பூம்புகார் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 தமிழகத்தின் முதலமைச்சராகவும், தி மு காவின் தலைவராகும்,


பிரபல திரைப்பட வசனகர்த்தாவாகவும் திகழ்ந்த கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஜூன் 3ம் தேதியாகும். இளம் வயதிலேயே வசனகர்த்தாவாகி புகழ் பெற்ற இவர் வசனம் எழுதி தயாரித்து வெற்றி பெற்ற படங்களில் ஒன்றுதான் பூம்புகார்.

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் தமிழில்

இரண்டு முறை படமாக்கப்பட்டுள்ளது. 1944ல் ஜுபிடர் பிக்சர்ஸ் கண்ணகி என்ற பேரில் பி யு சின்னப்பா, கண்ணாம்பா நடிப்பில் இதனை தயாரித்தார்கள். இப் படத்துக்கு இளங்கோவன் எழுதிய வசனங்களை உணர்ச்சிகரமாக பேசி கண்ணாம்பா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

ஆரம்பம் முதலே சிலப்பதிகாரம் மீது தீவிர ஆர்வம் கொண்டிருந்த கலைஞர் கருணாநிதி மீண்டும் இக் காவியம் திரைப்படமானால் அதற்கு தான் திரைக்கதை வசனம் எழுத வேண்டும் என்று நாட்டம் கொண்டிருந்தார். 50ம் ஆண்டுகளின் இறுதியில் ஏவி எம் செட்டியார் இதனை படமாக்க தீர்மானித்து அதற்கு கருணாநிதி வசனம் எழுதுவதென முடிவானது. அவரும் அவ்வாறே வசனம் எழுதி தயாராக இருந்தார். இந்த சமயத்தில் தான் கண்ணகி, கோவலன் கதையை அடிப்படையாக கொண்டு சிவாஜி, பத்மினி நடிப்பில் ஜுபிடர் பிக்சர்ஸ் தங்கப்பதுமை படத்தை தயாரிப்பது அவர்களுக்கு தெரிய வந்தது. அது தெரிய வந்தவுடன் ஏவி எம் சிலப்பதிகாரத்தை படமாக்குவதை கை விட்டார். ஆனாலும் கருணாநிதியை பொறுத்த வரை தனது முயற்சியை அவர் கைவிடுவதாக இல்லை.


1964ம் ஆண்டு தனது சொந்த பட நிறுவனமான மேகலா பிக்சர்ஸ் சார்பில் பூம்புகார் என்ற பேரில் தனது இலட்சிய படத்தை தயாரிக்கத் தொடங்கினார் அவர். படத்தில் கற்புக்கரசி கண்ணகியாக நடிக்க அவரால் தேர்வு செய்யப்பட்டவர் விஜயகுமாரி. கோவலனாக இலட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் நடித்தார். விஜயகுமாரியின் திரை வாழ்வை பொறுத்த வரை குறிப்பிடக் கூடிய படங்களில் ஒன்றாக பூம்புகார் அமைந்தது. ஆரம்பத்தில் கோவலனை மணந்து நாணத்துடன் நடப்பதும், பின்னர் அவனை பிரிந்து சோகத்துடன் பரிதவிப்பதும், மீண்டும் அவனுடன் சேர்ந்து மகிழ்வதும், அவன் மடிந்தான் என்று அறிந்து பெண் புலி என சீறி எழுந்து பாண்டியன் சபையில் நீதி கேட்டு ஆவேசம் அடைவதுமாக படம் முவதும் விஜயகுமாரியின் நடிப்பு நன்கு பரிணமித்தது.

எஸ் எஸ் ஆர் கோவலனாக வந்து அளவுடன் நடித்திருந்தார். அன்றைய

கால கட்டத்தில் இரண்டாம் தாரம் என்றால் அந்த வேடம் ராஜஸ்ரீக்குத்தான். இதிலும் அவர்தான் மாதவி. ஆடுகிறார், படுகிறார் இறுதியில் கண்ணீர் சிந்துகிறார்.
சீரியஸ் படம் என்பதால் அதனை சரி செய்ய நாகேஷ், மனோரமா ஜோடிகள் உள்வாங்கப்பட்டிருந்தார்கள். அவர்களும் நகைச்சுவையில் ஓரளவு வெற்றி பெற்றார்கள். இவர்களுடன் ஓ ஏ கே தேவர், ஜி . சகுந்தலா, நம்பிராஜன், ருக்மணி,டி வி நாராயணசமி, சி.டி . ராஜகாந்தம் , செந்தாமரை, ஆகியோரும் நடித்தார்கள்.

படத்துக்கு சிறப்பு சேர்த்த ஒரு விஷயம் கலைஞரின் செறிவான வசனம் என்றால் மற்றொன்று அதில் கே பி சுந்தராம்பாள் நடித்ததுதான்.படத்தில் நடிக்க ஓர் இலட்சம் ரூபாய் வாங்கும் அவர் எஸ் எஸ் ஆரின் வேண்டுகோளை ஏற்று குறைந்த ஊதியத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். கவுந்தி அடிகளாக வரும் அவர் கணீர் குரலில் படி , நடித்து ரசிகர்களிடம் பாராட்டையும் பெற்றுக் கொண்டார். அவர் குரலில் ஒலித்த வாழ்க்கை எனும் ஓடம், தப்பித்து வந்தானம்மா, பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இது தவிர பொன் நாள் இது போலே வருமோ இனி மேலே, காவிரி பெண்ணே வாழ்க, என்னை முதல் முதலாக பார்த்த போது என்ன நினைத்தாய் பாடல்களும் பிரபலமாகின. பாடல்களை உடுமலை நாராயணகவி, மாயவனாதன், ஆலங்குடி சோமு, ராதாமணாளன் ஆகியோர் இயற்றியிருந்தார்கள். இவர்களுடன் கருணாநிதியும் ஒரு பாடலை எழுதியிருந்தார். படத்துக்கு இசையமைத்தவர் ஆர் சுதர்சனம். ஏவி எம் பட நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான அவர் அங்கிருந்து விலகிய பிறகு இந்தப் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பை கருணாநிதி அவருக்கு வழங்கினார்.


படத்தை ஜி . துரையும் , அமிர்தமும் ஒளிப்பதிவு செய்தார்கள். இயக்கியவர் ப. நீலகண்டன். கலைஞருடைய வசனங்கள் படம் முழுதும் வியாபித்திருந்ததால் நீலகண்டனுடைய வேலை சுலபமாக போய் விட்டது.

ஏற்கனவே எம் ஜி ஆர் நடிப்பில் காஞ்சித் தலைவன், சிவாஜி நடிப்பில் குறவஞ்சி உமெஎன்று இரண்டு தோல்விப் படங்களை தயாரித்து கையை சுட்டுக் கொண்ட கருணாநிதி கடனை, உடனை வாங்கி இப் படத்தை தனிப்பட்ட ஆர்வம் காரணமாய் தயாரித்தார். ஆனாலும் படம் தயாரான பின் அதை வாங்கி வெளியிட எந்த விநியோகஸ்தர்களும் முன் வரவில்லை. படத்தை வெளியிடுவதில் அவருக்கு மிகுந்த சிரமம் இருந்தது. அந்த தருணத்தில் படத்தில் கதாநாயகனாக நடித்த எஸ் எஸ் ஆர் அப் பொறுப்பை ஏற்று படம் வெளிவர வழி வகுத்தார். ரசிகர்களும் படத்தை ஏற்றுக் கொண்டனர்!

No comments: