்று கொண்டிருந்த நிலையில் இவ்வாறு கடலில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஓமான் அதிகாரிகள் கடல் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து சம்பவ இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக ஓமானின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நன்றி தினகரன்
காசாவில் குண்டு மழைக்கு மத்தியில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஆளில்லா விமானத் தாக்குதல்
அரிதான சம்பவத்தில் ஒருவர் பலி: ஹூத்திக்கள் பொறுப்பு
காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து சரமாரித் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் இஸ்ரேலின் பிரதான நகரான டெல் அவிவில் நேற்றுக் காலை இடம்பெற்ற அளில்லா விமானத் தாக்குதல் ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருக்கும் யெமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள், ‘ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனின் டெல் அவிவ் இலக்கு வைக்கப்பட்டது’ என்று சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளனர்.
‘இடைமறிக்கும் அமைப்பைக் கடந்து ராடார்களால் அவதானிக்க முடியாத’ புதிய ஆளில்லா விமானத்தை பயன்படுத்தியே தாக்குதல் நடத்தியதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
டெல் அவிவ் நகரின் அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக குறிப்பிட்ட இஸ்ரேலிய இராணுவம், வான் இலக்குகளை இடைமறிக்கும் வான் பாதுகாப்பு அமைப்பு இயங்காதது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.
‘தொலைதூரத்திற்கு பறக்கக் கூடிய மிகப்பெரிய ஆளில்லா விமானம் ஒன்றைப் பற்றியே நாம் பேசுகிறோம்’ என்று இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் தாக்குதலை அடுத்து செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
இந்த வெடிப்பு இடம்பெற்ற பகுதிக்கு அருகில் இருக்கும் தொடர்மாடி குடியிருப்பில் இருந்து 50 வயதான ஆடவர் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேலிய அவசர சேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர். தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி ஒருவர் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்தே டெல் அவிவ் மீதான தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையே தினசரி மோதல் இடம்பெற்று வருவதோடு அது முழு அளவில் போர் ஒன்றாக உருவெடுக்கும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. பலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவே செயற்பட்டு வருவதாக ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா மற்றும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனினும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்வதோடு அண்மைய நாட்களாக அங்கு இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ஐ.நா. பாடசாலைகள் இலக்கு வைக்கப்பட்டு வருகின்றன.
அண்மைய நாட்களில் காசாவில் உள்ள ஒன்பதாவது பாடசாலையாக நேற்று காசா நகரில் இருக்கும் பாடசாலை ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அங்கு அடைக்கலம் பெற்றிருந்து இருவர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்திகள் கூறுகின்றன.
மத்திய காசாவின் புரைஜ் அகதி முகாமில் உள்ள வீடு ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் நேற்று நடத்திய செல் தாக்குதலில் குறைந்தது அறுவர் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். அபூ ஹசனைன் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்களே கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நுஸைரத் அகதி முகாமிலும் இஸ்ரேலியப் படை வீடு ஒன்றை இலக்கு வைத்து வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது. இதில் சிறுவர்கள் உட்பட எட்டுப் பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது. இதில் குறைந்து 15 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தப் போர் காசாவில் பெரும் எண்ணிக்கையான வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகளை அழித்திருப்பதோடு கிட்டத்தட்ட அங்கு வாழும் அனைத்து மக்களையும் தமது வீடுகளை விட்டு வெளியேற்றியுள்ளது. இஸ்ரேலிய முற்றுகையால் உணவு, குடிநீர், மருந்து உட்பட அடிப்படை பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.
பலரும் சுகாதாரமற்ற சூழலில் வசித்து வருவதாக காசா சுகாதார நிர்வாகம் குறிப்பிட்டிருப்பதோடு காசா கழிவுநீர் மாதிரிகளில் போலியோ தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
‘மனிதாபிமான நிலைமை நாம் அனைவருக்கும் கறையை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது’ என்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 39 ஆயிரத்தை நெருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் ஆதரவுடன் எகிப்து மற்றும் கட்டாரினால் முன்னேடுக்கப்பட்டு வரும் போர் நிறுத்த முயற்சிகளும் ஸ்தம்பித்துள்ளன. நன்றி தினகரன்
உலகெங்கும் இணைய சேவைகளில் பாதிப்பு
உலகெங்கும் பாரிய அளவில் இணையச் சேவைகளில் கோளாறு ஏற்பட்டுள்ளது. பல விமானங்களும் தரையிறக்கப்பட்டிருப்பதோடு அரச சேவைகள், வங்கிகள், பேரங்காடிகள், தொடர்பாடல் மற்றும் ஊடக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் பிரதான விமான சேவைகளான டெல்டா, யுனைடெட் மற்றும் அமெரிக்க எயார்லைன் விமானங்கள் தொடர்பாடல் பிரச்சினை காரணமாக நேற்றுக் காலை தரையிறக்கப்பட்டன.
சிட்னி விமானநிலையத்தில் உள்ள விமான தகவல் திரைகள் செயலிழந்ததோடு வூல்வேர்த் மற்றும் கோல்ஸ் போன்ற பேரங்கடி வலையமப்புகளில் சுய சேவை அமைப்புகள் தவறான செய்திகளை வெளியிட்டன. சிட்னி விமான நிலையத்தில் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
பிரிட்டன், ஜெர்மனி மற்றும் மலேசிய விமானநிலையங்களிலும் சேவைகளில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. அவுஸ்திரேலிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் நெட்வேர்க் டென் ஆகிய அவுஸ்திரேலிய ஒளிபரப்புக் சேவைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. வங்கிகளில் ஒன்லைன் சேவைகள் மற்றும் சில பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தொழிநுட்பக் கோளாறு எதனால் ஏற்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படவில்லை. மைக்ரோசொப்ட் இயங்குதளத்திற்கும் இதற்கும் தொடர்பிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
சேவைத் தடங்கல் குறித்துக் கருத்துத் தெரிவித்த மைக்ரோசொப்ட், நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கிளவுட் சேவைகளில் உள்ள சிக்கல்கள் குறித்தும் மற்றும் ஆப் மற்றும் பிற சேவைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்து வருவதாக அந்த நிறுவனம் கூறுகிறது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment