நவராத்திரி - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 படத்துக்கு படம் ஒவ்வொரு வேடத்தில் நடித்து வந்த நடிகர் திலகம்


சிவாஜி கணேசன் ஒரே படத்தில் ஒன்பது வேடங்களில் தோன்றி அசத்திய படம் தான் . ஒன்று எடுத்தால் எட்டு இலவசம் என்பது போல் சிவாஜி ரசிகர்களுக்கு இந்தப் படம் அமைந்தது. அது மட்டுமன்றி சிவாஜியின் 100வது படம் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டது.


நாடகத் துறையில் இருந்து திரையுலகிற்கு நடிகராக வந்து , கதாசிரியராகி, தயாரிப்பாளராக மாறி , இயக்குனராக உருவெடுத்தவர் ஏ பி நாகராஜன். நடிகர் ஏ பி நாகராஜனுடன் இணைந்து இவர் கதை வசனம் எழுதி தயாரித்த மக்களை பெற்ற மகராசி , நல்ல இடத்து சம்பந்தம் இரண்டும் வெற்றி பெற்றன . ஆனால் தொடர்ந்து தயாரித்து இயக்கிய வடிவுக்கு வளைகாப்பு

தோல்வி கண்டது. அதனை தொடர்ந்து ஏபி என், வி கே ஆர் பாகஸ்தம் பிரிந்தது. இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து தனித்து படம் தயாரிக்க ஆசைப் பட்ட ஏ பி நாகராஜன் , வி கே ராமசாமியை அணுகி சிவாஜியின் கால்ஷீட்டை பெற்று தரும்படி கேட்டுக் கொண்டார். அதன் படி இருவரும் சென்று சிவாஜியை சந்தித்து பேசியதின் பலனாக நவராத்திரி படம் உருவாக தொடங்கியது. தனக்கு உதவிய வி கே ஆருக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார் ஏ பி என்.

நவராத்திரி முதல் நாள் அன்று தன் தகப்பன் தனக்கு பார்த்த வரனை பிடிக்காமல் வீட்டை விட்டே இரவோடு இரவாக வெளியேறுகிறாள் நளினா. தற்கொலை செய்ய முயலும் அவளை தடுத்து நிறுத்துகிறான் அற்புதராஜ் என்ற பணக்காரன். ஓர் இரவு அவன் வீட்டில் தஞ்சம் அடையும் அவள் மறுநாள் சொல்லிக் கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறி விபசார விடுதி ஒன்றில் போய் சிக்கிக் கொள்கிறாள். அங்கே அவளை அனுபவிக்க துடிக்கும் ஒருவனிடம் தப்பி , மன நோயாளிகள் விடுதியில் மாட்டிக் கொள்கிறாள். இவ்வாறு ஒவ்வோர் இரவும் ஒவொரு ஆடவர் இடத்திலும் சென்று சேரும் நளினா இறுதியில் கற்போடு தன் வீடு திரும்பினாளா என்பதே படத்தின் மீதி கதை.


அறுபது ஆண்டுகளுக்கு முன் இது ஒரு புரட்சிகரமான , ஆனால் நம்ப முடியாத கதைதான். ஆனால் அதனை மூடி மறைத்து விடுகிறது சிவாஜியினதும் , சாவித்திரியினதும் அசாத்தியமான நடிப்பு. ஒரு சாவித்திரி ஒன்பது சிவாஜியின் நடிப்புக்கு ஈடு கொடுத்து தான் ஒரு நடிகையர் திலகம் தான் என்பதை நிரூபித்திருந்தார். சிவாஜியின் நடிப்பை என்னவென்றுக்கு சொல்ல, அற்புதம் , கருணை, வீரம், ஆனந்தம், பயம், கோபம், சாந்தம், அருவருப்பு , சிருங்காரம், என்ற நரசங்களையும் ஒரே படத்தில் கொடுத்து நடிப்பில் தான் ஒரு அட்சயப் பாத்திரம் என்பதை உறுதிபடுத்தி விட்டார். இவர்களுடன் கே சாரங்கபாணி, நாகேஷ், மனோரமா, வி கே ராமசாமி, சி கே சரஸ்வதி, டி பி முத்துலட்சுமி என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

நாடக உலகில் தான் கற்ற பல வித்தைகளை படத்தில் பயன் படுத்தி

இருந்தார் ஏ பி நாகராஜன். குறிப்பாக சிவாஜி, சாவித்திரி தோன்றும் சத்யவான், சாவித்திரி தெருக் கூத்து அருமையோ அருமை! தவத்திரு சங்கரதாஸ் எழுதிய பாடல்கள் தெருக் கூத்துக்கு வலு சேர்த்தன.

படத்தின் பாடல்களை கண்ணதாசன் எழுத , கே வி மகாதேவன் இசையமைத்தார். நவராத்திரி சுப ராத்திரி, போட்டது முளைக்குமடி செல்லம்மா, இரவினில் ஆட்டம் பகலினில் துக்கம், ஆகிய பாடல்கள் ரசிக்கும் படி அமைந்தன. படத்தை டபிள்யு ஆர் சுப்பாராவ் ஒளிப்பதிவு செய்தார்.


ஏ பி நாகராஜனின் வசனங்கள் கருத்தோடு அமைந்தன. படத்தை தொய்வில்லாமல் இயக்கியிருந்தார் அவர். சிவாஜியின் நூறாவது படம் முரடன் முத்துவா , அல்லது நவராத்திரியா என்ற ரேஸில் நவராத்திரி அந்தப் பெருமையின் பெற்றுக் கொண்டு வெற்றி படமானது. முரடன் முத்து பட விவகாரத்தில் எவ்வாறு சிவாஜி, பந்துலு நட்பில் விரிசல் வந்ததோ அதே போல் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவாஜிக்கும், ஏ பி நாகராஜனுக்கு இடையில் நெருக்கம் அதிகமாகி தொடர்ந்து பல படங்கள் அவர்களின் கூட்டணியில் உருவாகின. ஆனால் சிவாஜியின் கால் ஷீட்டை பெற உதவிய வி கே ராமசாமிக்கு இந்தப் படத்தில் மட்டும் நடிக்க வாய்ப்பு கொடுத்த ஏ பி என் அதன் பின் தான் தயாரித்த எந்தப் படத்திலும் நடிக்க வாய்ப்பளிக்கவில்லை என்பது தான் விசித்திரம்!

No comments: