மணல் திரைப்படம் அமைதியாக இருந்து ஆழமான விடயத்தை சொல்லிய தமிழ் திரைப்படம்- செ பாஸ்கரன்

 .

மணல் திரைப்படம் அமைதியாக இருந்து ஆழமான விடயத்தை சொல்லி சென்ற இலங்கை தமிழ்த் திரைப்படம்


இன்று சிட்னி ரீடிங் சினிமாவில் திரையிடப்பட்ட மணல் திரைப்படத்தை பார்க்கக்

கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டது.  கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், இயக்குனர், திரைக்கதை  எழுத்தாளரான விசாகேச சந்திரசேகரத்தின் தயாரிப்பில், விசாகேச சந்திரசேககர் அவர்களால் நெறியாள்கை செய்யப்பட்ட இந்த திரைப்படம் தமிழ் நடிகர், நடிகைகளால் குறிப்பாக யாழ்ப்பாணத்து நடிகர்களையும், பின்னணி கலைஞர்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம், பல விருதுகளை குறிப்பாக நெதர்லாந்து ரொட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விசேட ஜூரி விருதினையும் வேறு பல விருதுகளையும் பெற்றிருந்த இத்திரைப்படம் என்பதாலும் இலங்கை தமிழ் திரைப் படங்களை தவறாது பார்ப்பவன் என்பதாலும் அந்த திரைப்படத்தை சென்று பார்க்கும் ஆவல் ஏற்பட்டிருந்தது.


 திரைப்படத்தின் கதை ஒரு இலங்கையின் போர்க்காலத்துக்கு பின்பான ஒரு

கதையாகும். போராட்டத்திற்கு உதவிய ஒருவருக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின்

கீழ் குற்றம் சாட்டப்பட்டு பின் விடுவிக்கப்பட்ட ஒருவர் தன்னுடைய காணாமல்

ஆக்கப்பட்ட காதலியை தேடுகின்ற ஒரு கதையாக தான் இந்த கதை

அமைக்கப்பட்டிருந்தது. ஒரு கத்தியின் மேல் நடப்பது போல் மிக அழகாக

திரைப்படத்தை நகர்த்திச் சென்றிருந்தார் நெறியாளர்.


 பல பாத்திரங்கள் மவுனமாக பேசியது. மௌனம் பேச்சை விட மிகப்பெரிய ஆயுதம்

என்பார்கள் அது மிக அழகாக கையாளப்பட்டிருந்தது. இங்கே குறிப்பாக சொல்வதாக

இருந்தால். அவன் தேடிய தன் காதலியை கண்டு அவளுடன் கதைப்பதற்கு

எவ்வளவோ முயன்று பின்பு கதைக்கும் போது அவள் மௌனமாக விழிகளாலும்

உதடுகளாலும் மட்டுமே பேசுகின்ற காட்சி, அவளுக்கு ஏற்பட்ட கொடுமைகள்

எப்படி இருந்திருக்கும் என்பதற்கு அவள் எந்த மொழியையும் பேசாமல்,

கற்பழிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கின்றாள் என்பதை

அந்த மொழி மூலமும், அவளுடைய கையில் அவன் வளையல்களை அணிவிக்கின்ற

போது காட்டப்பட்ட வெட்டு காயம் மூலமும், மிகப்பெரிய விடயத்தை பேசியிருக்

கின்றார் நெறியாளர் என்று தான் கூற வேண்டும்.


அதேபோல் இன்னொரு பக்கமாக துரோகி என்று அழைக்கப்பட்டு கொல்லப்பட்டதாக

காட்டப்பட்ட ஒரு காட்சி எந்த இடத்திலும் கொல்லப்பட்டதாகவோ அல்லது

காட்சியாகவோ காட்டப்படாமல் மிகப்பெரிய விடயத்தை ஒரு பிளாஸ்டிக் பை என்ற

பையை வைத்துக்கொண்டு குறிப்பிடுகின்றார், இது எல்லாம் மனித நேயம்

உள்ளவர்களால் மாத்திரம் தான் இப்படியாக கொடுமைகளை மிக நாசுக்காக

சொல்ல முடியும். பார்ப்பவர்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும் என்பது

நெறியாளருடைய நெறியாள்கையில் தெரிகின்றது. இப்படி ஒவ்வொரு விடயமும்

மிக அழகாக நகர்த்திச் செல்லப்படுகின்றது.
இத்திரைப்படம் பல விருதுகளை வென்றது பொருத்தமானது என்று நினைக்கக்

கூடியதாக இருக்கின்றது. பல விடயங்கள் அதாவது அரசாங்கத்தால்

மேற்கொள்ளப்படுகின்ற தடைகள், வெள்ளை வான் கடத்தல்கள், மக்கள் பகுதிகளை

கைப்பற்றியும் விடுவிக்காமல் இருந்தவைகள் இப்படி எல்லாவற்றையும் நாசுக்காகவே பேசி விடுகின்றது இந்த திரைப்படம். இந்த திரைப்படத்தில் முக்கியமான பாத்திரமாக வரும் ருத்திரன் (சிவக்குமார் லிங்கேஸ்வரன்) உடைய நடிப்பு இயல்பாக யாழ்ப்பாணத்து ஒரு சாதாரண இளம் வயது இளைஞன் எப்படி இருப்பாரோ அதை அழகாக படம் முழுவதிலும் எடுத்துச் செல்கின்றார். குறிப்பாக பேசும் வசனங்கள் யாழ்ப்பாண மண் வாசனை, மிக அருமை. யார் வசனம் என்பது தெரியவில்லை. அவருக்கு வாழ்த்துக்கள்.


ருத்திரனுடைய காதலியாக வருகின்ற வாணி என்ற பாத்திரம் (துர்கா மகேந்திரன்) அவர்களுடைய கண்களும் அவருடைய துடிக்கும் உதடுகளும் பேச முடியாத பல விடயங்களை பேசி விடுகின்றது. ரசிகர்கள் அந்த வலியை உணர்ந்து கொள்ள முடிகின்றது. ருத்ரனின் தாயாக வருகின்ற செல்லம்மா (கமலா ஸ்ரீ மோகன் குமார்) ஒரு அற்புதமான தாயாக வருகின்றார். எப்படியெல்லாம் ஒரு தாய் இருப்பாளோ அதற்கு உதாரணமாக அவள் வாழ்ந்து விட்டுப் போகின்றாள். மௌனமாகவே இருக்கின்றாளே, பேசுகின்றார் இல்லையே, ஆழமாக சில விடயங்களையாவது காட்டவேண்டுமே என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற போது, ராணுவம் மகனை கைது செய்ய வரும்போது அந்த தாய் குமுறி எழுந்து சாபம் கொடுக்கின்ற அந்த காட்சி, தாய் என்றால் இதுதான் என்று எண்ணத்தை தருகின்ற அருமையான நடிப்பு கமலா ஸ்ரீ மோகன் குமார் அவர்களுடைய நடிப்பாக இருந்தது.இன்னும் பலர் சிறிய காட்சிகளில் வந்துவிட்டு போனாலும் கூட, முத்திரை பதித்து விட்டு செல்கிறார்கள் அதிலே குறிப்பாக ஒருவரை சொல்லத்தான் வேண்டும் அதுதான் மகேந்திர சிங் அவர்கள். பல திரைப்படங்களில் குறிப்பாக யாழ்ப்பாணத்து திரைப்படங்களிலேயே பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். மனதில் பதிகின்ற ஒரு பாத்திரமாக வந்து விட்டுச் செல்கின்றார். ருத்ரனின் தாயிடம் வந்து வாணியினுடைய தந்தை உங்களோடு சம்பந்தம் வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்று சொல்லுகின்ற காட்சி, சாதியத்தை எம்மவர்கள் எப்படி தூக்கி பிடிக்கின்றார்கள் என்பதை மிக ஆழமாக பதிந்து விட்டு செல்கின்ற இடமும் சிறைக்குச் சென்று விட்டு திரும்புகின்ற போராளிகள் அரசாங்கத்தால் எப்படி கண்காணிக்கப்படுகின்றார்கள் என்பதை இரண்டு வார்த்தைகளில் புரிய வைத்துவிட்டு சென்றிருந்தார். மகேந்திர சிங் அவர்களுடைய நடிப்புக்கு ஒரு சபாஷ் கொடுக்கத்தான் வேண்டும்.அதேபோல் இந்த திரைப்படத்தின் இசை அமைப்பாளர் பத்மஜன் சிவநாதன் அவரைப் பற்றி நிச்சயமாக பேசத் தான் வேண்டும். அவருடைய முதலாவது திரைப்படமாக இது இருக்கின்றது என்று கூறப்படுகின்றது, ஆனால் இரண்டாவது திரைப்படமான, பெண் இயக்குனர் ஈழவாணியின் லூசி திரைப்படம் இந்த திரைப்படத்திற்கு முன்பே வெளியாகிவிட்டது என்று நினைக்கின்றேன். என் நினைப்பு சரியாக இருந்தால் இரண்டாவது திரைப்படம் முதலில் வெளிவந்துவிட்டது. இப்போது நாங்கள் பார்த்த இந்த திரைப்படம் தான் அவருடைய இசையில் முதலாவது திரைப்படம் என்று பேசப்படுகின்றது. முதல் திரைப்படத்திலேயே இசையை மிக அழகாக நடத்திச் சென்றிருக்கின்றார். எங்கு என்ன தேவை என்பதை அளந்து கொடுத்திருக்கின்றார் பத்மஜன் சிவநாதன் அவர்கள். பத்மஜனுடைய இசை மனதை வருடி விடுகிறது சோகத்தை தெளிக்க வேண்டிய இடங்களில் அள்ளித் தெளித்து விடுகின்றது. பத்மஜனுக்கும் பாராட்டுக்கள்.


அடுத்து ஒளிப்பதிவை ரிசி செல்வம் செய்திருக்கிறார். ரிஷி செல்வம் அவர்கள் அனுபவமுள்ள ஒரு ஒளிப்பதிவாளர் அவருடைய காட்சிகள் குளோசப் பிலே வருகின்ற போதெல்லாம் மிக அழகாக காட்டப்படுகின்றது. அது மட்டுமல்ல லோங் ஷார்ட் என்று கூறப்படுகின்ற விரிந்த காட்சிகளையும் அவருடைய கேமராவால் கைப்பற்றி இருக்கின்றார் இப்படி ஒவ்வொரு விடயத்தையும் அழகாக எடுத்துக் கூறலாம் இந்த திரைப்படத்தை பற்றி


 அப்படியானால் குறைகள் இல்லையா என்ற ஒரு கேள்வி அங்கே எழுகின்றது சில

இடங்களிலே மௌனம் அதிகம் வந்துவிட்டது போல் தெரிகின்றது. கேட்கப்படுகின்ற

சில கேள்விகளுக்கு விடை ரசிகர்கள் பெற்றுக் கொள்வதை விட கேட்கப்பட்டவர்

கூறியிருந்தால் அது நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணக்கூடியதாகவும் இருந்தது.

அதேபோல் இந்த கேமரா லோங் ஷார்ட். அந்த காட்சிகள் வயல்வெளிகள் கடல்

பரப்புகள் இவைகள் எல்லாம் எமது நாட்டிலே மிக அழகான விடயங்கள். இவற்றை

காட்டுகின்ற போது ஏன் இருட்டாக இருக்கின்றது? இது இன்னும் சில

திரைப்படங்களிலும் இப்படியாக இருந்தது. இவற்றைப் பற்றியும் நான் பலரிடம்

கேள்வி எழுப்பி உள்ளேன்.இந்திய திரைப்படங்களில் ஒரு லோங் ஷார்ட் காட்சி காட்டப்படுகின்ற போது

எவ்வளவு ரமியமாக அதை காட்டுகின்றார்கள், வெளிச்சமாக அதை வைத்துக்

காட்டுகின்றார்கள் ஆனால் இங்கு மதிய நேரத்திலோ அல்லது மாலை நேரத்தில்

காட்டுகின்ற காட்சிகளை கூட இருளாக இருக்கின்றது. கலரிங் தவறா அல்லது

கவலையீனமா என்பது எனக்கு புரியவில்லை. இதை உரியவர்கள் புரிந்து கொண்டு

அதற்குரிய திருத்தங்களை செய்தால் நன்றாக இருக்கும் ஏனென்றால் இவர்கள்

பாவிக்கின்ற கேமராக்கள் கூட திரைப்படத்திற்கான ரெட் கேமரா அல்லது சோனி

கேமராவை தான் பாவிக்கிறார்கள். அப்படி பாவிக்கின்ற போது ஏன் இந்த இருள்

பற்றிக் கொள்கின்றது. அது கலரிங்கிலே ஏற்படுகின்ற தவறா அல்லது வேறு ஏதாவதா

என்பதை யாராவது கூறினால் நன்றாக இருக்கும். அது மட்டும் அல்ல திரைப்படத்தை எடுப்பவர்கள் அதை கவனித்தால் நன்றாக இருக்கும் ஏனென்றால் ஒரு அழகிய காட்சியை கண் பார்ப்பதை விட கமரா இன்னும் இரட்டிப்பாக அழகுறக்காட்டும் ஆனால் இங்கே அது மாறி இருக்கின்றது.


இதைத் தவிர ஒரு முக்கியமான கதையை அழகாக நகர்த்திச் சென்று இருக்கின்றார் விசாகேச சந்திரசேகரம்  அவர்கள். இவர் ஒரு மனிதநேய ஆர்வலர் சட்டத்தரணி பல்கலைக்கழக விரிவுரையாளர் சினிமாவில் மூன்று நான்கு திரைப்படங்களை முதலிலேயே செய்து விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவர் இந்த திரைப்படத்திலும் பல விருதுகளை பெற்ற இவருக்கு எமது வாழ்த்துக்கள். இன்னும் பல திரைப்படங்களை இவர் வெளிக்கொண்டு வரவேண்டும் .


இத்திரைப் படம் மீண்டும் திரையிடப் பட்டால் நிச்சயமாக திரைப்படத்தை தவறவிடாமல் பாருங்கள்.


செ.பாஸ்கரன்

tamilmurasuaustralia.

No comments: