கற்பகதரு நூல் பற்றி விமர்சனம்


சுவைபட சுவைத்ததை சுவையுடன்

சுவைக்கவே சுவையொடு சமைக்கிறேன்…..

சங்கர சுப்பிரமணியன்.


சமீபத்தில் வெளியிடப்பட்ட கற்பகதரு நூல்பற்றி விமர்சனம் செய்யுமாறு திரு. ஜெயராமசர்மா அவர்கள் என்னி டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்நூலைப் பற்றி என் விமர்சனத்தை இங்கு தருகிறேன். விம ர்சனம் என்பதற்காக பொதுவாக அங்கிங்கே தொட்டு நிறைவு செய்வதுபோல் இல்லாமல் ஒவ்வொரு சுவை யையும் சுவைத்து சுவைத்த அனுபவித்த சொற்களாக்கச் சொன்னார்.

இந்த நூல் சற்று வேறுபட்ட நூல் என்பதோடு பல தகவல்களை வேறுபட்ட கோணத்தில் யாரும் கூறாதவை களை இந்நூலில் கூறி இருக்கிறார். இதன் அடிப்படையில் எந்த சுவையையையும் விட்டு விடாமல்  சுவைத் துணர்ந்து உங்களுக்காக சமைத்ததால் வழக்கத்திற்கு மாறாக தொடராகத் தருகிறேன்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் அவர்கள் வாழ்த்துரை , சிட்னிவாழ் எழுத்தாளரான பேராசிரியர் திரு. ஆசி கந்தராஜா அவர்களின் அணிந்துரை, ஆஸ்திரேலிய தமிழ் இலக்கியச் சங்கத்தின் மேனாள் செயலாளரும் எழுத்தாளருமான திரு. கே. எஸ். சுதாகர் அவர்களின் நயவுரை மற்றும் என்னுரை , பொருளடக்கம் , என்று சிறப்பான எட்டுப் பக்கங்களின் தொடக்க த்தை உள்ளடக்கி சிந்தனையைத் தூண்டும் இருநூற்று நாற்பது பக்கங்ளைக் கொண்டதாக இந்நூல் உள்ளது.

பச்சைப் பசேலென புல்தரை , அதில் நிற்கும் பசுமாடுகள் , உயர்ந்த பனைமரங்கள் , நிழல்தரும் படர்ந்த மரங்கள் மற்றும் அவற்றின் பின்புறமாக வெண் மேக கூட்டங்களோடு தோன்றும் நீலவானமும் முகப்பு அட்டையாக நூலுக்கு பொலிவைத் தருகிறது.

ஒரு நூலில் பல அத்தியாயங்கள் அடங்கியிருப்பது போல் இந்நூலில் நாற்பது சுவைகளாக அங்கங்களாக
வரையறுத்துள்ளார். இப்போது நாற்பது சுவைகளையும் சுவைத்து உணர்ந்த நான் அச்சுவைதனை உங்க ளோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இலக்கியத்தை இலக்கியமே வரவேற்பது போல் முதல் சுவையிலேயே

திருக்குறள், நாலடியார் மற்றும் சிலப் பதிகாரத்தில் பனைமரத்தைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் பெருமையை எடுத்து இயம்பியிருக்கிறார். அப்ப டியே இலக்கியச் சுவையை குன்றாது இரண்டாவது சுவையிலும் தொடர்கிறார்.  “படையை வெல்லும் பனை” என்று சங்ககாலப் பாடலை சான்றாக்கியிருக்கிறார்.

பனையிலிருந்து பெறுபவற்றை உண்பவர்கள் உடல் வலிமையடைவதால் படையையும் வெல்லும் திறன் பெறுகின்றனர் என்பதே இதன் பொருள்.
பனை மரத்துக்கு இத்தனை பெயர்களா? என்று வியக்கும் வண்ணம் கூறியருப்பதோடு பனை மரத்தின் வகைகளையும் கூறும் பட்டியல் சீனச்சுவர் போல் நீண்டுகொண்டே செல்கிறது.

திருமூலரில் தொடங்கி சம்பந்தர், மணிவாசகர் என்று நாயன்மார்களைப் போன்று ஆழ்வார்களில் திரும ழிசைப்பிரான், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் போன்றோர் பாடலில் பனையினை குறித்து சொல்லி யிருப்பதை காட்டியிருப்பது சிறப்பாயுள்ளது. இப்படியே தொடர்வண்டியினைப் போன்று நீண்டுகொண்டே செல்கிறது.


எல்லாவற்றையும் கூற வேண்டுமானால் இந்நூலை மறுபதிப்பு செய்வது போலாகிவிடும். ஆதலால் தென் றல் வந்து நம்  உடலை தீண்டிச் செல்வதுபோல் கடந்து செல்கிறேன். மூன்றெழுத்து காதலில் வருவதால் மூன்றாம் சுவையாக காதலில் காண்கிறார். தலைவனைப் பிரிந்த தலைவி வாடுவதை சங்கத் தமிழில் 
“திங்களும் திகழ் வான் ஏர்தரும் இமிழ் நீர்….”
என்று தொடங்கும் பாடலின் ஊடாக நம் கண் முன்னே காட்சிட்படுத்துகிறார்.

மேலும், தலைவியின் வருத்தத்தை பனையின் வழியாக குறுந்தொகையிலும் ஔவை பிராட்டியின் வாழ் வில் பனையால் நிகழ்ந்த நிகழ்வொன்றையும் படைத்ததுடன் ஒரு நாட்டுப் பாடலை விருந்தாக்கி நான்காம் சுவையை கொண்டு வருகிறது நூல். 

இந்த சுவையில் பனையினை பெயரோடு கொண்ட ஊர்களைப்பற்றி

பனங்குளம், பனஞ்சாவடி, பனையூர், பனையப் பட்டி, பனங்காட்டூர் என்று ஆசிரியர் சொல்லிக் கொண்டே செல்வது தலைசுற்ற வைக்கிறது. அத் துடன் நாட்டுப்புறத்தில் வாழ்ந்த ஒருவர் பனைமரத்தைப்பற்றி மனதில் தோன்றியவற்றை கவிதையாக்கி இருப்பதை காணமுடிகிறது.

ஐந்தாம் சுவையில் தமிழ் மன்னர்கள் பனுயினை பேணி வந்ததைக் கூறியபடியே பனை ஓலைகளின் மூலம் அனுப்பும் ஒவ்வொரு செய்திக்கும் வழங்கப்பட்ட பெயர்களை வரையறைத்துள்ளார். சான்றாக ஒன்றிர ண்டை மட்டும் இங்கு சொல்கிறேன். நடப்பு செய்திகளை சொல்லும் ஓலை “நாளோலை” என்றும் ஆவணங் கள் இடம் பெறும் ஒலை “சுருள் ஓலை” என்றும் பொருள்படும்.

சுவை ஆறில் ஓலைச்சுவடி என அறியப்படும் ஏடு பற்றி பார்ப்போம். எல்லாப் பனை ஓலைகளிலும் எழுத முடியாது என்று கூறியவாறே அந்தப் பனைவகைகளையும் பழுப்பு நிறத்தில் ஓலை அமைந்திருக்க வேண் டும் என்பதையும் கூறுகிறார். ஓலைகளைத் தேர்ந்தெடுத்தபின் பதப்படுத்தும் முறை பற்றியும் சொல்கி றார். 

ஓலைகளை பதப்படுத்தியபின் அதில் எழுதக் கூடிய எழுத்தாணி

பற்றியும் குறிப்பிடப் படுகிறது. சாதார ணமாக எழுத்தாணி இரும்பினால் செய்யப்பட்டாலும் அரசர்களும் வசதி படைத்தோரும் தங்கம், வெள்ளி மற்றும் தந்தத்தினால் ஆன எழுத்தாணி பயன்படுத்தியதாகவும் கூறுகிறார். பனை ஒலைகள் தமிழர் வரலா ற்றை தாங்கி நின்ற அரண்களாக இருந்திருப்பதை அவர் கூறும் விதம் வியப்பளிக்கிறது.

எழுத்தாணி பற்றி விளக்கியவர் ஏழாம் சுவையில் ஓலையில் எப்படி எழுதுவது  என்பதைப் பற்றியும் கூறியி ருக்கிறார். ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதுவது இலகுவான வேலையல்ல என்று கூறியதுடன் எப்படி எழுதவேண்டும் என்பதை அவர் தெளிவாக்குவதைக் காணமுடிகிறது. 

பிழை திருத்தவோ அழிக்கோ முடியாது. எழுதும் ஒலையில் பிழைவந்தால் அந்த ஓலையை தவிர்த்து புது ஓலையில்த்தான் எழுதவேண்டும். ஓலையில் எழுத நல்ல பழக்கம் வேண்டும். மெய் எழுத்து வரும்போது அதில் குத்து வைக்கக் கூடாது. குத்து வைத்தால் ஓலை கிழிந்துவிடும் போன்ற கருத்துக்களை இச்சுவையில் காணலாம்.

எட்டாவது சுவையில் அசல்பிரதி, அச்சடியோலை, இசையோலை, இணக்கோலை, ஏடாகம் போன்ற எட்டா திருந்த பனையோலையோடு இணைந்த சொற்களை எட்டவைத்து நம் மனதில் பதியவும் வைத்துவிடும் பாங்கை என்னென்று சொல்வது?


இப்படி வகைப்படுத்திய ஓலைகளின் பயன்பாட்டையும் பெயர்க் காரணத்தையும் பொருள்பட விளக்கப் பட் டுள்ளது. சான்றாக சிலவற்றை பார்ப்போம். சட்டோலை என்றால் சட்டம் எழுதுவதற்கு பயன்பட்ட ஓலை என் றும் கணக்குபளை எழுதிவைக்க கணக்கோலை என்றும் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று எடுத்துரைப்ப தும் போற்றுதற்குரியது.

ஏடுகளைப் பற்றி சொல்லி வரும்போதே ஏடுகளைத் தேடி அலைந்து சேகரித்த தமிழ்த் தாத்தா திரு. உ. வே. சாமிநாத அய்யர் அவர்களையும் நினைவுறுத்தியிருப்பது நம் நெஞ்சை நெகிழ வைக்கிறது.

கேரளாவரை விரிந்து செல்கிறது ஒன்பதாவது சுவையில் ஒலைச்சுவடியைப் பற்றிய சுவை. இதன்மூலம் ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபத்து ஐந்தாம் ஆண்டுவரை பத்திரம்பதிவு ஓலையில்தான் இருந்தது என்ப தையும் அறிய முடிகிறது. இப்படி எழுதப்பட்ட ஆவணங்கள் “தீட்டு“ என்று எழுதப்பட்டன. ஓலைச் சுவடிகளை தொகுத்து வைக்கும் தொகுப்பை “கருணை” என்றும் அழைத்தனர் என்பதை அறிகிறோம்.

இவ்வாறு குறிப்பிடும்போது திருவிதாங்கூரிலும் திபெத்து நாட்டிலும் தமிழ்நாட்டின் ஓலைச் சுவடிகள் கிடை த்ததாக சொல்கிறார் நூலாசிரியர். அந்த வகையில் திருநெல்வேலிப் பகுதியில் கிடைக்கப்பட்ட ஒலைச்சு வடிகள் நாடகம் பற்றிய சுவடிகளாகவும் மருந்து சம்பந்தமான சுவடிகளகவும் இருந்திருக்கின்றன.

இதுதவிர குறிசொல்பவர்கள், சோதிடர்கள் மற்றும் வில்லிசைக் கலைஞர்களும் ஓலைச் சுவடிகளில் தகவல் களை சேகரித்து வந்திருந்ததையும் அறியமுடிகிறதை.

தீக்கிரையான யாழ்ப்பாணத்து பழைய நூலகத்தில் தொண்ணூற்று ஐயாயிரம் ஓலைச்சுவடிகள் பத்திரப்ப டுத்தி வைத்திருந்ததையும் இந்நூல் மூலமாக அறியமுடிகிறது. அநுராதபுரத்திலும் ஆயிரத்து நூற்றுப்பத்து ஆண்டுகள் பழமைவாய்ந்த ஓலைச்சுவடிகள் கிடைத்திருக்கின்றன.

இவ்வாறு நகர்கின்ற நூலில் பத்தாம் சுவையில் பயன்பாடு பற்றி கூறப்பட்டுள்ளது. காதில் காதணியாக பனை ஓலையை மடித்து அணிந்திருந்ததையும் அறியமுடிகிறது. பனை ஒலையால் வீட்டு கூரை வேயப் படுகிறது என்பதிலிருந்து ஓலைப் பெட்டிகள் செய்வது கூறியிருப்பது வியப்பளிக்கிறது.

பெட்டிகளின் வகைகளையும் மற்றும் விசிறி, வட்டச்சுளகு, பாய், பூக்கூடை  விளையாட்டுப் பொருட்கள் என்று எத்தனையோ எண்ணற்ற பொருட்களை கூறி வியப்பில் ஆழ்த்தியதைக் காணலாம்.

-சங்கர சுப்பிரமணியன்.

                                                                 
                                               ( வளரும் ) 

No comments: