ரணிலின் எச்சரிக்கை…!

 June 29, 2024\


நாட்டு மக்களுக்கான தனது உரையில் ரணில் எதனை உணர்த்த முற்படுகின்றார்? ‘நீங்கள் என்னை நிராகரித்தால் நஷ்டப்படப் போவது நானில்லை – நீங்கள்தான். ஏனெனில், நாட்டை சரியான வழியில் கொண்டு சென்று கொண்டிருக்கின்றேன் – இவ் வாறானதொரு சூழலில் நான் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டால், பாதிக்கப்படப்போவது நீங்கள்தான்’, ரணிலின் இந்த எச்சரிக்கை மிகவும் தெளிவாக ஒரு செய்தியைக் கூறுகின்றது.

அதாவது, ஜனாதிபதித் தேர்தல் களம் மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கப் போகின்றது. ஓட்டப் பந்தயத்தில் ரணில் வெற்றிபெறுவாரா என்னும் கேள்வியுண்டு. இதேவேளை, ஓட்டப் பந்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சியும் இதுவரையில் வெற்றியளிக்கவில்லை.

ரணிலும் சஜித்தும் ஒன்றிணைவார்கள் என்னும் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. அது நிறைவேறுவதற்கான வாய்ப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இவ்வாறானதொரு சூழலில் விமல் வீரவன்ஸ தரப்பிலிருந்தும் ஒரு வேட் பாளர் நிறுத்தப்படலாம் என்றும் அபிப்பிராயங்கள் எட்டிப் பார்க்கின்றன. இவ்வாறானதொரு பின்புலத்தில் நோக்கினால் ரணிலின் வெற்றி மிகவும் தொலைவிலேயே தெரிகின்றது.

இந்தச் சூழலை அவர் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்? அவரால் முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு மத்தியில்தான் அவர் நாட்டு மக்களுக்கு ஒரு மறை முகமான எச்சரிக்கையை வெளியிட்டிருக்கின்றார். ரணில் ஆற்றலுள்ளவர் – அவரை மேற்குலகுக்கு பிடிக்கும் – கூடவே இந்தியாவுக்கும் பிடிக்கும் – நாடு அதலபாதாளத்தில் விழுந்த போது துணிந்து பொறுப்புகளை எடுத்தவர் – இவ்வாறானதொரு பார்வை யுண்டு. ஆனால், இந்தப் பார்வைகள் அனைத்தும் பெருமளவுக்கு மத்தியதர வர்க்கத்துக்கு உரியது.

ஆனால், அடித்தள மக்கள் மத்தியில் இவ்வாறான பார்வை பெருமளவில் செல்வாக்கு செலுத்தவில்லை. ஏனெனில், கோட்டாபயவுக்கு எதிரான ‘அறகலய’ என்பது சாதாரண மக்கள் மத்தியிலிருந்து பெருமளவுக்கு விலகிய ஒன்றாகவே இருந்தது.

அதிகம் மத்தியதர வர்க்கத்தின் செல்வாக்குக்கு உட்பட்ட விடயமாகவே இருந்தது. இன்று ‘அறகலய’வின் பெயரில் இயங்கிவரும் ஒரு சிறிய குழுவினர் யார் என்பதை நோக்கும்போது அதன் செல்வாக்கை புரிந்து கொள்ள முடியும். இவ்வாறானதொரு நிலையில், சாதாரண மக்கள் மத்தியில் ஏற்படும் புரிதலே வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிக்கப் போகின்றது. சாதாரண மக்கள் மத்தியில் ஒப்பீட்டடிப்படையில் ரணில் தொடர்பான பார்வை சற்றுக் குறைந்து காணப்படுவதாகவே தெரிகின்றது.

இந்த நிலைமை ஒருவேளை மாற்றமடையலாம். ஆனால், தற்போதுள்ள நிலையில் ரணில் அடித்தள மக்களின் மனதில் இருப்பதாகத் தெரியவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் தனது தோல்வியால் மக்களுக்கு ஆபத்து நேரிடும் என்றவாறான எச்சரிக்கையை வெளியிட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

ஆனால், இவ்வாறான எச்சரிக்கைகள் எந்தளவுக்கு சாதாரண மக்களால் உணரப்படும் – அவ்வாறு உணரப்பட்டாலும்கூட அதனை சீர்தூக்கிப் பார்க்க – ஆராய அவர்களால் முடியுமா என்பதே கேள்வி. ஏனெனில், சாதாரண மக்கள் இவ்வாறெல்லாம் சிந்திக்கக்கூடியவர் கள் அல்லர் – அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் – அந்த நேரத்து அலையின் பின்னால் செல்லக்கூடியவர்கள்.   நன்றி ஈழநாடு 

இவ்வாறான மக்களை ரணில் வெற்றி கொண்டால் மட்டுமே வெற்றிபெற முடியும். இவ்வாறானதொரு சூழலில் தமிழ் மக்கள் மத்தியிலும் ஒரு தமிழ் பொது வேட்பாளர் அலை வீசுமாக இருந்தால் அந்த நிலைமையும் ரணிலுக்கு எதிராக மாறலாம்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அவர்கள் ஓடுகின்ற குதிரையில் ஏறவே முயற்சிப்பர். இவ்வாறான சவால்களை ரணில் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார். வெறும் எச்சரிக்கைகளால் இந்தச் சவாலை எதிர்கொள்ள முடியுமா?

No comments: