உலகச் செய்திகள்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

காசாவின் எகிப்துடனான முழு எல்லையையும் கைப்பற்றியது இஸ்ரேல்: தாக்குதல்கள் உக்கிரம்

காசாவில் இஸ்ரேல்: இன்னும் ஏழு மாதங்கள் போரை தொடர திட்டம்

இஸ்ரேலுக்கெதிராக ட்ரெண்ட் செய்யப்படும் ‘All eyes on Rafah’ ஹேஷ்டேக்

 பப்புவா நியூ கினி நிலச்சரிவு; புதையுண்டோர் எண்ணிக்கை 2,000 ஆக உயர்வு

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கிறது ரபாவில் உக்கிரம்: ஜபலியாவிலிருந்து வாபஸ்


அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

- ஜூலை 11ஆம் திகதி தண்டனை விவரங்கள் வெளியிடப்படும்

May 31, 2024 12:00 pm 

அமெரிக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த 2016 தேர்தல் நிதியை முறைகேடாக கையாண்ட வழக்கில் குற்றவாளி என 12 ஜூரிகள் அடங்கிய குழு அறிவித்துள்ளது. சுமார் இரண்டு நாட்கள் நடந்த தீவிர ஆலோசனைக்கு பிறகு நியூயார்க் ஜூரிகள் இதனை அறிவித்தனர்.

77 வயதான ட்ரம்ப், கடந்த 2017 முதல் 2021 வரையில் அமெரிக்க நாட்டு அதிபராக இயங்கியவர். அவர் அந்த நாட்டின் 45ஆவது அதிபராக அறியப்பட்டார். குடியரசு கட்சி சார்பில் தற்போது மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக களம் கண்டுள்ளார். இந்த நிலையில்தான் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிபதி ஜுவான் மெர்ச்சன், வரும் ஜூலை 11ஆம் திகதி தண்டனை விவரங்களை அறிவிக்க உள்ளார்.

குற்ற வழக்கில் அமெரிக்க அதிபரோ அல்லது முன்னாள் ஜனாதிபதியோ விசாரிக்கப்படுவது மற்றும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்படுவது அமெரிக்க அரசியல் வரலாற்றில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன வழக்கு? – முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப், தன்னுடனான பாலியல் தொடர்பை மறைக்க ஆபாச நடிகை ஸ்டோமி டேனியல்ஸுக்கு சுமார் 1.3 இலட்சம் டொலர்களை 2016ஆம் ஆண்டுக்கான தேர்தல் பிரச்சார நிதியில் இருந்து கொடுத்ததாக சொல்லப்பட்டது.

இதையடுத்து இந்த குற்றச்சாட்டை மறைக்கும் விதமாக 11 இன்வாய்ஸ், 11 காசோலை மற்றும் 12 வவுச்சர் உள்ளிட்ட ஆவணங்களை போலியாக ட்ரம்ப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. அந்த 34 ஆவணங்களும் போலி என்பதை தான் தற்போது ஜூரிகள் கண்டறிந்துள்ளனர். அதையடுத்து அவர் குற்றவாளி என்றும் அறிவித்தனர். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒருவர் முறைகேட்டு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ரேஸில் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும் உள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு விவகாரம் ட்ரம்புக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இருந்தாலும் ட்ரம்ப் தேர்தலில் போட்டியிட தடை ஏதும் இருக்காது என தகவல்.

ட்ரம்ப் கருத்து: “இது எனக்கு அவமானம் ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை. இதை மேற்கொண்ட நீதிபதி ஊழல்வாதி. நமது தேசமே இந்த மாதிரியான மோசடியை இப்போது எதிர்கொண்டு வருகிறது. எதிர்க்கட்சியினரை பழிக்கும் வகையில் பைடன் நிர்வாகம் இதை செய்து வருகிறது. நமது அரசியல் சாசனத்துக்காக நாம் போராட வேண்டி உள்ளது” என ட்ரம்ப் மிகவும் ஆக்ரோஷமாக தெரிவித்தார்.

அதிபர் பைடன் தரப்பு: “யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை” என அதிபர் ஜோ பைடனின் செய்தித் தொடர்பாளர் ட்ரம்ப் வழக்கு குறித்து கருத்து தெரிவித்திருந்தார். தனது ஆட்சி காலத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு அதிபர் ட்ரம்ப் ஆளாகியிருந்தார். அதன் பின்பு அவரை அந்த சர்ச்சைகள் சூழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் போட்டியிட முடியுமா? அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச தகுதிகளையே அமெரிக்க அரசியலமைப்பு வரையறுத்துள்ளது. போட்டியிடுபவர் அமெரிக்க குடிமகனாகவும் குறைந்தபட்சம் 35 வயதுடையவராகவும் 14 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தவராகவும் இருக்க வேண்டும். குற்ற பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க எந்த சட்டமும் இல்லை. சிறையில் உள்ள நபர்களும் தேர்தலில் போட்டியிட முடியும்.   நன்றி தினகரன்    


காசாவின் எகிப்துடனான முழு எல்லையையும் கைப்பற்றியது இஸ்ரேல்: தாக்குதல்கள் உக்கிரம்

May 31, 2024 9:15 am 

காசாவின் எகிப்துடனான மூலோபாயம் மிக்க இடைவழி நிலப்பகுதி ஒன்றை கைப்பற்றியதாக அறிவித்திருக்கும் இஸ்ரேல் நேற்று (30) தூர தெற்கு நகரான ரபா மீது கடுமையான பீரங்கி தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடுகளை நடத்தியதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச எதிர்ப்புக்கு மத்தியிலும் காசாவில் பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபா மீது இஸ்ரேல் இராணுவம் இந்த மாத ஆரம்பத்தில் படையெடுப்பை தொடங்கியது.

கடந்த ஒரு சில நாட்களாக எகிப்து எல்லையை ஒட்டிய அந்த நகர் மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருப்பதோடு அங்கு அடைக்கலம் பெற்றிருக்கும் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் எகிப்து–காசா எல்லையை ஒட்டிய 14 கிலோமீற்றர் நீளமான பிலடெல்பி இடைவழி நிலத்தை கைப்பற்றியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. குறுகலான எல்லை பகுதியின் ‘செயல்பாட்டு கட்டுப்பாட்டை’ இஸ்ரேல் கைப்பற்றியதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி குறிப்பிட்டுள்ளார். இங்கு சுமார் 20 சுரங்கப்பாதைகளையும் கண்டுபிடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

‘பிலடெல்பி இடைவழி நிலப்பகுதி ஹமாஸுக்கான ஒட்சிசனாக செயற்படுகிறது. இது காசாவுக்கான ஆயுதங்களை கடத்தும் இடமாகவும் தொடர்ந்து செயற்பட்டு வருகிறது’ என்று ஹகாரி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இங்கு கடத்தல் சுரங்கப்பாதைகள் இயங்குவதை எகிப்து மறுத்துள்ளது. ‘பலஸ்தீன நகரமான ரபா மீதான நடவடிக்கையைத் தொடர்வதையும், அரசியல் நோக்கங்களுக்காக போரை நீடிப்பதையும் நியாயப்படுத்த இஸ்ரேல் இந்தக் குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்துகிறது’ என்று எகிப்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் அந்நாட்டு அரசுடன் தொடர்புபட்ட அல் கஹேர் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இந்த பிலடெல்பி இடைவெழி நிலத்தை இஸ்ரேல் கைப்பற்றுவது இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கு இடையே 1979 இல் செய்துகொள்ளப்பட்ட அமைதி உடன்படிக்கையை மீறுவதாக இருக்கக் கூடும் என்றும் எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இஸ்ரேலின் இந்த அறிவிப்பு குறித்து எகிப்து இதுவரை உத்தியோகபூர்வ பதில் எதனையும் வெளியிடவில்லை.

பீஜிங் சென்றிருக்கும் எகிப்து ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசி, முற்றுகை காசாவுக்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க வலியுறுத்தியதோடு, பலஸ்தீனர்கள் தமது சொந்த மண்ணில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் எந்த ஒரு முயற்சியையும் எதிர்ப்பதாக, எகிப்தின் நீண்ட கால கொள்கையை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினார்.

காசாவில் தெற்கு முனையில் உள்ள எகிப்துடனான எல்லை, இஸ்ரேலின் நேரடி கட்டுப்பாடு இல்லாத காசாவின் ஒரே நில எல்லையாகவே இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. தீர்மானம்

மத்திய மற்றும் மேற்கு ரபாவில் மோதல் இடம்பெற்று வருவதாக பார்த்தவர்களை மேற்கோள் காட்டி ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மே 7 ஆம் திகதி ரபா மீதான படையெடுப்பை ஆரம்பித்த இஸ்ரேல் ஆரம்பத்தில் எகிப்துடனான ரபா எல்லைக் கடவையை கைப்பற்றியதோடு அந்த நகரின் கிழக்கு பகுதியில் உள்ள கட்டடங்களை அழித்து வருவதாக பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த புதனன்று ராபவுக்கு டாங்கிகளை அனுப்பி சுற்றிவளைப்புகளை நடத்திய இஸ்ரேல், கடந்த செவ்வாயன்று அந்த நகரின் மையப் பகுதிக்கு முதல் முறை முன்னேறி இருந்தது. ரபா மீதான தாக்குதலை உடன் நிறுத்துவதற்கு இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலேயே இஸ்ரேல் அங்கு படையெடுப்பை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனால் ரபாவில் அடைக்கலம் பெற்றுள்ள பலஸ்தீனர்கள் தமது உடைமைகளை சுமந்தபடி மீண்டும் ஒருமுறை வெளியேறி வருகின்றனர். ரபா தாக்குதலுக்கு முன் அங்கு 1.4 மில்லியன் மக்கள் இருந்த நிலையில் அது தொடக்கம் ஒரு மில்லியன் பேர் வரை வெளியேறி இருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரபா மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் முற்றுகையில் உள்ள காசாவுக்கான மனிதாபிமான உதவிகள் மூன்றில் இரண்டு பங்கு குறைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

‘காசாவுக்குள் நுழையும் உணவு மற்றும் ஏனைய உதவிகளின் அளவு, ஏற்கனவே உயர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை, மே 7 முதல் அது மேலும் சுருங்கிவிட்டது’ என்று ஐ.நாவின் மனிதாபிமான அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

‘ரபா எல்லைக்கடவை மூடப்பட்டு, கெரெம் ஷலோம் எல்லைக் கடவையில் இருந்து பாதுகாப்பாக மற்றும் தொடர்ச்சியாக பொருட்களை எடுத்துச் செல்ல முடியாத நிலை மற்றும் ஏனைய வாயில்களில் மட்டுப்படுத்தப்பட்ட விநியோகங்களே இடம்பெறுவதன் காரணமாக உதவி விநியோகங்கள் குறைந்துள்ளன’ என்றும் அது சுட்டிக்காட்டியது. ரபாவுக்கு அருகில் அம்புலன்ஸ் வண்டி ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய நேரடித் தாக்குதலில் தமது இரு துணை மருத்துவர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.

காசா நகரின் தெற்கு பகுதியான செய்தூனில் பீரங்கி குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு இடம்பெற்று வருவதோடு கறும்புகை எழுந்து வருவதாக அங்குள்ள ஏ.எப்.பி. செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வடக்கு காசாவின் மத்திய பகுதியில் கடந்த 16 நாட்களாக முன்னேறி வரும் இஸ்ரேலிய படை தற்போது ஜபலியா அகதி முகாம், ஷெய்க் சயித் மற்றும் பெயித் லஹியா பகுதிகளை கட்டுப்படுத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காசா நகரின் டால் அல் ஹவா பகுதியில் இஸ்ரேலின் ஸ்னைப்பர் துப்பாக்கிதாரிகள் நேற்று மூவரை சுட்டுக் கொன்றதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள வீதியிலேயே இவர்கள் சுடப்பட்டிருப்பதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.

மத்திய காசாவின் நுசைரத் அகதி முகாமில் சகூத் குடும்பத்திற்கு சொந்தமான வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டு மேலும் 15 பேர் காயமடைந்ததாக வபா கூறியது.

கடந்த எட்டு மாதங்களாக நீடித்துவரும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில் ‘அனைத்துத் தரப்புகளும் மதிக்கக்கூடிய போர் நிறுத்தம் மற்றும் அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கக் கோரும் ஐ.நா நகல் தீர்மானம் ஒன்றை அல்ஜீரியா கொண்டுவந்தபோதும், அது பாதுகாப்புச் சபையில் வாக்கெடுப்புக்கு செல்வதில் உறுதியற்ற நிலை நீடித்து வருகிறது.

கடந்த புதனன்று பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுடன் தொலைபேசியில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன், ரபா தொடர்பில் வலுவான அறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கு பிரான்ஸ், அல்ஜீரியாவுடன் இணைந்து பணியாற்ற தீர்மானித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் எந்த முன்னேற்றமும் இன்றி முடங்கி இருப்பதோடு, ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் முடியாதவரை பேச்சுவார்த்தைகள் அர்த்தமற்றது என்று ஹமாஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.   நன்றி தினகரன் 


காசாவில் இஸ்ரேல்: இன்னும் ஏழு மாதங்கள் போரை தொடர திட்டம்

May 31, 2024 9:14 am

காசாவில் ஹமாஸுக்கு எதிரான போர் குறைந்தது இந்த ஆண்டின் எஞ்சிய பகுதி முழுவதும் நீடிக்கும் என்று எதிர்பார்ப்பதாக மூத்த இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

‘காசா மோதல் குறைந்தது மேலும் ஏழு மாதங்கள் நீடிக்கும்’ என்று இஸ்ரேலிய பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சச்சி ஹனெக்பி இஸ்ரேலின் கான் அரச வானொலிக்கு தெரிவித்துள்ளார்.

‘இஸ்ரேலின் ஹமாஸுக்கு எதிரான போர் திட்டத்தில் 2024 ஆம் ஆண்டை போர் ஆண்டாக வரையறுக்கப்பட்டுள்ளது. 2024 இன் ஐந்தாவது மாதத்திலேயே நாம் இப்போது இருக்கிறோம், அதாவது இந்த ஆண்டில் மேலும் ஏழு மாத போரை நாம் எதிர்பார்க்கலாம்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி வெடித்த இந்தப் போர் தற்போது எட்டு மாதங்களை எட்டியிருக்கும் நிலையிலும் பலஸ்தீனர் போராளிகளிடம் இருந்து இஸ்ரேலியப் படை தொடர்ந்தும் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 

இஸ்ரேலுக்கெதிராக ட்ரெண்ட் செய்யப்படும் ‘All eyes on Rafah’ ஹேஷ்டேக்

May 29, 2024 3:01 pm 

ரஃபா தற்காலிக முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 37இற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, “ஆல் ஐஸ் ஆன் ரஃபா” (All eyes on Rafah) என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தற்போது ரஃபாவின் பக்கம் உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது.

காசா – இஸ்ரேல் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் ஞாயிற்றுக்கிழமை (26) குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 249 பேர் காயமடைந்ததாகவும் காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

இதையடுத்து, ரஃபா தற்காலிக முகாம் மீது செவ்வாயன்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 37 பாலஸ்தீர்கள் கொல்லப்பட்டனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதல் உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காசா நகரில் நடைபெற்று வரும் படுகொலையைக் குறிக்கும் வகையில், “ஆல் ஐஸ் ஆன் ரஃபா” (All eyes on Rafah) என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. “ஆல் ஐஸ் ஆன் ரஃபா” என்ற ஹேஷ்டேக் உடன் பாலஸ்தீன மக்கள் குறித்து இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. இதை பல நெட்டிசன்கள் ஷேர் செய்து பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரலெழுப்பி வருகின்றனர்.

குறிப்பாக நடிகர்கள் வருண் தவான், அலி கோனி, சமந்தா ரூத் பிரபு மற்றும் திரிப்தி டிம்ரி உட்பட இந்தியாவில் உள்ள பல பிரபலங்கள், தங்கள் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் “ஆல் ஐஸ் ஆன் ரஃபா” என்பதை பகிர்ந்துள்ளனர். டிக்டாக் மற்றும் இன்ஸ்ராகிராமில் இந்த ஹேஷ்டேக் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மெக்சிகோவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் பேரணி நடத்தியதால் மோதல் ஏற்பட்டது. பொலிஸார் இதனை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

2023 அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 36,096 இற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 81,136 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 ஆக உள்ளது. பலர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை முறையாக அங்கீகரித்ததால், ரஃபா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டத்தை கூட்டியது.

இதனிடையே இது தொடர்பாக ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், “இந்த கொடூர மோதலில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் வகையில் தஞ்சம் புகுந்த அப்பாவி மக்களின் உயிரை பலி வாங்கிய இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கையை நான் கடுமையாக கண்டிக்கிறேன். காசாவில் பாதுகாப்பான இடம் ஏதும் இல்லை. இந்தக் கொடூரம் நிறுத்தப்பட வேண்டும்” என தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.   நன்றி தினகரன் 

பப்புவா நியூ கினி நிலச்சரிவு; புதையுண்டோர் எண்ணிக்கை 2,000 ஆக உயர்வு

May 27, 2024 8:56 pm 

ப்புவா நியூ கினியாவில் (New Guinea) ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் 2000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளார்கள் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த அனர்த்தமானது, கடந்த வெள்ளிக்கிழமை (24) முங்காலோ மலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சுமார் 700இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை (UN) நேற்றைய தினம் (26) தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மீட்பு பணியில் தற்போது 2000இற்கும் அதிகமானோர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

மண்ணுக்கு அடியில் புதையுண்டுள்ள உடல்களை மீட்க விவசாயத்திற்கு பயண்படுத்தப்படும் ஆயுதங்களை மக்கள் பயன்படுத்துகின்றனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை, குறித்த பகுதியில் தொடர்ந்தும் நிலம் சரிந்து கொண்டிருப்பதனாலும் நீர் வழிந்தோடிக் கொண்டிருப்பதனாலும் ஆபத்து அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 4000 இற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1,000இற்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதியிலிருந்து தற்போது வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அது மாத்திரமன்றி, அப்பகுதியிலுள்ள உணவுத் தோட்டங்கள் மற்றும் நீர் விநியோகங்கள் ஆகியன முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நன்றி தினகரன் 


காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கிறது ரபாவில் உக்கிரம்: ஜபலியாவிலிருந்து வாபஸ்

June 1, 2024 9:07 am 

காசாவெங்கும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்த நிலையில் தெற்கு நகரான ரபா மீது சரமாரி வான் தாக்குதல்கள் இடம்பெற்றதாக பார்த்தவர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

சர்வதேச எதிர்ப்பு மற்றும் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபா மீது கடந்த மே மாத ஆரம்பத்தில் படை நடவடிக்கையை ஆரம்பித்த இஸ்ரேல் தற்போது அந்த நகரின் மேற்குப் பக்கமாக முன்னேறி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நகரின் மேற்குப் பக்கமாக இடம்பெயர்ந்த மக்களுக்கான கூடார முகாம்கள் வரை இஸ்ரேலிய டாங்கிகள் வந்துகொண்டிருப்பதாகவும் அங்கு பீரங்கிகளுடன் கவச வாகனங்களை கண்டதாக பார்த்தவர்கள் விபரித்துள்ளனர். இந்தப் பகுதி இடம்பெயர்ந்தவர்களுக்கான வலயமாக உள்ளது.

முன்னதாக ரபாவின் எகிப்துடனான எல்லையை ஒட்டிய பிலடெல்பியா இடைவழி நிலத்தை கைப்பற்றிய இஸ்ரேல் இராணுவம், நகரின் கிழக்கு பகுதியில் உள்ள வீடுகளை திட்டமிட்டு தகர்த்து வருவதாக குறிப்பிடப்படுகிறது. ரபாவின் ஒட்டுமொத்த கிழக்கு பகுதியிலும் குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் பொது வசதிகள் முற்றாக அப்புறப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுபுறம் கடந்த மூன்று வாரங்களாக உக்கிர மோதல் நீடித்த வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாமில் இருந்து இஸ்ரேல் இராணுவம் வாபஸ் பெற்றுள்ளது. படை நடவடிக்கை பூர்த்தி செய்யப்பட்டு புதிய நடவடிக்கை ஒன்றுக்கு தயாராகி இருப்பதாக இஸ்ரேல் இராணுவ கூறியுள்ளது.

இந்தப் படை நடவடிக்கையின்போது நூற்றுக்கணக்கான போராளிகள் கொல்லப்பட்டு, இஸ்ரேலிய பணயக்கைதிகளின் ஏழு சடலங்கள் மீட்கப்பட்டு 10 கிலோமீற்றர் நிலத்தடி சுரங்கங்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் ஜபலியா முகாமின் வீடுகள் மற்றும் பொது கட்டமைக்குள் தரைமட்டமாக்கப்பட்டு கணிசமான பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

‘ஒட்டுமொத்த இடமும் காணாமல்போயுள்ளது’ என்று குடியிருப்பாளர் ஒருவர் அந்த முகாமிக்கு திரும்பிய நிலையில் அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார். ‘மக்களால் அவர்களின் வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. எமது உறவினர்களை எம்மால் கண்டுபிடிக்க முடியுமா என்பது பற்றியும் எமக்குத் தெரியவில்லை. இது ஒரு குற்றச்செயலாகும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் 20 நாட்கள் நீடித்த தாக்குதலில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உட்பட நகரில் பெரும்பகுதி அழிக்கப்பட்டிருப்பதாக காசா சிவில் பாதுகாப்பு அமைப்பின் பேச்சாளர் மஹ்மூத் பசல் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக இஸ்ரேல் துருப்புகள் வாபஸ் பெற்ற பின் அங்கு திரும்பிய குடிமக்கள் முழு நகரும் அழிந்திருப்பதையே கண்டுள்ளனர்.

ஜபலியாவில் இருந்து இஸ்ரேலியப் படை வாபஸ் பெற்றபோதும் அங்கு பலஸ்தீன போராளிகள் தொடர்ந்து நிலைகொண்டு தாக்குதல்களை நடத்துவதாக போர் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

‘ஹமாஸ் மற்றும் ஏனைய பலஸ்தீனிய போராளிகள் இஸ்ரேலியப் படைகள் பின்வாங்குவதால், ஜபாலியாவில் மறுசீரமைப்பு செய்வதற்கான தங்கள் முயற்சிகளை நிச்சயமாக மீண்டும் ஆரம்பிப்பார்கள். ஜபாலியாவைச் சுற்றி இஸ்ரேலியப் படைகள் அழிக்கப்படாத எஞ்சிய ஹமாஸ் படைப் பிரிவுகள் உள்ளன’ என்று காசா போர் களத்தை கண்காணித்து வரும் போர் கற்கைக்கான நிறுவனம் மற்றும் சி.பீ.டி. அமைப்புகள் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை மத்திய காசாவின் புரைஜ் அகதி முகாமின் குடியிருப்பு பகுதிகள் மீது கடந்த வியாழக்கிழமை இரவு தொடக்கம் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் 11 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

ரபா நகரில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் பகுதிக்கு அருகில் இந்த குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் கொல்லப்பட்டவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் இருப்பதாகவும் காசா சிவில் பாதுகாப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக அல் புரைஜ் அகதி முகாமில் உள்ள அல் சவுஸ் குடும்பத்திற்கு சொந்தமான வீடு ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் இரு குழந்தைகள் மற்றும் மூன்று பெண்கள் உட்பட குறைந்தது எட்டுப் பேர் கொல்லப்பட்டுள்ளனர். தவிர அதே முகாமில் அல் ஹவுர் குடும்பத்திற்கு சொந்தமான வீட்டின் மீது இடம்பெற்ற மற்றொரு வான் தாக்குதலில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

ரபா தாக்குதலுக்கு முன்னர் அங்கு காசா மக்கள் தொகையில் பாதி அளவான 1.4 மில்லியன் மக்கள் அடைக்கலம் பெற்றிருந்த நிலையில் அது தொடக்கம் ஒரு மில்லியன் பேர் வெளியேறி இருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காசா பஞ்ச நிலையை நெருங்கி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

இந்நிலையில் எகிப்துடனான ரபா எல்லைக் கடவையை இஸ்ரேல் கைப்பற்றியது தொடக்கம் காசாவுக்கு உதவிகள் செல்வது மேலும் சுருங்கியுள்ளது. ரபா எல்லைக் படவை மூடப்பட்டிருப்பதோடு ஏனைய எல்லைகள் வழியாகவும் காசாவுக்கு உதவிகள் வருவது குறைந்துள்ளது.

காசா கடற்கரையில் அமெரிக்கா கட்டிய தற்காலிய துறைமுகம் கடல் கொந்தளிப்பினால் உடைந்திருக்கும் சூழலில் அதன் வழியாகவும் உதவிகள் வருவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கடல் வழியாக சைப்ரசில் இருந்து உதவிக் கப்பல்கள் அனுப்பப்பட்டு வந்தன.

இதேநேரம் ஏற்கனவே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்திருக்கும் நிலையில் எமது மக்கள் மீதான ஆக்கிரமிப்பு, கொலை, முற்றுகை, பட்டினி மற்றும் இனப்படுகொலைக்கு மத்தியில் பேச்சுவார்த்தைகளுக்குச் செல்லப்போதில்லை என்று ஹமாஸ் அமைப்பு கடந்த வியாழனன்று கூறியிருந்தது.

இஸ்ரேல் போரை நிறுத்தினால் முழுமையான உடன்படிக்கை ஒன்றுக்குத் தயார் என்று அந்த அமைப்பு மத்தியஸ்தர்களிடம் தெரிவித்தள்ளது.

ஹமாஸை ஒழிப்பது மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை போரை தொடர்வதாக இஸ்ரேல் கூறி வருகிறது.   நன்றி தினகரன் 


No comments: