திரை வசனத்தில் சிகரம் தொட்ட கலைஞர் கருணாநிதி!


 சுந்தரதாஸ்

ஆஸ்திரேலியா


பத்தாண்டுகளுக்கு ஒரு முறை தமிழ் படங்களின் ரசனை மாறிக்


கொண்டே இருக்கும் என்பது கண்கூடு. அப்படியான ஒரு ரசனை மாற்றத்துக்கு 70வது ஆண்டுகளுக்கு முன்னர்

வழி கோலியவர் என்ற பெருமையை பெறுபவர் நூற்றாண்டு விழா நாயகனான கலைஞர் மு .கருணாநிதி. 1924ம் ஆண்டில் ஜூன் மாதம் 3 ம் தேதி திருவாரூர் , திருக்குவளை என்ற சிறு கிராமத்தில் பிறந்த கருணாநிதி நாடகத்துறையிலும், சினிமாத் துறையிலும் தன்னை நிலைநாட்டிக் கொள்ள அதிக காலம் எடுத்துக் கொள்ளவில்லை என்பதே உண்மை.

தனது இருபத்து மூன்றாவது வயதிலேயே திரைப் படங்களுக்கு வசனம் எழுதுவதில் வல்லமை பெற்ற அவருக்கு முதல் வாய்ப்பு 1947ம் ஆண்டு தயாரான ராஜகுமாரி படம் மூலம் கிட்டியது. திரையுலகில் நுழைவதற்கான சந்தர்ப்பத்துக்கு காத்திருந்த கருணாநிதிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு மாயாஜால கதையை கொண்ட ஒரு படத்துக்கு எழுதுவது தான். ஆனால் அதனை ஏற்க அவர் தயங்கவில்லை. மாயாஜால படத்தில் தன்னுடைய மாயாஜால எழுத்து திறனை வெளிப்படுத்தவே அவர் முனைந்தார். ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த ராஜகுமாரி அடைந்த வெற்றி தொடர்ந்து புராணப் படமான அபிமன்யுவுக்கு எழுதும் வாய்ப்பை அவருக்கு பெற்றுத் தந்தது.


பிற் காலத்தில் கவிஞர் கண்ணதாசனே வியந்து குறிப்பிட்டது போல் , “அபிமன்யு படத்தில் அவன் கேட்ட தமிழ் என்றும் மறக்க முடியாத இன்பத் தமிழாகும்.ஒடிந்த வாளானாலும் ஒரு வாள் கொடுங்கள் , அண்ணன் செய்த முடிவைக் கண்ணன் மாற்றுவதற்கில்லை , கண்ணன் மனமும் கல்மனமோ, அர்ச்சுனனால் கூட துளைக்க முடியாத சக்கர வியூகத்தை அபிமன்யு துளைத்து விட்டான் என்றால் அங்கே தான் இருக்கிறது ஆச்சாரியாரின் விபீஷண வேலை போன்ற வீச்சான வசனங்களை எழுதி பலரையும் பரவசப்படுத்தினார் கருணாநிதி. தான் கொண்டிருந்த அரசியல் கொள்கைகள் எதுவாக இருந்த போதும் கிருஷ்ண பகவானுக்கும் வசனம் எழுத ஆரம்ப காலங்களில் அவர் தயங்கவில்லை. ஆனால் 1952ல் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸின் மந்திரிகுமாரி ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. படத்தின் கதாநாயகன் பார்த்திபன் கொள்ளையடிப்பதை நியாயப் படுத்தி வசனம் பேசினான். கொள்ளையடிப்பது ஒரு கலை , புலி ஆட்டைக் கொல்லாதிருந்தால், கொக்கு மீனை கொத்தாமல் இருந்தால் , பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால் நானும் கொள்ளையடிக்காமல் இருக்கலாம் என்று எஸ் ஏ நடராஜன் பேசும் கருணாநிதியின் வசனம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் வசனங்களுக்கு கிடைத்த வரவேற்பு ரசிகர்கள் புதிய ரசனைக்கு , மாற்றத்துக்கு தயாராகி விட்டார்கள் என்பதை கருணாநிதிக்கு உணர்த்தியது.

1952ம் வருடம் கருணாநிதிக்கு மட்டுமன்றி தமிழ் திரைக்கே ஒரு புதிய

சகாப்தத்தை ஏற்படுத்தியது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ற அற்புத நடிகர் பராசக்தி படத்தில் அறிமுகமாகி , கருணாநிதியின் வசனங்களை அனாயசியமாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். படத்தின் கதையில் பல முரண்பாடுகள் இருந்த போதும் கதாபாத்திரங்கள் பேசிய வசனங்கள் ஈட்டியாக பாய்ந்தன. சிஸ்டம் சரியில்லை என்று ரஜினிகாந்த் சொன்னது போல் முழு சமுதாயமுமே சரியில்லை அது உடனே மாற வேண்டும் என்று இடித்துரைக்கும் விதத்தில் வசனங்கள் அமைந்தன.


நாற்பதாம் ஆண்டுகளில் இருந்த தமிழ் திரையின் பாணி, பக்தி, மாயாஜாலம், ஏராளமான பாடல்கள், என்பதில் இருந்து விலகி வசனம் நடிப்பு என்ற புதிய மாற்றத்துக்குள் சென்று விட்டதை கருணாநிதி புரிந்து கொண்டிருந்தார். அதன் வெளிப்பாடே பராசக்தியின் அவர் எழுதிய சத்தான சீர்த்திருத்த கருத்துகளைக் கொண்ட வசனங்கள். இந்த வசனங்களை கேட்டு திரையுலகமே வியந்தது. அதே சமயம் தான் சார்ந்த அரசியல் கட்சியின் கொள்கைகளுக்கு சேதம் வாரா வண்ணம் வசனம் எழுத வேண்டிய சுழலும், அதனை வலியுறுத்தக் கூடிய வலிமையும் வாய்ப்பும் தனக்கு கிடைத்திருப்பதை அவர் உணரலானார்.

மனோகரா படத்துக்கு காட்சிகளை அமைத்து, வசனங்களை எழுதிய

போது தன்னுடைய கட்சி கொள்கைக்கு எதிராக எழுத மறுக்கும் துணிவு அவரிடம் குடி கொண்டிருந்தது. படத்தில் ஒரு காட்சியில் சித்து வேலை செய்யக் கூடிய ஒருவன் மந்திர சக்தியினால் அரூபமாகி தன் எதிரியை தீர்த்துக் கட்ட முனைகிறான். இந்த காட்சி படமான போது கருணாநிதி போராட்டம் ஒன்றில் கலந்து சிறையில் இருந்தார். காட்சிக்கான வசனங்களை எழுதி வாங்க அவரிடம் சென்ற போது எழுதித் தர அவர் மறுத்து விட்டார். மந்திரத்தால் நடக்கும் காரியம் நவீன யுக்தியால் நடப்பதாக எழுதி தருகிறேன் என்று கூறி விட்டார். தயாரிப்பு தரப்பில் மறுப்பு சொல்லவே என் பெயர் இல்லாமலே படத்தை வெளியிடுங்கள் , என் பெயர் வருவதென்றால் நான் எழுதுவதுதான் படத்தில் இடம் பெற வேண்டும் என்று ஆணித்தரமாக சொல்லக் கூடிய சூழ்நிலை இப்போது உருவாகியிருந்தது!


பராசக்தி, மனோகரா பட வசனங்கள் பட்டி தொட்டியெங்கும் பரவி ஒலித்தன. இளைஞர்கள் நாவில் இவ்வசனங்கள் புரண்டன. அடுக்கு மொழியில் அறிஞர் அண்ணா வசனம் எழுதிக் கொண்டிருந்த போது , வெடுக்கென்று சீறிப் பாயும் வசனங்களாக கருணாநிதியின் வசனங்கள் அமைந்தன. இதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் படமாக 1954ல் வந்தது மலைக்கள்ளன். நாமக்கல் ராமலிங்கம் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைத்து வசனம் எழுதி இருந்தார் கருணாநிதி. படத்தின் நாயகன் புரட்சி நடிகர் எம் ஜி ராமசந்திரன். வசனங்கள் அளவுடன் இருக்க வேண்டும், அதே சமயம் அர்த்தபுஷ்டியாகவும் அமைய வேண்டும் இது எம் ஜி ஆரின் பாணி. அதற்கு குறை வைக்காமல் மிக இயல்பான வசனங்களை வரைந்தார் கலைஞர். அது மட்டுமன்றி முந்தைய படங்களில் பெரியளவில் காட்டாத தன் நகைச்சுவை வசனத் திறனை இப்படம் முழுதும் காட்டியிருந்தார் அவர். டி எஸ் துரைராஜும், எம் ஜி சக்ரபாணியும் தோன்றும் காட்சிகள் நகைச்சுவையை கொட்டின.

தமிழ்த் திரைப்படங்களின் வசன நடையில் மாற்றத்தை கொண்டு வந்தவர் இளங்கோவன். அவரைத் தொடர்ந்து அதற்கு மெருகூட்டியவர் அண்ணாதுரை. ஆனால் புரட்சியை உருவாக்கியவர் என்றால் அந்தப் பெருமை கருணாநிதியைத்தான் சாரும். இதன் காரணமாகவே இளம் வயதிலேயே அவரால் அத் துறையில் பிரகாசிக்க முடிந்தது. அது மட்டுமன்றி சிவாஜி பேசும் வசனம் என்றால் ஒரு பாணி, எம் ஜி ஆர் பேசுவதென்றால் ஒரு பாணி, ஜெமினி, எஸ் எஸ் ஆர் என்றால் இன்னொரு விதம் என்று பிரித்து வித்தை காட்டும் சாமர்த்தியம் அவரிடம் குடி கொண்டிருந்தது.

தனது முன்னோடிகளாக இருந்த இளங்கோவன், அண்ணா, பாரதிதாசன், இவர்களை விட இளம் வயதிலேயே பொருளாதார ரீதியில் வளம் பெற்றவராகவே கருணாநிதி திகழ்ந்தார். 1955ம் ஆண்டு தனது முப்பத்தோராவது வயதிலேயே கோபாலபுரத்தில் சொந்தமாக வீடு வாங்கும் வாய்ப்பை அவரது வசனம் எழுதும் ஆற்றல் அவருக்கு பெற்றுத் தந்திருந்தது.

ஐம்பெரும் காவியமான குண்டலகேசியின் தழுவல் மந்திரகுமாரி, சிலப்பதிகாரத்தின் சாரம் பூம்புகார், அருணகிரிநாதர் வரலாற்றின் சாயலில் திரும்பிப் பார், சாகுந்தலத்தின் தாக்கத்தில் பூமாலை என்று சில திரைப்பட ஆய்வாளர்கள் விமர்சனங்களை முன் வைத்த போதும் கலைஞரின் திரைக்கதை அமைக்கும் நேர்த்தியை பாராட்டியே ஆக வேண்டும்.

1964ம் ஆண்டு தனது தலைவர் அண்ணாவுடன் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக கட்சியில் இருந்து ஒதுங்கி முற்றிலும் திரைத் துறையில் ஈட்டுபட்டு கதைவசனகர்த்தாவாக இயங்க கருணாநிதி தீர்மானித்தார். அந்தளவிற்கு தன் எழுத்தாற்றல் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது. தன்னுடைய தீர்மானத்தை இலட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரனுக்கு தெரியப்படுத்தினார். பின்னர் எஸ் எஸ் ஆர் , அண்ணாவுடன் பேசி இருவர் இடையே சமரசம் ஏற்பட வழி வகுத்தார். அதன் தொடர்ச்சியாக கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த பூமாலை, பூம்புகார் படங்களில் எஸ் எஸ் ஆர் நடித்தார்.

நாம் படத்தில் எம் ஜி ஆரின் குணசித்ர நடிப்பை வெளிப்படுத்தும் விதத்தில் கதையமைத்த கருணாநிதி , புதையல் படத்தில் சிவாஜியின் மாறுபட்ட நடிப்புக்கு களம் அமைத்தார். எஸ் எஸ் ஆர் நடிக்க வேண்டிய குறவஞ்சி படத்தில் இருந்து திடீர் என்று அவர் விலகி விடவே , சிவாஜியின் நடிப்பில் அப்படம் வெளிவந்தது. ஆனால் கலைஞர் எழுதிய மணிமகுடம் நாடகம் எஸ் எஸ் ஆர் தயாரிப்பு, இயக்கம், நடிப்பில் பின்னர் வெளியானது!

அன்றிருந்த பிரபல பட நிறுவனங்களான ஜுபிடர் பிக்சர்ஸ், மாடர்ன் தியேட்டர்ஸ், ஏவி எம் புரொடக்சன்ஸ், பக்ஷிராஜா பிக்சர்ஸ், பிரசாத் மூவிஸ் , போன்றவை கருணாநிதியின் வசனங்களை தங்களின் படங்களில் பயன்படுத்தி வெற்றி கண்டன. இன்னும் சில நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் படத்துக்கு இவரிடமே படத்தின் பெயரை அமைத்து தரும்படி கேட்டன. அவ்வாறு கருணாநிதி தந்த பேர் தான் மஞ்சள் மகிமை. நாகேஸ்வரராவ், சாவித்ரி நடிப்பில் வெற்றி பெற்ற படம் இது.

அரசியல் பணி காரணமாக தன்னைத் தேடி வந்த சில பட வாய்ப்புகளை தவிக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டதுண்டு . அந்த வாய்ப்புக்கள் அவரின் மருமகன் முரசொலி மாறனுக்கு கிட்டவே அவரும் நல்லதொரு வசனகர்த்தாவாக உருவெடுத்தார். மாறனின் வசனத்தில் வெளிவந்த குலதெய்வம், மரகதம், தலை கொடுத்தான் தம்பி என்பன மாமனுக்கு பெருமையை பெற்று கொடுத்தன!

அதே போல் பிரபல இயக்குனர் ஸ்ரீதர் தான் தயாரித்து இயக்கிய சிவந்த மண் படத்துக்கு வசனம் எழுத முதலில் அணுகியது கருணாநிதியைத்தான்! ஆனால் முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டு படங்களுக்கு வசனம் எழுதலாமா என்ற சந்தேகம் உருவான காரணத்தால் அது நிறைவேறவில்லை. பின்னர் வசனங்களை ஸ்ரீதரே எழுதினார் . எம் ஜி ஆரின் குணச் சித்திர நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் வெளிவந்த படம் நாம். கருணாநிதி, எம் ஜி ஆர், பி எஸ் வீரப்பா, ஏ காசிலிங்கம் ஆகியோர் தயாரிப்பில் மேகலா பிக்சர்ஸ் சார்பில் உருவாகியது. பின்னர் பாகஸ்தர்கள் ஒதுங்க மேகலா பிக்சர்ஸ் கருணாநிதி வசமானது. அந் நிறுவனம் தயாரித்த அண்ணாவின் ரங்கூன் ராதா கதைக்கு கலைஞர் வசனங்களை எழுதினார். ஏற்கனவே சிவாஜி வில்லனாக நடித்த திரும்பிப்பார் படத்துக்கு வசனம் எழுதிய கருணாநிதி, இப்போது ரங்கூன் ராதாவில் சிவாஜிக்கு எழுதிய வசனங்கள் சிவாஜியின் வித்தியாசமான நடிப்புக்கு வழி வகுத்தது. ஆனால் இந்தப் படங்கள் எல்லாம் சென்சார் போர்டின் கெடுபிடிக்கு உள்ளாகி படத்தின் ஜீவனை இழந்தன. அதே போல் பல்லவ சக்ரவர்த்தி நரசிம்மபல்லவரின் வரலாற்றின் ஒரு பகுதியை விளக்கும் விதத்தில் அவர் எழுதி தயாரித்த காஞ்சித் தலைவன் படமும் சென்சாரில் கத்திரிக்கு தப்பவில்லை. இதன் காரணமாக வசனகர்த்தாவாக கருணாநிதி வெற்றி பெற்ற போதிலும் தயாரிப்பாளராக நட்டத்தையே சந்தித்தார்.

1963ம் ஆண்டு மூத்த இயக்குனர் எல் வி பிரசாத் இயக்கிய சமூகப் படமான இருவர் உள்ளம் படத்துக்கு கருணாநிதி உரையாடல்களை எழுதினார். ராஜா ராணி படத்தில் சிவாஜி நடிப்பில் சேரன் செங்குட்டுவன் நாடகத்தை பதினாறு பக்கங்களுக்கு எழுதியவர் இந்தப் படத்துக்கு நச் என்று வசனங்களை காலத்துக்கு ஏற்ற மாதிரி எழுதி பாராட்டுகளை பெற்றுக் கொண்டார்.

ஐம்பெரும் காப்பியமான சிலப்பதிகாரம் மீது கலைஞருக்கு தீராக் காதல் உண்டு. ஏவி எம் தயாரிப்பில் கண்ணகி கதையை கருணாநிதி வசனத்தில் படமாக்கும் திட்டம் இருந்தது. ஆனால் இதே கதையை அடிப்படையாக கொண்டு தங்கப் பதுமை படம் தயாரானதால் திட்டம் கைவிடப்பட்டது. ஆனாலும் 66ம் ஆண்டு மேகலா பிக்சர்ஸ் சார்பில் பூம்புகார் படம் கலைஞர் வசனத்தில் வெளிவந்தது. படத்தின் வெற்றியை கருதி பழுத்த ஆஸ்திகரான கே பி சுந்தராம்பாளையும் நடிக்க வைத்திருந்தனர்.

1970 களின் ஆரம்பத்தில் தனது மூத்த மகன் மு க முத்து கதாநாயகனாக நடித்த பிள்ளையோ பிள்ளை படத்துக்கு வசனம் எழுதி மகனின் வளர்ச்சிக்கு துணை நின்றார் கலைஞர். அதன் பின் அரசியலில் ஏற்பட்ட பிரளயம் காரணமாக ஆட்சியை இழந்தாலும், திரைப்பட காட்சிகளுக்கு வசனம் எழுதுவதில் அவர் தீவிரம் காட்டலானார் . நடிகவேள் எம் ஆர் ராதா, ஜெய்சங்கர், எஸ் ஏ அசோகன் ஆகியோரின் அனுசரணையோடு வண்டிக்காரன் மகன், ஆடு பாம்பே, நெஞ்சுக்கு நீதி படங்களுக்கு வசனம் தீட்டினார் கலைஞர். ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை.

1940 களின் பிற்பகுதிகளில் வசனகர்த்தாவாக திரையுலகில் நுழைந்த கருணாநிதி நாற்பது ஆண்டுகள் கழித்த பின்னர் கூட தன்னுடைய பேனாவின் கூர்மை மங்காமல் பல படங்களுக்கு தொடர்ந்து வசனம் எழுதலானார். இவ்வாறு அடுத்த தலைமுறை நடிகர்களான விஜயகாந்த், சத்தியராஜ், ஆகியோரின் படங்களுக்கு அவர் தீட்டிய வசனங்கள் புதிய தலைமுறை ரசிகர்களின் அறிமுகத்தையும், ஆதரவையும் அவருக்கு பெற்று தந்தது. நடித்துக் கொண்டிருந்த எம் ஜி ஆர் முதல்வர் ஆனவுடன் , முதல்வராக இருந்த கருணாநிதி திரையுலகில் பிஸி ஆகி விட்டார்!

பாசப் பறவைகள், நியாயத் தராசு, மக்கள் ஆணையிட்டால், பெண் சிங்கம், மண்ணின் மைந்தன், தென்றல் சுடும், பொன்னர் சங்கர் , வீரன் வேலுத்தம்பி, காவலுக்கு கெட்டிக்காரன், இளைஞன் போன்ற படங்கள் சென்ற நூற்றாண்டின் இறுதியிலும், இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலும் கலைஞரின் திரையுலக இருப்பை உறுதி செய்தன! உடல் நிலை ஒத்துழைத்திருந்தால் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்துக்கு கூட வசனம் எழுதி இருப்பாரோ என்னோவோ!

அரசியலில் பல பதவிகளை அவர் வகித்த போதும் வசனகர்த்தா என்ற பேர் இறுதிவரை அவருடன் ஒட்டிக் கொண்டே இருந்தது. தமிழ்த் திரையுலகம் எத்துணை மாற்றங்களைக் கண்ட போதிலும் சிறந்த பத்து வசனகர்த்தாக்களுக்குள் கலைஞர் கருணாநிதியின் பேர் என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நூற்றாண்டை கடந்தும் அவர் தீட்டிய வசனங்கள் தொலைக்காட்சி வழியாக ஒவ்வொரு இல்லங்களிலும் ஒலி(ளி)த்துக் கொண்டே இருக்கிறது!



1 comment:

Anonymous said...

அருமையான செய்திகள்.
1964 இல் அண்ணாத்துரை அவர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பால், தன் கதை வசனங்களோடு திரையுலகில் மட்டும் இருந்திருந்தால், அவர் உண்மைக்கலைஞராகவே இன்றளவும் அழியாப்புகழோடு உலகத் தமிழர்கள் இதயங்களில் வீற்றிருந்திருப்பார்.
அதாவது, கலைஞர் என்று, எம்.ஆர்.ராதா சூட்டிய பட்டம், சரியான இடம் சேர்ந்ததால் களிப்புற்றிருக்கும்.
எனினும், அவரின் கலைத் திறமை மறக்க முடியாததாகும்.