இலங்கைச் செய்திகள்

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சீனாவுக்கு 04 நாள் பயணம்

அமெரிக்க தூதுவர் வாழ்த்து

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலா தகவல் மையம் திறந்துவைப்பு

ஊடகச் செயற்பாடுகளால் கண்டிக்கு பெருமை சேர்த்தவர் அமரர் க.ப.சிவம்


ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை 

- கள்ளத் தொடர்பை பேணியதாக 2015 இல் இளைஞர் கடத்தல் சம்பவம்

June 28, 2024 10:49 am 

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 

 




முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சீனாவுக்கு 04 நாள் பயணம்

June 29, 2024 10:26 am 

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று முன்தினம் காலை சீனாவுக்கு பயணமானார். அவர் சீனாவில் தங்கியிருக்கும் காலத்தில் சீன ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட முக்கிய உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் சீனாவின் எக்சிம் வங்கி வழங்கியுள்ள உதவி மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது முக்கிய கவனம் செலுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.   லோரன்ஸ் செல்வநாயகம்   நன்றி தினகரன் 




அமெரிக்க தூதுவர் வாழ்த்து

June 27, 2024 7:01 am 

லங்கைக்கும் கடன் வழங்கும் நாடுகளுக்கும் இடையிலான கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி உடன்படிக்கை பரீஸ் கிளப்பில் கைச்சாத்திட்டுள்ளதை, வரவேற்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் Ambassador Julie Chung வாழ்த்து தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 





பலாலி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலா தகவல் மையம் திறந்துவைப்பு

June 26, 2024 7:20 am 

யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள்  வெளியேறும்  பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் நேற்று 25ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகள் இலகுவாக பயணிக்க கூடிய வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய  சுற்றுலா வழிகாட்டி கையேடுகளை தகவல் தொடர்பு நிலையத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகளுக்கான  தகவல்  தொடர்பு நிலையத்தை திறந்து வைத்ததன் பின்னர், விமான நிலைய செயற்பாடுகளை கௌரவ ஆளுநர் அவர்கள் பார்வையிட்டதுடன், விமான பயணிகளுடனும் கலந்துரையாடினார். சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், விமான நிலைய அதிகாரிகள் என பலரும் கலந்துச் சிறப்பித்தனர்.   நன்றி தினகரன் 





ஊடகச் செயற்பாடுகளால் கண்டிக்கு பெருமை சேர்த்தவர் அமரர் க.ப.சிவம்

மலையக கலை, கலாசார சங்கத்தின் தலைவர் எஸ். பரமேஸ்வரன்

June 26, 2024 8:01 am 

ஐந்து தசாப்தங்களுக்கு மேல் கண்டி மலையக மக்களின் தனித்துவம், கலாசாரம், பண்பாட்டு அம்சங்களை தழைத்தோங்க ச்செய்ய அயராது பாடுபட்டவர் மறைந்த மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் க.ப சிவம். அவருடைய ஊடக செயற்பாட்டின் மூலம் கண்டி புகழ்பெற்றது என்று மலையக கலை, கலாசார சங்கத்தின் தலைவர் எஸ் பரமேஸ்வரன் தெரிவித்தார்.

மலையக கலை, கலாசார சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, மறைந்த ஊடகவியலாளர் கலாபூஷணம் க. ப. சிவத்தின் ஞாபகார்த்த நிகழ்வு கண்டி டி. எஸ் சேனநாயக வீதியில் அமைந்துள்ள செல்லத்துரை நினைவு மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் எஸ். பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மலையக கலை, கலாசார சங்கத் தலைவர் எஸ் பரமேஸ்வரன் தலைமையுரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் பத்திரிகையாளர் ஜே. ஜி. ஸ்டீபன், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக பிரம்மகுமாரிகள் ராஜயோக நிலையத்தின் கண்டிக் கிளைத் தலைவர் எஸ். வேலாயுதம், கும்புக் கந்துர அஹதியா அமைப்பின் செயலாளர் எஸ். ஏ. ஹனீப், ஊடகவியலாளர், சட்டத்தரணி ஏ. எம். வைஸ். ஷமென் நிஸாம்டீன் ஆகியோர் பங்கேற்றனர்.

கலாபூசணம். க. ப சிவத்தின் நினைவேந்தல் உரைகளை எழுத்தாளர் ரா. நித்தியானந்தன், கண்டி இந்து சிரேஷ்ட பாடசாலையின் அதிபர் எஸ். சிவகுமார், கலாபூசணம் ஜே. எம். ஹாபிஸ் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.   அத்துடன் தென்னிந்தியக் கலைஞரான நடிகை மனோரமாவின் நினைவு கூரல் நிகழ்வும் இடம்பெற்றது.

 மாவத்தகம தினகரன் நிருபர் - நன்றி தினகரன் 






No comments: